சமாதானமும் பாதுகாப்பும்—கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம்
“ஐக்கிய நாடுகளின் நோக்கங்கள்: 1. சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்து வருவது.”—ஐக்கிய நாடுகளின் சாசனம்.
இது பாராட்டத்தக்க ஒரு இலட்சியம் என்று சொல்லப்படலாம். ஆனால் நாம் கவனித்திருக்கிறபடி ஐக்கிய நாட்டு சங்கம் சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்து வருவதில் வெற்றியடையவில்லை என்பதை கடந்த நாற்பது ஆண்டுகால விளைவுகள் தெளிவாக்குகின்றன. அல்லது அது 1986-ம் ஆண்டை “சர்வதேச சமாதான ஆண்டாக” அறிக்கை செய்திருப்பதும்கூட எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டுபண்ணிவிடாது.a
இந்த பூமிக்கு நிரந்தரமான சமாதானத்தை கொண்டுவருவதற்கு ஒரே ஒரு வழிமட்டுமே இருக்கிறது—இயேசு கிறிஸ்துவின் கரங்களிலிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமே. இது பரலோகத்திலிருக்கும் மெய்யான அரசாங்கம். இதற்காகவே ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷருக்கு கற்பித்தார். (மத்தேயு 6:9, 10) ஆனால் ஐக்கிய நாட்டு சங்கம் தோல்வியடைந்திருக்கையில், கடவுளுடைய ராஜ்யம் ஏன் வெற்றியடையும்? எளிதாக சொல்ல வேண்டுமானால்: ஐக்கிய நாட்டு சங்கம் வெற்றி பெறாத அந்த காரணங்களை முன்னிட்டே கடவுளுடைய ராஜ்யம் வெற்றி பெறும்.
மனித ஞானத்தைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது
நமது முந்தைய இதழில் ஐக்கிய நாட்டு சங்கம் படுமோசமாய் தோல்வியடைவதற்கு ஒரு காரணம் என்ன என்பதை நாம் கண்டோம். அதாவது மனிதன் தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்வதற்குரிய ஞானத்தையோ அல்லது உரிமையையோ கடவுள் அவனுக்குக் கொடுக்கவில்லை. (எரேமியா 10:23) எனவே மனிதனால் உண்டுபண்ணப்பட்ட எந்த ஒரு அமைப்பும் அல்லது சங்கமும், எவ்வளவு நல்ல நோக்கமுள்ள ஒன்றாக இருந்தபோதிலும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவதில் வெற்றியடைய முடியாது.
அதற்கு எதிர்மாறாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நியமிக்கப்பட்ட அரசரான இயேசு கிறிஸ்து எப்பொழுதுமே மனிதனுக்கு மிஞ்சிய ஞானத்தை வெளிக்காட்டியிருக்கிறார். (மத்தேயு 13:54) ஒரு பிரதான உதாரணம், அவரது புகழ்பெற்ற மலை பிரசங்கம். (மத்தேயு அதிகாரங்கள் 5 முதல் 7) அதில் அவர் உண்மையான சந்தோஷத்தை கண்டடைவது எப்படி, சச்சரவுகளை தீர்ப்பது எப்படி; பாலுறவு ஒழுக்கயீனத்தை தவிர்ப்பது எப்படி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கொண்டிருப்பது எப்படி என்பதை விளக்கினார். மனித இயல்புகளைக் குறித்த இப்பேர்ப்பட்ட ஞானமும் புரிந்துகொள்ளும் தன்மையுமுள்ள ஓர் அரசர் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவது எப்படி என்பதை அறிந்திருப்பார் என்பது நியாயத்துக்கு உகந்ததாக இல்லையா?
