உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 7/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “காணாமற்போகும்” பெண்கள்
  • போர் கருவிகளுக்கா அல்லது வளர்ச்சிக்கா?
  • சாலையைக் கடக்கும் கடமான் அபாயம்
  • நாருவின் நிலைமை
  • நரம்புச் சிலந்திப்புழு நோய் மறைதல்
  • இறுதித்தீர்ப்பு கடிகாரம் விரைகிறது
  • புதிதாகப் பிறந்த குழந்தைகள் கைவிடப்படுதல்
  • தாகம் போதுமானளவு இல்லை
  • பிரபல எகிப்திய கல்லறை திறக்கிறது
  • அணு ஆயுதப் போர் அச்சுறுத்துகிறவர்கள் யார்?
    விழித்தெழு!—2004
  • அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முடிவு?
    விழித்தெழு!—1999
  • உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?
    விழித்தெழு!—2017
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2008
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 7/22 பக். 28-29

உலகை கவனித்தல்

“காணாமற்போகும்” பெண்கள்

“உடல்நலத்தைக் குறித்ததில், பெண்களைப் பட்சபாதமின்றி நடத்துகிற சமுதாயங்களில் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 106 பெண்கள் இருக்கின்றனர். இது ஓர் உயிரியல்பூர்வ உண்மை,” என்பதாக ஐரோப்பியக் குழுவால் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகையாகிய தி கூரியர் குறிப்பிடுகிறது. ஆனால் ஐநா ஆய்வுகள் மற்றொரு உண்மையையும் சுட்டிக்காண்பிக்கின்றன: சீனா, இந்தியா, கொரியா குடியரசு, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில், சராசரியாக ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 94 பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். ஏன்? “கருத்தரிப்பின் ஆரம்ப நிலையிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறிவதை அறிவியல்பூர்வ முன்னேற்றங்கள் சாத்தியமாக்கியிருந்து, பெண்-ஆண் பிறப்பு விகிதத்திலுள்ள இந்த முரண்பாடுகளை” அதிகரித்திருக்கின்றன என்பதாக தி கூரியர் விளக்குகிறது. உதாரணமாக, கொரியா குடியரசில், 1982-ல், ஒவ்வொரு 100 பையன்களுக்கும் 94 பெண்கள் பிறந்தனர், ஆனால் 1989-ல், அந்த விகிதம் ஒவ்வொரு 100-க்கும் 88 என்பதாகக் குறைந்தது. ஐநா பிரசுரமாகிய நம் கிரகம் (ஆங்கிலம்) மேலுமாகச் சொல்கிறது: “புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுபவையாய் இருக்கின்றன: பெண் சிசு கொலை மற்றும் பெண் கருக்களின் கருக்கலைப்பு காரணமாக பத்து கோடி ஆசிய பெண்கள் ‘காணாமற்போகிறார்கள்.’ ”

போர் கருவிகளுக்கா அல்லது வளர்ச்சிக்கா?

ஒரு நூறு ஐ.மா. டாலர்கள், ஒரு AK-47 துப்பாக்கியை அல்லது ஒரு-வயதுள்ள 3,000 பேரில் குருட்டுத்தன்மையைத் தடுப்பதற்குப் போதுமான விட்டமின்-A குளிகைகளை வாங்க முடியும். பத்துக் கோடி டாலர்கள், ஒரு கோடி கண்ணிவெடிகளை அல்லது ஆறு சாவுக்கேதுவான பிள்ளைப்பருவ நோய்களுக்கு எதிராக 77 லட்சம் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் போதுமான நோய் தடுப்பு மருந்துகளை வாங்க முடியும். எண்பது கோடி டாலர்கள், 23 F-16 போர் விமானங்களை வாங்க முடியும் அல்லது மனவளர்ச்சி குன்றுதல் போன்ற ஐயோடின்-குறைவால் ஏற்படும் உடல்நலக்குறைகளிலிருந்து 160 கோடி மக்களைப் பாதுகாக்கும் வகையில், பத்து வருடங்களுக்கான உப்பு ஐயோடின் சத்தூட்டப்பட முடியும். சுமார் 240 கோடி டாலர்கள், அணு ஆற்றல் சார்ந்த நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றை வாங்க முடியும் அல்லது 4.8 கோடி மக்களுக்கு தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளைச் செய்ய முடியும். உலகம் எதன்மீது அதன் முன்னுரிமைகளை வைத்திருக்கிறது? உலக பிள்ளைகளின் நிலை 1996 (ஆங்கிலம்) என்பதன்படி, 1994-ல் வளர்முக நாடுகளுக்குப் போர் கருவிகளின் விற்பனை மட்டுமே மொத்தமாக $2,540 கோடியாக இருந்தது, அந்தப் பணம் இதற்குப் பதிலாக வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சாலையைக் கடக்கும் கடமான் அபாயம்

