உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 10/1 பக். 5-7
  • போரில்லா ஓர் உலகம்—எப்போது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போரில்லா ஓர் உலகம்—எப்போது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மதம்—பெரியதோர் தடை
  • மதத்தின் எதிர்காலம்
  • அபூரண மனித இயல்பு
  • இயேசு கிறிஸ்து—சமாதானப் பிரபு
  • சமாதானமும் பாதுகாப்பும்—எந்த மூலக்காரணத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • வருட ஏமாற்றமளிக்கும் முயற்சிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • தேவனிடத்திலிருந்து சமாதானம் எப்பொழுது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?
    மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்​—⁠முடிவுக்கு வருமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 10/1 பக். 5-7

போரில்லா ஓர் உலகம்—எப்போது?

ஐக்கிய நாடுகளின் சாசனம் அக்டோபர் 24, 1945-ல் அமலானது. உலக சமாதானத்திற்காக மனிதரால் எக்காலத்திலும் திட்டமிடப்பட்டதிலேயே மிக விரிவான செயல்திறம் உள்ளதாக இருக்கிறது. ஆரம்பத்தில் 51 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்து, ஐக்கிய நாடுகள் உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக ஆனது. மேலுமாக, சமாதானத்தையும் பாதுகாப்பையும் அமல்படுத்துவதற்காக, முதல் முறையாக சர்வதேச அமைப்பு ஒன்று ஒரு படையைப் பயன்படுத்த முடிவதாய் இருக்கிறது.

இன்று, 185 உறுப்பு நாடுகளைக் கொண்டிருப்பதாய், ஐக்கிய நாடுகள் முன்பு இருந்ததைவிட பலமானதாக இருக்கிறது. அவ்வாறிருக்கையில், வரலாற்றிலேயே மிகவும் பலம்வாய்ந்த சர்வதேச அமைப்பு அதன் உயரிய நோக்கங்களை ஏன் முழுமையாக நிறைவேற்ற தவறியிருக்கிறது?

மதம்—பெரியதோர் தடை

உலக விவகாரங்களில் மதத்தின் பாகம் ஒரு பெரிய சிக்கலாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் தொடங்கப்பட்டதிலிருந்தே உலகின் முக்கியமான மதங்கள் அந்த அமைப்புக்குத் தங்கள் ஆதரவை அளிப்பதாக உறுதிசெய்திருக்கின்றன என்பது உண்மை. அதன் 50-வது ஆண்டு நிறைவைப்பற்றி குறிப்பிடுகிறவராய், போப் ஜான் பால் II, “சமாதானத்தை முன்னேற்றுவிப்பதற்கும் காப்பதற்குமான எல்லாவற்றிற்கும் மேம்பட்ட ஏது” ஐக்கிய நாடுகள் என்பதாகப் பேசினார். அவருடைய உணர்ச்சிகள், உலகளாவிய மதத் தலைவர்களின் சமுதாயத்தால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஆனால், மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலுள்ள இந்த சாதுரியமான தொடர்பானது, மதம் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு தடையாகவும் தொந்தரவாகவும் இருந்திருக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது.

பல நூற்றாண்டுகளாக தேசிய பகை, போர்கள், இனப் படுகொலைகள் ஆகியவற்றிற்கு ஊக்கமளிப்பதில் அல்லது ஆதரவளிப்பதில் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது. சமீப ஆண்டுகளில், மத வெறியார்வம் என்ற போர்வையின்கீழ், அயலார் ஒருவரையொருவர் கொலை செய்திருக்கின்றனர். “இனத் துடைத்தழிப்பு” என்ற பதம் பால்கன்ஸிலுள்ள போரின் தொடர்பாக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. என்றபோதிலும், அங்கு அநேகர் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் கடும் பகை, இனம் காரணமாக இருப்பதைவிட மதத் தொடர்பின் காரணமாகவே இருக்கிறது, ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் இனத் தோற்றம் வித்தியாசமானதல்ல. ஆம், முன்னாள் யுகோஸ்லாவியாவிலுள்ள படுகொலைகளுக்கு மதமே பெரும் பொறுப்பு ஏற்க வேண்டும்; ஐக்கிய நாடுகளால் அதை நிறுத்த முடியவில்லை.

“மதப் போராளிகள் அதிகரித்துவரும் பனிப் போருக்குப் பின்னான ஓர் உலகில், மதத்தையும் இனப் படுகொலையையும் பற்றிய ஒரு சோதனை அசௌகரியத்தைத் தோற்றுவிக்கிறபோதிலும், அது நம் முன்னுரிமைகளில் மிக அவசரமான ஒன்றாக இருக்கக்கூடும்” என்று மதத்தைப் பற்றிய கல்லூரி பேராசிரியர் ஒருவர் சமீபத்தில் பொருத்தமாகவே குறிப்பிட்டார். உலக சமாதானத்துக்கான முயற்சிகளுக்கு மதம் எப்படி தடங்கலாக இருக்கிறது என்பதைக் குறித்த புதிய விழிப்புணர்வு இன்று தெளிவாக இருக்கிறது.