அதற்கும் மேலாக, மனிதருடைய இருதயத்தினுள் பார்த்து அவர்களது உண்மையான உள்நோக்கத்தையும் உள்ளான சிந்தனைகளையும் அறியும் தம்முடைய அற்புத ஆற்றல் மூலம் இயேசுவின் கூரிய பகுத்துணர்வு மேம்படுத்தப்பட்டது. (மத்தேயு 9:4; மாற்கு 2:8) அது எதை குறிக்கிறதென்பதை கவனியுங்கள்: இன்று சமாதானத்தையும் பாதுகாப்பையும் அடைவதற்கு ஒரு மிகப்பெரிய தடை: அவநம்பிக்கை. ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளையும் உள்நோக்கத்தையும் அறிய முடியாதிருக்கிறபடியால், மனிதரும் தேசங்களும் பெரும்பாலும் அவநம்பிக்கையுள்ளவர்களாக ஆகிவிடுகின்றனர். இந்த அவநம்பிக்கையே அடிக்கடி சமாதானத்திற்கு தடை சுவராக நிற்கிறது. ஆனால் “மனிதரின் இருதயத்திலுள்ளதை அறிய முடிந்த” ஒரு ஆட்சியாளருக்கு இது ஒரு பிரச்னையாக இல்லை.—யோவான் 2:25.
மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளை அகற்றுதல்
ஐக்கிய நாட்டு சங்கத்தின் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு மற்றொரு மிகப்பெரிய காரணமானது “இந்த உலகத்தின் அரசன்” பிசாசாகிய சாத்தானின் செல்வாக்கேயாகும். அவனும் அவனுடைய பேய் சேனைகளும் தாங்கள் அகற்றப்படும் முன்பு தங்களுக்கு “கொஞ்சகாலம் மட்டுமே” இருக்கிறதென்பதை அறிந்திருக்கிறார்கள். “இந்த பூமிக்கு ஆபத்தை” ஏற்படுத்த தீர்மானமுள்ளவர்களாய் அவர்கள் அரசியல் ரீதியில் மற்றும் தேசீய ரீதியில் மனிதவர்க்கத்தைப் பிரிப்பதன் மூலம் சமாதானத்தின் வழியில் நின்றிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 12:9-12.
போர்களை தூண்டக்கூடிய இப்படிப்பட்ட மனிதனை மிஞ்சிய சக்திகளை யார் நீக்கக்கூடும்? பைபிள் விடையளிப்பதாவது, மிகாவேல் என்று சொல்லப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்து தம்முடைய தூதருடன் சேர்ந்து பிசாசையும் மற்றும் அவனுடைய பேய் தூதர்களையும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளினார், ஆகவே நாம் வாசிப்பதாவது: “ஒரு தூதன் [இயேசு] பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக் கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, . . . அதை பாதாளத்திலே தள்ளியடைத்து அதின்மேல் முத்திரை போட்டான்.” (வெளிப்படுத்துதல் 20:1-3) ஆகவே வழியிலிருந்து சாத்தான் அகற்றப்படுவான். அப்பொழுதுதானே, உண்மையான சமாதானமும் மற்றும் பாதுகாப்பின் வாழ்க்கையை அனுபவித்து மகிழ முடியும்.
கடவுளுடைய ஒரு “பிள்ளை”
ஐக்கிய நாட்டு சங்கம் ஏன் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியவில்லை என்பதற்கு எமது முந்தின இதழ் ஒரு மூன்றாவது காரணத்தைக் குறிப்பிட்டது: அது இந்த உலகத்து பிள்ளையாக இருக்கிறதென்றும், அப்படியிருக்கிறபடியால், அது அதன் உறுப்பு நாடுகளுக்கு இருக்கக்கூடிய பலவீனங்களையும், பொல்லாப்புகளையும், கறைகளையும் சுதந்தரித்திருக்கிறது.
