சர்வதேச பாதுகாப்புக்கான திட்டங்கள் வெற்றிபெறுமா?
“நாற்பதுக்கும் மேலான ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கெடுபிடிப் போர், கடவுளுடைய உதவியோடு முடிந்துவிட்டதாக தெரிகிறது” என்பதாக சர்ச்சுகளின் உலக குழுவின் (WCC) [தமிழில், ச.உ.கு] பத்திரிகையான ஒரே உலகம் குறிப்பிடுகிறது. “மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் . . . ஐரோப்பாவிலும் உலகின் மீதமுள்ள இடங்களிலும் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நல்ல சகுனமாகத் தோன்றுகிறது” என்பதாக இறையியல் கல்வியின் மீதான ச.உ.கு. (WCC) நிகழ்ச்சிநிரலின் ஆங்கலிக்கன் எழுத்தாளர் ஜான் போபீ மேலுமாக எழுதுகிறார்.
ச.உ.கு. (WCC) பிரதிநிதிகள் மாத்திரமே சர்வதேச பாதுகாப்புக்கான மனிதனின் திட்டங்களோடு கடவுளை தொடர்புபடுத்தி பேசுவதில்லை. ஏப்ரல் 1991-ல், பெர்சிய வளைகுடா போருக்குப் பின், போப் ஜான் பால் அப்போது ஐ.நா. பொதுச் செயலராக இருந்த ஏவியர் பெரஸ் டி குவேயருக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் இவ்வாறு சொன்னார்: “மத்திய கிழக்கிலும் மேற்கிலுமுள்ள கத்தோலிக்க சர்ச்சுகளின் பிஷப்புகள் ஐக்கிய நாடுகளின் பணியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் . . . அண்மையில் நடைபெற்ற போரின் காரணமாக வெகுவாக தேவைப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் அதனுடைய தனித்துறை அமைப்புகள் மூலமாக சர்வதேச விழிப்புணர்வையும் ஒருமைப்பாட்டையும் காண தவறமாட்டார்கள் என்று அவர்கள் நம்பிக்கையாயிருக்கின்றனர்.”
மேலுமாக, 1975 ஹெல்சிங்கி ஒப்பந்தத்தையும் 1986 ஸ்டாக்ஹோம் பத்திரத்தையும் உருவாக்கி கையொப்பமிட்ட 35 நாடுகளில் வத்திக்கனும் ஒன்றாக இருந்தது. ஐக்கிய நாடுகள் 1986-ஐ “சர்வதேச சமாதான ஆண்டு” என்று அறிவித்த போது, “சமாதானத்துக்காக உலக பிராத்தனை தின” கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உலகின் முக்கிய மதங்களுடைய பிரதிநிதிகளுக்கு அழைப்புக் கொடுப்பதன் மூலம் போப் பிரதிபலித்தார். அக்டோபர் 1986-ல் புத்த, இந்து, முகமதிய, ஷின்டோ, ஆங்கலிக்கன், லூதரன், கிரேக்க ஆர்த்தடாக்ஸ், யூத இன்னும் மற்ற மத பிரதிநிதிகள் இத்தாலியிலுள்ள அசிஸியில் ஒன்றாக உட்கார்ந்து, மாறி மாறி உலக சமாதானத்துக்காக பிராத்தனை செய்தார்கள்.
சில வருடங்களுக்குப் பின்னால், கான்டர்பரியின் ஆங்கலிக்கன் மேற்றிராணியார் ரோமில் கொடுத்த பிரசங்கத்தில் மேல்சொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “அசிஸியில் ரோமின் பிஷப்பினால் [போப்] கிறிஸ்தவ சர்ச்சுகளை ஒன்று சேர்க்க முடிந்தது. சமாதானத்துக்காகவும் மனித குலத்தின் நலனுக்காகவும் நாம் ஒன்றாகச் சேர்ந்து பிராத்தனை செய்யலாம், ஒன்றாகச் சேர்ந்து பேசலாம், மற்றும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படலாம் . . . உலக சமாதானத்துக்கான அந்தப் பிராத்தனை முயற்சியில், ‘இதோ, ஒரு புதிய காரியத்தை நான் செய்கிறேன்’ என்று சொன்ன கடவுளின் சந்நிதானத்தில் இருப்பது போல நான் உணர்ந்தேன்.”
