உங்கள் காரை பழுது பார்க்கையில், பத்திரம்!
கெவன் தன் காரில் எண்ணெய் மாற்றிப் பழக்கப்பட்டவர். காரின் க்ரேங்க் கேஸிலுள்ள (crankcase) டிரெயின் ப்ளக்கை (drain plug) கழற்றி, எண்ணெய்யை எடுத்துவிட்டு, மறுபடியும் ப்ளக்கை வைத்து டைட்டாக திருகுவது எப்படி என்பது அவருக்கு தெரியும். ஆனால் ஒருமுறை கெவன் தன் ஸ்பானரால் அழுத்தித் திருகியபோது திடீரென அது அந்தப் ப்ளக்கைவிட்டு நழுவியது. கெவனின் கை கூர்மையான ஒரு பகுதியில் மோதியது; உள்ளங்கை கிழிந்து பல தையல்கள் போட வேண்டியதாயிற்று.
கெவனைப் போல் அநேகர் தங்கள் காரை தாங்களாகவே ரிப்பேர் செய்துகொள்கிறார்கள்; காசை மிச்சப்படுத்துவதற்கென்றே சிலர் இப்படி செய்கிறார்கள். ஆனால் காரை பராமரிப்பதையும் பழுதுபார்ப்பதையும் பற்றி அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்வதால் மற்ற நன்மைகளும் கிடைக்கும். “ஒருமுறை ரொம்ப தூரம் காரில் போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று என் கார் மக்கர் செய்தது. நான் ஏற்கெனவே ரிப்பேர் வேலைகளை பழகியிருந்ததால் நானே அதை சரிசெய்துவிட்டேன், அதனால் போக வேண்டிய இடத்திற்கு போய் சேர முடிந்தது” என காத்தி என்ற பெண் சொல்கிறார்.
நீங்களும் உங்கள் காரை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளவும் நீங்களாகவே ரிப்பேர் செய்ய கற்றுக்கொள்ளவும் விரும்பலாம். ஆனால் அதை எப்படி பத்திரமாக செய்யலாம்?
முன்யோசனை வேண்டும்!
எல்லாவற்றையும் பத்திரமாக செய்வதற்கே நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.a இடுக்குகளிலும் இடைவெளிகளிலும் கையை நுழைத்து வேலை செய்யும்போது அல்லது ஏதேனும் கருவியை பலத்தைக் கொடுத்து உபயோகிக்கும்போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கெவனுக்கு ஏற்பட்ட காயம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. நீங்கள் எப்படி காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்? ஸ்பானரைக் கொண்டு போல்ட்டை திருகும்போது, ஸ்பானர் அதை சரியாகக் கவ்வியிருக்கிறதா என பாருங்கள். ‘ஸ்பானர் நழுவிவிட்டால் என் கை எங்கே போய் இடிக்கும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கையுறைகளை போட்டுக்கொள்வது அல்லது கையை துணியால் சுற்றிக்கொள்வது ஓரளவு பாதுகாப்பு தரலாம். உங்கள் பலத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக, முடிந்தால் ஸ்பானரை உங்கள் பக்கமாக இழுங்கள், எதிர்ப்பக்கமாக தள்ளாதீர்கள். அதேபோல், மிக டைட்டாக இருக்கும் போல்ட்டை லூஸ் செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாக மட்டுமே திருக முயற்சி செய்ய வேண்டும். இப்படி முன்யோசனையோடும் கட்டுப்பாட்டோடும் செயல்பட வேண்டியது எப்போதும் அவசியம். அவசரத்தில் இவற்றை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்!
ஒரு கருவியை அதற்குரிய வேலைக்கு பயன்படுத்தாமல் வேறொரு வேலைக்கு பயன்படுத்துவதால்தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு, டாம் என்பவர் தன் காரில் ஸ்பார்க் ப்ளக்கை மாற்றுவதற்குள் படாத பாடு பட்டுவிட்டார். ஏன்? அவர் உபயோகித்த சாக்கெட் மிகவும் குட்டையாக இருந்தது, ஆகவே முதல் ப்ளக்கிலிருந்து அது நழுவிக்கொண்டே இருந்தது. கடைசியில், சாக்கெட்டுக்கும் ராச்செட்டுக்கும் இடையில் ஒரு எக்ஸ்டன்ஷனை டாம் பொருத்தினார். அதன் பிறகு மற்ற ஐந்து ப்ளக்குகளை மாற்றினார். முதல் ப்ளக்கை மாற்ற எவ்வளவு நேரம் எடுத்தாரோ அவ்வளவே நேரத்திற்குள் மற்ற ஐந்து ப்ளக்குகளையும் மாற்றிவிட்டார், அதுவும் பத்திரமாக! பாடம்? பொருத்தமான கருவியைப் பயன்படுத்துவது அவசியம்.