1981 ஐநா அறிவிப்பு ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “உலகின் சில பகுதிகளில் இன்னும் தெளிவாகக் காணப்படும் சகிப்புத்தன்மையற்ற வெளிக்காட்டுதல்களாலும் மதம் அல்லது நம்பிக்கையின் விஷயங்களில் இருக்கும் வேறுபாட்டுணர்ச்சிகளாலும் அக்கறையூட்டப்பட்டு, அப்படிப்பட்ட சகிப்புத்தன்மையற்ற நிலை அதன் எல்லா வகைகளிலும் வெளிக்காட்டுதல்களிலும் விரைவாக நீக்கப்படுவதற்கும் மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கும் வேறுபாட்டுணர்ச்சியைத் தடுப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும் தீர்மானமாய் இருத்தல்.”

அவர்களுடைய அறிவிப்புக்கு இசைவாக ஐக்கிய நாடுகள் 1995-ஐ சகிப்புத்தன்மைக்கான வருடமாக அறிவித்திருக்கிறது. என்றாலும் மெய்யாகச் சொல்லவேண்டுமானால், மதத்தால் பிரிக்கப்பட்டிருக்கும் ஓர் உலகில் எப்போதாவது சமாதானத்தையும் பாதுகாப்பையும் அடைவது சாத்தியமாக இருக்குமா?

மதத்தின் எதிர்காலம்

பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலிலுள்ள ஒரு தீர்க்கதரிசனம் பதிலளிக்கிறது. ‘ஒரு ராஜஸ்திரீயாய்’ வீற்றிருந்து, “பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற” அடையாளப்பூர்வ “மகா வேசி”யைக் குறித்து அது பேசுகிறது. இந்த வேசி “செல்வச்செருக்காய்” வாழ்ந்து, உலக அரசாங்கங்களுடன் உறவுகள் வைத்திருக்கிறாள். இந்த அரசாங்கங்கள் “சிவப்புநிறமுள்ள [“மூர்க்க,” NW] மிருக”மாக சித்தரிக்கப்படுகின்றன; அவற்றின்மீது அந்த வேசி சொகுசாக சவாரி செய்கிறாள். (வெளிப்படுத்துதல் 17:1-5, 18; 18:7) “மகா பாபிலோன்” என்று அழைக்கப்பட்ட இந்த வல்லமையுள்ள, ஒழுக்கங்கெட்ட பெண், விக்கிரக வழிபாட்டு மதத்தின் பிறப்பிடமாகிய பண்டைய பாபிலோனின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறாள். பொருத்தமாகவே, உலக விவகாரங்களில் கலந்திருக்கும் எல்லா உலக மதங்களையும் இன்று அந்த வேசி பிரதிநிதித்துவம் செய்கிறாள்.

காலப்போக்கில், அந்த மூர்க்க மிருகத்தின் இராணுவப் பகுதியைச் சேர்ந்தவர்களின் இருதயங்களில், நடவடிக்கை எடுப்பதற்கான எண்ணத்தை கடவுள் வைப்பார் என்று பதிவு தொடர்ந்து சொல்லுகிறது. அவர்கள் “அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16)a இவ்வாறு பொய் மதத்தை நீக்கிப்போடுவதற்கான திட்டத்தில் வல்லமையுள்ள நாடுகளைச் செயல்படத்தூண்டும் விதத்தில் காரியங்களை இயக்க யெகோவா தேவன்தாமே முன்முயற்சி எடுத்திருப்பார். உலகளாவிய மத அமைப்புமுறை, அதன் ஆடம்பரமான கோவில்கள் மற்றும் புனித இடங்களுடனும் சேர்த்து முழுமையாகப் பாழாக்கப்படும். சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிறுவுவதற்கு மதத் தடை இனிமேலும் இருக்காது. ஆனால் அப்போதும்கூட பூமியில் உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் இருக்குமா?

அபூரண மனித இயல்பு

மதத்தை நீக்குவது உண்மையிலேயே போரில்லா ஓர் உலகுக்கு வழிநடத்தும் என்பதற்கு ஏதாவது உறுதியளிப்பு இருக்கிறதா? இல்லை. ஐக்கிய நாடுகள் தொடர்ந்து ஒரு முரணான நிலைமையை எதிர்ப்படும். ஒரு பக்கம், மக்களுக்கு சமாதானமும் பாதுகாப்பும் தேவை. இருந்தாலும், மறு பக்கத்தில், மக்கள்தானே சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். பகை, பெருமை, நான் என்ற தற்பெருமை நிலை, தன்னலம், மற்றும் அறியாமை ஆகிய மனித பண்புகள் எல்லா சச்சரவுகள் மற்றும் போர்களின் காரணமாக இருக்கின்றன.—யாக்கோபு 4:1-4.

நம்முடைய நாளில் மக்கள் “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்” இருப்பார்கள் என்று பைபிள் முன்னறிவித்தது.—2 தீமோத்தேயு 3:1-4.

