உலகை கவனித்தல்
பைபிள் வாசிப்பு பலனளிக்கிறது
வாரத்திற்கு ஒருமுறையாவது பைபிளைப் படிக்கும் அமெரிக்கர்கள், அதைவிட குறைவாக படிக்கும் நபர்களைவிட அதிக சந்தோஷத்தோடும் மனதிருப்தியோடும் இருக்கிறார்கள், வாழ்க்கைக்கு இன்னுமதிக நோக்கமிருக்கிறது எனவும் உணருகிறார்கள் என அசோஸியேட்டட் ப்ரெஸ் அறிக்கையிட்ட ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. இல்லினாய்ஸ் நகரிலுள்ள மார்க்கெட் ஃபாக்ட்ஸ் லிமிடட், அமெரிக்காவைச் சேர்ந்த வயதுவந்தவர்களோடு தற்செயல் சுற்றாய்வு நடத்தியது; அந்த ஆய்வின்படி, பைபிளை அடிக்கடி வாசித்தோரில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர் தாங்கள் எப்போதுமே அல்லது பெரும்பாலும் மன அமைதியோடு இருப்பதாக கூறினர். அதேசமயத்தில் பைபிளை மாதத்திற்கு ஒருமுறைகூட சரியாக வாசிக்காதவர்களில் 58 சதவீதத்தினரே அமைதி காண்பதாக கூறினர். மேலும், தவறாமல் பைபிளை வாசித்தோரில் 15 சதவீதத்தினர் மாத்திரமே, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதைக் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்தனர், ஆனால் ஒழுங்கற்ற விதத்தில் பைபிளை வாசித்தோரில் 28 சதவீதத்தினர் அவ்விதம் உணருவதாக தெரிவித்தனர். அடிக்கடி பைபிள் வாசிப்பவர்களில் வெறுமனே 12 சதவீதத்தினரே சிலசமயங்களில் அல்லது அளவுக்கதிகமாக சாவைக் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்தனர், அதேசமயத்தில் பைபிளை எப்போதாவது வாசித்தவர்களில் 22 சதவீதத்தினர் அவ்வாறு கவலைப்படுவதாக தெரிவித்தனர்.
மழலைகள் கேட்பவை
ஒரு சிறு குழந்தை எவ்வளவதிக வார்த்தைகளைக் கேட்கிறது என்பதும் எந்தத் தொனியில் அவற்றைக் கேட்கிறது என்பதும், பகுத்தறிந்து, பிரச்சினைகளைத் தீர்த்து, பொதுவாக நியாயப்படுத்திப்பார்க்கும் அதன் திறனை பாதிக்கின்றன என சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்வதாக த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. புரொஃபஷனல்களாய் இருக்கும் பெற்றோரது பிள்ளைகள் மணிக்கு சராசரியாக 2,100 வார்த்தைகளையும், தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோரது பிள்ளைகள் 1,200 வார்த்தைகளையும் அரசு உதவித்தொகையில் காலம்தள்ளும் பெற்றோரது பிள்ளைகள் வெறுமனே 600 வார்த்தைகளையும் கேட்டனர் என அயோவா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டியது. பெற்றோரது குரல் தொனியும்—அதாவது, பிள்ளைகளை உற்சாகப்படுத்தினார்களா, திட்டினார்களா, கொஞ்சினார்களா அல்லது அதட்டினார்களா என்பதும்—கவனிக்கப்பட்டது. “4 வயதிற்குள் கருத்தாய் சிந்திக்க ஒவ்வொரு பிள்ளையும் பெற்றிருக்கும் திறன்களை” அவர்கள் காதில் விழுந்த அனைத்தும் “பெரிதளவில் பாதித்தது” என இரண்டரை வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு காட்டியது. மனிதர்களது வாழ்வில் முதல் மூன்று வருடங்கள் தனித்தன்மை வாய்ந்தவை, ஏனெனில் மழலைகள் தங்களது வளர்ப்புக்காகவும் மொழிக்காகவும் முழுக்க முழுக்க பெரியவர்கள்மீது சார்ந்திருக்கின்றனர் என ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் பெட்டி ஹார்ட் சொன்னார்.
