ஏன் உயிரினங்கள் ஆபத்திலிருக்கின்றன
பல காரணங்களால் உயிரினங்கள் அற்றுப்போகின்றன. மூன்று முக்கிய காரணங்களை எண்ணிப்பாருங்கள். மனிதர்கள் அவற்றுள் இரண்டுக்கு மறைமுகமாகப் பொறுப்புள்ளோராய் இருக்கின்றனர், மற்றொன்றுக்கு நேரடியாகப் பொறுப்புள்ளோராய் இருக்கின்றனர்.
வாழிடத்தின் அழிவு
ஓர் உயிரினம் குறைந்துவருவதற்கு அதன் வாழிடத்தை அழிப்பது மிகவும் அதிகப் பங்கு வகிக்கிறது. இதை, “மிகவும் குறிப்பிடத்தகுந்த அச்சுறுத்தல்” என்றும், அதே சமயத்தில் “தடுப்பதற்கு மிகவும் கடினமானது” என்றும் தி அட்லஸ் ஆஃப் என்டேஞ்சர்ட் ஸ்பீஷீஸ் அழைக்கிறது. உலகின் பெருகிவரும் ஜனத்தொகை அதிகரிப்பு, முன்பு வனவிலங்குகளுக்கு வீடாயிருந்த நிலப்பகுதியை இன்னும் அதிகமதிகமாக ஆக்கிரமிப்பதற்கு மனிதரை வற்புறுத்துகிறது. உலகின் மழைக் காடுகள் இதற்கு தெளிவான ஓர் உதாரணமாகும்.
‘40 ஆண்டுகளுக்குள் மழைக் காடுகளே விட்டுவைக்கப்படாது’ என்பதே எச்சரிப்பூட்டும் மதிப்பீடாய் உள்ளது, அது மதிப்புமிக்க வள ஆதாரங்களை வருந்தத்தக்க வகையில் இழப்பதாகப் பலர் கருதும் விஷயத்தின்மீது கவனம் செலுத்துகிறது. உண்மையில், கிட்டத்தட்ட மேலை உலகில் அறியப்பட்டிருக்கும் எல்லாவித மருந்துகளிலும் கால் பகுதி வெப்பமண்டல மழைக் காட்டில் வளரும் தாவரங்களிலிருந்து வந்திருக்கின்றன. இக் கிரகத்தின் 7 சதவீத நிலப்பரப்பில் மட்டுமே மழைக் காடுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டபோதிலும், இவ்வுலகின் நிலத்தில் வளரும் தாவரங்களில் ஐந்தில் நான்கு பங்குக்கு அவை வீடாயுள்ளன.
மரத்தை வெட்டுவதும் மாறும் விவசாய முறைகளும் மேற்கு ஆப்பிரிக்க மழைக் காடுகள் அவற்றின் மரங்கள் நிறைந்த வளமிக்க சொத்தை இழக்கச் செய்கின்றன. இந்திய துணைக் கண்டத்தில் காடுகளை இழப்பது, சில பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைக் குறைக்கும் அதே சமயத்தில் பிற இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காலநிலையையும் மாற்றியுள்ளது.
மனிதன் வேளாண்மைக்கென்று மரங்களை வெட்டி அகற்றும்போது, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, மற்றும் பூச்சிகள் படிப்படியாக மறைகின்றன. ஓராண்டில் 1 சதவிகிதம் காடுகள் இழக்கப்படுகின்றன என்று ஹார்வர்ட் பேராசிரியரான எட்வர்ட் வில்ஸன் மதிப்பிடுகிறார்; இது ஆயிரக்கணக்கான உயிரினங்களைப் படிப்படியாக அற்றுப்போகும்படி செய்கிறது. பல உயிரினங்கள் அவை ஓர் அறிவியல் பெயரைப் பெறுவதற்கும் முன்னதாகவே மறையும் என்று அஞ்சப்படுகிறது.
மற்றொரு அச்சுறுத்தப்பட்ட வாழிடமான உலகின் ஈரநிலப்பகுதிகளிலும் சூழ்நிலை அதேபோன்று உள்ளது. வீடுகளைக் கட்டக்கூடும்படியோ, விவசாயிகள் அவற்றை விளைநிலமாக மாற்றிப் பயிர்செய்யும்படியோ, விரிவாக்கப் பணியாளர்கள் இப்பகுதிகளை வடியச் செய்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளில், ஐரோப்பாவின் கிட்டத்தட்ட 90 சதவிகித உலர் புல்வெளி நிலம் வேளாண்மைக்கென்று எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக, பிரிட்டனில் புல்வெளி இழப்பு, இன்னிசைப் பறவைகளின் எண்ணிக்கையில் 64 சதவிகிதத்தைக் குறையச் செய்துள்ளது.