ஒரு கடமான் (moose) ஏன் சாலையைக் கடக்கிறது? நியூபௌண்ட்லாந்தின் வனவுயிர் உயிரியலாளர்களுக்கும் அல்லது உள்ளூர் வாகன ஓட்டுநர்களுக்கும் அந்த மாநிலத்தின் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தக் கேள்வி வேடிக்கையானதாக இல்லை. “நியூபௌண்ட்லாந்தின் நெடுஞ்சாலைகளில் ஒரு வருடத்தில் சுமார் 300 கார்-கடமான் விபத்துக்கள் ஏற்படுகின்றன; அவற்றில் பல, ஓட்டுநர்களின் மரணத்தில் விளைவடைகின்றன,” என்பதாக தி க்ளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் சொல்லுகிறது. “450 கிலோகிராம் [1,000 பவுண்ட்] வரையான நிறையுள்ள கடமான், ஒரு பெரும் பாறையைப் போல காரின் கூரையில் தொப்பென்று விழுந்து,check சாவையோ ஊனமுறுதலையோ ஏற்படுத்த முடியும்.” அந்தத் தீவில் தற்போதைய கடமான் தொகையாகிய 1,50,000 என்ற அளவை வெறுமனே குறைப்பது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது, என்கிறார் இயற்கை வள துறையைச் சேர்ந்த ஷேன் மாயோனி; ஏனென்றால், கடமான் எண்ணிக்கையில் குறைவாக உள்ள பல பகுதிகளில், பெருமளவான விபத்துக்கள் சம்பவிக்கின்றன. மந்தையின் இடப்பெயர்ச்சி முறையை ஆராய்வதன்மூலம், போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் பயந்த சுபாவமுள்ள இந்தக் கடமான்கள் ஏன் சாலையைக் கடக்க தீர்மானிக்கின்றன என்பதைக் கண்டறியலாமென அறிவியலாளர்கள் நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்கின்றனர்.

நாருவின் நிலைமை

நாரு, உலகிலேயே மிகச் சிறியதும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதுமான குடியரசு, வெப்பமண்டலப் பகுதிக்கேயுரியதான அதன் அழகுக்கு ஒருகாலத்தில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 18-ம் நூற்றாண்டில், 20 சதுர கிலோமீட்டருள்ள அந்தத் தீவை முதலில் கண்ட ஐரோப்பிய கடலோட்டிகள், அதை இன்பத்தீவு (Pleasant Island) என்றழைத்தனர். என்றபோதிலும், தற்போது, ஒரு குறுகிய கடலோர விளிம்பு மட்டுமே குடியிருக்கத்தக்கதாக இருக்கிறது; மேலும் நாரு, “சுற்றுச்சூழல்பூர்வமாக பூமியிலேயே மிகவும் பாழ்படுத்தப்பட்ட நாடாக” ஆகியிருக்கிறது என்று தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஏன்? மூல வளங்கள் சூறையாடப்படுதல். ஆயிரக்கணக்கான வருடங்களின் பறவை எச்சங்கள் மற்றும் கடல்சார்ந்த நுண்ணுயிரிகளின் விளைப்பயனாகிய பாஸ்பேட்டுகள், 90 வருடங்களாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, “குழிவுகளுள்ளதும், சில முகடுகள் 22 மீட்டர் உயரமானவையாகவுமிருக்கும் சாம்பல்நிற சுண்ணாம்பு கோபுர முகடுகளையுடைய நிலவுடையதை ஒத்த பயங்கரமான நிலக்காட்சி விட்டுச்செல்லப்பட்டிருக்கிறது.” ஏற்கெனவே வளங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஐந்தில் நான்கு பாக பகுதியிலிருந்து எழும்பிக்கொண்டிருக்கும் வெப்பமும் வானிலையை பாதித்து, மழை மேகங்களை விரட்டி, தேசத்தை வறட்சியால் பீடித்திருக்கிறது. பாஸ்பேட்டின் கடைசி படிவுகள் ஐந்து வருடங்களுக்குள் சுரண்டியெடுக்கப்பட்டுவிடும். நாருவை விட்டுவிட்டு, தாங்கள் குடிபெயர்ந்து செல்லத்தக்க ஒரு புதிய தீவு வீட்டை வாங்குவதற்குத் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்துவதே மீந்திருக்கும் ஒரே வழி என்பதாக நாருவைச் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள்.