அசிஸியில் பிரதிநிதித்துவம் செய்யப்படாவிட்டாலும், மற்ற மதங்களும்கூட சர்வதேச பாதுகாப்புக்கான மனிதனின் முயற்சி குறித்து நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் ஆலந்து நாட்டு சீர்திருத்த சர்ச்சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான டை கெர்போட் ஒரு தலையங்கக் கட்டுரையில் இவ்விதமாகச் சொன்னது: “புதிய உலக ஒழுங்கு முறைக்குள் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நினைத்தும்கூட பார்க்க முடியாதவையாக தோன்றிய காரியங்கள் நம் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக்கின்றன. சோவியத் யூனியனுக்கும் மேற்குக்குமிடையே மாபெரும் உலக காட்சியில் நடைபெற்றுவரும் இணக்கம் விரிவான பிரதேச முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது. உலகின் நம்முடைய பாகத்தில், பொதுவாக ஒன்றையொன்று எதிர்க்கின்ற காட்சிகளும் ஒப்புரவாக முடியாத விரோதிகளும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்கிறார்கள், ‘சமாதானத்தை’ நோக்கி தூண்டுதல் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது . . . ஒரு கிறிஸ்தவ நோக்குநிலையிலிருந்து, மக்களிடையே சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் வரவேற்கப்பட வேண்டும். நம்முடைய காலத்தில் சமாதானத்துக்காக நாம் பிராத்தனை செய்யலாம்.”
கடவுள் சர்வதேச பாதுகாப்புக்கான மனிதனின் திட்டங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறரா?
பைபிள் என்ன சொல்கிறது?
மனித முயற்சிகள் மீது சார்ந்திருப்பதைக் குறித்து பைபிள் ஒளிவுமறைவில்லாத எச்சரிக்கையைக் கொடுக்கிறது: “பிரபுக்களையும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:3, 4) சமாதானத்தை நோக்கமாகக் கொண்ட இன்றைய-நாளைய முன்னேற்றம் உற்சாகமளிப்பதாக தோன்றக்கூடும். ஆனால் நாம் உண்மைகளை எதிர்ப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். மனிதனின் திறமைகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. அநேக சமயங்களில் சம்பவங்கள் மனிதர்கள் இருப்பதைவிட பெரிதாக இருக்கின்றது. அவர்களுடைய மிகச் சிறந்த-சிந்தித்து செய்யப்பட்ட திட்டங்களையும்கூட குலைத்துவிடும் மனதின் உள்நோக்கத்தை, மறைந்திருக்கும் சக்திகளை அவர்களால் பகுத்தறிய முடிவதில்லை.
இயேசுவின் காலத்துக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏசாயா தீர்க்கதரிசியின் நாட்களில், இன்று சம்பவித்துக்கொண்டிருப்பதோடு ஒப்பிடக்கூடிய வகையில், யூதத் தலைவர்கள் சர்வதேச ஒப்பந்தங்களின் மூலமாக அண்டை நாடுகளுடன் பாதுகாப்புக்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நாட்களிலும்கூட, மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் செய்துகொண்டிருந்ததை ஆதரித்து வந்தனர். ஆனால் ஏசாயா இவ்விதமாக எச்சரித்தார்: “ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது.” (ஏசாயா 8:10) அவர்களுடைய திட்டங்கள் துயரமான தோல்வியானது தெரிய வந்தது. அதே காரியம் இன்று சம்பவிக்கக்கூடுமா?
ஆம், அது சம்பவிக்கக்கூடும், ஏனென்றால் அதே தீர்க்கதரிசியின் மூலமாக கடவுள் பூமிக்கு பாதுகாப்பைக் கொண்டுவர தம்முடைய சொந்த வழியை வைத்திருப்பதை அறிவித்திருக்கிறார். அது எந்த ஒரு மனித அமைப்பின் மூலமாகவும் இருக்காது, ஆனால், இஸ்ரவேல ராஜாவாகிய தாவீதின் வழியில் தோன்றுகிறவரின் மூலமாக இருக்கும். (ஏசாயா 9:6, 7) தாவீது ராஜாவின் இந்த வாரிசு, பொந்தியு பிலாத்துவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது தான் ஒரு ராஜா என்றும், ஆனால் “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்றும் சொன்ன இயேசு கிறிஸ்துவே. (யோவான் 18:36; லூக்கா 1:32) உண்மையில் இயேசுவின் ராஜ்யம் பரலோகத்துக்குரியதாக இருக்க வேண்டியிருந்தது. அதுவே—ஐக்கிய நாடுகளோ அல்லது வேறு எந்த ஒரு பூமிக்குரிய அரசியல் தேசமோ அல்ல—இந்த பூமிக்கு நிலையான நம்பத்தக்க பாதுகாப்பைக் கொண்டுவர வேண்டும்.—தானியேல் 2:44.