மடகாஸ்கர் தீவை “நில இயல் சார்ந்த நோவாவின் பேழை” என்று டைம் பத்திரிகை அழைத்தாலும், அதன் ஏராளமான வனவிலங்குகளின் பல்வேறு வகை ஆபத்தில் இருக்கிறது. ஜனத்தொகை அதிகரிக்கையிலும் சர்வதேச கடன் அதிகரிக்கையிலும், காடுகளை நெல்விளைவிக்கும் வயல்நிலங்களாக மாற்றுவதற்கு அத்தீவின் மக்கள்மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. கோல்டன் பேம்பூ லீமரின் வாழிடத்தில் முக்கால் பங்கு கடந்த 20 ஆண்டுகளில் மறைந்துவிட்டதால், இவ் விலங்குகளில் 400 மட்டுமே மீந்துள்ளன.
மனிதன் நிலத்தைப் பயன்படுத்தும் விதத்தைத் தீவிரமாய் மாற்றுவது, நிச்சயமாகவே நிலப்பகுதியில் வாழும் வனவிலங்குகளை அடியரிக்கிறது. மற்றொரு உதாரணமாக, 1,600 ஆண்டுகளுக்கும் முன்பு ஹவாய்க்கு வந்துசேர்ந்த பாலினீஷியர்களை எண்ணிப்பாருங்கள். அவர்களுடைய செயலின் விளைவால், 35 பறவையினங்கள் அற்றுப்போயின.
ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஜீலாந்துக்கு வந்து ஆரம்பத்தில் குடியேறினவர்கள் வீட்டுப்பூனைகளை இறக்குமதி செய்தனர், அவற்றுள் சில காட்டுப்பூனைகளாயின. இப்பொழுது இக் காட்டுப்பூனைகள் ஆஸ்திரேலிய பாலூட்டிகளாய் இருந்துவந்த 64 உயிரினங்களைக் கொன்று தின்னுகின்றன என்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. அவை, இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய சிவப்பு நரிகளுடன் (red foxes) சேர்ந்து, அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையில் மீந்திருப்பவற்றைத் தாக்குகின்றன.
நேரடி தாக்குதல்
வேட்டையாடுதல் ஒன்றும் புதிய காரியமல்ல. கலகக்காரன் நிம்ரோதைப் பற்றி ஆதியாகமத்தில் உள்ள பைபிள் பதிவு விளக்குகிறது; அவன் 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு வேடன். அவன் ஓர் உயிரினம் முழுவதையும் அழித்ததாகக் குறிப்பிடப்படாதபோதிலும், வேட்டையாடுவதில் வெல்ல முடியாத ஒரு மாதிரியாய் இருந்தான்.—ஆதியாகமம் 10:9.
நூற்றாண்டுகளினூடே கிரீஸ் மற்றும் மெசபட்டேமியாவிலிருந்த சிங்கங்களையும், நியூபியாவிலிருந்த நீர்யானைகளையும், வட ஆப்பிரிக்காவிலிருந்த யானைகளையும், பிரிட்டனிலிருந்த கரடிகள் மற்றும் பீவர்களையும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்த காட்டெருதுகளையும் வேடர்கள் முற்றிலும் கொன்றுவிட்டனர். “1870 மற்றும் 1880-களின்போது, கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் பத்து லட்ச யானைகளில் கால் பங்கை வேடர்கள் கொன்றனர்; அரை நூற்றாண்டாக, புகழ்பெற்ற, செல்வமிக்க, மற்றும் உயர்பதவியிலுள்ள மக்களாக இருந்தவர்கள், யானைகள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், வேட்டைச் சிறுத்தைகள் ஆகியவற்றை, மற்றும் எதையெல்லாம் குறிவைத்தனரோ, அதையெல்லாம் நோக்கி சுட்ட துப்பாக்கியின் சத்தத்தால் ஆப்பிரிக்கா நிறைந்திருந்தது. . . . இன்று மிகவும் அதிர்ச்சியூட்டுவதாய்த் தெரிவது, அன்று முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படத் தகுந்ததாய் இருந்தது” என்று BBC இனக்குறிப்புப் பட்டி பத்திரிகையான ரேடியோ டைம்ஸ் அறிக்கையிடுகிறது.
