‘மதில் தகர்ந்து உருண்டு கீழே வந்தது’
“இதை யார் நம்பியிருப்பார்?” “என்னுடைய வாழ்நாளில் இதை நான் காண்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை!” இந்த வார்த்தைகளுக்கு எது காரணமாயிருந்தது? 1989 நவம்பர்a முதற்கொண்டு, பேர்போன பெர்லின் மதிலும் அது பிரதிநிதித்துவம் செய்த அனைத்தின் அழிவும். கிழக்கு பெர்லின் வாசிகள், சிலர், முதலாளித்துவத்தின் மிகுதியான விலையுள்ள மகிழ்வூட்டும் பொருட்களை ருசிபார்க்கவும், மற்றவர்கள் குடும்பங்களாக ஒன்று சேரவும் மேற்கு பெர்லினுக்குள் ஏராளமாக வந்து சேர்ந்தனர்.
எல்லைச் சுவரின் அந்த உடைப்பு மதகுகளைத் திறந்துவிட்டது. கிழக்கு ஐரோப்பா மறுபடியும் அவ்வாறே இருக்காது என்பதாக அநேகர் நினைத்தனர்.
கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்துவிட்டதா?
பெர்லின் மதிலின் சரிந்து வீழ்ந்ததைவிட அதிக குறிப்படத்தக்கதாக இருப்பது கிழக்கை மேற்கிலிருந்து பிரித்து வைத்த கருத்துப்பாங்கு மதிலின் வீழ்ச்சியாக இருந்தது. திடீரென்று உண்மையில் கெடுபிடிப் போரே இல்லை. ஓய்வுபெற்ற ஐ.மா. படைத்துறை முதல்வர் டேவிட் ஹாக் உவார்த் நியூஸ்வீக்-ல் எழுதிய வண்ணமே: “கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. கம்யூனிஸ்ட் ஒருவனைக் கொல் என்று சொல்லக்கூடிய இரக்கமற்ற கொலைக்கார விரோதியும் இப்பொழுது இது முடிந்துவிட்டது என்று ஒப்புக்கொள்கிறான்.”
ஜெர்மன் செய்தித்தாள் ஸ்டட்கார்டர் ஸுட்டங்-ன்படி வட அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பும்கூட (NATO) 1990 ஜூலை மாதம் லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கெடுபிடிப் போரின் முடிவை ஒப்புக்கொண்டது. “அட்லான்டிக் ஒப்பந்தம் கெடுபிடி போர் சகாப்தத்துக்கு முடிவாக பிரியாவிடை கூறுகிறது” என்ற தலைப்பின் கீழ் தி ஜெர்மன் டிரிப்யூன், ஸ்டட்கார்ட் செய்தித்தாள் பின்வருமாறு சொல்வதாக மேற்கோள் காண்பிக்கிறது: “41 ஆண்டுகள் [சோவியத் கூட்டணி தேசங்களை] எதிர்ப்பட்ட பிற்பாடு 16 வட அமெரிக்க அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு தலைவர்கள், புதிய ஓர் ஆட்சி முறைக்கு வழிவகுத்து கெடுபிடி போர் சகாப்தத்துக்கு கடைசியாக பிரியாவிடை கூறியிருக்கிறார்கள். . . . பகைமைக்குப் பதிலாக கூட்டாளி உறவு ஏற்பட இருந்தது. . . . பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் . . . இனிமேலும் முக்கியமாக இராணுவ வழிமுறைகளினால் இல்லாமல், ஆனால் சமநிலைக் கொள்கை, பேச்சுவார்த்தை மற்றும் அனைத்து ஐரோப்பிய ஒத்துழைப்பினாலும் உறுதி செய்யப்படவிருந்தது.” சமாதானத்தை அச்சுறுத்தும் மோதல் அரங்கம் இப்போது ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்குக்கு இடம் மாறிவிட்டது.
