சமாதானமும் பாதுகாப்பும்—எந்த மூலக்காரணத்திலிருந்து?
ஐக்கிய நாடுகள் சங்கம் சில துறைகளில் சிறந்த சேவைகள் புரிந்திருக்கின்றன என்றாலும், சமாதானம் பாதுகாப்பு என்ற அம்சத்தில் அது இதுவரை தோல்வியடைந்திருக்கிறது என்பதை அனுதின செய்திகளுடன் பழக்கப்பட்ட எவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இது ஐ.நா. சபையின் வைராக்கியமான ஆதரவாளர்களாலும் வெளியரங்கமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
இப்படியாக ஐ.நா. பிறந்து எட்டு ஆண்டுகள் மட்டுமே கடந்திருக்க 1953-ல் டேக் ஹாமர்ஸ்கோல்ட், அதன் தலைமைக் காரியதரிசி பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “நமது முன்னோர் ஒரு புதிய வானத்தைக் குறித்து கனவுகண்டு கொண்டிருந்த இடத்தில் நமது மிகப் பெரிய நம்பிக்கை இந்தப் பழைய பூமியைப் பாதுகாக்க நாம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே.” இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்பு ஐக்கிய மாகாணங்களின் துணைக் காரியதரிசி C. வில்லியம் மேய்ன்ஸ் பின்வருமாறு ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருந்தது: “பாதுகாப்பு சபை மற்றும் மகா சபையின் முக்கிய நோக்கம், சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக் கொள்வதாகும். . . . அதன் மைய நோக்கத்தில் அது தவறிவிட்டிருக்கிறது என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது.”
எந்தளவுக்கு நம்பத்தகுந்தது?
உண்மை யாதெனில், கடந்த 40 ஆண்டுகளில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பாதித்த குறிப்பிடத்தக்க தீர்மானங்கள் ஐக்கிய நாடுகளுக்கு வெளியே செய்யப்பட்டவையாகும். “இந்த ஆண்டில், மீண்டும் மீண்டுமாக அமைப்பு, ஏதோ ஒரு காரணத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது; முக்கியமான மற்றும் பயனுள்ள பங்கை வகித்திருக்க வேண்டியதும் வகித்திருக்கக்கூடியதுமான சந்தர்ப்பங்களில் அப்படி ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.” இதற்குக் காரணம் என்ன?
இந்த அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க விதத்தில் வளர்ந்ததை சிலர் ஒரு காரணமாகக் குறிப்பிடுகின்றனர். ஆரம்பத்தில் 51 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அது 150-க்கும் அதிகமாக வளர்ந்ததுமட்டுமின்றி அவை ஒவ்வொன்றும் மகா சபையில் சரிசம ஓட்டுரிமையைக் கொண்டிருக்கின்றன. என்றபோதிலும் இவற்றில் சில நாடுகள் மிக சிறிவை. இப்படியாக செய்ன்ட் கிறிஸ்தோபர் மற்றும் நெவிஸ் தீவு நாடு 50,000-க்கும் உட்பட்ட மக்கள் தொகையைத்தான் கொண்டிருக்கிறது. எனினும் 100 கோடிக்கும் சற்று குறைய இருக்கும் சீனாவுக்கு சமமான ஓட்டுரிமையைக் கொண்டிருக்கிறது. உண்மைதான், இந்த ஏற்பாடு சிறிய நாடுகளுக்கும் செவிசாய்க்கும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது. ஆனால் பெரிய வல்லரசு நாடுகள் இந்த அமைப்பின் தீர்மானங்களைக் கவனமாகக் கைக்கொள்ள அல்லது அதற்கேற்ப செயல்பட அந்த வல்லரசு நாடுகளை உற்சாகப்படுத்துவதாயில்லை.
