ஓஎஸ்சிஇ அது என்ன? அது வெற்றிபெறுமா?
போர்த்துகலிலிருந்து விழித்தெழு! நிருபர்
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு, மக்களாட்சி முதலாளித்துவத்தை ஆதரித்த மேலை நாடுகளுக்கும் சோவியத் பொதுவுடைமையை ஆதரித்த கீழை நாடுகளின் கூட்டமைப்பிற்கும் மத்தியில் ஆதிக்கத்துக்காக ஒரு கடும் போராட்டம் ஏற்பட்டது. ஒவ்வொரு கூட்டமைப்பும் தன் சொந்த பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டது: மேற்கில் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization [NATO]), கிழக்கில் வார்ஸா ஒப்பந்தம்.
1975-ற்குள், ஐக்கிய மாகாணங்களையும் ரஷ்யாவையும் உள்ளிட்ட 35 தேசங்களை, ஹெல்சிங்கி ஒப்பந்தம் என்று பின்னர் அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி செய்யும் அளவுக்கு நாடுகளுக்கு மத்தியிலிருந்த சீர்குலைந்த உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான மாநாடு (Conference on Security and Cooperation in Europe [CSCE]) ஸ்தாபிக்கப்பட்டது. அந்த இரண்டு கூட்டமைப்புகளுக்கும் மத்தியில் பலதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தபேச்சுக்கான கருத்தரங்காக அது இருந்தது.
1994-ல் நடந்த புடாபெஸ்ட் உச்சிமாநாட்டில், சிஎஸ்சிஇ தனது பெயரை ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான சங்கம் (Organisation for Security and Cooperation in Europe [OSCE]) என்று மாற்றிக்கொண்டது. ஐக்கிய மாகாணங்கள், கனடா, முன்னாள் சோவியத் குடியரசின் அனைத்து நாடுகளும் உட்பட, இன்று அது 54 பங்குகொள்ளும் தேசங்களைக் கொண்டிருக்கிறது.
அதன் குறிக்கோள்
ஓஎஸ்சிஇ-யில் உறுப்பினராய் இருக்கும் தேசங்களுடைய குறிக்கோளானது, ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்திரவாதமளிப்பதும், அதோடுகூட மனித உரிமைகள், ஆயுதக் குறைப்பு, மக்களாட்சி சார்ந்த உரிமைகளையும் மண்டல பிரச்சினைகளையும் சமாளித்தல் ஆகியவற்றை நிறைவேற்ற ஆதரவளிப்பதாகும்.
1996 டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில், ஓஎஸ்சிஇ-யின் உச்சிமாநாடு போர்த்துகலிலுள்ள லிஸ்பனில் நடந்தது. முதலில் NATO மீது கவனம் செலுத்தப்பட்டது. ஏனென்றால் ஐக்கிய மாகாணங்கள் உட்பட அநேக NATO உறுப்பினர்கள், இன்னுமதிக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய தேசங்களை உட்படுத்தும்படி NATO-வை விரிவாக்க விருப்பம் தெரிவித்தன. கிழக்கத்திய கூட்டமைப்பின் முன்னாள் கூட்டாளிகளை உட்படுத்தும்படி NATO-வின் விரிவாக்கத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, ரஷ்யாவும் அதன் முன்னாள் கிழக்கத்திய கூட்டமைப்பு கூட்டாளிகளாக இருந்த சில தேசங்களும், ஐரோப்பிய பாதுகாப்பு பற்றிய விஷயங்களுக்கான ஒரு கருத்தரங்காக ஓஎஸ்சிஇ இருக்க வேண்டும் என விரும்பின.
ரஷ்யப் பிரதம மந்திரியான விக்டார் செர்னாமிர்டின் அந்த கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: “ஐரோப்பாவில் எல்லா தேசங்களும் ஒன்றாக வேலை செய்யக்கூடிய ஒரே இடமாக இருக்கும் ஓஎஸ்சிஇ-ஐ பலப்படுத்துவதையே நாங்கள் ஆதரிக்கிறோம். இதுவே, பாதுகாப்பு மற்றும் இராணுவ ஏற்பாடுகளைப் பற்றி பேசக்கூடிய மிகச் சிறந்த சர்வதேச இடமாகும்.”
அதன் தெளிவற்ற முடிவுகளை பற்றி செய்தித்துறையில் பேச்சு இருந்தபோதிலும், உச்சிமாநாட்டின் முடிவில் அழகொளிவீசிய மதிய சூரியன் பொதுவான நம்பிக்கைதரும் சூழலை ஏற்படுத்துவதைப்போல் காட்சியளித்தது. ஓஎஸ்சிஇ என்ன வெற்றி அல்லது தோல்வி அடைந்தாலும், எங்குமுள்ள சமாதானத்தை விரும்புபவர்கள் உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் சீக்கிரத்தில் உலகமுழுவதிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் அடையப்பெறும் என்பதில் நிச்சயமாய் இருக்கலாம்.—சங்கீதம் 72:1, 7, 8.
[பக்கம் 31-ன் படம்]
மாநாடு நடந்த போர்த்துகல், லிஸ்பனிலுள்ள பாலெமின் கலாச்சார மையம்