ஒரு சகாப்தத்தின் முடிவு—எதிர்காலத்திற்கான நம்பிக்கை?
ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! நிருபர்
ரிக்டர் அளவில் 6.9 அல்லது அதற்கு அதிகமான அளவு பதிவாகியுள்ள நிலநடுக்கங்கள், 1987-க்கும் 1990-க்கும் இடையில், அர்மீனியா, சீனா, ஈக்வடார், ஈரான், பிலிப்பீன்ஸ், மற்றும் ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களின் சில பகுதிகளை அதிர்வுற வைத்தன. சுமார் 70,000 மக்கள் கொல்லப்பட்டனர், பத்தாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், லட்சக்கணக்கானோர் வீடின்றி விடப்பட்டனர். நூற்றுக்கோடிக்கணக்கான டாலர் அளவு சேதம் ஏற்பட்டது.
அவ்வாறிருந்தும், இந்த நிலநடுக்கங்களில் எதுவும், அதே சமயத்தில் உலகை அசைவித்த வேறொரு பூமியதிர்ச்சி செய்ததுபோல அத்தனை அநேக மக்களையோ அந்தளவு கடுமையாகவோ அதிரவைக்கவில்லை. அது ஓர் அரசியல்பூர்வ எழுச்சியாக, ஒரு சகாப்தத்துக்கு முடிவைக் கொண்டுவந்த ஒன்றாக இருந்தது. அவ்வாறு செய்ததன்மூலம், அது கோடிக்கணக்கானவர்களுக்கு எதிர்காலத்தை மாற்றியமைத்தது.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு வழிநடத்தியது எது? அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்?
க்ளாஸ்நாஸ்ட்டும் பெரஸ்ட்ராய்க்காவும்
மார்ச் 11, 1985 அன்று, மிக்காயில் கொர்பச்சேவ், சோவியத் யூனியனின் கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலரானார். அவருடைய ஆட்சியின்போது, சோவியத் குடிமக்களும் உலகத்தைக் கவனித்து கருத்தறிவிப்பவர்களும், பெரிய அரசியல் மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.
ஓராண்டுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், சோவியத் அயல்நாட்டு அமைச்சருக்கு முன்னாள் அரசியல் ஆலோசகராயும் ஐந்து வருடங்களுக்கு ஐக்கிய நாட்டு சங்கத்தின் உதவி பொதுச் செயலராயும் இருந்த அர்க்காடியய் ஷெவ்சென்கோ, பின்வருமாறு எழுதியபோது குறிப்பிட்ட உட்பார்வையுடன் எடுத்துரைத்தார்: “ஐ.சோ.சோ.கு. இடர்ப்பாடு மிக்க முக்கியமான திருப்பகட்டத்தில் இருக்கிறது. அவசரமான முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் அண்மை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படாவிட்டால், அதன் பொருளாதார அமைப்புமுறையில் மேலுமான சீர்குலைவு தவிர்க்கப்பட முடியாததாய் இருக்கும்; இதனால், நெடுங்கால அளவில், அது நீடித்திருப்பதற்கான வாய்ப்புதானே ஆபத்திற்குள்ளாக்கப்படும். . . . கொர்பச்சேவ் நிச்சயமாகவே ஒரு புது பாணியை தொடங்கி வைத்திருக்கிறார் . . . ஆனால் அவரது பொறுப்பேற்பு, ஐ.சோ.சோ.கு.-வுக்கு ஒரு புதிய சகாப்தத்துக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். . . . ஏறக்குறைய வென்று சமாளிக்க முடியாத பிரச்சினைகளை அவர் எதிர்ப்படுகிறார்.”