“பல சமுதாயங்களில் மிகப் பெரிய அளவுகளில் காணப்படும் சமூக மற்றும் ஒழுக்க சம்பந்தமான நெருக்கடியை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது” என்று பொதுச் செயலர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி ஒத்துக்கொண்டார். எவ்வளவு செயல்திறம் வாய்ந்த திட்டங்களும் அபூரண மனித இயல்பின் கேடுவிளைவிக்கும் பண்புகளுக்கு ஈடுகட்ட முடியாது.—ஒப்பிடுக: ஆதியாகமம் 8:21; எரேமியா 17:9.

இயேசு கிறிஸ்து—சமாதானப் பிரபு

தெளிவாகவே, உலக சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான திறமை ஐக்கிய நாடுகளிடம் இல்லை. அதன் அங்கத்தினர்களும் ஆதரவாளர்களும் உயரிய நோக்கங்களை உடையவர்கள் என்றாலும், அனைவரும் அபூரண மனிதர்களே. “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும்” பைபிள் சொல்கிறது. (எரேமியா 10:23) மேலுமாகக் கடவுள் எச்சரிக்கிறார்: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.”—சங்கீதம் 146:3.

“சமாதானப்பிரபு”வாகிய தம்முடைய மகன் மூலமாக யெகோவா எதை நிறைவேற்றுவார் என்று பைபிள் முன்னறிவிக்கிறது. ஏசாயா 9:6, 7 குறிப்பிடுகிறது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா [“அதிசயமான ஆலோசகர்,” NW], வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும். . . . அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”

ஏமாற்றமளிக்கும் 50 வருட முயற்சிகளால் உலக நாடுகள் களைப்படைந்திருக்கின்றன. வெகு சீக்கிரத்தில் வேசியைப்போன்ற மத அமைப்புகளை அவை அழித்துவிடும். பின்னர் ‘ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமான’ இயேசு கிறிஸ்துவும் அவருடைய பரலோக போர்வீரர்களின் சேனையும் எல்லா மனித அரசாங்கங்களையும் கலைத்து, கடவுளுடைய அரசுரிமையை ஏற்க மறுப்பவர்களைக் கொன்றுவிடுவார்கள். (வெளிப்படுத்துதல் 19:11-21; ஒப்பிடுக: தானியேல் 2:44.) இந்த விதமாக யெகோவா தேவன், போரில்லா ஓர் உலகத்தைக் கொண்டுவருவார்.

[அடிக்குறிப்புகள்]

a மகா பாபிலோனைப் பற்றிய வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசனத்தின் ஆழமான படிப்புக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் 1994-ல் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் 33-லிருந்து 37-ம் அதிகாரங்களைக் காண்க.

[பக்கம் 7-ன் பெட்டி]

ஐக்கிய நாடுகளைப் பற்றிய கிறிஸ்தவ நோக்கு

பைபிள் தீர்க்கதரிசனத்தில், மனித அரசாங்கங்கள் மிருகங்களால் அடிக்கடி அடையாளம் காட்டப்படுகின்றன. (தானியேல் 7:6, 12, 23; 8:20-22) எனவே, பல வருடங்களாக காவற்கோபுர பத்திரிகைகள், வெளிப்படுத்துதல் அதிகாரங்கள் 13-லும் 17-லும் உள்ள மிருகங்களை இன்றைய உலக அரசாங்கங்களுடன் பொருத்தி அடையாளங்காட்டியிருக்கின்றன. ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடைய சிவப்பு நிறமுள்ள மிருகமாக வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளையும் இது உட்படுத்துகிறது.

என்றபோதிலும், இந்த வேதப்பூர்வ நிலைநிற்கையானது, அரசாங்கங்களிடமாகவும் அவற்றின் அதிகாரிகளிடமாகவும் எவ்வகையான அவமரியாதையுள்ள போக்கையும் பொருட்படுத்தாமல் விடுவதில்லை. பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள்.”—ரோமர் 13:1, 2.

அதற்கேற்றபடி, அரசியல் சார்பாகக் கண்டிப்பான நடுநிலையைக் காத்துக்கொள்ளும் யெகோவாவின் சாட்சிகள், மனித அரசாங்கங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் ஒருபோதும் புரட்சியைத் தூண்டுவதோ சட்ட மறுப்பு நடவடிக்கைகளில் பங்குகொள்வதோ கிடையாது. மாறாக, மனித சமுதாயத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் காத்துக்கொள்வதற்கு ஏதாவதொரு வகையான அரசாங்கம் தேவை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.—ரோமர் 13:1-7; தீத்து 3:1.

உலகிலுள்ள மற்ற அரசியல் கழகங்களை நோக்குவது போலவே யெகோவாவின் சாட்சிகள் ஐக்கிய நாடுகளையும் நோக்குகிறார்கள். கடவுளுடைய அனுமதியுடன்தான் ஐக்கிய நாடுகள் தொடர்ந்து இருந்துவருகிறது என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். பைபிளுக்கு இசைவாக, யெகோவாவின் சாட்சிகள் எல்லா அரசாங்கங்களுக்கும் தகுந்த மரியாதை கொடுத்து, அவை கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்படி கேட்காதவரைக்கும் அவற்றிற்குக் கீழ்ப்படிகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்