கருத்துப் பரிமாற்றத்தைத் தடை செய்யும் சுவர்கள்
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியர்ரா லியோனில் வசிக்கும் ராபர்ட், உவாட்ச் டவரின் ஒரு மிஷனரியாவார். அந்நாட்டிற்கு வந்து சில காலத்துக்குள்ளாகவே, ஒருநாள், அவர் சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தபோது உள்ளூர் பிள்ளைகள் “வெள்ளையன்! வெள்ளையன்!” என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்ததை அவர் கவனித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பரான ராபர்ட், வெள்ளையன் இருக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தார், ஆனால் வேறு எவருமே அங்கு இல்லை. அந்தப் பிள்ளைகள் தன்னை நோக்கியே கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர் என்பதை அப்போதுதான் உணர்ந்தார்!
கூக்குரலிட்டதில் வன்மம் ஏதுமில்லை. தங்களுடையதிலிருந்து வித்தியாசப்படும் ஒரு கலாச்சாரத்திலிருந்து ராபர்ட் வந்திருக்கிறார் என்று அடையாளம் கண்டுகொண்டதைப் பிள்ளைகள் வெறுமனே தெரியப்படுத்தினர். ராபர்ட்டை வெள்ளையன் என்று அழைப்பதே பேதத்தை வெளிக்காட்டுவதற்கான சிறந்த வழியாக அவர்களால் கருதப்பட்டது.
நாம் யார் என்பதன்பேரில் கலாச்சாரம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது
“வாழ்க்கை முறையை தனித்துக் காண்பிப்பவையான பகிரப்படும் கருத்துகள், . . . வழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் அறிவின் ஒரு தொகுதி” என்பதாக கலாச்சாரம் பொதுவாக விவரிக்கப்படுகிறது. நேரடியான போதனையின் மூலம் அநேக கலாச்சார மதிப்பீடுகளை கற்றுக்கொள்கிறோம், ஆனால் உணராமலேயே அதிகத்தை உட்கிரகித்தும் கொள்கிறோம். “[ஒரு பிள்ளையினுடைய] பிறப்பின் அந்த நொடியிலிருந்து, அவன் பிறந்திருக்கும் கலாச்சாரமானது அவனுடைய அனுபவத்தையும் நடத்தையையும் தீர்மானிக்கும். அவன் பேச ஆரம்பிக்கும் சமயத்தில், தன் கலாச்சாரத்தின் ஒரு சிறிய படைப்பாக ஆகிறான், அவன் வளர்ந்து அந்தக் கலாச்சார நடவடிக்கைகளில் பங்குகொள்ள ஆரம்பித்த பிறகு, அதன் பழக்கங்கள் அவன் பழக்கங்களாகவும் அதன் நம்பிக்கைகள் அவன் நம்பிக்கைகளாகவும் அதனால் இயலாத காரியங்கள் அவனால் இயலாத காரியங்களாகவும் ஆகின்றன,” என்பதாக ஓர் ஆராய்ச்சியாளர் சொன்னார்.
அநேக வழிகளில் கலாச்சாரம் வாழ்க்கையை நமக்கு சுலபமாக்குகிறது. பெற்றோரை எவ்வாறு பிரியப்படுத்துவது என்பதைப் பிள்ளைகளாக நாம் சீக்கிரத்தில் கற்றுக்கொள்கிறோம். நம் சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளப்படுகிறது எது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை அறிந்திருப்பதுதானே, எவ்வாறு நடந்துகொள்வது, எதை உடுத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு தொடர்புகொள்வது ஆகியவற்றின்பேரில் தீர்மானங்களை எடுக்க நம்மை வழிநடத்துகிறது.
சந்தேகமில்லாமல், தனிப்பட்ட நபர்களாக நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பது வெறுமனே நம் கலாச்சார பின்னணியின்மீது மாத்திரமே சார்ந்ததாய் இல்லை. ஒவ்வொரு கலாச்சாரத்தில் உள்ள ஜனங்களிடையேயும் வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பது நம் மரபியலாலும், வாழ்க்கையில் நமக்கிருக்கும் அனுபவங்களாலும், மற்ற அநேக காரணக்கூறுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், உலகத்தைப் பார்க்க நாம் பயன்படுத்தும் லென்ஸ்தான் கலாச்சாரம்.