ஷர்லி ஹாஸர்டு இரண்டாவது பிரச்னையைச் குறிப்பிடுகிறார். “கண்டிப்பிற்குரிய அல்லது கட்டாயத்திற்குரிய சக்தி ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொடுக்கப்படவில்லை. கட்டாயப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள உறுப்பு நாடுகள் மட்டுமே அப்படிச் செய்யப்படுகிறது.” வேறு வார்த்தைகளில் குறிப்பிட வேண்டுமென்றால், ஐ.நா. சபை தீர்மானங்களை செய்ய முடியும், ஆனால் பேரளவில் அவற்றைக் கண்டிப்புடன் அமல்படுத்த முடியாது. மிகக் கடுமையான உலக பிரச்னைகள் ஒழுங்காக நீண்ட பேச்சு வார்த்தைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. தீர்மானங்கள் பயபக்தியுடன் நிறைவேற்றப்படுகிறது—பின்பு மறக்கப்படுகிறது. 1982-ல் ஐ.நா.-வின் தலைமைக் காரியதரிசி “யாருக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறதோ அவர்களிடையே காணப்படும் மரியாதைக் குறைவைக்” குறிப்பிட்டுக் காண்பித்தார்.
இவையெல்லாம் அமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள்—ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் மற்ற பிரச்னைகளும் உண்டு. ஆனால் ஐக்கிய நாடுகள் ஏன் தோல்வியுற்ற நிலையிலிருக்கிறது என்பதற்கு மற்ற ஆழமான வினைமையான காரணங்கள் உண்டு.
ஆழமான பிரச்னைகள்
“அந்த சமயத்தில், முதலிடத்தில், அதன் சாசணத்தின் கீழ் ஒரு சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட ஒரு திட்டமுறையை ஏற்படுத்துவது கூடிய காரியமாக தென்பட்டது,” என்று இந்த அமைப்பைத் தோற்றுவித்தவர்களின் இலட்சியத்தை நினைவுப்படுத்துகிற விதத்தில் குறிப்பிட்டார், ஜேவியர் பெரஸ் டி கியுலர். அந்த மகத்தான தரிசனத்திற்கு என்ன ஏற்பட்டுவிட்டது? அது பெரிய வல்லரசு நாடுகளுக்கிடையே நிலைவிய கருத்து வித்தியாசங்களால் மறைக்கப்பட்டு விட்டது. . . . மேலும், உலகம் அதிக சிக்கலானதாகவும், எதிர்பார்க்கப்ப்டடதற்கு மாறாக ஒழுங்கும் அமைதியும் இல்லாத இடமாகவும் ஆகிவிட்டது.”
உண்மை என்னவெனில், ஐக்கிய நாடுகள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கு எந்தவித வாய்ப்பும் இருக்கவில்லை. அதிகக் கடினமாக ஒரு சவாலாக அது இருந்தது. தலைமைக் காரியதரிசியின் புத்திமதி எரேமியா தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகிறது: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) மனிதர்கள் தங்களுடைய குறைந்த ஞானத்தையும் திறமைகளையும் கொண்டு எல்லோருக்கும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவதிலிருக்கும் பிரச்னையைத் தீர்க்க முடியாது.
ஐக்கிய நாடுகளின் ஸ்தாபகர்கள் எதிர்பார்த்ததைவிட உலகம் “அதிக சிக்கலானதாக” இருப்பதைக் கண்டார்கள் என்று தலைமைக் காரியதரிசி சொன்னார். இந்த நிலைமை ஏற்படுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது, இதை அவர்கள் அறியவில்லை. ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான் அதை இப்படியாக விவரிக்கிறான்: “உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) இன்று அந்தப் “பொல்லாங்கனாகிய” சாத்தான் “மிகுந்த கோபங்கொண்டு” “பூமிக்கு ஐயோ!” என்ற நிலையை ஏற்படுத்துகிறான் என்று பைபிள் கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 12:12) ஐ.நா. தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பாகவே, சாத்தானும் அவனுடைய செல்வாக்கும் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகளின் முயற்சிகளை இருள்சூழச் செய்துவிட்டன.