குடியாட்சி அதன் விலையைக் கொண்டிருக்கிறது
மக்களுக்கு சுயேட்சையான தெரிவு என்பதாக அழைக்கப்படுகின்ற குடியாட்சியே அண்மைக் காலத்திய அரசியல் நாகரிகமாகும். மேலும் ஏறக்குறைய அனைவருமே வெற்றிபெறும் பக்கத்தைச் சேர்ந்துகொள்கின்றனர். ஆனால் இதற்கு செலுத்த வேண்டிய விலையுண்டு. கிழக்குக்கும் மேற்குக்கும் அதன் முதலாளித்துவ குடியாட்சிக்குமிடையிலான அனலான உறவுகள் மலிவாக வந்துவிடுவதில்லை. ஏஷியாவீக்-ன் ஒரு தலையங்கக் கட்டுரை இவ்விதமாக கருத்து தெரிவித்திருந்தது: “சோவியத் கூட்டணி என்பதாக இனிமேலும் அழைக்கப்பட முடியாத தேசங்கள் பொருளாதார குளறுபடியில் இருக்கின்றன . . . குடியாட்சிக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. . . . குடியாட்சியில் அநேக நன்மைகள் உண்டு, ஆனால் முழுநிறைவான ஸ்திரத்தன்மை அவற்றில் ஒன்றாக இல்லை.” அதிக சுயேட்சையான குடியாட்சி சமுதாயம் என்றழைக்கப்படும் இந்த மாற்றங்களுக்கு விலையை செலுத்துவது யார்?
மையக்கட்டுப்பாடுள்ள பொருளாதாரத்தை கட்டுப்பாடில்லாத சந்தை அமைப்பாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பத்தில் வேலையில்லா திண்டாட்டத்தையும் இன்னல்களையும் அதோடு கொண்டு வருவதை போலந்திலும் கிழக்கு ஜெர்மனியிலும் வேறு இடங்களிலுமுள்ள லட்சக்கணக்கானோர் கண்டுணர்ந்து வருகிறார்கள். தொழிற்சாலைகள் அதிக திறம்பட்டவையாக அமைத்துக் கொண்டு அதிகமாக போட்டியிட முயற்சி செய்கையில், மிகை ஏற்படுகிறது. சமுதாயத்தின் மற்ற பிரிவுகளும் கூட—இராணுவம் மற்றும் போர்த்தளவாடத் தொழிற்சாலைகள் கவலைக்குரிய வகையில் பாதிக்கப்படுகிறது. எவ்விதமாக?
கிழக்குக்கும் மேற்கிற்குமிடையிலான பரஸ்பர பயமும் பகைமையும் மறைகையில், பெரிய படைத்துறக்கான தேவை குறைந்துவிடுகிறது. நூறாயிரக்கணக்கான போர்வீரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் படைத்துறைச் சாராத வாழ்க்கைக்கும் அதனுடைய எல்லா அழுத்தங்களுக்கும் ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இராணுவ பட்ஜெட் சுருக்கப்படலாம். போர்த்தளவாட தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்கள் மந்தமாகிவிடக்கூடும், உற்பத்தியாளர்கள் வேறு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். தொழிலாளிகள் மற்ற பகுதிகளுக்கு இடம் மாறிச் சென்று புதிய கைத்திறமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
கிழக்கத்திய ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நம்புவதற்கரிய மற்றும் கொந்தளிப்பான திருப்பம் அடிப்படையில் புதிதான ஒரு சர்வதேசீய நிலைமையை உருவாக்கியிருக்கிறது. இவை அனைத்தும் எப்படி ஏற்படலானது?