புத்துயிரூட்டும் விதத்தில் இதற்கு நேர் எதிர்மாறாக, பாதுகாப்பையும் சமாதானத்தையும் கொண்டுவரக்கூடிய அந்த ராஜ்யம் வெளிப்படுத்துதல் 12:5-ல் கடவுளுடைய ஒரு “பிள்ளையாக” சித்தரித்துக் காட்டப்படுகிறது. அதன் அரசரான இயேசு கிறிஸ்துவினால் வெளிக்காட்டப்பட்ட வரவேற்கத்தகுந்த பண்புகளில் ஒரு சிலவற்றை கவனியுங்கள்: தன்னையே தியாகம் செய்யும் அன்பு (யோவான் 15:12, 13); இரக்கம் மற்றும் மன உணர்ச்சி (மத்தேயு 9:10-13; லூக்கா 7:36-48); தாழ்மை (யோவான் 13:3-5, 12-17); கருணை (மாற்கு 6:30-34); அனுதாபம் (எபிரெயர் 2:17, 18; 4:15); நீதிக்கு உறுதியுடனிருத்தல் (ஏசாயா 11:4, 5). இப்படிப்பட்ட ஒரு ஆட்சியாளருக்கு நீங்கள் உங்களை கீழ்ப்படுத்துவதில் மகிழ்ச்சியடைய மாட்டீர்களா?
ஒரு “புதிய பூமியுடன்”
சமாதானத்தை கொண்டுவருவதில் ஐக்கிய நாட்டு சங்கம் ஏன் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்பதற்கு ஒரு இறுதியான காரணமானது முன்னாள் காரியதரிசியான டேக் ஹாமர்ஸ்கோல்ட் என்பவரால் 1953-ல் சொல்லப்பட்ட வார்த்தையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. அவர் சொன்னதாவது: “இந்த பழைய பூமியை காப்பாற்றுவதற்கு நாம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே நமது மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.” இந்த உலக முழுவதிலுமுள்ள ஒழுங்குமுறையை காப்பாற்ற வேண்டுமென்பது அவருடைய மனதில் இருந்திருக்குமானால் அப்பொழுது இந்த “பழைய பூமியை” காப்பாற்றுவதற்குரிய முயற்சிகள் படுதோல்வியே அடையும். ஏன்?
ஒரு காரியம் என்னவெனில், இந்த “பழைய பூமியானது” மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்கள் அடங்கியதாயிருக்கிறது. தனிப்பட்ட அரசாங்கங்கள் தேசப்பற்றை விருத்தி செய்கின்றன, இது மனிதரை பிரிக்கிறது. எல்லா தேசங்களின் மொத்தமான நலனையும் நாடுவதற்கு மாறாக தேசப்பற்று ஒரு தேசத்தின் அக்கறைகளையே வலியுறுத்துகிறது. இந்த சுய அக்கறையானது சமாதானத்தை கொண்டு வருவதற்குரிய ஐக்கிய நாட்டு சங்கத்தின் எந்த ஒரு முயற்சியையும் அரித்து வீழ்த்துகிறது. தி கார்டியன் என்ற பிரிட்டிஷ் செய்தி தாளின் பதிப்பாசிரியர் குறிப்பிட்டதாவது: “மொத்தமாக எல்லாருடைய நன்மைக்காக அதன் சொந்த அக்கறைகளை தியாகம் செய்வதற்கு எந்த ஒரு உறுப்பு நாடும் ஆயத்தமாகயில்லாததால் சீரமைவிற்காக எதிர்பார்ப்பு மங்கியதாக இருக்கிறது. [ஐக்கிய நாட்டு சங்கத்தினுடைய ஒரு உண்மையான உலகளாவிய கருத்து வேற்றுமைகளை மதிப்பிட்டுக் காட்டும் ஓர் அளவுகோல் போன்று செயலாற்றுவதாகும். அதன் பேச்சு வார்த்தைகளுக்கான நிகழ்ச்சிப் பட்டியல் பல ஆண்டுகளாக வாதாடப்பட்டு வந்த பிரச்னைகள் நிறைந்ததாகவே இருக்கிறது. பரிகாரத்தினிடமாக ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்றால், அது மிக சொற்பமே.”
