மருத்துவ அவசரநிலை ஒன்றை எதிர்ப்படுதல்
“நான் வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்; உங்களுக்கிருப்பது புற்றுக்கழலை. உடனடியாக அதை அகற்றவில்லையென்றால், அது மற்ற முக்கியமான உறுப்புகளையும் அழித்துவிடும். ஆகவேதான் உங்கள் காலை வெட்டி எடுப்பதை நான் சிபாரிசு செய்கிறேன்.”
இங்கே பெருவில் நாங்கள் பேசும் மொழிநடையில் சொன்னால், ஒரு பக்கெட் குளிர்ந்த தண்ணீரை ஊற்றியதுபோல் டாக்டரின் வார்த்தைகள் என்னைத் தாக்கின. எனக்கு வெறும் 21 வயதுதான் ஆகியிருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு என் இடது முழங்கால் வலிக்க ஆரம்பித்தது, மூட்டுவாதத்திற்காக சிகிச்சை அளிக்கப்பட்டேன். எனினும், சில நாட்களுக்குள்ளாக என்னால் நிற்கக்கூட முடியவில்லை.
அந்தச் சமயத்தில், பெருவின் நடுப்பகுதியிலிருக்கும் ஆண்டிஸில் நான் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு முழு நேர ஊழியக்காரனாக சேவித்துவந்தேன். நான் பிறந்த இடமான ஹுவாங்கயோவிற்கு திரும்பிவந்த பிறகு, கரையோரத்தில் உள்ள லிமா நகரத்திற்கு என் அம்மாவுடன் சென்றேன். அங்கே, ஜூலை 22, 1994-ல், நாட்டிலேயே மிகச் சிறந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றேன், அங்கே என் நோய் எலும்புத் திசுப்புற்று (Osteosarcoma) என்று அழைக்கப்படுவதாக தெரிந்துகொண்டேன்.
மனசாட்சியை உட்படுத்தும் ஒரு சூழ்நிலை
இரத்தமின்றி அறுவை சிகிச்சைகளை அந்த மருத்துவமனை செய்யாது என்பது சீக்கிரத்தில் எனக்கு தெரிவிக்கப்பட்டது. “உன் சாவுக்கு நான் பொறுப்பாளியாவதைப் பார்க்கிலும் நீ உன் வீட்டில் சாவதையே மேலானதாக நான் நினைக்கிறேன்” என்பதாகவும்கூட ஒரு டாக்டர் சொன்னார். ஆனால், உள்ளூரைச் சேர்ந்த மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழு (HLC), அதாவது மருத்துவமனை மற்றும் நோயாளிக்கிடையே ஒத்துழைப்பை முன்னேற்றுவிக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு குழு, என் சார்பில் தலையிட்டது. இதன் விளைவாக, அந்த மருத்துவமனையின் தலைமை அறுவைமருத்துவர், தனக்குக்கீழ் வேலை செய்யும் டாக்டர்களில் எவராவது அறுவை சிகிச்சையின் இச்சவாலை ஏற்றுக்கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்வதற்கு அனுமதி அளித்தார். ஒரு டாக்டர் முன்வந்தார், நான் அறுவை சிகிச்சைக்கு உடனடியாக தயார் செய்யப்பட்டேன்.
சிகிச்சைக்கு முன்பாக அநேகர் என்னை வந்து சந்தித்தனர். கையில் பைபிளுடன் ஒரு பாதிரி என்னைப் பார்க்க வந்து, என் வியாதி கடவுளிடமிருந்து வந்த ஒரு தண்டனை என்பதாக சொன்னார். என் உயிரைக் காப்பாற்றும் எந்த விதமான சிகிச்சையையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் என்னை துரிதப்படுத்தினார். ‘இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி’ சொல்லும் பைபிளின் கட்டளையை பின்பற்ற நான் உறுதியாயிருக்கிறேன் என்பதாக அவரிடம் சொன்னேன்.—அப்போஸ்தலர் 15:19, 20, 28, 29.
