பாதுகாத்தலுக்கு எதிராக அற்றுப்போதல்
பாதுகாத்தலுக்கும் அற்றுப்போதலுக்கும் இடையேயான போராட்டம் விடாது தொடர்கிறது. அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு கண்டிப்புமிக்க பாதுகாப்புச் சட்டங்களை மேற்கொள்ளும்படி அறச்சிந்தனையுடைய நிறுவனங்கள் பலவும் அரசாங்கங்களை வற்புறுத்துகின்றன.
உதாரணமாக, சமீபத்தில், ஆசிய கருங்கரடிகளைப் பொறிவைத்துப் பிடிப்பதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் பல்வகைப்பட்ட தொகுதிகள் சீன அதிகாரிகளோடு கூட்டம் நடத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றன. இவ் விலங்குகள் அவற்றின் பித்தநீருக்காகவும், பித்தப்பைக்காகவும் பிடிக்கப்பட்டிருந்தன; அவை பாரம்பரிய கிழக்கத்திய மருந்தில் பயன்படுத்தப்படுகின்றன.
சர்வதேச உதவி
ஓர் உயிரினத்தை ஒரு நாட்டில் பாதுகாப்பதும் மற்றொரு நாட்டில் அது அற்றுப்போகும்வரை வேட்டையாடுவதும் அதன் பாதுகாப்புக்கான அடையாளமாயில்லை. இதன் விளைவாக, சர்வதேச ஒப்பந்தங்கள் சரியான நேரத்தில் செய்யப்பட்டவையாக நிரூபித்திருக்கின்றன—ஒப்பந்தங்கள் மிகப்பலவாகவும் இருக்கின்றன. தி கன்வென்ஷன் ஆன் பயாலஜிகல் டைவர்சிட்டி, ரியோ டிரீட்டி 1993-ன் இறுதியில் அமலுக்கு வந்தது, அதைத் தொடர்ந்து விரைவில், ஐரோப்பாவில் அக்ரீமென்ட் ஆன் தி கன்சர்வேஷன் ஆஃப் பேட்ஸ் என்ற ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பெரிய திமிங்கலங்களையும் மின்கி திமிங்கலங்களையும் பாதுகாக்கும் ஒரு முயற்சியில் இந்தியப் பெருங்கடல் சரணாலயத்தோடு, தென் பெருங்கடல் திமிங்கல சரணாலயத்தை தி இன்டர்நேஷனல் வேலிங் கமிஷன் கூட்டியது. ஆனால் ஒருவேளை மிகவும் வலிமை மிக்க ஒப்பந்தம் கன்வென்ஷன் ஆன் இன்டர்நேஷனல் டிரேட் இன் என்டேஞ்சர்ட் ஸ்பீஷீஸ் ஆக இருக்கலாம்.—பெட்டியைக் காண்க.
ஒரு பிராணிக்கும் மற்றொரு பிராணிக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி ஏராளத்தை, மனிதன் இன்னும் அறிய வேண்டியுள்ளது. “இந்நூற்றாண்டின் மிகப் பெரிய சூழலியல் பேரழிவு” என்று விலங்கியலர் காலன் டஜ் அழைத்த நைல் பெர்ச் என்ற உணவுக்கான மீனை, உணவு இருப்பை அபிவிருத்தி செய்வதற்காகக் கிழக்கு ஆப்பிரிக்க மீனவர்கள் விக்டோரியா ஏரியில் இட்டனர். அந்த ஏரியில் முன்பிருந்தே வாழ்ந்துவந்த 300 மீனினங்களில் சுமார் 200 இனங்கள் அற்றுப்போய்விட்டன. சமீப நிரூபணங்கள் உயிரினங்களின் சமநிலையைக் கெடுப்பதற்குக் காரணமாக மண் அரிப்பைக் குற்றஞ்சாட்டினாலும், ஏற்கெனவே இருந்துவரும் மீனினங்களை அருகிவரச் செய்யாமலேயே எந்த மீனினங்கள் இடப்படலாம் என்பதைக் கண்டறிய ஒரு நிறுவனத்தை அந்த ஏரியை எல்லையாகக் கொண்ட மூன்று நாட்டு அரசாங்கங்கள் நிறுவியுள்ளன.