சிக்கலான வார்த்தைகள், சிக்கலான மாற்றங்கள்
சோவியத் யூனியனால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தலையிடாக் கொள்கையின் திருத்தப்பட்ட மனநிலையே இந்த மாற்றங்களுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. கடந்தக் காலங்களில், ஹங்கேரி மீதும் (1956) செக்கோஸ்லோவாக்கியா மீதும் (1968) சோவியத்தின் படையெடுப்பின் கோரக் காட்சிகள் கிழக்கு ஐரோப்பாவில் சீர்திருத்தப் படைகளை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் 1980-களில் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் சவாலோடு போலந்தின் அனுபவமும், அதிக குடியாட்சி முறையினிடமாக தேசம் படிப்படியாக முன்னேறியதும் முந்தைய சோவியத்தின் இராணுவ தலையீட்டுக் கொள்கை மாறிவிட்டது என்பதைக் காண்பித்தது. போலந்தின் அனுபவம், கம்யூனிஸ்ட் ஒற்றைப்பாளக் கல்லில் விரிசல்கள் இருந்தன என்பதையும் ஒரு விலைகொடுத்து அமைதியான படிப்படியான மாற்றத்தை முயன்று அடையமுடியும் என்பதையும் காண்பித்தது. ஆனால் இவை அனைத்தையும் சாத்தியமாக்கியது என்ன?
ஒரு சில அரசியல் கருத்துரையாளர்களின் பிரகாரம், கிழக்கு ஐரோப்பாவில் எல்லா மாற்றங்களுக்கும் இன்றியமையாததாக இருந்திருப்பது சோவியத் ஜனாதிபதி மிக்கேல் கொர்பச்சேவின் தலைமைப் பொறுப்பின் கீழ் சோவியத் யூனியனின் மேலிடத்து நடைமுறையான கொள்கையே ஆகும். 1990, பிப்ரவரியில் அவர் சொன்னார்: “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, பெரிஸ்ட்ரோய்க்கா-வை [சமுதாயத்தின் புதிய அமைப்புமுறை] துவக்கி வைத்து அதன் கருத்தையும் கொள்கையையும் உருவாக்கியிருக்கிறது. வாழ்க்கையின் எல்லாச் செயற்களங்களையும் மக்கள் தொகயின் எல்லா பிரிவினரையும் உட்படுத்தும் தீவிரமான புரட்சிகரமான மாற்றங்கள் இதன் அடிப்படையில் தேசத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. . . . செயல் எல்லையிலும் தற்படைப்பாற்றலிலும் அசாதாரணமாக இருக்கும் வேகமான மாற்றங்கள் பெரிஸ்ட்ரோய்க்காவின் அமைப்பிற்குள் நடைபெற்று வருகின்றன.”
ஏஷியாவீக் குறிப்பிட்டவிதமாகவே: “இன்று, ஒரு சில தடங்கல்கள் மத்தியிலும் க்ளாஸ்நாஸ்ட் (ஒளிவுமறைவில்லாமை) மற்றும் பெரிஸ்ட்ரோய்க்காவுக்கான (புதிய அமைப்புமுறை) [கொர்பச்சேவின்] போரட்ட ஏற்பாடுகள் ஹங்கேரி, போலந்து மற்றும் சோவியத் கூட்டணி முழுவதிலும் சீர்திருத்தவாதிகளை உற்சாகப்படுத்தியிருக்கிறது.” இந்த இரண்டு சிக்கலான ருஷ்ய மொழி வார்த்தைகள், க்ளாஸ்நாஸ்ட் மற்றும் பெரிஸ்ட்ரோய்க்கா, 1985-ல் சோவியத் யூனியனில் கொர்பச்சேவ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதற்கொண்டு உலகின் சொற்றொகுதியில் நுழைந்துவிட்டிருக்கின்றன. அவை, கம்யூனிஸ்ட் உலகில் அரசாங்கத்தினிடமாக புதிய ஒரு மனநிலையை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றன.
மாறுதல் விரும்பாத ஃபிரெஞ்சு பத்திரிகை லி கோட்டிடியன் டி பாரிஸ்-ல் செக்கோஸ்லோவாக்கியாவில் மாற்றங்களைப் பற்றி எழுதுகையில் அரசியல் கருத்துரையாளர்கள் பிலிப்பி மார்கோவிக்கி, இதற்குக் “காரணம் மாஸ்கோவே, ஏனென்றால் ஒரு காரியம் தெளிவாக இருக்கிறது: சோவியத் மக்கள் தானாக இது நேரிடும்படி விட்டுவிடவில்லை; மக்களின் மற்ற குடியாட்சிகளைப் போன்று செக்கோஸ்லோவாக்கியா, அது கட்டுண்டிருந்த வன்முறையான நிலையிலிருந்து விடுபடுவதை அவர்கள் உறுதி செய்துகொண்டனர் . . . ப்ரேக்கிலும் கிழக்கு பெர்லினிலும், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மாற்றத்தை தூண்டின; மக்கள் தெருக்களுக்கு வந்து அதிகாரிகளை சரணடையும்படியும் பணியைவிட்டு இறங்கும்படியும் வற்புறுத்தினர்.”
