வருட ஏமாற்றமளிக்கும் முயற்சிகள்
“நம் வாழ்நாளில் இருமுறை மனிதகுலத்தை மட்டற்ற துயரத்திற்கு ஆளாக்கிய போர்ப்பிணியினின்றும் வருங்காலச் சந்ததியினரை மீட்கவேண்டும் என்று உறுதிபூண்டிருக்கும் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த மக்களாகிய நாம், மனிதகுல அடிப்படை உரிமைகள், மனித கண்ணியம், தகுதி, மற்றும், ஆண் பெண் இருபாலர், சிறிய பெரிய நாடுகள் ஆகியோருடைய சமத்துவ உரிமைகள் முதலியவற்றில் நமக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும், . . . மனவுறுதி கொண்டுவிட்டோம்.”—ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஆரம்ப குறிப்புகள்.
அக்டோபர் 24, 1995, ஐக்கிய நாடுகளின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. தற்போது உறுப்பு நாடுகளாக இருக்கும் 185 நாடுகளும் அந்தச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்த அமைப்பின் ஆரம்ப நெறிகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கட்டுப்பட்டு இருக்கின்றன: சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக் காத்தல்; உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புச் செயல்களை அடக்கி ஒடுக்குதல்; நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல்; இனம், பால், மொழி, அல்லது சமயம் என்ற வேற்றுமையில்லாமல் மக்களனைவருக்குமுள்ள அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாத்தல்; பொருளாதார, சமூக, கலாச்சார பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுதல் ஆகியவை.
உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை, 50 வருடங்களாகக் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துவந்திருக்கிறது. மூன்றாம் உலகப் போரையும் அணுகுண்டுகள் மூலமாக மனித வாழ்வு மொத்தமாக மீண்டும் அழிக்கப்படாமல் இருப்பதையும் அது தடுத்திருக்கக்கூடும் என்பதாக வாதாடலாம். கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு உணவையும் மருந்தையும் ஐக்கிய நாடுகள் அளித்திருக்கிறது. மற்ற காரியங்களுடன்கூட பாதுகாப்பான குடிநீரையும் ஆபத்தான நோய்களுக்கு எதிராக நோய்த்தடைக்காப்பையும் அளித்து, பல நாடுகளில், முன்னேற்றுவிக்கப்பட்ட ஆரோக்கியத்தின் தராதரங்களுக்குப் பங்களித்திருக்கிறது. கோடிக்கணக்கான அகதிகள் மனிதாபிமான உதவிகளைப் பெற்றிருக்கின்றனர்.
அதன் நிறைவேற்றங்களை அங்கீகரிக்கும்வண்ணமாக, ஐக்கிய நாடுகள் சபைக்கு ஐந்து முறைகள், சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், போரில்லாத ஓர் உலகில் நாம் இன்னும் வாழ்வதில்லை என்பதே வாழ்க்கையின் வருந்தத்தக்க உண்மையாக இருக்கிறது.
சமாதானமும் பாதுகாப்பும்—அடையப்படாத குறிக்கோள்கள்
50 வருட முயற்சிக்குப்பின் சமாதானமும் பாதுகாப்பும் இன்னும் அடையப்படாத குறிக்கோள்களாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிடமாக சமீபத்திய பேச்சு ஒன்றில், “நம்பிக்கை, வாய்ப்பு, மற்றும் சாதனை நிறைந்த இந்த நூற்றாண்டு அதிகப்படியான அழிவு மற்றும் துயரத்தின் சகாப்தமாகவும் இருந்திருக்கிறது என்று ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதி தன் ஏமாற்றத்தைத் தெரிவித்தார்.”
1994 நிறைவானபோது, தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டது: “கிட்டத்தட்ட 150 போர்கள் அல்லது சிறு சண்டைகள் நடந்துகொண்டே இருக்கின்றன; அவற்றில் பெரும்பாலான கணக்குகளின்படி—போர்வீரர்களை விட அதிகமான பொதுமக்கள்—ஆயிரக்கணக்கில் செத்துக்கொண்டும் இலட்சக்கணக்கானோர் அகதிகள் ஆகிக்கொண்டும் இருக்கின்றனர்.” ஆயுதம்பூண்ட சச்சரவுகள் காரணமாக 1945 முதற்கொண்டு, இரண்டு கோடிக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர் என்று ஐக்கிய நாடுகளின் பொதுத் தகவல்துறை அறிக்கை செய்தது. “பல பகுதிகளில் ஏற்படும் சச்சரவுகள் தற்போது பல வழிகளில் அதிக கொடூரமானவையாய் இருக்கின்றன” என்று ஐக்கிய நாடுகளுக்கான ஐ.மா. தூதுவர், மாடெலென் ஆல்ப்ரைட் குறிப்பிட்டார். மனித உரிமைகளை மீறுதலும் வேற்றுமை உணர்வும் தினந்தோறும் செய்தியில் இடம்பெறுகின்றன. பல நாடுகள், ஒருவருக்கொருவர் நட்புறவு வைத்திருப்பதற்கு மாறாக ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்வதாகவே தோன்றுகிறது.