நர்ஸுகளும்கூட உள்ளே வந்து “எவ்வளவு முட்டாள்தனம், எவ்வளவு முட்டாள்தனம்!” என்பதாக முணுமுணுப்பார்கள். டாக்டர்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர். இரத்தம் அவசியமென்று அவர்களால் கருதப்பட்ட இந்த வகையான ஓர் அறுவை சிகிச்சைக்கு இரத்தத்தை ஏற்றிக்கொள்ள மறுத்திருக்கும் அந்த இளைஞரை அவர்கள் பார்க்க விரும்பினர். இருந்தபோதிலும், என்னை சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் என் உடன் கிறிஸ்தவர்களும் என் உறவினர்களும்தான். இந்த அநேக உற்சாகமளித்த சந்திப்புகளால் நர்ஸுகள் மிகவும் கவரப்பட்டனர்.
இரத்தமின்றி வெற்றிகரமான சிகிச்சை
எனக்கு மயக்கமருந்து கொடுப்பதற்கு வெறும் சில நிமிடங்களுக்கு முன்புதானே, மயக்கமருந்தளிப்பவர்களில் ஒருவர், “என்ன நடந்தாலும் நான் பொறுப்பல்ல!” என்று சொன்னதைக் கேட்டேன். ஆனால் மற்றொரு மயக்கமருந்தளிப்பவரும், எனக்கு அறுவை சிகிச்சை செய்பவரும் மருத்துவமனை நிர்வாகஸ்தர்களும்கூட இரத்தம் ஏற்ற வேண்டாம் என்ற என் வேண்டுகோளை மதித்தனர். அடுத்ததாக நான் கேட்டது, மயக்கமருந்தளிப்பவர் “சாம்வேல், எழுந்திரு. உன் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது” என்பதுதான்.
என் கால் முழுவதும் எடுக்கப்பட்டிருந்தாலும், அது இருந்த இடத்தில் மிகக் கடுமையான வலியை நான் உணர்ந்தேன். வலியிலிருந்து விடுபட என் தொடையை தேய்க்க விரும்பினேன், ஆனால், சந்தேகமில்லாமல், அது இனியும் அங்கில்லை. பிரமை வலி என்பதாக அழைக்கப்படும் ஒரு விசித்திரமான உணர்ச்சியை நான் அனுபவித்துக்கொண்டிருந்தேன். எந்தக் காலில் வலியுண்டாவதாகத் தோன்றியதோ அது அகற்றப்பட்டிருந்தபோதிலும்கூட, உண்மையிலேயே எனக்கு வலித்தது, கடுவேதனை அளிப்பதாய் அது இருந்தது.
அடுத்ததாக வேதியல் சிகிச்சையைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சிகிச்சையின் ஒரு பக்கவிளைவு, இரத்தம் உறைவதற்கு காரணமாயிருக்கும் சிகப்பணுக்களிலும் வெள்ளையணுக்களிலும் இரத்தவட்டுகளிலும் குறைவு ஏற்படுத்துவதாகும். அப்படியென்றால் இரத்தமேற்க நான் மறுப்பதைக் குறித்து டாக்டர்களின் ஒரு புதிய குழுவிற்கு தெரிவிக்க வேண்டியதை இது அர்த்தப்படுத்தியது. மறுபடியுமாக பொறுப்பில் உள்ளவர்களோடு HLC தொடர்பு கொண்டதால், டாக்டர்களும் இரத்தமின்றி சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டனர்.
வேதியல் சிகிச்சைக்கு பிறகு எப்போதும் ஏற்படும் பக்கவிளைவுகள் உண்டாயின—முடி கொட்டியது, குமட்டலையும் வாந்தியையும் மனச்சோர்வையும் நான் எதிர்ப்பட்டேன். மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயத்திற்கு 35 சதவீதம் வாய்ப்பிருக்கலாம் என்பதாகவும்கூட தெரிவிக்கப்பட்டேன். டாக்டர்களில் ஒருவரிடம் எது என்னைக் கொல்லப்போகிறது—புற்றுநோயா அல்லது வேதியல் சிகிச்சையா—என்பதை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
அதன்பிறகு, இரத்தமேற்றுதலின் மூலமாய் என் இரத்த அளவை முதலில் அதிகரிக்காமல் இரண்டாவது முறையாக வேதியல் சிகிச்சையை அளிக்க முடியாது என்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். ஒரு டாக்டர், தனக்கு முடிந்தால் எனக்கு மயக்கமருந்து கொடுத்து இரத்தம் ஏற்றுவார் என்பதாக கோபமாக என்னிடம் சொன்னார். அதை அனுமதிப்பதற்கு முன்பாக நான் வேதியல் சிகிச்சையையே முற்றிலும் நிராகரித்துவிடுவேன் என்பதாக சொன்னேன். என் உறுதியான நிலைநிற்கையைக் கண்டு தன் பாராட்டுதலை டாக்டர் வெளிப்படுத்தினார்.