காருக்கடியில் வேலை செய்யும்போது அல்லது டாஷ்போர்டிற்கு அடியில் குனிந்து பார்க்கும்போது உங்கள் கண்களில் ஏதேனும் தூசி துரும்பு விழுந்துவிடலாம். இதை எவ்வாறு தவிர்க்கலாம்? “கண்களுக்கு பாதுகாப்பாக கண்ணாடியை அணிந்துகொள்ளுங்கள்” என பத்து வருடங்களுக்கும் மேலாக மெக்கானிக்காக வேலை செய்திருக்கும் ஷான் என்பவர் சொல்கிறார். “நான் வேலை பார்க்கும் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் அப்படிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்” என்கிறார். பாட்டரி ஆஸிட் போன்ற ஆபத்தான திரவங்களுக்கு பக்கத்தில் வேலை செய்யும்போதும் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் காருக்கு அடியில் வேலை செய்யும்போது, சரியாக வடிவமைக்கப்பட்ட ஜாக் ஸ்டான்டை, புரொஃபஷனல் லிஃப்ட்டை, அல்லது ஸ்ட்ராங்கான ராம்ப்பை எப்போதும் பயன்படுத்துங்கள். வெறும் ஜாக்கின் மீது நிற்கும் காருக்கு அடியில் ஒருபோதும் வேலை செய்யாதீர்கள். சில கார்களுடைய மானுவல்களில், எந்தெந்த இடங்களில் ஜாக்குகளையும் ஜாக் ஸ்டான்டுகளையும் வைத்தால் காருக்கு போதுமான சப்போர்ட் கிடைக்கும் என விளக்கப்பட்டிருக்கும். ஆனாலும் ஜாக்கிரதை! மிகவும் டைட்டான போல்ட்டை லூஸ் செய்யும்போது அல்லது மற்றபடி பலம் கொடுத்து ஏதாவது செய்யும்போது திடீரென கார் ஜாக் ஸ்டான்டிலிருந்து நகர்ந்து சரிந்து விடலாம்.
எதிர்பாராத ஆபத்துக்களை தவிர்ப்பது
உங்கள் காரின் சில பகுதிகள் பயங்கரமாக சூடாகலாம், அதைத் தொடும்போது உங்கள் கை சூடுபட்டுவிடும். உதாரணத்திற்கு, என்ஜினை ஆஃப் செய்த பிறகும் ரேடியேட்டரில் உள்ள தண்ணீர் கொஞ்ச நேரத்திற்கு சூடாகவே இருக்கும். ஆகவே வெறும் கையால் தொடுமளவுக்கு சூடு தணிந்த பிறகே ரேடியேட்டரின் மூடியைக் கழற்றவும். சில கார்களில் ரேடியேட்டர்-ஃபான் மின்சாரத்தில் இயங்குகிறது; என்ஜினை ஆஃப் செய்த பிறகும் அது தானாகவே இயங்குகிறது. உங்களுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க, நெகட்டிவ் ஒயரை பாட்டரியிலிருந்து துண்டித்துவிட்டு பிறகு வேலை செய்ய ஆரம்பியுங்கள்.
காரில் வேலை செய்யும்போது, முக்கியமாக என்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போது, உங்கள் மோதிரங்களையும் மற்ற அணிகலன்களையும் கழற்றிவிடுங்கள். நீட்டிக்கொண்டிருக்கும் பகுதிகளில் அவை சிக்கிக்கொள்ளலாம்; அதோடு, உலோக அணிகலன்களால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு பயங்கர சூட்டில் எல்லாம் உருகிவிடலாம்! தொளதொளவென்ற சட்டைக்கை, கழுத்தில் தொங்கும் டை, ஸ்கார்ஃப், ஏன் நீளமான முடியும்கூட, சுழலும் பகுதிகளில் மாட்டிக்கொள்ளலாம்.