“ஐக்கிய நாடுகள், 1980-கள் வரையாக ஏறக்குறைய நன்கு உத்தேசிக்கப்பட்ட தோல்வியாகப்போகும் நிலைக்கு ஓரளவு நெருங்கி வந்திருக்கிறது” என்று ஐக்கிய நாடுகளுக்கு பிரிட்டனின் தூதுவரான சர் டேவட் ஹானே ஒத்துக்கொண்டார். அமைதிகாக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், வளர்ந்துவரும் அலட்சியமனப்பான்மையும் ஆர்வமின்மையுமே உறுப்பு நாடுகளின் மத்தியில் காணப்படுகிறது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராகிய பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி வருத்தம் தெரிவித்தார். அதன் அங்கத்தினர்கள் பலருக்கு “ஐக்கிய நாடுகள் என்பது முதன்மையான முன்னுரிமையாக இல்லை” என்று அவர் முடிவாகக் கூறினார்.
செய்தித்துறையின் பாதிப்பு
ஐக்கிய நாடுகள், எவ்வளவு வல்லமையுள்ளதாகத் தோற்றத்தில் காணப்பட்டாலும், பெரும்பாலும் அதன் முயற்சிகள் அரசியலாலும் செய்தித்துறையாலும் குலைக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள், அதன் உறுப்பினர்களின் ஆதரவை இழந்தால் பலமற்றதாக இருக்கிறது. ஆனால், பொதுமக்களின் அங்கீகாரமின்றி, பல ஐநா உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். உதாரணமாக, தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல்-படி, “சோமாலியா மற்றும் பாஸ்னியாவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தோல்விகள், அந்த அமைப்பு வீணானது மட்டுமல்ல, ஆனால் உண்மையில் ஆபத்தானதாக இருக்கிறது” என்று பல அமெரிக்கர்களை நம்பவைத்திருக்கிறது. பொது மக்களின் இந்த மனநிலை, முறையே, ஐக்கிய நாடுகளுக்கான ஐ.மா.-வின் நிதி ஆதரவைக் குறைக்கும்படி அமெரிக்க அரசியல்வாதிகள் சிலரை தூண்டுவித்துமிருக்கிறது.
ஐக்கிய நாடுகளைக் கடுமையாகக் குறைகாணும் விஷயத்துக்கு வருகையில் செய்தித்துறை அமைப்புகள் தயங்குவதில்லை. ஐநா செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களை விவரிக்கையில், “முழுமையாக செயல்திறமற்றது,” “மெதுவாகச் செயல்படுவது,” “திறமையற்றது,” “செயலிழந்தது” என்பவை போன்ற பதங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தி வாஷிங்டன் போஸ்ட் நேஷனல் வீக்லி எடிஷன், “ஐக்கிய நாடுகள், நிஜ உலகிற்கு ஏற்றாற்போல் தன்னை அமைத்துக்கொள்வதற்காகப் போராடுகிற, மெதுவாகச் செயல்படும் பணித்துறை ஆட்சியாக இருந்துவருகிறது,” என்று சமீபத்தில் குறிப்பிட்டது.
ருவாண்டாவின் படுகொலைகளைக் குறித்து தன்னுடைய ஏமாற்றத்தை பொதுச் செயலராகிய பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி தெரிவிப்பதாக மற்றொரு செய்தித்தாள் மேற்கோள் காட்டியது. “அது ஐக்கிய நாடுகளுக்கான தோல்வி மட்டுமல்ல; சர்வதேச சமுதாயத்திற்கே தோல்வியாக இருக்கிறது. மேலும் நாம் அனைவரும் இந்தத் தோல்விக்குக் காரணமாக இருக்கிறோம்,” என்று அவர் சொன்னார். ஐக்கிய நாடுகள் “சமாதானத்திற்கான மிகப் பெரிய அச்சுறுத்தலை—அணு ஆயதங்கள் பரவுதலை—நிறுத்த தவறியிருக்கிறது” என்று 1993-ல் பிரபல தொலைக்காட்சி விசேஷ-செய்தி குறிப்பிட்டது. அந்த டிவி நிகழ்ச்சி, “பல வருடங்களாக பெரும்பாலும் சொல்வன்மைமிக்க பேச்சாகவே” இருந்த ஐக்கிய நாடுகளைப் பற்றி பேசியது.