உதாரணத்திற்கு, நாம் பேசும் மொழியை மாத்திரமல்லாமல் எவ்வாறு அந்த மொழியைப் பேசுகிறோம் என்பதையும் நம் கலாச்சாரம் தீர்மானிக்கிறது. மத்திய கிழக்குப் பகுதிகள் சிலவற்றில், திரும்பத்திரும்ப சொல்வதன் மூலமாகவும் உருவகத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் அநேக வார்த்தைகளைக்கொண்டு தங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்கான திறமையை ஜனங்கள் மதிப்புள்ளதாய் கருதுகின்றனர். அதற்கு நேரெதிர்மாறாக, தொலைதூர கிழக்கத்திய நாடுகள் சிலவற்றிலுள்ள ஜனங்கள் பேச்சுத்தொடர்பை மிகக் குறைந்த அளவிலேயே வைத்துக்கொள்கின்றனர். “உங்கள் வாயினால் நீங்கள் அழிவீர்கள்” என்ற ஜப்பானிய பழமொழி இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கிறது.
நேரத்தை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதை நம் கலாச்சாரம் தீர்மானிக்கிறது. ஸ்விட்ஸர்லாந்தில், சந்திப்பு ஒன்றிற்கு பத்து நிமிடம் தாமதமாக நீங்கள் சென்றால் மன்னிப்புக் கேட்கும்படி எதிர்பார்க்கப்படுகிறீர்கள். மற்ற நாடுகளில் நீங்கள் ஓரிரண்டு மணிநேரம் தாமதமாகவும் செல்லலாம், மன்னிப்பும் எதிர்பார்க்கப்படுவதில்லை.
நம் கலாச்சாரம் மதிப்பீடுகளையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. “நீ ரொம்ப வெயிட் போட்டுக்கொண்டே போகிறாய். உண்மையிலேயே குண்டாகிக்கொண்டு வருகிறாய்!” என்பதாக உங்களிடம் எவராவது சொன்னால் நீங்கள் எவ்வாறு உணருவீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். திடகாத்திரமாக இருப்பது மதிப்பாய் கருதப்படும் ஆப்பிரிக்க கலாச்சாரத்தில் நீங்கள் வளர்ந்திருந்தால், இந்த விமர்சனத்தைக் குறித்து நீங்கள் ஒருவேளை சந்தோஷப்படுவீர்கள். ஆனால் ஒல்லியாக இருப்பது மிகவும் உயர்வாகக் கருதப்படும் மேற்கத்திய கலாச்சாரத்தில் நீங்கள் வளர்க்கப்பட்டிருந்தால், வெளிப்படையான இந்தக் குறிப்பு ஒருவேளை உங்களை கவலைக்குள்ளாக்கும்.
‘எங்கள் வழியே சிறந்தது!’
எங்குமுள்ள ஜனங்கள் தங்களுடைய கலாச்சாரங்களை மேலானதாக நினைத்துக்கொள்ளும் சுபாவமுள்ளவர்களாக இருப்பதுதானே, வெவ்வேறு கலாச்சாரங்களிடையே கருத்துப் பரிமாற்றத்தை அடிக்கடி தடை செய்கிறது. நம் நம்பிக்கைகள், மதிப்பீடுகள், பாரம்பரியங்கள், உடைபாணி, அழகைக் குறித்த கருத்துகள் ஆகியவை மற்ற எதைக்காட்டிலும் தவறில்லாததாகவும் சரியானதாகவும் மேலானதாகவும் இருப்பதாக நம்மில் பெரும்பான்மையோர் நினைத்துக்கொள்கிறோம். நம் சொந்த கூட்டத்தாரின் மதிப்பீடுகளுக்கு ஏற்றவாறு மற்ற கலாச்சாரங்களைக் குறித்து தீர்மானிக்கும் இயல்புள்ளவர்களாகவும் நாம் இருக்கிறோம். அப்படிப்பட்ட சிந்தை எத்னோசென்ட்ரிஸம் என்பதாக அழைக்கப்படுகிறது. “எத்னோசென்ட்ரிஸம் . . . ஏறத்தாழ சர்வவியாபகமானது என்பதாக சொல்லப்படலாம். உலகின் ஏறக்குறைய எல்லா கலாச்சாரங்களைச் சேர்ந்த அங்கத்தினர்களும், நெருங்கிய தொடர்புடைய அயலவர்களுடையதையும்விட தங்களுடைய சொந்த வாழ்க்கை முறையையே மேலானதாகக் கருதுகின்றனர்” என்பதாக தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.
இருநூறு வருடங்களுக்கு முன்பு, ஓர் ஆங்கிலேய ஜமீன்தார் வெளிப்படையாக இந்தக் காரியத்தை இவ்வாறு சொன்னார்: “நான் காணும் [காரியங்களிலிருந்து], அயல்நாட்டவர் முட்டாள்கள்.” இந்த வார்த்தைகளைக் கொண்டிருக்கும் மேற்கோள்களின் புத்தகத்தினுடைய பதிப்பாசிரியர் இவ்வாறு எழுதினார்: “[இது] ஏறத்தாழ நிச்சயமாகவே ஒரு சர்வலோக அபிப்பிராயம்.”