இத்தருணத்தில் கொர்பச்சேவ்வுக்கு இருந்த பதவிநிலை, அவர் சுமார் 1971-லேயே பேசிக்கொண்டிருந்த ஒரு செயல்திட்டத்தை சோவியத் சமுதாயத்திற்குள் அறிமுகப்படுத்துவதற்கான அரசியல் செல்வாக்கை அவருக்கு அளித்தது. அதுதான் க்ளாஸ்நாஸ்ட்; அதற்கு அர்த்தம் “பொது தகவல்”; சோவியத் பிரச்சினைகளில் அதிகாரப்பூர்வ நேர்மையை உடைய ஒரு செயல்திட்டத்தை அது பிரதிநிதித்துவம் செய்தது. சோவியத் குடிமக்களும் செய்தித்துறையும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திக்கொள்ள அதிகப்படியான சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் ஓர் அதிக திறந்த சமுதாயத்தை அது பரிந்துரைத்தது. முடிவில், அரசாங்கத்தையும் அதன் நடவடிக்கைகள் சிலவற்றையும் பொது மக்கள் குறைகூறுவதற்கு வழிதிறந்து வைத்தது க்ளாஸ்நாஸ்ட்.
கொர்பச்சேவ் நெடுங்காலமாகப் பயன்படுத்திவந்த மற்றொரு பதம், “திருத்தி அமைத்தல்” என்று அர்த்தமுடைய “பெரஸ்ட்ராய்க்கா” என்ற ஒரு வார்த்தை. 1982-ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், வேளாண்மை துறையில் ‘தக்க உளவியல் சார்ந்த திருத்தி அமைத்தலுக்கான அவசியம் இருப்பதைக் குறித்து’ அவர் பேசினார்.
கொர்பச்சேவ், சோவியத் யூனியனின் தலைவரான பின்னர், பொருளாதார மேலாண்மைக்குரிய அமைப்புமுறையையும்கூட மீண்டும் திருத்தி அமைத்தல் கட்டாயமாக அவசியம் என்று உறுதியாக உணர்ந்தார். அதை சாதிப்பது சுலபமாக இருக்காது என்று—அரசியல் மாற்றத்துடன் சேர்ந்து செய்யப்படாவிட்டால் ஒருவேளை சாத்தியமற்றதாககூட இருக்கும் என்று—அவர் அறிந்திருந்தார்.
க்ளாஸ்நாஸ்ட் மற்றும் பெரஸ்ட்ராய்க்கா கோட்பாடுகளை செயலுக்குக் கொண்டுவருவதில் கொர்பச்சேவ்வுக்கு இருந்த ஆர்வம், அவர் கம்யூனிஸத்தை அழிக்க நோக்கம் கொண்டிருந்தார் என்று அர்த்தப்படுத்தவில்லை. அதற்கு மாறாகவே இருந்தது. தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது: “மேலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட ஒரு புரட்சியைத் தொடங்குவதே அவருடைய நோக்கமாக இருந்தது. சோவியத் அமைப்புமுறையை மறைமுகமாக அரித்தழிக்க அவர் விரும்பவில்லை, அதை அதிக திறம்பட்டதாக்கவே அவர் விரும்பினார்.”
இந்தச் செயல்திட்டங்களின் விளைவாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, சோவியத் யூனியனில் தலைமைதாங்குகிறவர்களில் சில அங்கத்தினர் மத்தியில் மனவருத்தத்திற்கு ஒரு காரணமாக இருந்தது. கிழக்கத்திய ஒப்பந்த நாடுகளின் தலைவர்களில் சிலரைக் குறித்ததிலும் அதுவே உண்மையாக இருந்தது. பொருளாதார ரீதியிலான அமைப்புமுறை திருத்தி அமைக்கப்படுவதற்கான அவசியம் இருப்பதை அநேகர் உணர்ந்துகொண்டபோதிலும், அரசியல் ரீதியிலான மாற்றங்கள் தேவை அல்லது விரும்பத்தக்கவை என்று எல்லாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
என்றபோதிலும், கொர்பச்சேவ், தன்னுடைய கிழக்கத்திய ஐரோப்பிய கூட்டாளிகளிடம், அவர்கள் தங்கள் சொந்த பெரஸ்ட்ராய்க்கா திட்டங்களை முயன்று பார்க்கும் சுதந்திரமுள்ளவர்கள் என்பதைத் தெரியப்பண்ணினார். அதற்கிடையில், கொர்பச்சேவ், சீர்திருத்தங்கள் அவசியம் என்றாலும், கம்யூனிஸ கட்சி வகிக்கும் முக்கியமான பங்கை குறைத்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல்கேரியாவையும்—உண்மையில் மற்ற கிழக்கத்திய ஒப்பந்த நாடுகளையும்—எச்சரித்தார்.
