பாலங்களைக் கட்டுவதற்காக சுவர்களை இடித்தல்
குடும்பத்தையோ பிறந்தநாட்டையோ நாம் தேர்ந்தெடுக்கவில்லை, நம் சிந்தையை உருவமைக்கும் கலாச்சாரத்தையும் நாம் தீர்மானிக்கவில்லை. அப்படிப்பட்ட காரியங்களின்பேரில் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருந்ததில்லை. நாம் அனைவருமே நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் மற்றவர்களை எவ்வாறு கருதுகிறோம் என்பதையும் அவர்களிடமாக எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
அதை எவ்வாறு செய்வது என்பதன்பேரில் பைபிள் நமக்கு விளக்கம் அளிக்கிறது. நம்முடையதிலிருந்து வித்தியாசப்படும் ஒரு பின்னணியிலிருந்து வந்திருக்கும் ஒருவரோடு கருத்துப் பரிமாற்றத்தின் பாலங்களைக் கட்டுவதற்கு நமக்கு உதவும் ஒருசில நியமங்களைக் கவனியுங்கள்.
‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் . . . மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்தார்.’ (அப்போஸ்தலர் 17:24, 26) நாம் எல்லாரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள், இவ்வாறு அநேகத்தைப் பொதுவில் கொண்டிருக்கிறோம். நாம் பொதுவில் கொண்டிருக்கும் காரியங்களை நோக்குவது கருத்துப் பரிமாற்றத்தை சுலபமாக்குகிறது. நாம் அனைவரும் நல்ல நண்பர்களைப் பெற்றிருக்க விரும்புகிறோம், நேசிக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டிய தேவையில் இருக்கிறோம். அனைவரும் சரீர மற்றும் உணர்ச்சி சம்பந்தமான வலியை தவிர்ப்பதை நாடுகிறோம். எல்லா கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களும் இசையையும் கலையையும் விரும்புகின்றனர், ஜோக்குகளை சொல்கின்றனர், ஒருவருக்கொருவர் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கின்றனர், மேலும் சந்தோஷமாய் இருப்பதற்கான வழிகளைத் தேடுகின்றனர்.
“ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” (பிலிப்பியர் 2:3) மற்றவர்களை நம்மைவிட மேன்மையானவர்களாக எல்லா விஷயத்திலும் கருத வேண்டும் என்பதாக இது அர்த்தப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, வாழ்க்கையின் சில அம்சங்களில் மற்றவர்கள் மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். நாமோ அல்லது நம் கலாச்சாரமோ நன்மையான எல்லாவற்றையும் உடைமையாகப் பெற்றிருப்பதாக நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது.
“ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், . . . நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) கலாச்சார பின்னணியைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் வெறுமனே சிநேகப்பான்மையோடும் உதவியாகவும் இருக்க முன்முயற்சி எடுப்பது, கருத்துப் பரிமாற்ற பிளவுக்கு பாலமமைக்க அதிகத்தைச் செய்யக்கூடும்.
“ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” (யாக்கோபு 1:19) நன்றாக கருத்துப் பரிமாற்றம் செய்பவர்கள் பேசுவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்ய வேண்டும்; ஒற்றுணர்வோடு கேட்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.
“மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.” (நீதிமொழிகள் 20:5) ஒரு நபரின் மேலோட்டமான நடத்தைக்கு பின்னால் இருக்கும் உணர்ச்சிகளையும் முக்கிய விஷயங்களையும் பகுத்துணர விழிப்புள்ளவர்களாக இருங்கள். ஜனங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முற்படுங்கள்.
“அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” (பிலிப்பியர் 2:4) காரியங்களை மற்ற நபரின் நோக்குநிலையிலிருந்து பார்ப்பதன் மூலமாக ஒற்றுணர்வுள்ளவர்களாக இருங்கள். சுயநலமற்றவர்களாக இருங்கள்.
யெகோவாவின் சாட்சிகளுக்கிடையே பல்வகை கலாச்சாரங்கள்
இந்த நியமங்கள் உண்மையிலேயே பலன்தரத்தக்கவை என்பது, பூமியின் 232 நாடுகளில் செயலாற்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய குறிப்பிடத்தக்க ஐக்கியத்தில் காணப்படுகிறது. அவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வந்தவர்களும் எல்லா காரியங்களிலும் யெகோவாவின் அன்பான வழிநடத்துதலுக்கேற்ப நடக்க தீர்மானமுள்ளவர்களுமான ஜனங்கள்.—வெளிப்படுத்துதல் 7:9; 1 கொரிந்தியர் 10:31-33.
மற்றவர்களுடைய கலாச்சாரத்தை தனிப்பட்டவர்களாக சாட்சிகள் அவமதிப்பதில்லை. சாட்சிகளாக ஆகிறவர்கள் தாங்கள் வளர்க்கப்பட்ட கலாச்சாரத்தை, பைபிள் நியமங்களோடு ஒத்துப்போகாமல் இருந்தாலேயொழிய, மற்றபடி ஒதுக்கிவிடுவதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்துகொள்கின்றனர். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மெச்சத்தக்க அம்சங்கள் இருக்கின்றன என்பதையும் இவை உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஜனங்களிடையே மிகுதிப்படுத்தவும்படுகின்றன என்பதையும் அவர்கள் உணருகிறார்கள்.
விண்வெளியில் சுழன்றுகொண்டிருக்கும் பிரகாசமான, நீல நிறமுள்ள, அழகான ஒன்றாக நம்முடைய கிரகத்தைக் கடவுள் எவ்வாறு பார்க்கிறாரோ அதே விதமாக அவர்கள் பார்க்க முயற்சி செய்கின்றனர். அற்புதமான பல்வகைப்பட்ட ஜனங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டிருக்கும் ஒரு கிரகம் இது. உண்மையிலேயே ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரு குடும்பமாக பூமியில் உள்ள அனைவரும் வாழ்க்கையை மகிழ்ந்தனுபவிக்கும் சமயத்தை யெகோவாவின் சாட்சிகள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
[பக்கம் 8-ன் படம்]
கலாச்சார தடைகளை எவ்வாறு தகர்ப்பது என்பதை யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்