வேலையை முடித்துவிட்டதாக நீங்கள் நினைத்தாலும்கூட, கடைசியாக இன்னொரு வேலை பாக்கியிருக்கிறது. “எப்போதும் ஒருமுறைக்கு இருமுறை சரிபாருங்கள்” என பிஸியான ஒர்க் ஷாப்பில் சேவை ஆலோசகராக வேலை செய்யும் டர்க் சொல்கிறார். “ஒரு தடவை, ப்ரேக்குகளை ரிப்பேர் செய்துவிட்டு அதை மறுபடியும் செக் செய்ய ஒரு மெக்கானிக் மறந்துவிட்டார். ப்ரேக்கு பிடிக்கவில்லை, கார் நேராக என் டேபிளில் வந்து மோதியது!” என்றும் சொல்கிறார்.
ஆத்திர அவசரத்தில்
ஒருமுறை கார் பயங்கரமாக சூடாகியதை டாம் கவனித்தார். ஒரு ஹோஸ் வெடித்து, ரேடியேட்டரில் இருந்த தண்ணீர் வெளியே வந்துவிட்டது. டாம் தன் காரில் வைத்திருந்த டக்ட் டேப்பை எடுத்து, ஹோஸில் ஒட்டிவிட்டு, பிறகு கூலன்ட்டையும் தண்ணீரையும் ரேடியேட்டரில் ஊற்றினார். அது அவசரத்திற்குக் கைகொடுத்தது. அதன் பிறகு கார் பார்ட்ஸுகளை விற்கும் கடைக்கு ஓட்டிச்சென்று புதிய ஹோஸை வாங்கினார். இவரது அனுபவத்திலிருந்து என்ன தெரிகிறது? ரிப்பேருக்கு வேண்டிய சாமான்களை உங்கள் காரில் எப்போதும் ரெடியாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏதாவது விசித்திரமான சத்தமோ வாசனையோ வருகிறதா என எப்போதும் கவனியுங்கள். கார் என்ஜினிலிருந்து ஏதோ வாசனை வருவதை இவான் என்ற பெண் உணர்ந்தார். அவரது கணவர் காரின் போனட்டை திறந்து பார்த்தபோது ரேடியேட்டருடைய ஹோஸின் மேல்பாகத்தில் ஒரு சின்னஞ்சிறிய ஓட்டையிலிருந்து கூலன்ட் மெல்லிசாக கொப்பளித்துக் கொண்டிருந்தது. கார் அளவுக்கதிகமாக சூடாவதற்கு முன்பே பிரச்சினையை கண்டுபிடித்துவிட்டதால் இவானும் அவரது கணவரும் ஒர்க் ஷாப்பிற்கு காரை ஓட்டிச் செல்ல முடிந்தது.
ஒரு நெடுஞ்சாலையில் திடீரென உங்கள் கார் நின்றுவிட்டால் என்ன செய்வது? முதலில், காரை ரோட்டை விட்டு முடிந்தளவு தூரமாக தள்ளிக்கொண்டு போங்கள். காரில் இருப்பவர்கள், முக்கியமாக பிள்ளைகள், சீட் பெல்ட்டைக் கழற்றாமல் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். நீங்கள் காருக்கு வெளியே நிற்க வேண்டுமானால், ரோட்டிலிருந்து முடிந்தளவு தள்ளியே நில்லுங்கள். எமர்ஜன்ஸி லைட்டுகளை ஆன் செய்யுங்கள். உங்கள் கார் ரிப்பேர் ஆகியிருப்பதை காட்டுவதற்கு போனட்டை திறந்து வையுங்கள். ரிஃப்ளெக்டர்களை அல்லது எச்சரிப்புக்கான மற்ற அடையாளங்களை கவனமாக வையுங்கள்.
