சமாதானமும் பாதுகாப்பும்—ஒரே நம்பிக்கை
“ஐக்கிய நாடுகளின் மகா சபை 1986-ம் ஆண்டை சர்வதேச சமாதான ஆண்டாக அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகளின் நாற்பதாவது ஆண்டு நிறைவு நாளாகிய அக்டோபர் 24, 1985 அன்று இது முறைப்படி அறிவிக்கப்படும்.”
ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து அதிகாரப் பூர்வமாக வெளிவந்த இந்த அறிக்கையைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எதிர்காலத்தை அதிக நம்பிக்கையுடன் நோக்குவதற்கு உங்களுக்கு உதவி செய்கிறதா? சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு மிகக் குறைந்த வாய்ப்பையுடைய எதையும் முயற்சித்துப் பார்ப்பது நல்லது என்று சிலர் சொல்லக்கூடும். எனவே ஒரு “சர்வதேச சமாதான ஆண்டை” ஏன் முயற்சித்துப் பார்க்கக்கூடாது?
நிச்சயமாகவே, இப்படிப்பட்ட ஒரு “சமாதான ஆண்டு” ஐக்கிய நாடுகளின் சபையை ஸ்தாபித்தவர்களின் இலட்சியத்திற்கு இசைவாகவே இருக்கிறது. 1944-ம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதி இப்படியாக அறிக்கை செய்தார்: “சமாதானத்தை விரும்பும் தேசங்கள், விருப்பத்தில் ஒற்றுமை, சித்தத்தில் ஒற்றுமை மற்றும் பெலத்தில் ஒற்றுமை மூலமாக கலவரம் எழுப்புகிற அல்லது நாடு பிடிக்கிற வேறு எவரும் எழும்பமாட்டார்கள் என்ற உறுதியை அளிக்கும்படியாக அவற்றை இசைவுபடுத்த தீர்மானித்திருக்கிறோம். அதனிமித்தமாகவே நாம் போர்க்கால ஆரம்பம் முதல் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்குமான இந்த அமைப்புக்கு அஸ்திபாரம் போட ஆரம்பித்தோம்.”
இப்படிப்பட்ட கருத்தைப் பலர் பகிர்ந்துகொள்கின்றனர். “ஐக்கிய நாடுகள் சபை உருவாகுவதற்கு ஒரு பெருந்தொகுதியான ஆட்கள் மனிதனின் திறமை நன்மைக்கே இருக்கிறது என்று நம்ப வேண்டியதும், தங்களுடைய நம்பிக்கைகள் நியாயத்திற்குட்பட்டது என்று உணர வேண்டியதும் அவசியமாயிருந்தது,” என்று ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் பத்தாண்டுகளாக பணிபுரிந்த ஷர்லி ஹாஸர்டு எழுதின இலட்சியம் ஒன்று தோல்வி கண்டது (Defeat of an Ideal) என்ற நூல் கூறுகிறது.
புதிதாகப் பிறந்த இந்த அமைப்பு அதன் சாசனத்தில் அதன் ஸ்தாபகர்களின் நம்பிக்கைகளை வெளிப்படுத்தியது: “ஐக்கிய நாடுகளின் நோக்கங்கள்: 1. சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுதல் . . . 2. சம உரிமைகள் மற்றும் மக்களின் சுய தீர்மானம் என்ற நியமங்களை மதிக்கும் அடிப்படையில் தேசங்களுக்கிடையே நட்புறவை வளர்த்துக்கொள்ளுதல் . . . 3. சர்வ தேச பிரச்னைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை நிலைநாட்டுதல்.” இப்படிப்பட்ட இலக்குகளில் தவறேதும் இருக்க முடியுமா?
ஐக்கிய நாடுகள் சபை அதிகக் கவர்ச்சியான அல்லது மதிப்பான ஓர் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது என்பது ஏற்கத்தகுந்ததே. மிகச் சிக்கலான உலகப் பிரச்னைகளின் பேரில் பேச்சு வார்த்தைகள் நடந்தன. மனித உரிமைகள் பேரில் சர்வலோக அறிக்கை 1948-ல் நிறைவேற்றப்பட்டது. குறிப்பிடத்தக்கது. வறுமை, பசி, பட்டினி, நோய், மற்றும் அகதிகளின் அவதிகள் ஆகியவற்றைப் போக்குவதற்குப் பயனுள்ள மனிதாபிமான வேலைகளும் சேவைகளும் துவங்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள் அமுலுக்கு வந்தது, உதாரணமாக, கப்பல் மற்றும் விமான பயணம் சம்பந்தப்பட்ட பாதுகாப்புச் சட்டங்கள், சில பிராந்தியங்களுக்குப் பயணம் செய்வோர் பெறவேண்டிய உடல்நல மருத்துவ சான்றுகள், ஒரே மாதிரியான தபால் விலைகள், வானொலியில் ஒலிபரப்புவதற்கு அலைவரிகளை பிரித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களில் சர்வதேச தராதரங்கள் ஏற்படுத்தப்பட்டன.
1947-49-ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் சமயத்தில் சமாதான முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சங்கம் மிக நெருங்கிய விதத்தில் உட்பட்டிருந்தது. ஐ.நா. கொடியின் கீழ் இராணுவ வீரர்கள் 1950-ல் கொரியாவுக்கும் 1960-ல் காங்கோ (இப்பொழுது ஜேயர்)-வுக்கும் சென்றபோது ஐ.நா.-வின் படை பலம் வெளிக்காட்டப்பட்டது. ஐ.நா.-வின் அமைதி காக்கும் படை இன்னும் சைப்ரஸிலும் மத்திய கிழக்கிலும் காணப்படுகிறது. ஆம், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஐக்கிய நாட்டு சங்கம் தன்னை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறது. 150-க்கும் அதிகமான நாடுகள் தாங்கள் ஐ.நா.-வை அங்கீகரித்திருக்கின்றனர் என்பதைத் தங்கள் பிரதிநிதிகளை நியூ யார்க் நகரத்தின் கிழக்கு நதிக் கரையில் இருக்கும் அதன் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்புவதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றன.
ஆனால் தனது அடிப்படை நோக்கமாகிய “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்ளுதல்” என்பதை ஐக்கிய நாடுகள் சங்கம் எந்தளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது? அறிவிக்கப்பட்ட “சர்வதேச சமாதான ஆண்டு” என்ன பாதிப்பையுடையதாயிருக்கும்?
(w85 10/1)