பலவீனமடையத் தொடங்குகிறது
கம்யூனிஸத்தைக் குறைகூறுதல், சோவியத் யூனியனிலும் கிழக்கத்திய ஒப்பந்த நாடுகளிலும், வருடங்களினூடே அதிகரித்து வந்திருக்கிறது. உதாரணமாக, ஆரம்ப 1980-களிலிருந்து, ஹங்கேரிய செய்தி பத்திரிகை HVG (ஹெடி விலாக்காஸ்டாஷாக்), நேரடியாக கம்யூனிஸ கட்சியைத் தானே குறைகூறுவதைத் தவிர்த்திருந்தபோதிலும், பாரம்பரிய கம்யூனிஸ கருத்துக்களை எதிர்த்து கடுமையாகத் தாக்கி வந்திருக்கிறது.
கிழக்கத்திய ஒப்பந்த நாடுகளில் இருந்த முதல் சுதந்திரத் தொழிற்சங்கமான சாலிடாரிட்டி, போலாந்தில் 1980-ல் நிறுவப்பட்டது. என்றாலும், 1976-ல், கருத்து வேறுபாடு கொண்ட தொகுதி ஒன்று, பணியாளர் தற்காப்பு குழு (Workers’ Defense Committee) ஒன்றை உருவாக்கியது வரை பழமையானதாக அதன் தொடக்கத்தைக் காண முடியும். ஆரம்ப 1981-ல், சாலிடாரிட்டியில் சுமார் ஒரு கோடி பணியாளர்கள் அங்கத்தினர்களாக இருந்தனர். பொருளாதார சீர்திருத்தங்களுக்காகவும் சுதந்திரமான தேர்தல்களுக்காகவும் கோரி, இந்தக் கோரிக்கைகளை சில சமயங்களில் வேலை நிறுத்தங்கள் மூலமாக வற்புறுத்தி கேட்டு அது செயல்பட்டது. சோவியத் தலையிடுதலின் சாத்தியத்திற்கான அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, போலாந்து அரசு, முடிவில் அந்தச் சங்கத்தை கலைத்தது; என்றாலும்கூட அது தலைமறைவாகத் தொடர்ந்து இயங்கி வந்தது. அரசு அங்கீகாரத்திற்காக கோரி செய்யப்பட்ட வேலைநிறுத்தங்கள், மீண்டும் 1989-ல் அந்தச் சங்கம் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு வழிநடத்தின. சுதந்திரமான தேர்தல்கள் ஜூன் 1989-ல் நடத்தப்பட்டன; சாலிடாரிட்டி வேட்பாளர்கள் அநேகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆகஸ்ட்டிற்குள், சுமார் 40 வருடங்களில் முதல் தடவையாக, கம்யூனிஸத்தைச் சேராத ஒரு பிரதமர் போலாந்தில் பணியில் அமர்ந்திருந்தார்.
கம்யூனிஸ உலகம் எதிர்ப்பட்டுவந்த பிரச்சினைகளுடன்கூட க்ளாஸ்நாஸ்ட்டும் பெரஸ்ட்ராய்க்காவும் தெளிவாகவே, கிழக்கத்திய ஒப்பந்த நாடுகள் அனைத்தையும் மீண்டும் உருவமைத்துக்கொண்டிருந்தன.