மற்ற கலாச்சாரங்களைச் சகித்துக்கொள்ளாத தன்மையின் உதாரணங்கள் மிகுதியாக இருக்கின்றன. 1930-களில் ஜெர்மானிய நாவலாசிரியர் ஒருவரால் முதலில் எழுதப்பட்டிருந்தபோதிலும், பின்வரும் இந்த மேற்கோள் நாசி தலைவரான ஹெர்மான் கோரிங்கினுடையதாக அடிக்கடி கருதப்படுகிறது: “கலாச்சாரம் என்ற வார்த்தையை நான் கேட்கும்போது, ரிவால்வரை எடுக்கிறேன்.”
உறுதியான எத்னோசென்ட்ரிக் கருத்துகள், தப்பெண்ணத்திற்கு வழிநடத்தலாம், இது பகைமைக்கும் சண்டைக்கும் வழிநடத்தலாம். ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன், ருவாண்டாவிலும் முன்னாள் யுகோஸ்லாவியாவிலும் போர்க்கால குற்றங்களை விசாரிக்கும் இன்டர்னேஷனல் க்ரிமினல் ட்ரிபியூனலுக்கான அரசுத்தரப்புவக்கீல் ஆவார். இரண்டு சண்டைகளின்போதும் நடந்த முரட்டுத்தனமான செயல்களைக் குறித்து அவர் சொன்னார்: “இது போன்ற காரியம் எங்கே வேண்டுமென்றாலும் நடைபெறலாம். இங்கே முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரங்களையும் சரித்திரங்களையும் உடைய இரண்டு வித்தியாசமான நாடுகள் இருக்கின்றன, ஆயினும் ஒரேவிதமான அட்டூழியங்களை அயலவர்கள் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் செய்கின்றனர். இந்த விதமான மிருகத்தனமான இன அல்லது மத போர், வன்முறையில் விளைவடையுமளவுக்கு மிகவும் தீவிரமாக்கப்பட்டிருக்கும் வெறும் தப்பெண்ணமே ஆகும். பாதிக்கப்பட்ட கூட்டத்தார் மனிதத் தன்மையற்றவர்களாகவோ அல்லது பேய்த்தனமுள்ளவர்களாகவோ வர்ணிக்கப்படுகின்றனர். இது செய்யப்பட்டுவிட்டால், இப்படிப்பட்ட பயங்கரமான காரியங்களைச் செய்வதிலிருந்து பொதுவாக தடுக்கும் ஒழுக்க கட்டுப்பாடுகளிலிருந்து சாதாரண ஜனங்களை அது விடுவிக்கும்.”
நம் நோக்குநிலையை விரிவாக்குதல்
நம்முடைய நண்பர்களாக நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்கள் பெரும்பாலும் நம்மைப் போன்றவர்களாகவே—நம் எண்ணங்களையும் நம் மதிப்பீடுகளையும் பகிர்ந்துகொள்ளும் ஆட்களாகவே—பொதுவாக இருக்கின்றனர். நாம் அவர்களை நம்பவும் புரிந்துகொள்ளவும் செய்கிறோம். அவர்களது கூட்டுறவில் நாம் நிம்மதியாக உணருகிறோம். மற்றொரு நபரின் நடத்தையை வினோதமானதாகவோ இயற்கைக்கு மாறானதாகவோ நாம் கருதினால், நம் நண்பர்கள் ஒருவேளை நம் கருத்தை ஒப்புக்கொள்வார்கள், ஏனெனில் அவர்கள் நம் மனச்சார்பைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அப்படியென்றால், கலாச்சாரப் பின்னணியின் காரணமாக நம்மிலிருந்து வேறுபடும் மற்றவர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதன்மூலம் நாம் என்ன பயனைப் பெறலாம்? ஒன்று, மற்றவர்கள் ஏன் அவர்களுக்குரிய விதத்தில் யோசித்துக்கொண்டும் செயல்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நல்ல கருத்துப் பரிமாற்றம் நமக்கு உதவும். மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவரான குன்லே இவ்வாறு சொல்கிறார்: “உணவு அருந்தும்போது பேசக்கூடாது என்பதாக ஆப்பிரிக்காவிலுள்ள அநேக பிள்ளைகளுக்குக் கண்டிப்புடன் சொல்லப்படுகிறது. எனினும், சில ஐரோப்பிய நாடுகளில், உணவு அருந்தும் சமயங்களில் சம்பாஷிப்பது உற்சாகப்படுத்தப்படுகிறது. ஓர் ஐரோப்பியர் ஆப்பிரிக்கர் ஒருவரோடு உணவருந்தினால் என்ன நடக்கும்? ஏன் வாயில் கொழுக்கட்டை வைத்த மாதிரி இந்த ஆப்பிரிக்கர் உம்மென்று இருக்கிறார் என்பதாக ஐரோப்பியர் யோசிப்பார். அதே சமயத்தில், ஏன் ஓட்டைப் பானையில் ஈ புகுந்த மாதிரி இந்த ஐரோப்பியர் லொடலொட என்று பேசிக்கொண்டே இருக்கிறார் என்பதாக ஆப்பிரிக்கர் யோசிப்பார்!” தெளிவாகவே, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், சமூக தப்பெண்ணத்தை அகற்றுவதற்குக் கலாச்சார பின்னணியைப் பற்றி ஒருவர்பேரில் ஒருவர் கொண்டுள்ள பரஸ்பர புரிந்துகொள்ளுதல் அதிகத்தைச் செய்யக்கூடும்.