ஆனால் “பழைய பூமியை” காப்பாற்றுவதற்குரிய ஐக்கிய நாடுகளின் முயற்சிகள் ஏன் வீணானதாக இருக்கின்றன என்பதற்கு அதி முக்கிய காரணமொன்று இருக்கிறது: அது கடவுளுடைய நோக்கத்திற்கெதிராக இருக்கிறது. அது எப்படி? கடவுளுடைய பார்வையில் இந்த பழைய பூமி சீர்த்திருத்தம் செய்யப்பட முடியாது. கடவுளுடைய குறிக்கப்பட்ட நோக்கம் நிறைவேற்றமடையக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவான் அதை விவரித்திருக்கிறபடி: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:1) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்களை அகற்றுவதன் மூலம் கடவுளுடைய ராஜ்யம் பிரிவினையுண்டாக்கும் அந்த தேசப்பற்றை நீக்கிவிடும். அதினிடத்தில் “ஒரு புதிய பூமி” அதாவது நீதியின் மனச்சாய்வுள்ள ஒரு மனித சமுதாயம் ஒரே பரலோக அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் செழித்தோங்கும். அப்பொழுதுதானே மனிதகுலம் உலக முழுவதிலும் உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழக்கூடிய நிலையிலிருக்கும்.
‘பட்டயத்தை மண்வெட்டியாக அடித்தல்’
பைபிள் தீர்க்கதரிசன வார்த்தைகளின் மூலம் உறுதியளிக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு மெய்யான நம்பிக்கைதானே ஐக்கிய நாட்டு சங்க கட்டிடத்தை பார்த்த வண்ணம் இருக்கும் சுவரில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அங்கே அது குறிப்பிடுவதாவது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தை கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4-லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இல்லை, ஒரு தேசம் மற்றொரு தேசத்திற்கெதிராக பட்டயம் எடுப்பதை தடுப்பதில் ஐக்கிய நாட்டு சங்கம் வெற்றியடையவில்லை. இருந்தபோதிலும் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருக்கும்” உயிருள்ள அத்தாட்சியை அளிக்கக்கூடிய ஆட்கள் இருக்கின்றனர். இனம் தேசம் ஆகிய தடை சுவர்களையும் தாண்டி செல்லக்கூடிய ஒரு ஐக்கியத்தை அவர்கள் நடப்பித்து காண்பித்திருக்கின்றனர். இந்த கிறிஸ்தவ நடுநிலைமைவாதிகளை எந்தளவான அழுத்தமும் தங்கள் உடனாளிக்கெதிராக “பட்டயமெடுக்கும்படி” வற்புறுத்த முடியாது. யார் அவர்கள்? யெகோவாவின் சாட்சிகள்.
தேசங்களுடைய போர்களில் பங்கெடுக்கும்படி வற்புறுத்தப்படுகையில் அவர்களுடைய பிரதிபலிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வது, மிகுதியான அரசியல் பயங்கரவாதங்கள் நிறைந்திருக்கும் ஒரு ஆப்ரிக்க நாட்டில் ஒரு யெகோவாவின் சாட்சிக்கு நிகழ்ந்ததாகும்.
