பேச்சுரிமை—அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா?
நாம் 21-ம் நூற்றாண்டின் நுழைவாயிலில் இருக்கிறோம். அந்தப் புதிய நூற்றாண்டு, புதிய எதிர்நோக்குகளை, குறிக்கோள்களை, ஒழுக்க மனநிலைகளை, தொழில்நுட்பங்களைப் பற்றிய வியப்பூட்டும் எண்ணங்களை, இன்னுமதிக சுதந்திரங்களுக்கான தேவைகளையும் கொண்டுவரும் என்பதில் சந்தேகமேதும் இல்லை. ஏற்கெனவே, அரசாங்கங்கள், மதங்கள், மற்றும் மக்களின்பேரிலான பாரம்பரிய கருத்துக்கள் புதிய குரல்களுக்கும் தேவைகளுக்கும் இணங்கிச்செல்ல ஆரம்பித்துவிட்டன. அநேக இடங்களில், விளைவுகளைப் பொருட்படுத்தாமல், பேச்சுரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமை ஆகியவற்றின் மீதிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கும்படி வற்புறுத்தும் கோரிக்கை இருந்து வருகிறது!
வானொலி ஒலிபரப்பாளர்களாலும் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களாலும் தணிக்கையாளர்களாலும் ஏற்கப்படாததாகவும் தடைவிதிக்கப்பட்டதாகவும் ஒரு சமயம் இருந்த காரியங்கள்—ஒழுக்கக்கேடான மொழியும் ஆபாசமான காட்சிகளும் சைகைகளும்—தற்போது அநேக நாடுகளில் சர்வசாதாரணமானவையாயும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை என்னும் போர்வையில் ஏற்கப்பட்டவையாயும் இருக்கின்றன!
கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் திறம்பட்டவர்கள், வயதுவந்தவர்களும் பிள்ளைகளும், ஆபாசமான பாலின செயல்களின் வரைபடங்களைத் தற்போது நொடிகளுக்குள் மற்ற கண்டங்களுக்குக் கடத்த முடியும்; மேலும், இரகசிய சந்திப்புகளுக்காகப் பெயர்களையும் விலாசங்களையும் கேட்கிற, பாலின தாக்குதல் செய்பவர்கள் மற்றும் குழந்தைகளிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் என்று அறியப்பட்டவர்களோடு உரையாடவும் முடியும். தற்கொலை செய்யும்படியும், பெற்றோரை, போலீஸாரை, அரசாங்க அதிகாரிகளைக் கொல்லும்படியும் ஆலோசனை அளித்து, உற்சாகப்படுத்தும் வாசகங்களை உடைய இசை, தற்போது தினசரி வானொலியிலும் தொலைக்காட்சியிலும் கேட்கப்படுகின்றன அல்லது பிள்ளைகளால் இசைக்கப்படும் பதிவுகளிலும் காணப்படுகின்றன.
கட்டுப்பாடற்ற பேச்சுரிமையைக் கோருகிறவர்களில் ஒருசிலரே, சுமார் அரை நூற்றாண்டிற்கு முன்னர், பேச்சுரிமையைப் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி இளைய ஆலவர் வென்டல் ஹோம்ஸ், பின்வருமாறு எழுதிய பிரபலமான திருப்புமுனை தீர்மானத்துடன் ஒத்துப்போக மறுப்பர்: “பேச்சுரிமையை மிகவும் நெறிபிறழாமல் பாதுகாத்தல் என்பது ஓர் அரங்கத்தில் தீ என்பதாகப் பொய்யாகச் சத்தமிட்டுப் பீதியைக் கிளப்பும் ஒருவருக்கு பாதுகாப்பை அளிப்பதாக இருக்காது.” அப்பேர்ப்பட்ட ஒரு செயலின் பின்விளைவுகள் தெளிவாக இருக்கின்றன. அவ்வாறிருக்கையில், அதே நபர்கள்தாமே, அதே நீதிமன்ற தீர்மானத்தின் அடுத்த வாக்கியத்தின்மீது குறைந்த மதிப்பை வைத்து அல்லது எவ்வித மதிப்பையும் வைக்காமல் இருந்து, அதற்கு எதிராக துணிச்சலுடன் நடந்துகொள்வது எவ்வளவு நியாயமற்றதாக இருக்கிறது. “பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், சட்டமாமன்றம் தடுப்பதற்கு உரிமை கொண்டிருக்கிற பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தீமைகளைக் கொண்டுவருமளவிற்கு, அவை தெளிவானவையாயும் தற்போது நிகழ்வதுமான ஆபத்தை உருவாக்கவல்ல சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டவையாயும் அத்தகைய இயல்புடையவையாயும் இருக்கின்றனவா என்பதே ஒவ்வொரு சம்பவத்திலும் கேள்வியாக இருக்கிறது” என்று ஹோம்ஸ் கூறினார்.