அசாதாரண சிறு பூச்சிகள்
மரவள்ளி, ஆப்பிரிக்காவில் வாழும் சுமார் 20 கோடி மக்களுக்கு அன்றாட ஆகாரமாய் திகழ்கிறது. டைஃப்ளோட்ரோமேலஸ் அரிப்போ என்ற சிறு பூச்சியின் உதவியால் இப்போது ஏராளமான மரவள்ளிக்கான தேவை சரிக்கட்டப்படுகிறது; இந்த சிறு பூச்சி, மற்ற பூச்சிகளை உண்டு வாழ்கிறது. நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகையின்படி, உலகிலேயே மரவள்ளி செடிகளை பெரிதும் நாசப்படுத்தும் பச்சை சிலந்தி பூச்சியை (green spider mite) அழிப்பதற்காக டை. அரிப்போ பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது; இந்தப் பூச்சி சிலவகை ஆப்பிரிக்க மரவள்ளி செடிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை நாசப்படுத்தியது. மிக அதிக மரவள்ளி சாகுபடியாகும் வடகிழக்கு பிரேஸிலில் பச்சை சிலந்தி பூச்சியால் அதிக பிரச்சினை இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். டை. அரிப்போ சிற்றுண்ணிகள், அச்செடியின் நுனியில் அமர்ந்துகொண்டு பச்சை சிலந்தி பூச்சிகள் வர காத்திருக்குமாம், பின் அவற்றைச் சாப்பிட்டுவிடுமாம். டை. அரிப்போ, பச்சை சிலந்தி பூச்சிகளில் 90 சதவீதத்தை கொல்வது மட்டுமல்லாமல், பூச்சிக்கொல்லிகளை வாங்க இயலாத நிலையிலிருக்கும் அநேக விவசாயிகளுக்கு அவை உதவிக்கரம் நீட்டுகின்றன என அந்தப் பத்திரிகை சொல்கிறது.
ஒருவரைவிட இருவர் மேல்
அதிக ஆரோக்கியமாய் வாழ முயற்சிக்கும் நபர்கள் எப்போது அதிகளவு வெற்றிகாண்கிறார்கள் என்றால், அவர்களது துணைவர்களும் அதே முயற்சி எடுக்கையில் என பிரிட்டனின் நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. இது, 1,204 தம்பதியரை பேட்டி கண்டதன் முடிவென ஆர்க்கைவ்ஸ் ஆஃப் ஃபாமிலி மெடிஸின்-ல் அறிக்கை செய்யப்பட்டது. சுகாதாரம் மற்றும் வெப்பமண்டலப் பிரதேச மருந்துக்கான லண்டன் கல்விக்கூடத்தைச் சேர்ந்த ஸ்டீவன் பைக் என்பவர் இப்படிச் சொல்கிறார்: “கொடுக்கப்படும் ஆலோசனையை துணைவர்கள் இருவருமே பின்பற்றினால், புகைபிடிப்பதை நிறுத்துவதற்கும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கும் எடையைக் குறைப்பதற்கும் அதிக சாத்தியம் இருக்கிறது.”
குரல் பராமரிப்பு
ஆசிரியராய் பணியாற்றுவோர் போன்று, குரலை மிக அதிகமாக பயன்படுத்துவோர், குரல் பாதிக்கப்பட்டு அதை இழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர் என த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. அதேவிதமாய், இரைச்சல்மிக்க சுற்றுப்புறத்தில், தொண்டை கிழிய ஓயாமல் கத்திக்கொண்டே இருப்பதும் குரல் நாண்களை சேதப்படுத்தலாம். கிசுகிசுப்பதும் எப்போது பார்த்தாலும் தொண்டையைக் கனைப்பதும் உங்கள் குரலை பாதிக்கும் என பேச்சு மற்றும் மொழி சார்ந்த நோய் வல்லுநரான போனி மன் சொல்கிறார். பிரச்சினை மோசமாகும்வரை காத்திருக்க வேண்டாம் என அவர் சொல்கிறார்; கழுத்திற்கும் தோள்களுக்கும் இதம் அளிக்கும் விதத்தில் நிற்கும்படி அல்லது உட்காரும்படி அவர் உற்சாகப்படுத்துகிறார். மேலும் கூறுகிறார்: “உங்கள் தொண்டையை வறளவிடாமல் பார்த்துக்கொள்வது எல்லாவற்றையும்விட முக்கியம்.” நீங்கள் குரலை அதிகமாக பயன்படுத்தவேண்டுமானால், நாள் முழுவதும் தொண்டையை நனைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என மன் பரிந்துரைக்கிறார்.
