மரவள்ளி இலைகள்—கோடிக்கணக்கானோருக்கு அன்றாட உணவு
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலிருந்து விழித்தெழு! நிருபர்
மரவள்ளி (cassava), அல்லது ஆள்வள்ளியைப் (manioc) போர்த்துகீசியர் தென் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்காவிற்குக் கொண்டுவந்த சமயமாகிய, 1600-ம் ஆண்டுவாக்கில் அதெல்லாம் தொடங்கியது. மரவள்ளி பிரேஸிலில் முதன்முதலாகப் பயிர்செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது, ஏனெனில் “மேனியாக்” (manioc) என்ற வார்த்தை பிரேஸிலைச் சேர்ந்த அமேசான் பள்ளத்தாக்கில் வாழும் டூப்பிய இனத்தவர்களோடு தோன்றியது.
அவ் வேர்கள் ஆப்பிரிக்க மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன, ஆனால் கரும்பச்சை இலைகளைப் பற்றியென்ன? சிலர் அவற்றைக் காப்பற்ற புண்களின்மீது போடும் மருந்தாக, அல்லது அம்மை நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகின்றனர். என்றபோதிலும், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலும் பிற ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் வசிக்கும் கோடிக்கணக்கானோருக்கு, சுவையுள்ள உணவாகத் தயாரிக்கப்பட முடியுமாதலால், அந்த இலைகள் அன்றாட உணவாய் உள்ளன. உண்மையில், இங்குப் புதிதாக வந்துசேரும் உவாட்ச் டவர் மிஷனரிகள் கற்றுக்கொள்ளும் முதல் வார்த்தைகளில் ஒன்று நுகன்ஸா. இது மரவள்ளி இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையுள்ள குழம்பாகும், மேலும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தேசிய உணவுமாகும்—மத்திய ஆப்பிரிக்காவுக்குப் பார்வையிடச் செல்லும் ஒருவர் கட்டாயமாக ருசித்துப் பார்க்க வேண்டிய ஒரு உணவு வகையாகும்.
ஆப்பிரிக்காவில் வாழும் ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர் இந்த இலைகளால் தயாரிக்கப்பட்ட ஓர் உணவு வகையை ஒருபோதும் உண்பதில்லை, ஏனெனில், வெளிநாட்டினருக்கல்லாமல், உள்நாட்டினருக்குரிய உணவாகவே அதை அவர்கள் கருதுகின்றனர். ஆனால் உண்மைகள் என்னவாயிருக்கின்றன? மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சியர்ரா லியோன், ஜயர் போன்ற நாடுகளில் வசிக்கும் பல குடும்பத்தினருக்கு இந்த இலைகள் முக்கிய உணவுப் பொருளாய் இருக்கின்றன.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு மேலே பறந்துசெல்லும்போது, அல்லது அதன் வழியாகப் பயணம் செய்யும்போது, ஓர் அழகிய பசுமையான நாட்டை—மரங்கள், புதர்கள், புல்வெளிகள் மற்றும், இடையிடையே, சிறிதளவில், விநோதமான கரும்பச்சை இலைகளைக் கொண்ட மரவள்ளி வயல்களையும்—பார்ப்பீர்கள். ஒவ்வொரு சிறு கிராமமும் மரவள்ளியைக் கொண்ட பிளாட்டுகளால் சூழப்பட்டிருக்கிறது. தங்கள் வீடுகளையடுத்து மக்கள் அதை விளைவிக்கின்றனர், தலைநகரான பங்குயிலும்கூட, நகர்ப்புற குடியிருப்பைச் சேர்ந்த, அல்லது மெயின் ரோட்டைச் சேர்ந்த சிறுசிறு துண்டு நிலத்திலும், நீண்டு குறுகிய நிலப்பகுதியிலும் மரவள்ளியை நீங்கள் காண முடியும். நிச்சயமாகவே, உலகின் இப்பகுதியில் அது ஒரு முக்கியமான உணவு வகையாய் உள்ளது.