ஐக்கிய நாடுகள் சபை இந்த உலகம் பெற்றெடுத்த பிள்ளை, ஆதலால் அதன் பண்புகளையும் அது சுதந்தரித்திருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். தனிப்பட்ட நாடுகளின் பலவீனங்கள், தீய தன்மைகள் மற்றும் ஊழல்கள் ஐக்கிய நாடுகள் சபையிலும் காணப்படுவது தவிர்க்கப்பட முடியாதது. 1972-ல் அலெக்ஸாந்தர் சோல்ஷெனித்ஸின் பின்வருமாறு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டது: “கால் நூற்றாண்டுக்கு முன்பு அனைத்து மனிதவர்க்கத்தின் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஐக்கிய நாடுகள் சபை பிறந்தது. ஐயோ! ஒழுக்கங்கெட்ட உலகில் அதுவும் ஒழுக்கங்கெட்ட பிள்ளையாக வளர்ந்தது.” பைபிள் எச்சரிக்கிறது: “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லை என்று யெகோவா சொல்கிறார்.” (ஏசாயா 48:22) “ஒழுக்கங்கெட்ட” ஓர் அமைப்பு சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியாது.
சமாதானமும் பாதுகாப்பும் பற்றியதென்ன?
எனவே, 1986-ம் ஆண்டை “சர்வதேச சமாதான ஆண்டாக” அறிக்கை செய்ததுதானே ஏதேனும் வித்தியாசத்தை உண்டுபண்ணுமா? அது எந்த வித வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது, காரணம், மேற்குறிப்பிடப்பட்ட பிரச்னைகள் மனிதர்களால் தீர்க்கப்பட முடியாதவை. 1979-ம் ஆண்டு “குழந்தைகளின் ஆண்டு” என்று அறிவிக்கப்பட்டதானது சர்வ தேச குழந்தைகளின் நிலையை எப்படி முன்னேற்றுவிக்கவில்லையோ, அல்லது 1975-ன் “சர்வதேச மகளிர் ஆண்டு” எப்படி உலகத்தைப் பெண்களுக்கு மேம்பட்ட ஓர் இடமாக மாற்றவில்லையோ அப்படியே “சமாதான ஆண்டும்” மனிதவர்க்கத்தை சமாதானமும் பாதுகாப்புக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தப் போவதில்லை.
என்றபோதிலும், மனிதவர்க்கம் உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால், சமாதானம் பாதுகாப்பைக் குறித்து யாராவது ஒருவர் ஏதாவதொன்றை செய்தாக வேண்டும். இன்று அணு ஆயுத பலத்தைக் கொண்டிருக்கும் நாடுகள் பூமியில் பேரளவான உயிரினங்களை அழிக்கும் சக்தி படைத்தவையாயிருக்கின்றன. மிகுதியான திறமைகொண்ட ஆயுதங்கள் ஆண்டுதோறும் ஏராளமான உயிர்களைப் போக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை இருந்திராத வண்ணம் உண்மை சமாதானம் வெகு தூரத்திலிருக்கிறது! இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஐக்கிய நாடுகள் தோல்வியடைந்துவிட்டிருக்கிறது என்றால், அவை யாரால் தீர்க்கப்பட முடியும்?
சரித்திரத்தின் பக்கங்களைப் பார்ப்பதுதானே ஒரு நம்பிக்கையுடன்கூடிய விடையை அளிக்கிறது: 3000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஓர் சிறந்த வீரனும் அரசனுமாகத் திகழ்ந்த தாவீது அரசன், சர்வ தேச சமாதானத்தைக் கொண்டுவருவதில் நிச்சய வெற்றி காணும் ஓர் எதிர்கால அரசரைப் பற்றி எழுதினான். இந்த அரசர் சம்பந்தமாக தான் ஏறெடுத்த ஒரு ஜெபத்தில், தாவீது சொன்னதாவது: “பர்வதங்கள் ஜனத்திற்கு சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:3, 7.