அரசியல் பெரஸ்ட்ராய்க்கா, புரட்சிக்கு வழிநடத்துகிறது
“ஜூலை 1987 வரையிலும், எல்லாமே மிக்காயில் கொர்பச்சேவ்வின் வழியில் போய்க்கொண்டிருந்ததுபோல் தோன்றியது,” என்பதாக லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்ட்டின் மக்காலி எழுதுகிறார். ஜூன் 1988 என்ற பிற்பட்ட தேதி வரையாகக்கூட, மாஸ்கோவில் நடந்த 19-வது கம்யூனிஸ கட்சி மாநாட்டில், கொர்பச்சேவ், “அவருடைய திட்டங்களுக்கு, அவ்வப்போது அரைகுறையானதென்றாலும் விரிவான ஆதரவை” பெற்றதாக அறிக்கை செய்யப்பட்டது. ஆனால், கம்யூனிஸ கட்சியையும் சோவியத் அரசையும் திருத்தி அமைப்பதில் அவர் பிரச்சினைகளை எதிர்ப்பட்டு வந்தார் என்பது தெளிவாக இருந்தது.
1988-ல், அரசியலமைப்பு மாற்றங்கள், அப்போதிருந்த ஸுப்ரீம் சோவியத்தை யூ.எஸ்.எஸ்.ஆர். காங்க்ரஸ் ஆஃப் பீப்பிள்ஸ் டெபுட்டீஸ் என்பதால் மாற்றீடு செய்ய அனுமதித்தது; அதன் 2,250 அங்கத்தினர்கள் ஒரு வருடத்திற்குப்பின் சுதந்திரமான தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த உறுப்பினர்கள், முறையே, ஒவ்வொன்றும் 271 அங்கத்தினர்களாலான இரண்டு அவைகளை உடைய சட்ட மன்றத்தை அவர்களுக்குள்ளிருந்து தேர்ந்தெடுத்தனர். இந்தச் சட்ட மன்றத்தில் போரிஸ் யெல்ஸ்டின் ஒரு பிரபல அங்கத்தினராக ஆனார். பெரஸ்ட்ராய்க்கா வெற்றி பெற தவறியதை அவர் விரைவாகச் சுட்டிக்காண்பித்து, தான் அவசியமானதாக நினைத்த சீர்திருத்தங்களுக்குக் கவனத்தைத் திருப்பினார். இவ்வாறாக, கொர்பச்சேவ், தான் மீண்டும் உருவமைத்து பலப்படுத்த விரும்பிய அந்த ஸ்தானத்துக்கு, 1988-ல் அதிபராக உயர்த்தப்பட்டிருந்தபோதிலும்கூட, அவருக்கு எதிர்ப்பு தொடர்ந்து வளர்ந்து வந்தது.
இதற்கிடையில், இரண்டு வல்லரசுகளாகிய சோவியத் யூனியனும் ஐக்கிய மாகாணங்களும், ராணுவப் படைகளைக் குறைப்பதிலும் அணு ஆற்றல் அச்சுறுத்தலைத் தணிப்பதிலும் தடைகளைத் தகர்த்து பெருமளவில் முன்னேறிக்கொண்டு இருந்தனர். செய்யப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தமும், உலக சமாதானம் அடையப்படக்கூடும் என்பதற்கு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைத் தூண்டியது; எழுத்தாளர் ஜான் எல்ஸன், செப்டம்பர் 1989-ல் பின்வருமாறு குறிப்பிடும் அளவுக்குத் தூண்டியது: “1980-களின் கடைசி நாட்கள், அநேக குறிப்புரையாளர்களைப் பொறுத்தவரையில், போர்க்கருவிகளுக்கு ஒரு வகையான வழியனுப்புதலைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவே இருக்கிறது. பனிப் போர் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகத் தோன்றுகிறது; உலகில் அநேக பாகங்களில் சமாதானம் வளர்ந்து வருவதாகத் தோன்றுகிறது.”