நரம்புச் சிலந்திப்புழு நோய் மறைதல்

“சின்னம்மைக்கு அடுத்ததாக, முழுமையாக ஒழிக்கப்படும் இரண்டாவது மனித நோய் நரம்புச் சிலந்திப்புழுவாக இருக்கலாமென தோன்றுகிறது. சமீபத்தில் 1989-ல் அறிக்கைசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் சுமார் 9,00,000-மாக இருந்தது, கடந்த வருடத்தில் 1,63,000-ஆக குறைந்திருந்தது; மேலும் பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு வருடமும் பாதியளவு குறைந்து வருகிறது,” என்று தி எக்கானமிஸ்ட் குறிப்பிடுகிறது. “போரும் நோயும் நெருங்கிய தொடர்புள்ளவை என்பதை நிரூபிப்பதாய்” சூடான் ஒரு விதிவிலக்காக இருக்கிறது. மிக நுட்பமான முட்டைப்புழுவில் அதன் துவக்கத்தைக் கொண்டிருக்கிற நீர்வழிப் பரவும் ஒட்டுண்ணியாகிய நரம்புச் சிலந்திப்புழு, மத்திய ஆசியா, பாகிஸ்தான், மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. நீரைச் சுத்திகரிக்கும் ரசாயனம் ஒன்றைப் பயன்படுத்துதல், தங்கள் குடிநீரை ஒரு துணியின் வழியாக வடிகட்டும்படி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தல், நோய் தொற்றப்பட்டவர்கள் குடிநீர் ஊற்றுமூலங்களில் குளிப்பதை அல்லது அதில் கடந்து செல்வதைத் தடுத்தல் ஆகியவற்றின்மூலம் உடல்நல அமைப்புகள் அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன. உடலுக்குள் சென்றுவிட்டதென்றால், இனச்சேர்க்கைக்குப் பின் ஆண் புழுக்கள் இறந்துவிடுகின்றன; பெண் புழுக்கள், தாக்கப்பட்டவரின் காலில் வேதனைமிக்க கொப்பளங்கள் வழியாக, சிலவேளைகளில் முடமாக்கிக்கொண்டும் தசைகளைச் சேதப்படுத்திக்கொண்டும், பல வாரங்களாக மெதுவாய் வெளியே வருவதற்குள் ஒருவேளை ஒரு மீட்டர் நீளத்தை அடைகின்றன.