மற்ற கலாச்சாரங்களைச் சேர்ந்த ஜனங்களை புரிந்துகொள்ளும்போது, மற்றவர்களை நாம் நன்றாக புரிந்துகொள்வது மாத்திரமல்லாமல் நம்மைநாமேயும் புரிந்துகொள்கிறோம். மனிதயியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “ஆழமான சமுத்திரத்தில் வசிக்கும் பிராணியினால் நிச்சயமாகவே கண்டுபிடிக்க முடியாத ஒரு பொருள் தண்ணீர் ஆகும். ஏதோவொரு தற்செயல் நிகழ்வு அதை மேற்பரப்பிற்கு கொண்டுசென்று காற்றினிடமாக வெளிப்படுத்தும்போது மாத்திரம்தான் தண்ணீர் இருப்பதையே அது அறியவருகிறது. . . . ஒருவருடைய சொந்த சமுதாயத்தின் கலாச்சாரத்தை முழுமையாக பார்ப்பதற்கான திறமை . . . குறிப்பிட்ட அளவில் சீர்தூக்கிப்பார்ப்பதைத் தேவைப்படுத்துகிறது. அந்த அளவு எக்காலத்திலாவது முயன்றுபெறப்பட்டாலும் அது அரிதாகவே இருக்கும்.” இருந்தபோதிலும், மற்ற கலாச்சாரங்களுக்கு நம்மையே வெளிப்படுத்துவதன் மூலம், காற்றுக்கு வெளிப்படுத்தப்படும் சமுத்திர பிராணியைப்போல் நாம் இருக்கிறோம்; நாம் வாழ்ந்துவரும் கலாச்சார “தண்ணீரை” குறித்து நாம் அறியவருவோம். எழுத்தாளரான தாமஸ் ஆபர்க்ராம்பி இந்த விஷயத்தை நன்றாக தெரிவித்தார்: “அயல்நாட்டுக் கலாச்சாரத்தினால் ஒருபோதுமே கவரப்படாத ஒருவரால் சொந்த கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகளையும் ஒருபோதுமே கிரகித்துக்கொள்ள முடியாது.”
சுருக்கமாக சொன்னால், மற்ற கலாச்சாரங்களைப் போற்றுவது, நம்மைநாமேயும் மற்றவர்களையும் மேம்பட்ட விதத்தில் புரிந்துகொள்ளும்படி நம் மனோபாவத்தை பரந்ததாக்குவதன் மூலமாக நம் வாழ்க்கையை சிறப்பாக்கும். பரம்பரையாக வந்த கலாச்சாரமும் எத்னோசென்ட்ரிக் சிந்தையும் கருத்து பரிமாற்றத்திற்கு சுவர்களாக இருக்கும் சமயத்திலும் அவை அவ்வாறு இருக்கவேண்டியதில்லை. அந்த சுவர்கள் உடைக்கப்படலாம்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“உலகின் ஏறக்குறைய எல்லா கலாச்சாரங்களைச் சேர்ந்த அங்கத்தினர்களும், நெருங்கிய தொடர்புடைய அயலவர்களுடையதையும்விட தங்களுடைய சொந்த வாழ்க்கை முறையையே மேலானதாகக் கருதுகின்றனர்.” தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா
[பக்கம் 7-ன் படம்]
மற்ற கலாச்சாரங்களில் உள்ள நல்ல விஷயங்களை அனுபவித்து மகிழ நாம் கற்றுக்கொள்ளலாம்
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
Globe: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.