இப்படிப்பட்ட நிரந்தர சமாதானத்தை எந்த அரசர் கொண்டுவர முடியும்? தாவீது இங்கே எந்த ஒரு மனித அமைப்பையும் குறிப்பிட்டு பேசவில்லை, ஆனால் தன்னுடைய கடவுளாகிய யெகோவாவை குறிப்பிடுகிறவனாய், இவையனைத்தும் அவருடைய அதிகாரத்தினால் மட்டுமே நிறைவேறும் என்று குறிப்பிட்டான். இவை அவனுடைய சொந்த சிந்தனையா? இல்லை. தாவீதின் மகன் சாலொமோன்கூட அதே கடவுளை நம்பி வந்தான். சாலொமோனுடைய ஆட்சிக் காலத்தில், பூமியிலே போர்ப் பிராந்தியமாக இருந்துவந்த அந்தப் பிரதேசத்திலிருந்த அவனுடைய ராஜ்யத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலம் யெகோவா தம்முடைய வல்லமையை ஓர் மாதிரியாகக் காண்பித்தார். சாலொமோன் ஓர் வீர-அரசனாக இல்லாமலிருந்தாலும், “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயர்செபா மட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச் செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் [பாதுகாப்புடன், NW] குடியிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:25.
அந்தச் சமாதானம் நீடித்திருக்கவில்லை என்பது உண்மைதான். இஸ்ரவேலர்கள் ஒழுக்கங்கெட்ட உலகத்தின் வழிகளில் விழுந்து கடவுள் கொடுத்த அந்தப் பாதுகாப்பை இழந்துவிட்டார்கள். என்றபோதிலும், இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு பயங்கரவாதத்தின் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட கொடிய அசீரியர்கள் வாழ்ந்த சமயத்தில், சாலொமோன் யாருக்குப் படமாயிருந்தானோ, அந்த அரசரின் வருகை குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தான்: “அவருடைய நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர் . . . சமாதானப் பிரபு என்னப்படும். அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசாயா 9:6, 7.
அந்தச் “சமாதானப் பிரபு” யார்? ஏசாயாவுக்குப் பின்பு 700 ஆண்டுகள் கழிந்து ரோம உலக வல்லரசு சர்வதேச சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான தனது வழியை ஸ்தாபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அரசன் இயேசு கிறிஸ்துவாக யூதேயாவில் தாவீதின் ஊரிலே பிறந்தார். அவர் தனது ஊர் மக்களுக்கு தான் அரசராக இருக்கப்போகும் அந்தக் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து சொல்லி வந்தார். இது பரலோக ராஜ்யமாக இருக்கும், எனவே இது சாத்தானின் செல்வாக்கினாலும் மனிதன் தன்னைத்தானே ஆண்டுக்கொள்ள முடியாத நிலையினாலும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடியதாயிருக்கும். இயேசுவின் தேசத்தாரோ ரோம ஆட்சியைத் தெரிந்து கொண்டதோடு இயேசுவானவரை நீதிமன்றம் மூலமாக கொலை செய்தனர். என்றபோதிலும், சரித்திரம் தெளிவாகக் காண்பிப்பதுபோல அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்குச் சென்று, கடவுளுடைய ராஜ்யத்தில் ராஜாவாக ஆளுவதற்கான கடவுளுடைய காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது.
அந்த மகா சம்பவம் நிறைவேற வேண்டிய காலம் நம்முடய காலமே என்று தீர்க்கதரிசன நிறைவேற்றம் குறிப்பாகக் காண்பிக்கிறது. கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் பிறந்ததும் அதைத் தொடர்ந்து சாத்தான் பூமியினிடமாகத் தள்ளப்பட்டதுமே சாத்தான் “மிகுந்த கோபங்கொள்”வதற்கும் “பூமிக்கு ஐயோ!” என்ற நிலையை ஏற்படுத்துவதற்கும் வழிவகுத்தது. (வெளிப்படுத்துதல் 12:7-12) பலன் என்ன? இயேசு தீர்க்கதரிசனமாக சொன்னதற்கிசைவாக இந்தப் பூமி யுத்தங்களும் மற்ற மனித வேதனைகளும் “தத்தளிப்பும் [“வெளியேற வழி அறியாத நிலை,”] இடுக்கணும்” காணப்படும் ஒரு காட்சிக்கூடமாக ஆகிவிட்டிருக்கிறது.—லூக்கா 21:25, 26; மத்தேயு 24:3-13.
மனிதனுடைய வழியா அல்லது கடவுளுடைய வழியா?