இறுதித்தீர்ப்பு கடிகாரம் விரைகிறது

அணு அறிவியலாளர்களின் அறிக்கை (ஆங்கிலம்) என்ற வெளியீட்டின் அட்டையிலுள்ள பிரபல இறுதித்தீர்ப்பு கடிகாரத்தின் முள் நள்ளிரவை நோக்கி மூன்று நிமிடங்கள் நகர்த்தப்பட்டது. ஓர் அணு ஆற்றல் போருக்கு உலகம் எவ்வளவு நெருங்க இருக்கிறது என்பதை அந்தக் கடிகாரம் அடையாளப்பூர்வமாகப் பிரதிபலிக்கிறது. 1947-ல் அது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மாறிக்கொண்டிருக்கும் உலக விவகாரங்களுக்குப் பிரதிபலிப்பாக அந்தக் கடிகாரம் 16 தடவை திருத்திவைக்கப்பட்டிருக்கிறது. அணு ஆற்றல் சார்ந்த நள்ளிரவை அது மிகவும் நெருங்கி வந்தது—இரண்டு நிமிடங்கள்—1953-ல், ஐக்கிய மாகாணங்களால் முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கப்பட்டதற்குப் பின்னராகும். கடைசி மாற்றம் 1991-ல் இருந்தது; அப்போது, பனிப்போருக்கு பின் ஏற்பட்ட நம்பிக்கையான மனநிலையின் காரணமாக, அது நள்ளிரவுக்கு முன் 17 நிமிடங்களுக்கு பின்னோக்கி திருப்பி வைக்கப்பட்டது. 14 நிமிடங்களுக்கு அந்தக் கடிகாரத்தை முன்னோக்கி திருப்பிவைப்பது, உலகில் வளர்ந்துவரும் பதற்றநிலை, அணு ஆயுத குவிப்பின் பாதுகாப்பின்மை, அணு பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் ஆகியவற்றைக் குறித்து அதிகரித்துவரும் கவலையைப் பிரதிபலிக்கிறது. “உலகம் இன்னும் மிக ஆபத்தான இடமாக இருக்கிறது,” என்று அந்த அறிக்கையின் தலைமை பொறுப்பாளர் லெனார்ட் ரீஸர் சொன்னார்.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் கைவிடப்படுதல்

இத்தாலியில் ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையைத் தத்தெடுக்க மனமுள்ளவர்களாக இருக்கும் ஒரு தம்பதியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இளைஞரைக் கவனிக்கும் அதிகாரிகளிடம் விட்டுவிட்டு, சட்டப்பூர்வமாக தன் குழந்தையை ஏற்க மறுக்கலாம். இருந்தாலும், 1995-ல், 600 பிள்ளைகள் பிறப்பிலேயே கைவிடப்பட்டனர், “அநேகர் குப்பைத் தொட்டிகளிலும், மற்றவர்கள் சர்ச்சுகள் அல்லது உடல்நல சேவை மையங்களுக்கு அருகிலும்,” என்பதாக இத்தாலிய செய்தித்தாள் லா ரேபூப்பிலிகா சொல்கிறது. நாட்டின் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட, செழிப்பான பகுதிகளிலும் மிகவும் ஏழ்மையானதும் மிகவும் குறைந்தளவு வளர்ச்சி உடைய பகுதிகளிலும் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இத்தாலிய உளவியல் சங்கத் தலைவராகிய வாரா ஸ்லெப்பாய் சொல்லுகிறபடி, இது சமுதாயத்தை ஊடுருவிப் பரவுகிற “மரண உணர்வின் எச்சரிப்பு அறிகுறி.”