கம்ப்யூட்டர் ஆபாசம்
“புத்தகங்களில், பத்திரிகைகளில், திரைப்படங்களில், தொலைக்காட்சியில், இசை வீடியோக்களில், பேருந்து நிறுத்துமிடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் நறுமணப் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஆகிய எல்லா இடங்களிலும் பாலினம் இன்று காணப்படுகிறது,” என்பதாக டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. “ஆபாச சேவைக்காக ஃபோன் செய்யச் சொல்லும் வியாபார அட்டைகளில் அவை அச்சிடப்பட்டு வாகனத்தின் காற்றுத்தடுப்பு துடைப்பான்களின்கீழ் செருகிவிடப்படுகின்றன. . . . பெரும்பாலான அமெரிக்கர்கள், சிற்றின்ப காட்சிகள் அவ்வளவு வெளிப்படையாகக் காணப்படுவதற்கும்—அரசமைப்புச் சட்டத்தின் [பேச்சுரிமையின்] கீழ் அவை ஏன் விசேஷ நிலையை அனுபவிக்கின்றன என்பது பற்றிய வாதங்களுக்கும்—அவ்வளவு பழக்கப்பட்டுப் போய்விட்டதால் அது அங்கிருப்பதை அவர்கள் அரிதாகவே கவனிக்கிறார்கள்.” என்றபோதிலும், “ஆபாசம்” என்ற வார்த்தைக்குப் புதிய அம்சங்களையும் அர்த்தத்தையும் கொண்டுவந்திருக்கிற ஏதோவொன்று, வெளிப்படையான பாலினம் மற்றும் கம்ப்யூட்டர்களின் கூட்டிணைவில் இருக்கிறது. அது பிரபலமானதாக, ஊடுருவிப்பரவுவதாக, உலகளாவிய பரப்பெல்லை உடையதாக ஆகியிருக்கிறது.
ஆய்வறிக்கை ஒன்றின்படி, வயதுவந்தவர்களுக்கு உரியதான கம்ப்யூட்டர் அறிவிப்பு பலகை அமைப்புமுறைகளுக்காக, மாதாந்தர கட்டணமாக $10-லிருந்து $30 வரையாகச் செலுத்த மனமுள்ளவர்களாக இருந்த சந்தாதாரர்கள், “அங்குள்ள 50 மாகாணங்களிலும் 40 நாடுகளிலும்—ஆபாசம் சம்பந்தமான எதையும் வைத்திருப்பதே மரண தண்டனைக்குரியதாக கருதப்படும் சீனா போன்ற சில நாடுகள் உட்பட—உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்களிலும் மாநிலங்களிலும் 2,000-க்கும் அதிகமான நகரங்களில்” காணப்பட்டனர்.
“கட்டிவைப்பதன்மூலம் பாலின இன்பம் காணல், தன்னையோ பிறரையோ வேதனைப்படுத்தி இன்பம் காணல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், அநேக விலங்குகளுடன் பாலின செயல்கள் ஆகியவற்றின் உருவரைப்படங்கள் உள்ளிட்ட ‘வழக்கத்திற்கு மாறான’ பொருட்களை உடைய ஒரு அதிர்ஷ்டப் பை,” என்பதாக ஒரு வகையான கம்ப்யூட்டர் ஆபாசத்தை டைம் பத்திரிகை விவரித்தது. இதுபோன்ற விஷயம், உலகெங்கிலுமுள்ள ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் அணுகத்தக்க பொது கம்ப்யூட்டர் வலைப்பின்னலில் காணப்படுவது, பேச்சுரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
“பிள்ளைகள் இதனுடன் தொடர்புகொண்டுவிட்டார்கள் என்றால், வெளிப்படையான ஆபாசம் பிள்ளைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் அல்ல, ஆனால் சாத்தியமாக அது எந்தப் பிள்ளைக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது; அப்படியென்றால் தனிமையிலிருக்கும் படுக்கையறையிலேயே இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தும்,” என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டது. 1996-ன் முடிவிற்குள், கம்ப்யூட்டர்களை உடைய பிரிட்டிஷ் வீடுகளில் 47 சதவீதமானவை கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களுடன் இணைக்கப்படும் என்பதாக முன்கணிக்கப்படுகிறது. “அநேக பிரிட்டிஷ் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைப் போல உயர் தொழில்நுட்ப கருவிகளை அந்தளவுக்கு நன்கு அறிந்தவர்களாக இல்லை. கடந்த 18 மாதங்களில், ‘வலைப்பின்னல் தகவலை துழாவுதல்’ (surfing the Net) என்பது மிகப் பிரபலமான பருவவயது நேரப்போக்குகளில் ஒன்றாகி இருக்கிறது,” என்று அந்தச் செய்தித்தாள் சொன்னது.
கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியரும் ஆபாசத்தைச் சுற்றியமைந்துள்ள சட்டப்பூர்வ விவாதங்களில் நிபுணருமாகிய காத்லின் மாயோனி சொன்னார்: “பிள்ளைகளை அதன் மூலமாகத் தவறாகவும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்தக்கூடிய முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத ஒரு சாதனம் இருக்கிறது என்பதைப் பொது மக்கள் அறிந்திருக்க வேண்டும்.” கனடாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னார்: “கம்ப்யூட்டருடன் தொடர்புடைய குழந்தை ஆபாச வழக்குகளில் திடீர் அதிகரிப்பு விரைவில் ஏற்படப்போகிறது என்பதற்குத் தெளிவான அறிகுறிகள் இருக்கின்றன.” பிள்ளைகள் பார்க்கிற கம்ப்யூட்டர் ஆபாசமும் அது அவர்கள்மேல் செலுத்தக்கூடிய செல்வாக்கும் “தெளிவான மற்றும் தற்போதுள்ள ஆபத்தைக் குறிக்கிறது” என்பதாக அநேக குடும்ப ஆலோசனை குழுக்கள் வலியுறுத்துகின்றன.
மாறுபட்ட கருத்துக்கள்
நீதிபதி ஹோம்ஸும் ஐ.மா. உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புக்கு இசைவாக, கம்ப்யூட்டர் ஆபாசம் போன்ற காரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வித முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் மக்களுரிமைவாதிகள் கோபமூட்டப்படுகின்றனர். “அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தின் மீதான நேரடி தாக்குதலாக அது இருக்கிறது,” என்று ஹார்வர்ட் சட்ட பேராசிரியர் அறிவித்தார். நெடுநாள் அனுபவமுள்ள வழக்குரைஞர்கள்கூட அதைப் பரிகசிப்பதாக டைம் பத்திரிகை குறிப்பிட்டது. “சிறு குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களிலும்கூட அது நுண்ணாய்வில் தகுதி பெறாது,” என்று அவர்களில் ஒருவர் சொன்னார். “அது அரசு தணிக்கை செய்வதைப் போன்றது,” என்பதாக மின்னணு சார்ந்த தனிமை தகவல் மைய (Electronic Privacy Information Center) அதிகாரி ஒருவர் சொன்னார். “இன்டர்நெட் ஆரம்பிக்கையில் இந்த முதல் சட்ட திருத்தம் முடிந்துவிடக் கூடாது,” என்று அவர் சொன்னதாய் டைம் மேற்கோள் காட்டியது. “அது தெளிவாகவே பேச்சுரிமையின் ஒரு மீறலாகவும், வயதுவந்தவர்கள் ஒருவருடன் ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான உரிமை மீறலாகவும் இருக்கிறது,” என்று ஐ.மா. சட்டமாமன்றத்தைச் சேர்ந்த ஒருவர் அறிவித்தார்.