மனிதத் தலையீடு
வெற்றியை அறிக்கை செய்யும் ஒரு பகுதியானது, அடைபட்ட நிலையில் இனப்பெருக்கத் திட்டத்தைப் பல மிருகக்காட்சிசாலைகள் நடத்துவதாகும். “உலகிலுள்ள எல்லா மிருகக்காட்சிசாலைகளும் உண்மையிலேயே தங்களின் செல்வாக்கையும் மூலங்களையும் பிடிபட்ட நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்குப் பயன்படுத்தினால், மேலும் பொதுமக்கள் மிருகக்காட்சிசாலைகளுக்குத் தங்கள் ஆதரவை அளித்தால், வரவிருக்கும் எதிர்காலத்தில், பிடிபட்ட நிலையில் இனப்பெருக்கம் செய்யவேண்டியது போலத் தோன்றும் எல்லா முள்ளெலும்புள்ள உயிரினங்களையும், அவை அற்றுப்போவதிலிருந்து பாதுகாப்பதில் சேர்ந்து உழைப்பவையாய் இருக்கக்கூடும்.”—லாஸ்ட் அனிமல்ஸ் அட் தி ஜூ.
பிரிட்டனைச் சேர்ந்த மிகச் சிறிய தீவான ஜெர்ஸியில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலை, அடுத்தடுத்து காட்டுப்பகுதிக்குள் விட்டுவிடும் நோக்கில் அரிதான விலங்குகளை இனப்பெருக்கம் செய்கிறது. 1975-ல், செ. லூசியாவைச் சேர்ந்த கிளிகளில் 100 மட்டுமே தங்கள் கரிபியன் வீட்டில் மீந்திருந்தன. இப் பறவைகளில் ஏழு ஜெர்ஸிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1989 வாக்கில் அம் மிருகக்காட்சிசாலை கூடுதலாக 14 கிளிகளை இனப்பெருக்கம் செய்திருந்தது; இவற்றுள் சிலவற்றை செ. லூசியாவுக்குத் திருப்பி அனுப்பியிருந்தது. இப்போது 300-க்கும் மேலானவை அத்தீவை அலங்கரிப்பதாக அறிக்கை செய்யப்படுகிறது.
பிற இடங்களிலும் அதைப்போன்ற திட்டங்கள் வெற்றிகரமானவையாய் நிரூபித்துள்ளன. வட அமெரிக்காவில் மீந்துள்ள 17 சிவப்பு ஓநாய்கள் (red wolves) அடைபட்ட நிலையில் அவ்வளவு நன்றாய் இனப்பெருக்கம் செய்ததால் 60-க்கும் மேலானவை இப்போது காட்டுப்பகுதிக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று நேஷனல் ஜியாக்ரஃபிக் அறிக்கை செய்கிறது.
மிகவும் வெற்றிகரமானவை?
ஆபத்திலிருக்கும் விலங்குகள் அற்றுப்போய்விடவே செய்யும் என்று எப்போதும் அஞ்சத் தேவையில்லை. என்டேஞ்சர்ட் ஸ்பீஷீஸ்—எலிஃபண்ட்ஸ் புத்தகத்தின்படி, 1979-க்கும் 1989-க்கும் இடையே, ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 13,00,000-ல் இருந்து 6,09,000 ஆகக் குறைந்தது—இவற்றுள் சில தந்த வேட்டையின் விளைவால் குறைந்தன. பிறகு தந்த வாணிபத்தைத் தடை செய்யும்படி அரசாங்கங்களின்மீது பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்தது. ஆனாலும், தந்தத்தின் மீதிருந்த தடையுத்தரவுக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பப்பட்டது. ஏன்?
ஜிம்பாப்வியிலும் தென் ஆப்பிரிக்காவிலும், அவற்றின் தேசிய பூங்காக்களும் வனவிலங்கு காப்பகங்களும் மிகப் பல யானைகளை வைத்திருக்கும் அளவுக்கு பாதுகாப்பு செயற்திட்டங்கள் வெற்றிகரமானவையாய் நிரூபித்தன. ஹவாங்கி தேசிய பூங்காவிலிருந்து 5,000 யானைகளை ஜிம்பாப்வி நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று நியூ சயன்டிஸ்ட் அறிக்கை செய்தது. அவற்றை வேறொரு இடத்திற்கு மாற்றும்படி பாதுகாப்புக் கோரும் தொகுதிகள் பலமாக சிபாரிசு செய்தன. பூங்கா அதிகாரிகள் கூடுதலாய் இருந்த யானைகளை விற்பனைக்கு அளித்தனர்; மேலும் கழித்துக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்கத்திய ஏஜென்ஸிகள், “வெறுமனே ஆலோசனை கொடுப்பதற்கு மாறாக யானைகளை வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்குத் தேவைப்படும் பொருளாதார உதவியையும் அளிக்க வேண்டும்” என்பதாக ஆலோசனை கூறின.