இயேசு கிறிஸ்து தம்முடைய ராஜ்யம் ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்புகின்ற’ “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படு”கின்ற ஒரு சமயத்தில் பரலோகங்களிலிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடும் என்று முன்னுரைத்தார். தீர்க்கதரிசன நிறைவேற்றமானது இது சம்பவித்த சமயம் 1914 என்றும் அப்போது முதற்கொண்டு இருந்து வரும் வருடங்களை, “காரிய ஒழுங்கு முறையின் முடிவு” என்றும் அடையாளங் காண்பிக்கிறது.—மத்தேயு 24:3, 6-8, NW.
இது எதை அர்த்தப்படுத்துகிறது? இந்தத் தற்போதைய உலக ஒழுங்குக்கு மிஞ்சியிருக்கும் நேரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது, அது சீக்கிரத்தில் முடிந்துவிடும். அது கவலைக்கு அல்லது வருத்தப்படுவதற்குரிய காரியமா? இந்தக் காரிய ஒழுங்கை தனிப்படுத்திக் காட்டியிருக்கும் கொடுமை, அநீதி, ஒடுக்குதல், போர் மற்றும் எல்லா வேதனைகளையும் எண்ணிப்பார்க்கையில் அவ்விதமாக இராது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகின்ற அந்த அரசருடைய ஆட்சியின் கீழிருப்பது நிச்சயமாகவே பெரும் நிம்மதியளிப்பதாக இருக்கும்: “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும், யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவி அவர் மேல் தங்கியிருக்கும்.”—ஏசாயா 11:2, NW.
பூமியின் மீது உண்மையான பாதுகாப்பு
உண்மையில், கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் உலகளாவிய அளவில் நிறைவேறும் வரையில் பூமியின் மீது உண்மையான பாதுகாப்பு இருக்காது: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” (ஏசாயா 65:17) இந்த உலகின் சார்பாக மதத் தலைவர்கள் எத்தனை அநேக பிராத்தனைகளைச் செய்தாலும் சரி, சர்வதேச பாதுகாப்புக்கான மனித திட்டங்கள், சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவதற்குரிய கடவுளுடைய வழியை மாற்றீடு செய்ய முடியாது.
கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரும் உலகளாவிய, நிரந்தரமான பாதுகாப்பு மகிமைப்பொருந்தினதாய் இருக்கும். பைபிளில் காணப்படும் வர்ணனைகளில் ஒன்று இதோ: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] வாய் இதைச் சொல்லிற்று.”—மீகா 4:3, 4.
கடவுள்தாமே உறுதியளிக்கின்ற பாதுகாப்பு மாத்திரமே நிரந்தரமானதாகவும் நம்பத்தக்கதாகவும் இருக்க முடியும். ஆகவே, பிரபுக்களின் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பதற்கு பதிலாக, ஏன் அவரில் உங்கள் நம்பிக்கையை வைக்கக்கூடாது? அப்போது சங்கீதக்காரனின் வார்த்தைகள் உண்மையாயிருப்பதை நீங்கள் காண்பீர்கள்: “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.”—சங்கீதம் 146:5, 6. (w92 3/1)
[பக்கம் 7-ன் பெட்டி]
கத்தோலிக்க சர்ச்சும் சர்வதேச அரசியலும்
“கிறிஸ்து தம்முடைய ராஜ்யம் ‘இவ்வுலகத்திற்குரியதல்ல’ என்று சொல்லியிருந்த போதிலும், உயர் அந்தஸ்திலுள்ள பாதிரிமார்களும் ஒரு நிறுவனமாக போப்பாதிக்கமும் கான்ஸ்டன்டைனின் காலம் முதற்கொண்டே சர்வதேச மற்றும் தேசீய அரசியல் போராட்டங்களிலும் தீவிரமாக கலந்துகொண்டிருக்கிறார்கள்.” —உலக அரசியலில் கத்தோலிக்க சர்ச், ஜெஸ்யூட் சான்டா க்ளாரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எரிக் ஹான்சன்.