ஓர் உலகளாவிய கிராமம் ஆயினும் பிளவுற்றிருக்கிறது
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
வாய் இல்லாததன் காரணமாக சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாதிருந்த மனித இனம் ஒன்றைப் பற்றிய கதைகளை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் ஆப்பிள்களை மோந்துபார்ப்பதன் மூலமாகவே அவர்கள் உயிர்வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்டது. துர்நாற்றம் அவர்களைக் கொல்லக்கூடும்.
தங்கத்தை வணிகம் செய்துவந்த மேற்கு ஆப்பிரிக்க ஜனங்களைப் பற்றிய கற்பனைக் கதைகளும் இருந்தன. போர்த்துகல் நாட்டுக் கப்பல் ஒன்றின் அக்காலத்திற்குரிய தளபதி இவ்வாறு விவரித்தார்: “[மாலி] ஆட்சிப்பகுதிக்கு ஏறத்தாழ இருநூறு லீக் தூரத்திற்கு அப்பால், நாய்களின் தலைகளையும் பற்களையும், நாய்களைப்போன்ற வால்களையும் பெற்றிருக்கும் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டை ஒருவர் பார்ப்பார். மற்ற மனிதர்களைப் பார்க்க விரும்பாததன் காரணமாக சம்பாஷணையைத் துவங்க மறுப்பவர்களான கறுப்பர்களே இவர்கள்.” பல வருடங்களுக்கு முன்பு, பயண யுகத்திற்கும் கண்டுபிடிப்பு யுகத்திற்கும் முன்பு, நம்பப்பட்டுவந்த சில விசித்திரமான கருத்துகள் அவை.
ஜனங்கள் நெருங்கி வருகின்றனர்
பல நூற்றாண்டுகளாக அப்படிப்பட்ட கதைகள் உண்மையென நம்பப்பட்டன. ஆனால் ஆய்வுப்பயணிகள் கிரகத்தை ஆய்வு செய்தபோது, ஆப்பிளை மோந்துபார்க்கும் வாயில்லாதவர்களையும் பார்க்கவில்லை, நாய் தலையுடைய ஜனங்களையும் பார்க்கவில்லை. இந்நாளில், நம் எல்லைகளுக்கு அப்பால் வாழ்பவர்களைப் பற்றி எந்த விதமான மர்மமும் இல்லை. உலகம் ஓர் உலகளாவிய கிராமமாக ஆகியிருக்கிறது. தொலைக்காட்சி, நம் பகல்நேர அறைக்குள் அயல் நாடுகளையும் ஜனங்களையும் பற்றிய செய்தியைக் கொண்டுவருகிறது. சில மணிநேரங்களுக்குள்ளாக அந்த நாடுகளுக்குச் செல்வதை விமானப் பயணம் சாத்தியமாக்குகிறது; ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ஜனங்கள் அவ்வாறு செய்கின்றனர். மற்றவர்கள் பொருளாதார அல்லது அரசியல் காரணங்களுக்காக பயணம் செய்துவருகின்றனர். ஐக்கிய நாடுகளின் பாபுலேஷன் ஃபன்டினுடைய ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதுவரைக்கும் சரித்திரத்திலே இல்லாத ஓர் அளவிலும் நிச்சயமாக அதிகரிக்கப்போகும் ஓர் அளவிலும், உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்கள் மேம்பட்ட வாழ்வைத் தேடி ஓர் இடத்தை விட்டு மற்றொன்றுக்கு இடம் மாறி வருகின்றனர்.” கிட்டத்தட்ட பத்து கோடி மக்கள் தங்கள் தாய்நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர்.
பொருளாதார வகையில் தேசங்கள் ஒன்றையொன்று மிகுதியாக சார்ந்திருக்கின்றன. உலகளாவிய தகவல்பரிமாற்ற நெட்வொர்க், மிகப் பெரிய மத்திய நரம்பு மண்டலத்தைப்போல், பூமியின் எல்லா தேசங்களையும் இணைக்கிறது. கருத்துகளும் தகவலும் தொழில்நுட்பமும் பரிமாற்றம் செய்யப்படும்போது, கலாச்சாரங்கள் இணைந்து ஒன்றையொன்று மாற்றியமைத்துக் கொள்கின்றன. முன்னொருபோதும் இல்லாத அளவில் உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்கள் ஒரே விதமாக உடையணிந்து கொள்கின்றனர். போலீஸ், சொகுசான ஹோட்டல்கள், போக்குவரத்து, கடைகள், வங்கிகள், தூய்மைக்கேடு போன்ற அநேக பொதுவான காரியங்களை உலக நகரங்கள் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக, உலகத்திலுள்ள ஜனங்கள் நெருங்கி வரும்போது, உருவாகும் உலக கலாச்சாரம் என்பதாக சிலரால் விவரிக்கப்படும் ஒன்றை நாம் கவனிக்கிறோம்.