பின்னர் நவம்பர் 9, 1989 வந்தது. பெர்லின் மதில்சுவர் இன்னும் அப்படியே இருந்தபோதிலும், சுமார் 28 வருடங்களுக்குப் பின்னர், திறக்கப்பட்டு, திடீரென்று அது இனிமேலும் கிழக்குக்கும் மேற்குக்கும் ஓர் அடையாளப்பூர்வ தடையாக இல்லாமல் போனது. ஒன்றன்பின் ஒன்றாக, விரைவான தொடர்ச்சியில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பொதுவுடைமைக் கொள்கைசார்ந்த ஆட்சியை விட்டுவிட்டன. இருண்ட கதாநாயகனின் மரணம்—கிழக்கு ஐரோப்பா 1987-90 (ஆங்கிலம்) என்பதில் டேவட் செல்பார்ன் அதை இவ்வாறு அழைத்தார், “வரலாற்றுப் புரட்சிகள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய ஒன்று: மக்களாட்சிக்குரியதும், அவசியமாகவே பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரானதுமான புரட்சி, அதைச் செயலுக்குக் கொண்டுவந்தவர்களும், பார்த்துக்கொண்டிருந்தவர்களும் காட்சியிலிருந்து மறைந்து போனதற்குப் பின்னால் நெடுங்காலத்துக்கு அதன் விளைவுகள் தொடரும்.”
அதன் உச்சக்கட்டத்தை அது அடைந்ததும், அந்தச் சமாதான புரட்சி விரைவில் முடிவடைந்தது. செக்கோஸ்லோவாகியாவிலுள்ள ப்ராக்கில் காணப்படுகிற ஒரு அடையாளப்பலகை இந்த விதமாக சுருங்கச் சொல்கிறது: “போலாந்து—10 வருடங்கள்; ஹங்கேரி—10 மாதங்கள்; கிழக்கு ஜெர்மனி—10 வாரங்கள்; செக்கோஸ்லோவாகியா—10 நாட்கள். பின்னர், ஒரு வார பீதிக்குப் பின், ருமேனியா—10 மணிநேரங்கள்.”
பனிப் போரை முடிவுறச் செய்தல்
நூலாசிரியர் செல்பார்ன் சொல்லுகிறார்: “கிழக்கு ஐரோப்பிய அமைப்புமுறையுடைய வீழ்ச்சியின் போக்கு குறிப்பிடத்தக்க வகையில் நிலையானதாக இருந்தது.” அவர் மேலுமாகச் சொல்கிறார்: “மார்ச் 1985-ல் மாஸ்கோவில் கொர்பச்சேவ் பதவியேற்றதும் ‘ப்ரெஷ்னெவ் கோட்பாட்டை’ அவர் முடிவுக்குக் கொண்டுவந்ததும், அதற்கான ஊக்குவிப்பாக இருந்ததென்பது தெளிவாகவே இருந்தது; அந்தக் கோட்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது, அடிக்கடி நேரிடும் எழுச்சிகளின்போது, சோவியத்தின் உதவியையும் தலையிடுதலையும் கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு உறுதியளிப்பதை முடிவாக நீக்கிப்போட்டது.”
“ஐரோப்பாவின் அரசியலமைப்புத் திட்டத்தை மாற்றியமைத்ததும், பனிப் போரின் முடிவுடைய தொடக்கத்தை குறித்ததுமான பிற்பட்ட 1989 மற்றும் 1990-ல் நடந்த தொடர் நிகழ்வுகளைத் தொடங்கி வைத்த மிக முக்கியமான ஒரே நபர்” என்பதாக கொர்பச்சேவ்வை தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா அழைக்கிறது.
நிச்சயமாகவே, கொர்பச்சேவ் தனியாக பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது. விரைவில் என்ன தொடரும் என்பதைக் குறிப்பிட்டு உணர்த்தும் வண்ணம், பிரிட்டிஷ் பிரதமர் மார்க்ரெட் தாச்சர் முதலில் அவரைச் சந்தித்த பின் இவ்வாறு சொன்னார்: “எனக்கு திரு. கொர்பச்சேவ்வை பிடிக்கும். நாங்கள் சேர்ந்து நன்றாக வேலை செய்யலாம்.” மேலுமாக, கொர்பச்சேவ்வுடன் ஒத்துழைப்பதே ஞானமான போக்கு என்பதாக ரீகனை நம்பச் செய்யும்படி, தாச்சரும் அமெரிக்க அதிபர் ரீகனும் அனுபவித்த அசாதாரணமான தனிப்பட்ட உறவு, தாச்சருக்கு உதவியது. கொர்பச்சேவ்—உலகைக் கலக்கிய ஒரு மனிதனின் உருவாக்கம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் நூலாசிரியை கேயல் ஷீஹி இவ்வாறு கூறி முடிக்கிறார்: “தாச்சர், ‘மிக நிஜமான அர்த்தத்தில் ரீகன்-கொர்பச்சேவ் உறவிற்கு, தான் ஞானத்தாயாக இருந்ததற்காக’ தன்னைக் குறித்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.”