தங்களுடைய ஒரு கொரில்லா படையினருக்கு ஆட்களை சேர்ப்பதற்காக இந்த நாட்டிலிருக்கும் ஒரு பயங்கரவாத கும்பல் ஆட்களை கடத்திக்கொண்டு சென்று அவர்கள் முன் ஒரு தெரிவை வைக்கிறது. வன்முறை படையில் பணியாற்ற வேண்டும், அல்லது சுட்டுக்கொல்லப்பட வேண்டும். ஒருநாள் அவர்கள் யெகோவாவின் சாட்சி ஒருவரை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். அங்கே மதுகுடித்துக் கொண்டிருந்த அந்த தலைவர்கள் அவருக்கு ஒரு தெரிவை வைத்தார்கள். அவருக்கு முன்னால் இரண்டு பியர் பாட்டிலை வைத்து அதில் ஒன்றை சுட்டிக்காட்டி இது இந்த அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மற்றொன்று தங்களுடைய பயங்கரவாத கும்பலை பிரதிநிதித்துவம் செய்கிறது. ‘உனக்கு எது வேண்டும்?’ என்று கேட்டார்கள். சாட்சி சிறிது நேரம் சிந்தனை செய்தார். பின்பு அருகாமையிலிருந்த மற்ற பியர் பாட்டில்களை கவனித்தார், அதில் ஒன்றை எடுத்து அவர்கள் வைத்திருந்த அந்த இரண்டு பாட்டில்களுக்கு நடுவில் அதை வைத்து ‘இங்கேதான் நான் இருக்கிறேன்’ என்றார். மேலும் அவர், ‘நான் நடுநிலை வகிக்கிறேன், ஏனெனில் நான் கடவுளுடைய ராஜ்யத்திற்காக இருக்கிறேன்’ என்று சொன்னார். இதற்கு பிற்பாடு, அவர் பலமுறை அடிக்கப்பட்டார். பின்பு அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்களா அல்லது இல்லையா என்பதை அறியாத நிலையில் கொரில்லாக்கள் தங்கியிருந்த இடத்தில் அடிமை வேலைகள் செய்யும்படி வற்புறுத்தப்பட்டார். எட்டு மாதங்களுக்கு பிற்பாடு அரசாங்க படைகள் அந்த வன்முறை கும்பலின் முகாம்களை தாக்கியபோது அவர் தப்பித்துக் கொண்டார்.
யெகோவாவின் சாட்சிகள் தேசங்களின் போர்களில் பங்கு பெறுவதற்கு மாறாக சிறைவாசத்திற்கும், ஏன் மரணத்திற்கும்கூட ஆயத்தமாக இருந்திருக்கின்றனர். இவ்வாறாக, நாசி ஜெர்மனியில் நாசி ஆட்சியின் கொடுமைகளை அவர்கள் ஆதரிக்காததன் காரணமாக அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கான்சென்ட்ரேஷன் முகாம்களில் போடப்பட்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான சாட்சிகள் மரண தண்டனைக்குட்பட்டிருக்கின்றனர். அல்லது அந்த முகாம்களிலேயே மாண்டு போயிருக்கின்றனர். எனினும் இப்போது அந்த கொடூர நாசி அரசாங்கம் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டிருக்க, யெகோவாவின் சாட்சிகள் ஜெர்மனியிலும் உலக முழுவதிலும் மிகுதியாக பெருகுகின்றனர்.
ஆனால் அவர்கள் ஏன் ‘பட்டயத்தை மண்வெட்டியாக அடிக்க முடிந்திருக்கிறது? UNESCO அதாவது ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலசார ஸ்தாபனத்தின் அதிகாரப்பூர்வ சாசனத்திற்கு முன்புள்ள அந்த முகப்புரையிலிருந்து ஒரு வழிகாட்டும் குறிப்பு கிடைக்கிறது: “போர்கள் மனிதருடைய மனங்களிலிருந்து துவங்குவதனால் மனிதருடைய மனங்களில் தானே சமாதானத்தின் பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட வேண்டும்.”
இதற்கு இசைய ‘பட்டயத்தை மண்வெட்டிகளாக அடிக்கக்கூடியவர்களைக் குறித்து ஏசாயாவின் தீர்க்கதரிசனம் சொல்வதாவது: “அவர்கள் இனி யுத்தத்தை கற்பதுமில்லை.” மாறாக, வேதவசனங்களை படிப்பது மற்றும் அதை பொருத்துவதன் மூலம் “கடவுளுடைய வழிகளைக் கற்று அவருடைய பாதையில் நடப்பார்கள்.” (ஏசாயா 2:3, 4) அவருடைய பரிசுத்த ஆவியின் உதவியைக் கொண்டு அவர்கள் தங்கள் ‘மனதை புதிதாக்கி’ சமாதானமுள்ளவர்களாக ஆகிறார்கள்.—ரோமர் 12:2, 18.