கொஞ்சம் நுகன்ஸாவை ருசியுங்கள்
வந்துசேருகையில், புதிய மிஷனரிகள் விரைவில் கொஞ்சம் நுகன்ஸாவை ருசித்துப் பார்க்க வரும்படி அவர்களுடைய நண்பர்களால் வரவேற்கப்படுகின்றனர். இது, மரவள்ளி இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற உணவு வகையை உள்ளிட்ட ஓர் உணவாகும். அதை ருசியுள்ள விதத்தில் தயாரிப்பது எவ்வாறு என்பதை உள்நாட்டுப் பெண்கள் அறிவர். ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விதத்தில் அதைத் தயாரிப்பதாகத் தெரிகிறது. தங்கள் தாய்மாரிடமிருந்து சிறு பெண்பிள்ளைகள் முதலில் கற்றுக்கொள்ளும் காரியங்களில், நுகன்ஸாவை எப்படி சமைப்பது என்பது பற்றிக் கற்றுக்கொள்வதும் ஒன்றாயிருக்கிறது.
அது என்ன என்றும் அதைத் தயாரிப்பது எப்படி என்றும் விவரித்துக் கூறுவதில் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். உள்நாட்டு உணவு வகையாகிய இதில் நீங்கள் ஆர்வம் காட்டினீர்களென்றால் அப் பெண்கள் சந்தோஷப்படுவர். முதலில், மரவள்ளி இலைகள் விலை குறைந்தவை என்றும், தாராளமாகக் கிடைக்கும் பொருள் என்றும், மழைக்காலத்திலும் வறண்டகாலத்திலும் நீங்கள் அதைப் பறிக்க முடியும் என்றும் அவர்கள் உங்களிடம் கூறுவர். பொருளாதார நெருக்கடியுள்ள காலங்களின்போதும், பணவீக்கத்தின்போதும், மரவள்ளி இலைகள் ஒரு குடும்பத்தைப் போஷிப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. பொதுவாக ஆப்பிரிக்கக் குடும்பங்கள் பெரியவை என்பது தயவுசெய்து நினைவிருக்கட்டும். அநேகம் பேருக்கு ஆகாரத்தைப் பரிமாற வேண்டியிருக்கும். நுகன்ஸாவைத் தயாரிப்பதற்குப் பல மணிநேரம் எடுக்கிறது. உண்பதற்குமுன் இலைகளிலுள்ள கசப்புத் தன்மை மாறவேண்டும். எப்போதும் செய்வதைப்போல, அரைத்து அதன்பிறகு தொடர்ச்சியாகக் கொதிக்க வைப்பதன் மூலம் அக் கசப்புத் தன்மை நீக்கப்படுகிறது.
ஆப்பிரிக்கப் பெண்கள் நுகன்ஸாவைத் தயாரிக்கப் பயன்படுத்தும்படி தெரிவுசெய்யும் எண்ணெய் பாமாயில் ஆகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக் கருஞ்சிவப்பு எண்ணெய் மிகவும் அத்தியாவசியமானது. நுகன்ஸாவோடுகூட சிறிதளவு மணிலா வெண்ணெயுடன் கொஞ்சம் வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் சேர்த்து தயாரிக்கப்படுகையில் அது ஒரு குடும்பத்தின் அன்றாட உணவாகிவிடுகிறது. ஆனால் விருந்தாளிகள் வரக் காத்திருந்தால் அப்போது என்ன செய்வது? அப்போது, இந்த நுகன்ஸா ஏதோ விசேஷமான ஒன்றாக, அவர்கள் எப்போதும் நினைவுகூரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே விருந்துக்கு அழைத்தவர் தனக்குப் பிடித்தமான கூட்டுப்பொருளை—புகையில் வாட்டிய மீன் அல்லது மாட்டுக்கறியை—சேர்ப்பார். அதோடு, நிறைய வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றையும், புதிய, வீட்டில் தயாரிக்கப்பட்ட மணிலா வெண்ணெயையும் பெருமளவில் சேர்ப்பார். இவையெல்லாவற்றையும் சேர்த்து ஒரு பெரிய பானைக்குள் இடுவார். இனி தேவைப்படுவது பொறுமையும், நன்றாகக் கொதிக்கவைப்பதும்தான்.