கேள்விக்குரிய எதிர்பார்ப்புகள்
இருந்தபோதிலும், தோல்விகள் ஏற்படுகின்றன. காட்டுப்பகுதிக்குள் மீண்டும் விட்டுவிடப்பட்ட உயிரினங்களின் நிலை குறித்து பலர் கவலை தெரிவிக்கின்றனர். சைபீரிய புலி அடைபட்ட நிலையில் நன்றாக வாழ்கிறது, ஆனால் இயற்கைச் சூழலில், சட்டவிரோதமாய் வேட்டையாடுபவர்களின் பயமின்றி திரிய, சுமார் 260 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதற்குத் தேவை. மேலுமாக, “மிருகக்காட்சிசாலையில் வளர்க்கப்பட்ட புலி ஒன்றை இச் சுற்றுச்சூழலில் மீண்டும் கொண்டுபோய் விட்டுவிட்டால், அது கிட்டத்தட்ட பசியால் துன்புறுவது நிச்சயம்” என்று தி இன்டிபென்டென்ட் ஆன் சன்டே குறிப்பிடுகிறது. நிச்சயமாகவே இருண்டதோர் எதிர்பார்ப்பு!
நிஜமாகப் பார்த்தால், ஒவ்வொரு உயிரினத்துக்கும் விசேஷ பாதுகாப்பு அளிக்கும் உதவிக் குழு இல்லை. பிரச்சினையை அதிகரிப்பது மனிதபலம் இல்லாத குறை மட்டுமேயும் அல்ல. பாதுகாப்பியலர் எவ்வளவுதான் ஈடுபாட்டுடன் இருந்தாலும், அதிகார வட்டத்திலிருந்து செய்யப்படும் ஊழல், பேராசை, மற்றும் அசட்டை மனப்பான்மை, அதோடுகூட போர், மரண அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்ப்படுகையில், வெற்றியடைவதற்கான என்ன நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது? ஆகவே, அருகிவரும் உயிரினங்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு இருக்கிறது? மேலும் நீங்கள் எவ்வாறு உட்பட்டிருக்கிறீர்கள்?
[பக்கம் 7-ன் பெட்டி]
ஒரு சர்வதேச ஆயுதம்
அருகிவரும் உயிரினங்களைச் சட்டவிரோதமாய்க் கள்ளக்கடத்தல் செய்வதற்கு எதிரான போராட்டத்தில் தி கன்வென்ஷன் ஆன் இன்டர்நேஷனல் டிரேட் இன் என்டேஞ்சர்ட் ஸ்பீஷீஸ் ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாய் இருக்கிறது. சிறுத்தைத் தோல்கள், யானைத் தந்தம், புலி எலும்புகள், காண்டாமிருகக் கொம்புகள், ஆமைகள் ஆகியவை தற்போது தடை செய்யப்பட்ட வியாபாரப் பொருட்களில் அடங்கியவை. அந்த ஒப்பந்தம் அருகிவரும் மரம் மற்றும் அருகிவரும் மீனினங்களையும் உள்ளடக்கும் வரை செல்கிறது.
என்றபோதிலும், “சட்டங்கள் நன்கு கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று உறுப்பு நாடுகள் உறுதி செய்யாவிட்டால், . . . தாம் பாதுகாக்க முயலும் விலங்குகளை அவை இனிமேலும் காணமுடியாது” என்று டைம் எச்சரித்தது.
[பக்கம் 8-ன் படம்]
பாதுகாப்பு முயற்சிகள் அவ்வளவு வெற்றிகரமானவையாய் இருந்திருக்கின்றனவா?
[படத்திற்கான நன்றி]
Courtesy of Clive Kihn