நியூ யார்க் சட்ட கல்லூரி பேராசிரியர் ஒருவர், பொது உரிமைகள் மற்றும் சுதந்திரமான பேச்சின் எல்லைக்கு அப்பாற்பட்ட நன்மை, பாலினத்தைப் பற்றிய பல்வேறுவகையான கருத்து வெளிப்பாடுகளில் இருக்கிறது என்று வாதாடுகிறார். அவருடைய கருத்தில், “இன்டர்நெட்டில் பாலினம், உண்மையில் இளைஞர்களுக்கு நன்மை பயக்கக்கூடும்,” என்பதாக டைம் அறிக்கை செய்தது. “விலக்கப்பட்டதும் ஒதுக்கப்பட்டதுமானவற்றை ஆராய்வதற்கான பத்திரமான இடம் [சைபர்ஸ்பேஸ்] ஆகும் . . . பாலினம் பற்றிய திருத்தமானதும் அதோடு புனையப்பட்டதுமான கற்பனைக் கருத்துக்களைப் பற்றி உண்மையான, தர்மசங்கடமாக உணர வைக்காத உரையாடல்களைக் கொண்டிருப்பதற்கான சாத்தியத்தை அது அளிக்கிறது,” என்று அவர் சொன்னார்.
அநேக இளைஞர், முக்கியமாகப் பல்கலைக்கழக மாணவர்கள், கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களில் ஆபாசத்திற்கான எந்தவிதமான தடைவிதிப்புகளையும் எதிர்க்க தயாராக இருக்கின்றனர். அவர்களுடைய பேச்சு சுதந்திரத்திற்கான உரிமைகளைக் குறைப்பதாக அவர்கள் கருதுகிற ஒன்றிற்கு எதிராக சிலர் கண்டன ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர். தி நியூ யார்க் டைம்ஸ்-ல் மேற்கோள் காட்டப்பட்ட ஒருவரின் கருத்து, ஒரு மாணவரின் கருத்தாக இல்லாதிருந்தபோதிலும், கம்ப்யூட்டர்களில் ஆபாசத்தைத் தடைசெய்யக்கூடிய எந்தவொரு புதுத்திட்டத்தையும் ஏற்க மறுக்கிற அநேகரின் உணர்வுகளை சந்தேகமின்றி எதிரொலிக்கிறது: “அது இந்த நாட்டில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறவர்களால் முழுவதுமாக கேலிக்குரியதாக்கப்பட்டு அசட்டை செய்யப்படும்; உலகில் மீதமுள்ள இன்டர்நெட் சமுதாயத்தைப் பொறுத்தவரையில், அது ஐக்கிய மாகாணங்களைப் பரிகாசத்திற்குரிய இலக்காக்கிவிடும்.”
மக்களுரிமை தொகுதி ஒன்றின் அதிகாரி ஒருவருடைய கூற்றை அறிக்கை செய்கையில், ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிட்டது: “அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தைவிட சைபர்ஸ்பேஸ் [கம்ப்யூட்டர் வலைபின்னல்கள்], பேச்சுரிமைக்கு அதிக வல்லமையை அளிக்கக்கூடும். உண்மையில், ‘மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுத்து அடக்கி வைப்பதென்பது அரசாங்கத்தால்’ ஏற்கெனவே ‘சொல்லர்த்தமாக முடியாததாகியிருக்கக்கூடும்.’ ”
கனடாவில், உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சாசனத்தில், கருத்து தெரிவிக்கும் உரிமைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை மீறக்கூடியவற்றின்மீது சர்ச்சைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. திறனாய்வாளர்கள் மற்றும் போலீஸாரின் கோபத்தைக் கிளறிய, “ஆபாசமானவை” என்று அவர்களால் வகைப்படுத்தப்பட்ட ஓவியங்களை உருவாக்கிய கலைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டது, அவர்களுடைய பேச்சுரிமை மீறுதல் என்பதாக அதற்கு எதிர்ப்பும் வெளிப்படையாகக் கண்டனமும் தெரிவிக்கும்படி கலைஞர்களும் பேச்சு சுதந்திரத்தை ஆதரிப்பவர்களும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வரையாக, கனடாவின் ஆபாச தடை சட்டத்தின்கீழ், ஆபாசமான வீடியோடேப்புகள் போலீஸால் வழக்கமாகக் கைப்பற்றப்பட்டு, வழக்குகள் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றை விற்ற வியாபாரிகளுக்கு எதிராக வெற்றிகரமான குற்றத்தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
என்றபோதிலும், அவை அனைத்தும் 1992-ல் மாறின; உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சாசனத்தில் கருத்து தெரிவிக்கும் உரிமை உறுதியளிக்கப்பட்டிருப்பதால், அப்படிப்பட்ட பொருட்கள் குற்ற வழக்குத் தொடரப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதாக குறிப்பிடத்தக்க ஒரு வழக்கில் கனடாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற தீர்ப்பானது, “கனடாவின் சமுதாயத்திற்குக் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது,” என்பதாக மக்லீன்ஸ் பத்திரிகை எழுதியது. “அநேக நகரங்களில், வெளிப்படையான ஆபாச பத்திரிகைகளையும் வீடியோக்களையும் தெருவோரக் கடைகளில் காண்பது தற்போது சர்வசாதாரணமாக இருக்கிறது” என்பதாக பத்திரிகை குறிப்பிட்டது. தடைவிதிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்த அந்த டேப்புகள்கூட நுகர்வோருக்கு இன்னும் கிடைப்பவையாய் இருக்கின்றன.