என் இரத்த அளவை அதிகரிப்பதற்காக இரித்ரபாயிடனை எடுத்துக்கொள்ள நான் ஒப்புக்கொண்டேன். அது கொடுக்கப்பட்டபோது, என் இரத்த அளவு அதிகரித்தது. அதற்கு பிறகு, வேதியல் சிகிச்சை பல நாட்களை உட்படுத்திய ஒரு காலப்பகுதிக்கு சிரைவழியாக எனக்கு அளிக்கப்பட்டது. ‘எனக்கு மூளையில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும் மருந்தாக இது இருக்குமா?’ என்று அப்போது நான் யோசித்துக்கொண்டு படுத்திருப்பேன். நல்லகாலமாக எந்த விபரீதமான விளைவுகளுமின்றி எல்லா மருத்துவ சிகிச்சையையும் முழுமையாக நான் ஏற்று முடித்தேன்.
என் அறுவை சிகிச்சைக்கு முன்பாக இரத்தமேற்றுதலை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது அந்த மருத்துவமனையின் கொள்கையாக இருந்தது. ஆனால் இந்தக் கொள்கை மாறியது. உண்மையில், அதே நாளில் என் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு என் அறுவை மருத்துவர் இரத்தமின்றி மற்றொரு ரணசிகிச்சையை செய்தார், இந்த முறை நோயாளி ஒரு யெகோவாவின் சாட்சி அல்ல! இப்போது அந்த மருத்துவமனையிலுள்ள அநேக டாக்டர்கள் HLC-யுடன் ஒத்துழைக்கிறார்கள், இரத்தமின்றி ரணசிகிச்சை செய்துகொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
குறைபாடுகளை சமாளித்தல்
நான் சிறு பிள்ளையாக இருந்த காலம் முதற்கொண்டே கடவுளுடைய வழிகளைக் குறித்து போதிக்கப்பட்டிருந்தேன். இந்த மருத்துவ அவசரநிலையின்போது பைபிள் அடிப்படையிலான என் நம்பிக்கைகளைக் காத்துக்கொள்ள இது எனக்கு உதவியது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனினும், கடவுளின் சேவையில் நான் விரும்பும் அளவுக்கு என்னால் செய்ய முடியாததைக் குறித்து நான் அண்மை காலத்தில் வேதனையடைந்திருக்கிறேன். ஒரு கிறிஸ்தவ மூப்பராக இருக்கும் என் மாமாவிடம் என் உணர்ச்சிகளை நான் குறிப்பிட்டேன். அப்போஸ்தலனாகிய பவுலும்கூட ‘மாம்சத்திலே ஒரு முள்’ என்று அவர் அழைத்த ஒன்றை பெற்றிருந்தார் என்பதையும் அது தான் விரும்பிய அளவுக்கு கடவுளை சேவிப்பதிலிருந்து அவரை தடைசெய்தது என்பதையும் என் மாமா எனக்கு நினைப்பூட்டினார். ஆனால் பவுல் தன்னால் முடிந்ததைச் செய்தார். (2 கொரிந்தியர் 12:7-10) என் மாமா சொன்ன குறிப்பு மிகப் பெரிய அளவில் எனக்கு உதவியது.
சமீபத்தில் செயற்கை கால் ஒன்று எனக்கு பொருத்தப்பட்டது. இது நம் கடவுளாகிய யெகோவாவிற்கு இன்னும் பெருமளவில் நான் பரிசுத்த சேவை செய்வதை சாத்தியமாக்கும் என்று எதிர்பார்க்கிறேன். என் மருத்துவ அவசரநிலையின்போது ஒரு நல்மனசாட்சியை காத்துக்கொண்டதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். நான் தொடர்ந்து உண்மைத்தன்மையுடன் இருந்தால், யெகோவா எனக்கு ஆரோக்கியமான உடலையும், வலியோ துன்பமோ இனியும் இராத பரதீஸான பூமியில் நித்திய ஜீவனையும் வெகுமதியாக அளிப்பார் என்பதைக் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.—சாம்வேல் வில்லா யூகார்டெ சொன்னபடி.