பரவலான இந்த ஏமாற்ற உணர்ச்சி ஐக்கிய நாட்டு அதிகாரிகளின் மனங்களில் மிகக் கவலைக்குரியதாகி, அவர்களுடைய ஏமாற்ற உணர்வை அதிகரிக்கிறது. இருந்தபோதிலும், ஏமாற்றங்களின் மத்தியிலும், ஐக்கிய நாடுகளின் 50-வது ஆண்டு நிறைவில், அநேகர் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை உடையவர்களாய், புதிய ஆரம்பம் ஒன்றை நோக்கி இருப்பதாகத் தோன்றுகிறது. ஐக்கிய நாடுகளின் குறைகளை ஒத்துக்கொள்கிறவராக இருக்கிறபோதிலும், தூதுவரான ஆல்ப்ரைட் பின்வருமாறு சொன்னபோது அநேகருடைய உணர்ச்சிகளை எதிரொலித்தார்: “நாம் கடந்தகாலத்தில் செய்தவற்றைக் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டு, எதிர்காலத்தில் செய்யப்போவதைக் குறித்து பேசவேண்டும்.”
ஆம், உலகம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது? போரில்லா ஓர் உலகம் எப்போதாவது இருக்குமா? அப்படியானால், அதில் ஐக்கிய நாடுகள் என்ன பாகத்தை வகிக்கும்? மேலுமாக, நீங்கள் கடவுள்-பயமுள்ளவர் என்றால், இவ்வாறு கேட்கவேண்டும், ‘கடவுள் அதில் என்ன பாகம் வகிப்பார்?’
[பக்கம் 4-ன் பெட்டி]
ஏமாற்றமளிக்கும் முயற்சிகள்
போர், வறுமை, குற்றச்செயல், மற்றும் ஊழல் ஆகியவை இருக்கும் வரையிலும் சமாதானமும் பாதுகாப்பும் இருக்க முடியாது. பின்வரும் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகள் சமீபத்தில் வெளியிட்டது.
போர்கள்: “1989-க்கும் 1992-க்கும் இடையில் நடைபெற்ற ஆயுதம்பூண்ட 82 சச்சரவுகளில், 79 சச்சரவுகள் உள்நாட்டுப் போர்கள்; பெரும்பாலானவை இன சம்பந்தப்பட்டவை; இறந்தவர்களில் 90 சதவீதமானோர் பொது மக்கள்.”—ஐக்கிய நாடுகளின் பொதுச் செய்தித் துறை (United Nations Department of Public Information [UNDPI])
ஆயுதங்கள்: “ஒவ்வொரு வருடமும், 48 நாடுகளிலுள்ள 95-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், 50 இலட்சத்திற்கும் ஒரு கோடிக்கும் இடைப்பட்ட அளவு சுரங்கவெடிகளை உற்பத்தி செய்கிறார்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross [ICRC]) கணக்கிட்டிருக்கிறது.”—ஐக்கிய நாடுகள் அகதிகள் ஹை கமிஷன் (United Nations High Commissioner for Refugees [UNHCR])
“ஆப்பிரிக்காவில், சுமார் மூன்று கோடி சுரங்கவெடிகள் 18-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன.”—UNHCR
வறுமை: “உலகெங்கும், ஐந்து பேரில் ஒருவர்—மொத்தத்தில் 100 கோடிக்கும் அதிகமானோர்—வறுமைகோட்டின்கீழ் வாழ்கின்றனர்; மேலும் கணக்கிடப்பட்ட 1.3 கோடியிலிருந்து 1.8 கோடி மக்கள் வருடந்தோறும் வறுமை சம்பந்தமான காரணங்களுக்காக இறக்கின்றனர்.”—UNDPI
குற்றச்செயல்: “அறிக்கைசெய்யப்பட்ட குற்றச்செயல், 1980-கள் முதற்கொண்டு ஒவ்வொரு வருடமும் 5 சதவீதம் என்ற உலகளாவிய சராசரியில் வளர்ந்துவந்திருக்கிறது; அஐமா-வில் மட்டுமே வருடந்தோறும் 3.5 கோடி குற்றச்செயல்கள் செய்யப்பட்டு வருகின்றன.”—UNDPI
ஊழல்: “பொது ஊழல் சாதாரணமானதாக ஆகிவருகிறது. சில நாடுகளில் நிதி சம்பந்தமான மோசடி, அந்த நாட்டின் வருடாந்தர மொத்த நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு சமமானதாய் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.”—UNDPI