“அங்கு நீங்கள் போனால் சட்ட மீறுதலுக்குட்பட்ட காரியங்களைக் காண்பீர்கள். ஒருவேளை, நாம் குற்றம் சுமத்தத்தக்க காரியங்களாக இருக்கலாம். ஆனால், . . . நமக்கோ நேரம் இல்லை,” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னார். குற்றஞ்சுமத்தல்கள் செல்லுபடியாகும் என்று எவ்வித உறுதியளிப்பும் அவர்களுக்கில்லை. வரம்பற்ற தனிப்பட்ட சுதந்திரத்துக்கு விசேஷ அக்கறை கொடுக்கிற, எதையும் அனுமதிக்கும் இந்த யுகத்தில், பெரும்பாலும் பொது கருத்தால் நீதிமன்றங்கள் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. ஆனால் அடிப்படைக் காரணம் என்னவாக இருந்தாலும் சரி, இரு பக்கங்களிலும் அந்த விவாதம் ஆழமானதும் பிரிவுபட்டதுமான உணர்ச்சிகளைத்—அதன் சார்பாகவும் அதற்கு எதிராகவும்—தொடர்ந்து எழுப்பும்.
முன்னொரு காலத்தில், பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை குறித்ததில் ஜப்பான் தன்னை கடும் தடைவிதிப்பின்கீழ் கண்டது. உதாரணமாக, ரிக்டர் அளவையில் 7.9 அளவிடப்பட்டதும் ஓராயிரத்துக்கும் அதிகமானோரை காவுகொண்டதுமான ஒரு நிலநடுக்கம் வெளிப்படையாக அறிக்கை செய்யப்பட முடியாததாய் இருந்தது. ஊழல் மற்றும் காதலர்கள் தற்கொலை ஒப்பந்தங்களில் ஒருவரையொருவர் கொல்லுவது பற்றிய நிகழ்வுகள் அறிக்கை செய்யப்பட முடியாது. மிக அற்பமான காரியங்களாகக் கருதப்பட்டவற்றில்கூட கட்டுப்பாடுகளின் கடுமை அதிகரித்தபோது, செய்தித்தாள் பதிப்பாசிரியர்கள் அரசாங்க அச்சுறுத்தல்களுக்கு இணங்கிப்போனார்கள். என்றாலும், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, தடைகள் நீக்கப்பட்டன; ஜப்பான் கூடுதலான பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் அனுபவித்தது.
உண்மையில், பத்திரிகைகளும் பிள்ளைகளுக்குரிய சில நகைச்சுவை புத்தகங்களும் காமம் சார்ந்த மற்றும் ஆபாசமான வரைபடங்களைக் கொண்டிருப்பதன்மூலம், ஊசற்குண்டானது மறுமுனையினிடமாக தீவிரமாக சாய்ந்தது. தி டெய்லி யோமியுரி என்ற டோக்கியோவின் புகழ்பெற்ற செய்தித்தாள் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டது: “புதிதாக ஜப்பானில் வந்திறங்கும் அயல்நாட்டவர் ஒருவருக்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளில் ஒன்று, டோக்கியோ சுரங்கப்பாதைகளில் பாலினத்தை வெளிப்படையாக சித்தரிக்கும் நகைச்சுவை புத்தகங்களை வர்த்தகர்கள் வாசித்துக்கொண்டிருப்பதாக ஒருவேளை இருக்கும். புத்தகக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் நிலையடுக்குகளில் பாலினத்தை வெளிப்படையாக சித்தரிக்கும் பெண்களுக்குரிய நகைச்சுவை புத்தகங்கள் காணப்படுவதால், மக்கள்தொகையின் மற்ற பாதியும் தற்போது பாதிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.”