கம்பீரமான புலியின் சூழ்நிலையை மீண்டும் எண்ணிப்பாருங்கள். பாதுகாப்பு முயற்சிகள் வெற்றியில் விளைவடைந்திருந்ததை 1980-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் குறிப்பிட்டுக் காட்டின. “இருந்தபோதிலும், காரியங்கள், அவை தோன்றியது போல் இருக்கவில்லை; சட்டவிரோதமாய்த் திருடுபவர்களைக் கண்டும்காணாததுபோல் இருந்த, அல்லது வெறுமனே தங்கள் மேலதிகாரிகளைக் கவருவதில் ஆவல் கொண்டிருந்த அதிகாரிகளால் முன்பெடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் இருந்ததைவிட கூடுதலாக சொல்லப்பட்டிருந்தன என்பதை மிகவும் கவனமான கணக்கீடுகள் காட்டின. . . . இருப்பு குறைந்துகொண்டே வந்ததால் விலைகள் எப்போதும் இருந்ததைவிட அதிகரிக்கவே, புலியின் உடல் உறுப்புகளை இரகசியமாய் வணிகம் செய்யும் தொழில் செழித்தோங்கியது,” என்று 1995 பிரிட்டானிக்கா புக் ஆஃப் தி இயர் குறிப்பிடுகிறது. இவ்விதமாக, 1995-ல், சைபீரிய புலியின் மதிப்பு 9,400 டாலரிலிருந்து 24,000 டாலராக—அதன் மதிப்புமிக்க தோலுக்காக மட்டுமல்லாமல், பாரம்பரிய கிழக்கத்திய மருந்து தயாரிப்பதில் மதிப்புமிக்கவையாய் இருந்த அதன் எலும்புகள், கண்கள், மீசைகள், பற்கள், உள்ளுறுப்புகள், மற்றும் பாலின உறுப்புகள், அனைத்துக்காகவும்—மதிப்பிடப்பட்டது.
போதைமருந்து கடத்தல் வியாபாரத்திற்கு அடுத்தபடியாக, யானைத் தந்தம், காண்டாமிருகக் கொம்பு, புலித்தோல், மற்றும் பிற விலங்குகளின் உறுப்புகள் ஆகியவற்றின் வாணிகம் இப்போது பல கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள கள்ளச்சந்தை வியாபாரமாய் உள்ளது என்பதாக டைம் குறிப்பிடுகிறது. அது பெரிய பாலூட்டிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. 1994-ல், பாரம்பரிய சீன மருந்து மலைக்கவைக்கும் இரண்டு கோடி கடல் குதிரைகளை நுகரவைத்ததானது, தென்கிழக்கு ஆசியாவின் சில இடங்களில் இரு ஆண்டுகளில் அதைப் பிடிப்பதில் அறிக்கை செய்யப்பட்ட 60 சதவிகிதக் குறைவு ஏற்பட்டதற்குக் காரணமாயிருந்தது.
ஓர் உயிரினம் அற்றுப்போகுமளவிற்கு வேட்டையாடப்படுகையில் யார் குற்றஞ்சாட்டப்படுவது என்பதைக் கண்டுகொள்வது கடினமாயில்லை. பிறகு, பணம் சேகரிக்கும் அதிகாரிகளைப் பற்றியென்ன? அருகிப்போன கோல்டன் கொன்யூர் (golden conure) எனப்படும் ஒரு கிளிவகைக்காக (மக்கா), பிரேஸிலைச் சேர்ந்த ஒரு கள்ளச்சந்தை வியாபாரி, 500 டாலர் தொகையை விலையாகக் கொடுக்கவேண்டியுள்ளதாய் அறிக்கை செய்யப்பட்டது. ஆனால் வெளிநாட்டில் அதை அவர் விற்கையில், அத்தொகையைவிட மூன்றரை மடங்கு அதிகத்தை லாபமாகப் பெறுகிறார்.
போர்களும் அவற்றின் விளைவுகளும், அகதிகள் கூட்டத்தின் அதிகரிப்பும், அதோடு பிறப்புவீதத்தின் அதிகரிப்பும், அதிகமான தூய்மைக்கேடும், சுற்றுலாத்துறையும்கூட, அருகிவரும் உயிரினங்களை அச்சுறுத்துகின்றன. இயந்திரப்படகுகளில் டால்ஃபின்களைக் காண்பதற்காக வரும் இயற்கைக் காட்சிகளைக் காணவிழைவோர் அவற்றிற்குக் கேடு விளைவிக்கின்றனர்; படகுகளினால் நீருக்கடியில் ஏற்படும் ஓசை டால்ஃபின்களின் மென்மையான இருப்பு-எதிரொலி அமைப்பில் குறுக்கிடலாம்.
மனிதனால் விளைவிக்கப்படும் சேதத்தின் இக் கவலைக்கிடமான பட்டியலுக்குப் பிறகு, ‘அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்பு வல்லுநர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர், அவை எந்தளவுக்கு வெற்றிகரமானவை?’ என்று நீங்கள் கேட்கலாம்.
[பக்கம் 6-ன் படம்]
மனிதன் மரங்களை வெட்டிவீழ்த்துவதால், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, மற்றும் பூச்சிகள் மறைந்துகொண்டே வருகின்றன