இதன் விளைவு ஓர் அரசியல் மலையான செயின்ட் ஹெலன்ஸ் வெடிப்பது போல குடியாட்சியும் சுதந்திரமும் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கிழக்கத்திய ஐரோப்பிய நிலப்படம் முழுவதிலுமாக திடீரென தோன்றியது—போலந்து, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா மற்றும் ருமேனியா.
ஜெர்மன் மீண்டும் இணைந்தது—ஆசீர்வாதமா அல்லது சாபமா?
இதுவே ஐரோப்பாவில் அநேகர் இப்பொழுது மதிப்பிட்டுக் கொண்டிருக்கும் கேள்வியாகும். இரண்டு ஜெர்மனிகளும் ஜூலை 1990-ல் நிதிசார்ந்த ஒற்றுமையை சட்டப்படி அமைத்துக்கொண்டு அக்டோபரில் அரசியல் ஒற்றுமையை முயன்று அடைந்தன. இது லட்சக்கணக்கானோரை களிகூர செய்த போதிலும், ஐரோப்பாவிலுள்ள அநேகரை இது பதற்றம் கொள்ளவும் செய்கிறது. கிழக்கு ஜெர்மனியிலுள்ள சிலர், மேற்கு ஜெர்மனியிலுள்ள முன்னாள் வீட்டு சொந்தக்காரர்களுக்குத் தங்கள் வீடுகளை விட்டுக்கொடுப்பதை இது உட்படுத்துகிறது. ஒரு சில பிரிட்டிஷ் தலைவர்கள் இட ஒதுக்கீடு குறித்து தெரிவிக்கும் கருத்துகளின் மத்தியிலும் ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாளின் தலைப்புச் செய்தி சொன்னதாவது: “நாம் வெறுமென புதிதாகப் பிறந்த ஜெர்மனியை நம்பியிருக்க வேண்டும்.”
நெப்போலியன் (1812) மற்றும் ஹிட்லரின் (1941) கைகளில் பயங்கரமான மற்றும் பெருஞ்செலவை உட்படுத்திய படையெடுப்புகளை அனுபவித்ததன் காரணமாக, இரண்டாம் உலகப் போரின் முடிவில், சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவில் ஓர் இடைத்தடுப்புப் பிரதேசத்தோடு அதன் பாதுகாப்பை அது உறுதிசெய்து கொள்ள விரும்பியது. இவ்விதமாகவே, எட்டு கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் தேசங்களைக் கொண்ட சோவியத் கூட்டணி 1945-லிருந்து ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே உருவாக்கப்பட்டது.b இப்பொழுது சோவியத் யூனியன், ஜெர்மனி அல்லது ஐக்கிய மாகாணங்களினால் குறைந்த அளவே அச்சுறுத்தப்பட்டதாக உணருகிறது. முன்னாள் துணைக்கோள்களின் மீது அவளுடைய இரும்புப்பிடி, தளர்ந்து விட்டது. 1946-ல் சர்ச்சில் அறிவித்திருந்த இரும்புத் திரை உருகி, புதிய வெளிச்சம் பிரவேசிப்பதை அனுமதிப்பது போல் இருந்தது.