திபெத் வானிலையை கண்காணித்தல்
ஆசியா-பசிபிக் பகுதியிலுள்ள பத்து நாடுகள், பருவக்காற்றுகளை ஆராய்வதற்கு ஆராய்ச்சிகளை திட்டமைத்திருக்கின்றன என நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஆசியாவின் பெரும் பகுதிகள், வேளாண்மைக்கு பருவ மழைகளையே நம்பியிருக்கின்றன; ஆனால் இவை வருடா வருடம் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடலாம். திபெத் பீடபூமியே பருவமழைக்கு முக்கிய காரணமாய் இருக்கிறதென வானிலை ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் ஆராய்ச்சிக்காக, திபெத்திலிருந்து இன்னும் விவரங்கள் கிடைக்கவில்லை. சீனாவோடு பேச்சுவார்த்தை நடத்திய பிற்பாடு, வெப்பநிலை, ஈரப்பதம், காற்று, மற்ற இமயத்தின் வானிலை காரணிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கு, தானியங்கி கருவி ஒன்று திபெத்தில் இப்போது பொருத்தப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் விவரம், ஆசிய பருவக்காற்றுகளை இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ரோம அரசுக் கட்டிடம் இஸ்ரேலில் கண்டெடுப்பு
இஸ்ரேலிலுள்ள புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், செசரியாவில் ஒரு ரோம அரசுக் கட்டிடத்தை கண்டெடுத்திருக்கின்றனர்; அது அப்போஸ்தலனாகிய பவுல் சிறைப்படுத்தப்பட்ட ஆளுநர் அரண்மனையாக இருக்கலாம் என்று ரியூட்டர்ஸ் அறிக்கை சொல்கிறது. செசரியாவின் இஸ்ரேல் பழம்பொருள் ஆணைக்குழு இயக்கத் தலைவரான யோசெஃப் போராத், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தில் லத்தீன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு மொசைக் கல்லை தோண்டி எடுத்ததாக கூறினார்; அங்கிருந்த ஓர் அலுவலகம் உள்துறை பாதுகாப்புச் செயலகமாக இருந்திருக்கலாம் என அது காட்டுகிறது. “இந்த எழுத்துப்பொறிப்பு, புதிய ஏற்பாட்டின்படி செ. பவுல் ரோம ஆளுநருக்கு முன்பாக விசாரிக்கப்பட்ட இடம் எது என்ற கேள்விக்கு பதிலளிக்க உதவுகிறது” என போராத் சொன்னார். அவ்விடம், இஸ்ரேலில் ரோமர்கள் ஆளுகை செய்த இடங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமலிருந்த ஒரே இடம்; பூர்வ ரோம உலக அதிகாரத்திலிருந்த பலவற்றில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டார்.
எறும்புகளே மருந்து
1947-ல் நடந்த ஒரு போரில், சீன இராணுவ மருத்துவரான வூ ஜிச்சன், காயமடைந்த வீரர்களுக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது; ஆனால் அவரிடமிருந்த மருந்துகளோ தீர்ந்துவிட்டிருந்தன. கலக்கமடைந்தவராய் ஓர் உள்ளூர் மருத்துவரின் உதவியை நாடினார்; அவரோ, வழிவழியாக பயன்படுத்தப்பட்டு வந்த சீன மருந்தை பரிந்துரைத்தார்; அதன்படி, எறும்புகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரால் காயங்களை சுத்தப்படுத்தி, விசேஷ வகை எறும்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை உபயோகிக்க வேண்டும். நல்ல பலன்கள் கிடைத்ததால், டாக்டர் வூ எறும்புகளின் மருத்துவ பயன்களைக் குறித்து நீண்ட கால ஆராய்ச்சியை தொடங்கினார் என சைனா டுடே குறிப்பிட்டது. எறும்பு மருந்துகள், நோய் தடுப்பாற்றலை சமநிலைப்படுத்த உதவுவதாக அவர் நம்புகிறார்; மேலும் அவர் சொல்கிறார்: “எறும்பு ஒரு சிறியளவிலான ஊட்டச்சத்து கிடங்கு. அதில், மனித உடலுக்குத் தேவைப்படும் 50-க்கும் அதிகமான ஊட்டச்சத்துக்களும், 28 அமினோ அமிலங்களும், வெவ்வேறு தாதுக்களும், வேதியல் சேர்மங்களும் இருக்கின்றன.”