1995-ல் ஆஸாஹி ஷிம்புன் என்ற நற்பெயர் பெற்றுள்ள செய்தித்தாள், ஜப்பானை ஓர் “ஆபாச பரதீஸ்” என்று அழைத்தது. பெற்றோர்களின் ஆட்சேபணைகளுக்கிணங்க அரசாங்க ஒழுங்குமுறை விதிகளுக்கு பதிலாக பதிப்பாசிரியர்களும் பிரசுரிப்பாளர்களும் தாங்களாக முன்வந்து இதற்கு தீர்வுகாண நாடியபோது இளம் வாசகர்கள் ஆட்சேபித்தனர். ‘யாருடைய குரல்கள் முடிவில் வெல்லும்?’ என்று ஒருவர் கேட்கலாம்.
பேச்சுரிமை என்பது பிரான்ஸில் தற்போது அதிக சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. “சந்தேகமின்றி, பேச்சுரிமையின் வரலாறு முடிந்துவிடவில்லை, இன்னும் பிரிவினைகளை உண்டாக்கும்படி அது தொடரும். . . . தணிக்கையைப் பற்றிய பழமையானதும் ஒருபோதும் முடிவுறாததுமான விவாதத்தை மீண்டும் கவனிக்கும்படி செய்வதாய், ஒரு வெறித்தனமான பிரதிபலிப்பை உண்டுபண்ணும் ஒரு திரைப்படமோ தொலைக்காட்சி தொடரோ ஒரு விளம்பர பிரச்சாரமோ வெளிவராமல் ஒரு வருடம் கடந்துசெல்வது அரிதாகவே இருக்கிறது,” என்று பிரெஞ்சு ஆசிரியர் ஜாங் ஆராங்ஜ், பேச்சுரிமை பற்றிய தன் புத்தகத்தில் எழுதினார்.
மினிஸ்டர் அமெர் (கசப்பான ஊழியம்) எனப்பட்ட ஒரு ராப் இசைக் குழு, போலீஸாரைக் கொல்லும்படி அதன் விசிறிகளைத் தூண்டியதாக பாரிஸ் செய்தித்தாளாகிய லா ஃபீகாரா என்பதில் வந்த கட்டுரை ஒன்று அறிக்கை செய்தது. அந்தப் பாடல்களின் வாசகங்களில் ஒன்று சொல்கிறது: “[போலீஸ்] சாகவில்லை என்றால், எவ்வித சமாதானமும் இருக்காது.” “காவல் நிலையத்தை எரித்துப்போட்டு, [போலீஸை] பலியாக்கும்படி எங்களுடைய இசைத்தட்டில் நாங்கள் அவர்களிடம் சொல்கிறோம். அதைவிட இயல்பானதாக வேறென்ன இருக்க முடியும்?” என்று அந்தக் குழுவின் பிரதிநிதி சொன்னார். இந்த ராப் இசைக் குழுவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அமெரிக்காவிலுள்ள ராப் இசைக் குழுக்களும், போலீஸைக் கொல்லும்படி பரிந்துரைத்து, பேச்சு சுதந்திரத்தினுடைய பாதுகாப்பின்கீழ் அப்படி சொல்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறார்கள். பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பாவிலும் உலகெங்கிலுமுள்ள மற்ற நாடுகளிலும், ‘தெளிவானதும் அப்போது நிகழ்வதுமான ஆபத்தை உருவாக்கவல்ல இயல்புடையதாயும்’ பேச்சு இருந்தாலும்கூட வெளிப்படையாகப் பேசுவதற்கான சுதந்திரத்தின்மீது எவ்வித வரம்புகளும் வைக்கப்படக்கூடாது என்று எல்லா தரப்பினரிடமிருந்தும் குரல் எழுப்பப்படுகிறது. சர்ச்சை எப்போது முடிவுபெறும், யாருடைய பக்கம் வெற்றி பெற்றதாய் வெளிவரும்?
[பக்கம் 7-ன் படம்]
கம்ப்யூட்டர் ஆபாசம், “ ‘வழக்கத்திற்கு மாறான’ பொருட்களை உடைய ஒரு அதிர்ஷ்டப் பை”