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பட்டயத்தை மண்வெட்டிகளாக அடித்திருக்கிறார்கள் என்ற இந்த வெளிப்படையான காரியம் சமாதானத்திலும் பாதுகாப்பிலும் வாழ்வது கூடிய காரியமென்பதை நிரூபிக்கிறது. அவர்களுடைய தற்போதைய வாழ்க்கையானது கிறிஸ்துவின் மூலமான கடவுளுடைய ராஜ்யம் சமீப எதிர்காலத்தில் பூமி முழுவதிலும் எதை சாதிக்கும் என்பதை ஒரு சிறிய அளவில் நடப்பித்துக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கு கவர்ச்சியூட்டுவதாயிருக்கிறதா? கடவுளுடைய ராஜ்யம் நிரந்தரமான சமாதானத்தையும் பாதுகாப்பையும் விரைவில் கொண்டுவரும் என்ற அத்தாட்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். உங்களுடைய பிராந்தியத்தில் நீங்கள் அவர்களோடு தொடர்புகொள்ளலாம். அல்லது இந்த பத்திரிக்கையை பிரசுரிப்போருக்கு கடிதம் எழுதலாம். இப்பொழுதே ‘பட்டயத்தை மண்வெட்டியாக அடிப்பது’ எப்படி என்பதை குறித்து இன்னும் அதிகமாக கற்றுக்கொண்டு, போர்களே இல்லாத உலகில் வாழ்க்கையை விரைவில் அனுபவித்து மகிழம் எதிர்பார்ப்பை கொண்டிருங்கள். (w85 10/15)
[அடிக்குறிப்புகள்]
a ஐக்கிய நாட்டு சங்கம் ஏன் வெற்றி பெறவில்லை என்ற முழுமையான தகவலுக்கு தயவுசெய்து காவற்கோபுரம் ஜூலை 1, 1986-ஐ பார்க்கவும்.
[பக்கம் 5-ன் பெட்டி]
ஐக்கிய நாடுகள் ஏன் தோல்வியுற்றிருக்கிறது
◻ மனித ஞானம் மிகக் குறைவானது (எரேமியா 10:23)
◻ சாத்தானின் செல்வாக்கு அதன் முயற்சிகளை அழித்துவிடுகிறது (வெளிப்படுத்துதல் 12:12)
◻ அது இந்த உலகத்தின் பிள்ளையாதலால் அதன் பலவீனங்களை சுதந்தரித்துள்ளது (1 யோவான் 5:19)
◻ கடவுளுடைய நோக்கங்களுக்கு எதிராக இருக்கும் “பழைய பூமியைப்” பாதுகாக்க முயற்சிக்கிறது (1 யோவான் 2:17)
கடவுளுடைய ராஜ்யம் ஏன் வெற்றிபெறும்
◻ அதன் அரசர் மனிதனுக்கு மிஞ்சிய ஞானத்தை உடையவராயும் மனிதரின் இருதயங்களை அறிகிறவராயும் இருக்கிறார் (யோவான் 2:25)
◻ அது போர்களைத் தூண்டிவிடும் பிசாசுகளை அப்புரப்படுத்தும் (வெளிப்படுத்துதல் 20:1-3)
◻ அது கடவுளுடைய ஒரு “பிள்ளை,” அதன் அரசர் கடவுளுடைய தன்மைகளை பிரதிபலிக்கிறார் (வெளிப்படுத்துதல் 12:5)
◻ அது ஒரே பரலோக அரசாங்கத்தின் கீழ் நீதியான ஒரு “புதிய பூமியை” ஸ்தாபிக்கும் (வெளிப்படுத்துதல் 21:1)
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யம் “ஒரு புதிய பூமியை,” ஒரு நீதியான மனித சமுதாயத்தை ஸ்தாபிக்கும்; இது ஒரே பரலோக அரசாங்கத்தின் கீழ் செழிந்தோங்கும்