தாகம் போதுமானளவு இல்லை

“ஒருவர் தனக்கேற்படும் தாகத்தைச் சார்ந்திருந்தால், போதுமானளவு குடிக்கமாட்டார்,” என்கிறார் பயிற்சி உடலியல் பேராசிரியர் டாக்டர் மார்க் டேவிஸ். அநேக மக்கள் லேசாக நீரிழந்த நிலையிலேயே இருக்கின்றனர், ஏனென்றால், உடல் திரவங்கள் ஏற்கெனவே குறைந்துவிட்ட பின்னரே தாகவுணர்வு ஏற்படுகிறது. மேலும் மக்கள் வயதாகிக்கொண்டு வரவர, அவர்களுடைய தாக இயக்கமுறை குறைவாக பிரதிபலித்து வருகிறது. தி நியூ யார்க் டைம்ஸ்-ல் அறிக்கை செய்யப்பட்டபடி, வானிலை வெப்பமாகவோ அல்லது கடுமையான குளிராகவும் உலர்ந்ததாகவுமோ இருக்கையில், நாம் உடற்பயிற்சி செய்கையில் அல்லது திட்டமான உணவை உட்கொள்கையில், திரவங்களின் இழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி போன்ற நிலைமைகளுடன்கூடிய ஏதாவது உடல்நலக் குறைவை உடையவர்களாக இருக்கும்போது, நமக்கு அதிகமான தண்ணீர் தேவை. உயரளவான நார்ச்சத்துள்ள திட்ட உணவுகளை உண்பவர்களுக்கும் அந்த நார்களைக் குடல் வழியாக செல்ல வைப்பதற்கு அதிக திரவங்கள் தேவைப்படுகின்றன. பழங்களும் காய்கறிகளும் அதிக சதவீதமான நீரைக் கொண்டிருக்கக்கூடும் என்றாலும், பெரும்பாலான நம் தேவைகள் குடிப்பதன்மூலமே திருப்தி செய்யப்படுகின்றன. தண்ணீர் மிகச் சிறந்தது, ஏனென்றால் அது உடலில் விரைவாக உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. ஒரு பானம் எவ்வளவு இனிப்பாக இருக்கிறதோ, அவ்வளவு மெதுவாக உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. சோடாக்கள் உண்மையில் உங்களை அதிக தாகமுள்ளவர்களாக்கலாம், ஏனென்றால் சீனியை ஜீரணிப்பதற்கு திரவம் தேவைப்படுகிறது. கஃபீனும் ஆல்கஹாலும் சிறுநீர்க் கழிவினைத் தூண்டுபவையாய் இருப்பதால், அவற்றைக் கொண்டிருக்கும் பானங்களைச் சார்ந்திருப்பது நீரிழப்புக்கு வழிநடத்தலாம். “வயதுவந்தவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு 2.4 டெசிலிட்டர் கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும்,” என்பதாக டைம்ஸ் சொல்லுகிறது.

பிரபல எகிப்திய கல்லறை திறக்கிறது

பல வருடங்களாக மூடிக்கிடந்த, அரசிகளுக்கான லக்ஸர் பள்ளத்தாக்கிலுள்ள நெஃபர்டாராவின் கல்லறை, புதுப்பிக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக மறுபடியும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. “ ‘லக்ஸரின் மேற்கு ஓரத்தில், அல்லது எகிப்து முழுவதிலேயும்கூட இந்தக் கல்லறை நிஜமாகவே மிகவும் கவர்ச்சியுள்ளதாய் இருக்கிறது,’ என்று தொல்பொருட்களின் உச்ச கழகத்தின் லக்ஸர் கிளைத் தலைவராகிய முஹமட் எல்-ஸோகையர் சொன்னார். ‘தெளிவாகவே அது நெஃபர்டாராவின் மீதிருந்த தனது மிகுந்த அன்பின் காரணமாக இந்த அரச கல்லறை மாளிகையை கட்டிய ராம்ஸேஸ் II-ன் காலத்திலிருந்த மிகவும் திறம்பட்ட கலைஞர்களால் செய்யப்பட்டிருந்தது. முடிந்தளவு மிகச் சிறந்த கல்லறையை அவள் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.’ ” என்றபோதிலும், கண்ணைப் பறிக்கும் நுட்பமான ஓவியங்களாலான 430 சதுர மீட்டர், வெள்ளப்பெருக்குகள், சேறு மற்றும் ஊடுருவும் உப்புக் கற்களால் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டன. 1986-ல், வருடக்கணக்கான ஆழ்ந்த கலந்தாலோசிப்புக்குப்பின், சர்வதேச குழு ஒன்று, இந்தக் கல்லறையைக் கண்டுபிடித்த இத்தாலியைச் சேர்ந்த எகிப்திய-தொல்பொருள் ஆய்வாளராகிய எர்னஸ்டோ ஸ்கியாப்பரல்லி எடுத்த புகைப்படங்களைப் பயன்படுத்தி, அந்தச் சுவர்சித்திர துண்டுகளை ஒன்றிணைத்து வைக்கும் சிரமமான வேலையை ஆரம்பித்தது. என்றாலும், ஈரத்தன்மை பாதிப்புகளின் காரணமாக அங்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கை வரையறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ராம்ஸேஸ் II, அபு சிம்பிலிலுள்ள கோயில்களில் ஒன்றை நெஃபர்டாராவுக்காக அர்ப்பணித்தபோது அவள் அவரால் கனப்படுத்தவும்பட்டாள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்