உங்கள் காரின் பாட்டரி டெளன் ஆகிவிட்டால், இன்னொரு காரின் பாட்டரியை வைத்து ஜம்ப் ஸ்டார்ட்டிங் செய்ய நீங்கள் முடிவு செய்யலாம். ஆனால் கார் பாட்டரிகள் மிக எளிதில் தீப்பிடித்துக்கொள்ளும் வாயுவை வெளிவிடுவதால் ஜாக்கிரதையாக இருங்கள். ஒரு சின்னப் பொறி போதும், இந்த வாயு கப்பென்று பற்றிக்கொண்டு, வெடித்து, வீரியமிக்க ஆஸிட்டால் உங்களை அபிஷேகம் செய்துவிடும். ஆகவே எப்படி ஜம்ப் ஸ்டார்ட்டிங் செய்வது என உங்களுக்கோ உங்களுக்கு உதவி செய்பவருக்கோ சரியாக தெரியாவிட்டால், அனுபவமுள்ளவர் வரும்வரை காத்திருங்கள்.
நாம் இதுவரை பார்த்த பிரகாரம், காரை பராமரிப்பது ஒரு பெரிய பொறுப்பு. ஆத்திர அவசரத்தில் நீங்கள் காரை ரிப்பேர் செய்யும்போதும் சரி மற்றபடி சாதாரணமாக பராமரிக்கும்போதும் சரி இதை எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள்: எல்லாவற்றையும் பத்திரமாக செய்வது கட்டாயத் தேவை! (g04 01/08)
[அடிக்குறிப்பு]
a நீங்கள் முதன்முறையாக ஏதேனும் ரிப்பேர் வேலை செய்வதாக இருந்தால், உங்கள் காருக்குரிய ஒர்க் ஷாப் மானுவலை படித்துப் பார்க்க முயலுங்கள் அல்லது அனுபவமுள்ள ஒரு நண்பரிடம் உதவி கேளுங்கள். உங்கள் காரில் கம்ப்யூட்டரால் இயக்கப்படும் சாதனங்கள் அல்லது மற்ற உயர்நுட்ப சாதனங்கள் இருந்தால், அதை ரிப்பேர் செய்வதற்கு தேவையான கருவிகளை பெற்ற அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கிடம் உங்கள் காரை எடுத்துச் செல்வது நல்லது.
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
ஒரு கருவியை அதற்குரிய வேலைக்கு பயன்படுத்தாமல் வேறொரு வேலைக்கு பயன்படுத்துவதால்தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன
[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]
உங்கள் காரில் வைத்திருக்க வேண்டியவை
□ ஸ்டெப்னி டயரும் ஜாக்கும்
□ ஜம்ப்பர் ஒயர்கள்
□ ரிஃப்ளெக்டர்கள்
□ டூல்ஸ், கண்ணாடி
□ டார்ச் லைட்
□ கேன்களில் எக்ஸ்ட்ரா திரவங்கள் (எண்ணெய், தண்ணீர், கூலன்ட், ப்ரேக் ஃப்ளூயிட்)
□ டக்ட் டேப்
□ எக்ஸ்ட்ரா ஃப்யூஸ்கள்
□ காரை கட்டியிழுப்பதற்கான டோ ரோப் (கவனிக்க: சில இடங்களில் லைசன்ஸ் பெற்ற ரெக்கர் வாகனத்தால் மட்டுமே சட்டப்படி உங்கள் காரை கட்டி இழுக்க முடியும்)
□ டூல்ஸை நேர்த்தியாகவும் கேன்களை நேராக நிற்கவும் வைக்க ஒரு பாக்ஸ்
□ ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ், எக்ஸ்ட்ரா பல்புகள்
இதுபோக வேறு ரிப்பேர் சாமான்களையும் நீங்கள் காரில் வைத்துக்கொள்ள விரும்பலாம். இருந்தாலும், அவசர நேரத்தில் வந்து ரிப்பேர் செய்யும் சில ஆட்டோமொபைல் க்ளப்புக்காரர்கள், நீங்கள் ஏற்கெனவே ரிப்பேர் வேலையை ஆரம்பித்திருந்தால் காரில் கைவைக்க தயங்குவார்கள். ஆகவே நீங்கள் ஏதேனும் ஆட்டோமொபைல் க்ளப்பில் சேர்ந்திருந்தால், எப்படிப்பட்ட ரிப்பேர்கள் செய்ய உங்களுக்கு அனுமதி உண்டு என்பதை முன்கூட்டியே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.