40 ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஐக்கிய நாடுகள் சபை தான் பிறந்தபோது தெரிவித்த நல்ல எதிர்காலம் பற்றிய கூற்றுகளைவிட 2000 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் உலக நிலைமைகளைப் பற்றிய மிக திருத்தமான விவரங்களை அளித்திருக்கின்றன. “வெளியேற வழி” கண்டுபிடிப்பதில் ஐக்கிய நாடுகள் தவறிவிட்டிருக்கின்றன என்பதுதானே பைபிள் முன்னறிவிப்புகளின் சரியான தன்மையை எடுத்துக் காண்பிக்கின்றன. உண்மையிலேயே, ஏசாயாவின் வார்த்தைகளின்படி, தங்களுடைய தோல்விகளில் வெறுப்புற்றவர்களாக, “சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.”—ஏசாயா. 33:7.
ஐக்கிய நாடுகள் பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதில் ஏன் வெற்றியடையாது என்பதற்குரிய கடைசி காரணத்தை இது தெளிவுபடுத்துகிறது. அது முற்றிலும் கடவுளுக்கு எதிரான ஒரு வழியில் சென்று கொண்டிருக்கிறது. யெகோவா வெளிப்படுத்தியிருக்கும் தம்முடைய நோக்கங்களின்படி, சமாதானம், உலக நாடுகளை ஐக்கியப்படுத்துவதன் மூலம் அல்ல, அதனால் அவை முழுமையாகக் கடவுளுடைய ராஜ்யத்தால் மாற்றியமைக்கப்படுவதன் மூலமாகவே வரும். (தானியேல் 2:44) டேல் ஹாமர்ஸ்கோல்ட் “பழைய பூமியை பாதுகாப்பதற்காகத்” தான் செயல்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் அவர் தனிப்பட்ட அரசியல் நாடுகளைக் கொண்ட தற்போதைய உலக ஒழுங்குமுறையை அர்த்தப்படுத்தினார் என்றால், அவருடைய நோக்கங்கள் முழுமையான தோல்வியையே கிட்டும். உண்மை என்னவெனில் “பழைய பூமி” ஒரு புதிய ஒழுங்குமுறைக்கு வழி கொடுக்க வேண்டும். “உலகம் . . . ஒழிந்துபோகிறது.” (1 யோவான் 2:17) அதை எதுவுமே பாதுகாக்க முடியாது. ஓர் ஐக்கிய நாடுகள் சபையாலும் முடியாது.
சமாதானம் பாதுகாப்பு என்ற நிலையைக் கொண்டுவருவதற்கு ஒரே ஒரு நடைமுறையான நேர்மையான வழிமுறைதான் உண்டு. ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட மனிதன் அதுமுதல் ஏங்கிவந்திருக்கும் சமாதானத்தைக் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே கொண்டுவர முடியும். அந்த ராஜ்யத்தின் நடவடிக்கைகளின் பலனாகக் கிடைக்கப்பெறும் பாதுகாப்பைக் குறித்த ஒரு விவரிப்பு பின்வருமாறு: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் இனி மரணமும் இல்லை, துக்கமும் இல்லை, அலறுதலும் இல்லை, வருத்தமும் இல்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
அந்த வாக்குறுதி உண்மைக்கு அப்பாற்பட்டதாக ஒலிக்கிறதா? அதுவே நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்பது உண்மை. இதற்குரிய காரணத்தைக் காவற்கோபுரம் பத்திரிகையின் அடுத்த இதழ் இன்னும் ஆழமான விதத்தில் சிந்திக்கும். (w85 10/1)
[பக்கம் 5-ன் படம்]
சமாதானத்தைக் கொண்டுவரும் பெரும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்ற முடியாது
[படத்திற்கான நன்றி]
U.S. Army photo
[பக்கம் 6-ன் படம்]
‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ இது ஐக்கிய நாடுகள் சபையையும் உட்படுத்துகிறது
[பக்கம் 7-ன் படம்]
ஐக்கிய நாடுகள் சபையிலடங்கிய தனிப்பட்ட நாடுகளைவிட ஐக்கிய நாடுகள் சபை அதிக ஒழுக்கமுள்ளதாக இருக்க முடியாது