இக் காலத்தில் எங்களுக்கு விருந்தளிப்பவர் நுகன்ஸாவை, சாதத்தோடு சேர்த்துப் பரிமாறுகிறார். ஒரு குவியல் சாதத்துடன் ஒன்று அல்லது இரண்டு அகப்பை சூடான நுகன்ஸாவை ஊற்றிப் பரிமாறுகையில் ஆப்பிரிக்கர்களுக்கும் வெளிநாட்டினருக்கும்கூட அது உவகையூட்டும் ஓர் உணவாகிறது. அத்துடன் கொஞ்சம் மிளகாய் சேர்க்கையில், நுகன்ஸா என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியவரும். உணவோடு சேர்த்து, ஒரு தம்ளர் சிவப்பு ஒயினைப் பருகும்போது நுகன்ஸாவின் முழுமையான மணத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
கொஞ்சம் நுகூகஸா அல்லது காந்தாவை சுவைப்பதைப் பற்றியென்ன?
நாட்டின் கிழக்குப்பகுதியிலிருந்து மேற்குப்பகுதிக்குப் பயணம் செய்கையில், மக்கள் நுகன்ஸாவை பல்வகைப்பட்ட வழிகளில் தயாரிப்பதை நீங்கள் காண்பீர்கள். நுகூகஸாவைப் பற்றியென்ன? குளிர்ந்த மழை நாளொன்றில், தோட்டம் அல்லது வயலில் இருந்து பெறப்பட்ட எல்லாவிதமான காய்கறிகளோடும் சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் அல்லது குழம்பான நுகூகஸா உங்களுக்கு ஏற்ற பொருளாகும். பாமாயில், வாழைக்காய்கள், மணிலா, சீனிக்கிழங்கு, சோளக்கதிர் (மக்காச்சோளம்), மேலும் கொஞ்சம் மரவள்ளி இலைகளும் ஒன்றாகச் சேர்த்து, ஆனால் உப்பு—உப்பின் ஒரு துகள் கூட—சேர்க்கப்படாமல் சமைக்கப்படுகின்றன. அதில்தான் விஷயம் இருக்கிறது! அதன் பலன்தான் சுவைமிக்க, ஊட்டச்சத்துள்ள உணவு. மேலும் நீங்கள் ஒரு நீண்ட பயணம் செல்ல வேண்டியிருந்தால், கொஞ்சம் காந்தாவையும் எடுத்துச் செல்லுங்கள். இது மரவள்ளி இலைகளையும் புகையில் வாட்டிய மீன் அல்லது கறியையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து தயாரிக்கப்படுகிறது. இக் கலவையை இலைகளில் வைத்து சுருட்டி, கடினமாயும் உலர்ந்ததாயும் ஆகுமளவிற்கு அதை நெருப்பின்மீது பல மணிநேரம் வாட்டுவதன் மூலம் காந்தா தயாரிக்கப்படுகிறது. அது பல நாட்களுக்குக் கெடாமல் அப்படியே இருக்கும், மேலும் ஒரு ரொட்டித்துண்டோடு சேர்த்து உண்ணுகையில் மிகவும் ருசியுள்ளதாய் இருக்கும். பயணம் செய்வோருக்கு அது மிகவும் ஏற்றது.
நீங்கள் எப்போதாவது ஆப்பிரிக்காவைப் பார்வையிடச் சென்றால், ஏன் மரவள்ளியைக் கேட்டு வாங்கக்கூடாது? அதை ருசித்துப் பாருங்கள், அதை அனுபவிக்கும் கோடிக்கணக்கானோரோடு நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள்!