ஏன் ஜனங்கள் இன்னும் பிளவுற்றிருக்கின்றனர்
ஆயினும், ஜனங்களும் கலாச்சாரங்களும் ஒன்றுகலந்திருக்கிற அதே சமயத்தில், தெளிவாகவே அனைவரும் ஒருவரையொருவர் சகோதரர்களாக கருதுவதில்லை. “ஒவ்வொருவரும் அந்நிய நாட்டவரை விரைவில் குற்றஞ்சாட்டிவிடத் தயாராயிருக்கின்றனர்,” என்பதாக 2,000-த்திற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பாக ஒரு கிரேக்க நாடக ஆசிரியர் எழுதினார். விசனகரமாக, இன்றைக்கும் அதே நிலைமை காணப்படுகிறது. மதவெறி, அந்நியர்கள்மீது பகைமை, “இன நாசம்,” இனச்சண்டை, மத கலகங்கள், படைத்துறை சாராதவர்களின் படுகொலை, கொலைக்களங்கள், கற்பழிப்பு முகாம்கள், சித்திரவதை அல்லது படுகொலை ஆகியவற்றைப் பற்றிய செய்தித்தாள் அறிக்கைகளில் அதற்கான அத்தாட்சியைச் சுலபமாக காணலாம்.
சந்தேகமில்லாமல், இன போராட்டங்களின் இந்தப் போக்கை மாற்றுவதற்கு நம்மில் பெரும்பான்மையோருக்கு வெகு சிறிதே செய்யமுடியும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. ஒருவேளை அவற்றால் நாம் நேரடியாக பாதிக்கப்படாதவர்களாகவும்கூட இருக்கலாம். எனினும், நம்மில் அநேகருக்கு, நாம் சந்திக்கும் அயல்நாட்டவருடன்—அயலவர், உடன்வேலையாட்கள் அல்லது பள்ளிக்கூட்டாளிகளுடன்—கருத்துப் பரிமாற்றம் செய்ய தவறுவதன் மூலமாகவே பிரச்சினைகள் உண்டாகின்றன.
வெவ்வேறு இனத் தொகுதிகளைச் சேர்ந்த ஜனங்கள் ஒருவரையொருவர் நம்பி, போற்றுவதை அவ்வளவு அடிக்கடி கடினமாகக் காண்கின்றனர் என்பது விசித்திரமாகத் தோன்றுகிறதல்லவா? என்ன இருந்தாலும், அளவில்லா வகைகளாலும் முடிவில்லா விதங்களாலும் நிரம்பியிருப்பதுதான் நம் கிரகம். உணவு, இசை, வண்ணம் ஆகியவற்றின் ஏராளமான வகைகளையும் பல விதமான செடிகளையும் பறவைகளையும் மிருகங்களையும்கூட நம்மில் அநேகர் போற்றுகிறோம். ஆனால் வகைகளின்மீதான போற்றுதல், நம்மைப் போலவே யோசிக்காத மற்றும் செயல்படாத ஜனங்களை ஏனோ எப்போதுமே உள்ளடக்குவதில்லை.
அநேகர், ஜனங்களுக்கிடையே இருக்கும் வேறுபாட்டின் நன்மையான அம்சங்களைப் பார்ப்பதற்கு பதிலாக, பேதங்களின்மீது கவனத்தைத் திருப்பி அதைப் பூசலுக்கான ஒரு காரணமாக்குகின்றனர். இது ஏன் இவ்வாறு இருக்கிறது? நம்முடையதிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு கலாச்சாரத்தைப் பெற்றிருக்கும் ஒருவரோடு கருத்துப் பரிமாற்றம் செய்ய முயற்சி எடுப்பதில் என்ன நன்மை இருக்கிறது? கருத்துப் பரிமாற்றத்திற்கு இடையே இருக்கும் சுவர்களை இடித்து அதற்குப் பதிலாக எவ்வாறு நாம் பாலங்களைக் கட்டலாம்? பின்வரும் கட்டுரைகள் அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயலும்.