இந்த மாற்றங்கள் உங்களை எவ்வாறு பாதிக்கக்கூடும்
அநேக தேசங்களுக்கு இந்த மாற்றங்களின் பொருளாதார கிளைத்தல்களை ஏற்கெனவே நாம் கவனித்தோம்—சிலருக்கு புதிய வேலைகள், புதிய அமைப்புகள் மற்றும் புதிய கைத் திறமைகள். இன்னும் மற்ற அநேகருக்கு வேலையில்லாத திண்டாட்டமும் போரட்டமும் இருக்கும். சுயேச்சையாக இயங்கும் சந்தை உலக தத்துவத்தின் விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது—வல்லனவற்றின் வாழ்வுவளம்.
மறுபட்சத்தில் குடியாட்சி கொள்கையினிடமான மாற்றம் மக்கள் சுயாதீனமாக இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்வதை அனுமதிக்கிறது. அது சர்வ தேசீய சுற்றுலாவை அர்த்தப்படுத்துகிறது. மற்ற சேதங்கள் (ஸ்பெய்ன் மற்றும் இத்தாலி) கடந்த 30 ஆண்டுகளில் கண்டுபிடித்திருப்பது போல, அந்நிய நாட்டு சுற்றுலா எந்த அரசாங்கத்துக்கும் செலுத்தத்தின் சமநிலை பிரச்னையில் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். மேற்கிலுள்ள லட்சக்கணக்கானோர் கிழக்கு ஐரோப்பாவின் வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களை, சென்றகால வளமான யுகத்தை வெளிக்கொணரும் நகரங்களை காண ஆவலாய் இருக்கின்றனர்—புடப்பெஸ்ட், ப்ரேக், புக்காரஸ்ட், வார்சா, மற்றும் லீப்சிக் அவற்றில் ஒரு சிலவாகும். மக்கள் லெனின்கிராட், மாஸ்கோ மற்றும் ஒடிஸாவையும்கூட கட்டுப்பாடில்லாமல் சென்று பார்க்க விரும்புகின்றனர். அதேவிதமாகவே, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள மக்கள் மேற்கை விஜயம் செய்ய விரும்புகிறார்கள். நிச்சயமாகவே, சர்வதேசீய சுற்றுலா, தப்பெண்ணம் மற்றும் அறியாமையின் ஒரு சில தடையரண்களை தகர்த்தெறிய உதவிபுரிகிறது. சுற்றுலாப் பயணிகள் உணர்ந்திருக்கும் வண்ணமாகவே, முன்னாள் விரோதிகள் என்னப்பட்டவர்களோடு கடற்கரையை பகிர்ந்து கொள்வது தானே வெறுப்புணர்ச்சியை விரைவில் மறைந்துவிடச் செய்யக்கூடும்.
வீழ்ந்துபோன மதிலின் மற்றொரு அம்சம் லட்சக்கணக்கான ஆட்களை கவருவதாக இருக்கிறது—மற்ற தேசங்களிலுள்ள உடன் மத விசுவாசிகளுடன் தாராளமாகக் கூட்டுறவுக் கொள்ளும் சாத்தியம். எந்த அளவுக்கு இது சாத்தியமாக இருக்கும்? கிழக்கு ஐரோப்பாவில் மதத் துறையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன? பின்வரும் கட்டுரை இவற்றையும் மற்ற கேள்விகளையும் சிந்திக்கும். (g91 1/8)
[அடிக்குறிப்புகள்]
a கிழக்கு பெர்லினை மேற்கு பெர்லினிலிருந்து பிரித்துவைக்கும் 47 கிலோ மீட்டர் நீளமான பெர்லின் மதில், மேற்கு பெர்லினுக்குள் அகதிகள் செல்வதை தடைசெய்வதற்காக 1961-ல் கிழக்கு ஜெர்மனியால் கட்டப்பட்டது.
b செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, போலந்து, கிழக்கு ஜெர்மனி, அல்பேனியா மற்றும் யூகோஸ்லாவியா அந்த எட்டு தேசங்களாகும்.
[பக்கம் 5-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பெர்லின்
ஜெர்மனி
போலந்து
சோவியத் யூனியன்
செக்கோஸ்லோவாக்கியா
ஹங்கேரி
ருமேனியா
யூகோஸ்லாவியா
பல்கேரியா
அல்பேனியா