“அலுவலக வியாதி”
இத்தாலியர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் உடல்நலப் பிரச்சினைகளால் கஷ்டப்படுகின்றனர்; இது, சியன்னா போஸ்ச்சர் சென்டர் பல்கலைக்கழகத்தின் இயக்குநரான மௌரிட்ஸ்யோ ரிச்சார்டி என்ற பேராசிரியரால் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்தது. “அலுவலக வியாதி”யால் அவதிப்படுவோரில் பாதிக்கும் அதிகமானோர், முதுகுவலி, தலைவலி, குமட்டல், தலைசுற்றல், சமநிலை கோளாறுகள், இரத்த அழுத்த மாற்றம், பேதி, மலச்சிக்கல், பெருங்குடல் அழற்சி, இரைப்பை அழற்சி போன்றவற்றாலும் அவதிப்படுகின்றனர் என இல் மெஸ்ஸாஜெரோ செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க, “ஜப்பானியர்களும் சீனர்களும் வேலை நேரத்தில் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சில எளிய உடற்பயிற்சிகளை செய்கின்றனர்; நமக்கோ, கிடைக்கும் ஒரே இடைவேளை காபி நேரந்தான்” என ரிச்சார்டி சொல்கிறார்.
பிரேஸிலின் இளம் வாசகர்கள்
பிரேஸிலில், படிப்பறிவும், மாணவர்கள் பள்ளியில் செலவிடும் வருடங்களும் அதிகரித்துவருகின்றன என எஸாமி பத்திரிகை குறிப்பிடுகிறது. இன்னமும் எவ்வளவோ முன்னேற்றம் தேவையென்றாலும், 1991-க்கும் 1995-க்கும் இடையே, 7-லிருந்து 14 வயதுக்குட்பட்டோர் மத்தியில் படிப்பறிவில்லாமை 36 சதவீதம் குறைந்தது என பிரேஸிலைச் சேர்ந்த புவியியல் மற்றும் புள்ளியியல் இன்ஸ்டிட்யூட் கூறியது. 1990-க்கும் 1995-க்கும் இடையே, பள்ளியில் செலவிடப்பட்ட வருடங்களின் சராசரி எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்தது. ரியோடி ஜனீரோவில் சமீபத்தில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்தது; இது, பிரேஸிலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாசிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அந்தக் கண்காட்சியில் அதிகளவு விற்பனையானவை, இளைஞர்களுக்கான புத்தகங்களே; மொத்த விற்பனையில் இவை 24 சதவீதத்தை உள்ளடக்கின என ஓ எஸ்டடோ டெ எஸ். பௌலூ என்ற செய்தித்தாள் அறிக்கையிடுகிறது.
பஞ்சாபிகளும் சிறுநீரக கற்களும்
உலகிலுள்ள மற்ற எந்தச் சமுதாயத்தினரைக் காட்டிலும், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்போருக்கே, சிறுநீரக கற்கள் தோன்றும் அபாயம் அதிகம் இருக்கிறது என இண்டியா டுடே இன்டர்நேஷனல் அறிக்கை செய்கிறது. பஞ்சாபிகள் கடினமாக உழைப்பதற்கும் வாய்க்கு ருசியாக சாப்பிடுவதற்கும் பெயர்போனவர்கள்; ஆனால் அனல் பறக்கும் கோடை காலத்தில் அவர்கள் பெரும்பாலும் போதிய தண்ணீரைக் குடிப்பதில்லை என அந்த அறிக்கை சொல்கிறது. இதன் காரணமாக, சமீப சர்வதேச சிறுநீரகவியல் மாநாட்டில் அவர்கள் வசிக்கும் பகுதி உலகின் “கல் பட்டை” என விளக்கப்பட்டது. அங்குள்ளவர்களுக்கு, சிறுநீரக கல் சராசரியாக இரண்டிலிருந்து மூன்று சென்டிமீட்டர் [சுமார் ஒரு அங்குலம்] அளவுக்கு காணப்படுகிறது; அதேசமயத்தில், ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் உள்ளவர்களுக்கு ஒரு சென்டிமீட்டர் அளவுக்குத்தான் காணப்படுகிறது [அரை அங்குலத்திற்கும் குறைவு]. இதற்குக் காரணம், பொதுவாக அநேக இந்தியர்கள் சிறு வலிகளை புறக்கணிக்கின்றனர் அல்லது சிகிச்சையைத் தள்ளிப்போடுகின்றனர் என அந்த அறிக்கை கூறுகிறது. ஆரோக்கியமான நபர்கள் ஒவ்வொரு நாளும் சுத்தமான தண்ணீரை குறைந்தபட்சம் இரண்டு லிட்டராவது பருகவேண்டுமென சிறுநீரகவியலர்கள் சொல்கின்றனர்.