வரலாற்றில் அடிக்கடி சம்பவித்திருப்பதுபோல, மற்றபடி சம்பவித்திருக்கக்கூடாத மாற்றங்களைச் செயலுக்குக் கொண்டுவருவதற்கு, சரியான மக்கள் தக்க நேரத்தில் அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள்.
இருண்ட மேகங்கள் தொடுவானில்
பனிப் போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்ததால், கிழக்கும் மேற்கும் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கையில், அச்சுறுத்தும் மேகங்கள் வேறெங்கோ காட்சியளித்துக் கொண்டிருந்தன. இன வன்முறை திடீரென்று தோன்றியதன் காரணமாக புருண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்று 1988-ல் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த செய்தியைக் கேட்டபோது உலகம் அதற்குக் குறைந்த கவனத்தையே செலுத்தியது. 1945-லிருந்து கணக்கிட்டால், மிகவும் மோசமான இன வன்முறையின் திடீர் வெளிப்பாடு ஏப்ரல் 1989-ல் சம்பவித்துக்கொண்டிருப்பதாக யுகோஸ்லாவியாவிலிருந்து வந்த அறிக்கைகளுக்கும் குறைந்த கவனம் மட்டுமே செலுத்தப்பட்டது. இதற்கிடையில், சோவியத் யூனியனில் காணப்பட்ட அதிகப்படியான சுதந்திரம், பொது மக்கள் அமைதிகுலைவு பரவலாக இருப்பதில் விளைவடைந்திருந்தது. அதன் குடியரசுகளில் சில, விடுதலைக்கான முயற்சிகளையும்கூட மேற்கொண்டிருந்தன.
ஆகஸ்ட் 1990-ல், ஈராக்கின் துருப்புகள் குவைத்துக்குள் சென்று, 12 மணிநேரங்களுக்குள் அதைக் கைப்பற்றின. பெர்லின் மதில்சுவர் வீழ்ச்சிக்குப்பின் ஒரு வருடத்திற்கும் குறைவான சமயத்தில், ஜெர்மானியர்கள் ஜெர்மானிய ஒருமைப்பாட்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கையில், ஈராக்கின் அதிபர் இவ்வாறு பெருமை பாராட்டிக்கொண்டிருந்தார்: “குவைத், ஈராக்கைச் சேர்ந்தது, நாங்கள் அதற்காக 1,000 வருடங்களுக்கு மேல் போராட வேண்டியிருந்தாலும் நாங்கள் ஒருபோதும் அதை விட்டுக்கொடுக்க மாட்டோம்.” நவம்பரில் ஐக்கிய நாட்டு சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது; குவைத்திலிருந்து ஈராக் பின்வாங்காவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியது. சாத்தியமான பேரழிவின் விளிம்பில் மீண்டும் ஒருமுறை உலகம் தள்ளாடிக்கொண்டிருந்தது; பெட்ரோலிய தரவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருப்பதே அடிப்படை பிரச்சினையாக இருந்தது.
ஆகவே, பனிப் போரின் முடிவால் தூண்டியெழுப்பப்பட்ட சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான நம்பிக்கைகள் நிறைவேற்றமடையும் முன்புதானே மறைந்துவிடுபவையாய் இருந்தனவா? எமது அடுத்த இதழில் “ ‘புதிய உலக ஒழுங்குமுறை’—தடுமாற்றமான துவக்கம்,” என்ற கட்டுரையில் இதைக் குறித்து வாசியுங்கள்.
[பக்கம் 15-ன் படம்]
பெர்லின் மதில்சுவர் திடீரென்று இனிமேலும் கிழக்குக்கும் மேற்குக்கும் ஓர் அடையாளப்பூர்வ தடையாக இல்லாமல் போனது