பைபிளின் கருத்து
இறந்தவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?
இறந்தவர்களைப் பற்றிய பேச்சை எடுங்கள், உடனே அநேகர் மேலுமாக அதைப் பற்றி எதையும் பேசுவதையே தவிர்க்கின்றனர். என்றாலும், சிலருக்கு அந்தப் பொருள் வெறுமனே விரும்பத்தகாததாக மட்டும் இருப்பதில்லை; அவர்கள் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இறந்தவர்களுக்கு பயப்படுதலுடன் சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் உலகம் முழுவதிலுமுள்ள கலாச்சாரங்களில் காண்பது அசாதாரணமானதல்ல. உதாரணமாக, ஆப்பிரிக்காவில் சஹாராவின் தெற்கு பகுதியிலுள்ள சில பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.
மேற்கு ஆப்பிரிக்க நகரிலுள்ள ஒரு பெண், அவளது குடும்ப அங்கத்தினர் ஒருவர் இறந்தபின் என்ன நடந்தது என்பதைத் தெளிவாக நினைவுகூருகிறாள். அவள் சொல்வதாவது: “உறவினராயிருக்கிற ஒரு பெண், அந்த இறந்தவருக்காகத் தவறாமல் ஒரு தட்டு உணவைத் தயாரித்து அதை அவரது படுக்கையறையில் கவனமாக வைப்பாள். அவள் அங்கு இல்லாதபோது, நான் போய் அந்த உணவைச் சாப்பிடுவேன். அந்த உறவினர் திரும்பி வந்தபோது, அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்! அந்த நல்ல பொருட்களை எல்லாம் அந்த இறந்தவர் பெற்றுவிட்டதாக அவள் நம்பினாள். இது கொஞ்ச காலத்திற்கு, நான் நோய்வாய்ப்பட்ட ஒரு நிலை வரும்வரையாக, இவ்வாறு சென்றது. நான் பசி உணர்வை இழந்தேன், என்னால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை. இது என்னில் பீதியைக் கிளப்பியது! இறந்த எங்கள் உறவினரால் என்னுடைய நோய் ஏற்படுத்தப்பட்டதாக என் உறவினர்கள் பலர் முடிவு செய்தனர். குடும்பத்தில் யாராவது ஒருவரிடம் அவர் கோபமாக இருப்பார் என்று அவர்கள் நினைத்தனர்.”
அதே நகரில், ஒரு குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்து, அதில் ஒன்று இறந்துவிட்டால், இறந்த குழந்தையைப் பற்றி அந்த வீட்டில் ஒருவரும் பேச மாட்டார்கள். இறந்துபோன அந்த இரட்டையரில் ஒரு குழந்தையைப் பற்றி யாராவது கேட்டால், அந்தக் குடும்பத்தினர் இவ்வாறு பதிலளிப்பது வழக்கம்: “அவன், அல்லது அவள், உப்பு வாங்கப் போயிருக்கிறான்[ள்].” உண்மை சொல்லப்பட்டால், இரட்டையரில் பிழைத்திருக்கிற குழந்தையின் உயிரும் பறிபோய்விடும் என்று அவர்கள் பலமாக நம்புகின்றனர்.
அடுத்ததாக இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்: மூன்று மனைவிகளைக் கொண்டிருந்த ஒருவன் இறந்துவிட்டான். சவ அடக்கத்திற்கு அடுத்த நாள், விசேஷித்த வெள்ளை ஆடைகள் அந்த மனைவிகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், மரத்தாலும் கூரைப்புல்லாலும் செய்யப்பட்ட ஒரு விசேஷ குளியலறையும் வீட்டினருகே கட்டப்படுகிறது; அதில் இந்தப் பெண்கள் குளித்து தங்கள் வெள்ளை உடையை அணிந்து கொள்வார்கள். அவர்களும் அவர்களுக்கு உதவும்படி நியமிக்கப்பட்ட ஒரு பெண்ணும் தவிர வேறு யாரும் அந்த இடத்திற்குள் நுழையக்கூடாது. இந்த விசேஷ குளியலறையிலிருந்து வெளியே வரும்போது அந்தப் பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருக்கும். கயிற்றாலான அட்டிகையாகிய ஒரு ஸிபியையும் (sebe) அந்தப் பெண்கள் ‘பாதுகாப்பிற்காக’ அணிந்துகொள்கிறார்கள். இந்தச் சடங்காச்சாரமான குளியல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திங்கள்கிழமையும் 100 நாட்களுக்குச் செய்யப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் அவர்கள் ஓர் ஆணிடமிருந்து நேரடியாக எதையும் வாங்க முடியாது. ஓர் ஆண் அவர்களிடம் எதையாவது கொடுக்க வேண்டுமானால், முதலில் அவன் அதைத் தரையிலோ அல்லது ஒரு மேசையிலோ வைக்க வேண்டும். பின்னர் அந்தப் பெண் அதை எடுத்துக்கொள்வாள். இந்தப் பெண்களின் படுக்கையில் உட்காரவோ அல்லது தூங்கவோ எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வீட்டை விட்டுச்செல்லும்போதெல்லாம், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விசேஷித்த கம்பைக் கொண்டு செல்ல வேண்டும். இந்தக் கம்பைக் கொண்டிருப்பது, இறந்துபோன கணவன் அவர்களைத் தாக்குவதைத் தடுப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மேற்சொல்லப்பட்ட அறிவுரைகள் பின்பற்றப்படாவிட்டால், இறந்துபோன கணவன் கோபப்பட்டு அவர்களுக்குக் கெடுதல் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
உலகின் அந்தப் பகுதியில் இப்படிப்பட்ட அனுபவங்கள் சாதாரணமானவை. என்றபோதிலும், இந்த வகையான பழக்கவழக்கங்கள் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமே உரியவை அல்ல.
இறந்தவர்களுக்கான பயம் பரவலானது
இறந்துபோன தங்கள் முன்னோர்களை, அநேக மக்கள் எவ்வாறு நோக்குகின்றனர் என்பதைப் பற்றி என்கார்ட்டா என்ற ஒரு கலைக்களஞ்சியம் பின்வருபவற்றைக் குறிப்பிடுகிறது: “இறந்துபோன உறவினர்கள் . . . வல்லமை வாய்ந்த ஆவி ஆட்களாக அல்லது, குறைந்தளவு சந்தர்ப்பங்களில், தெய்வங்களின் நிலையை அடைந்திருப்பதாக நம்பப்படுகின்றனர். [இந்தக் கருத்து], முன்னோர்கள் தங்கள் உயிர் வாழும் உறவினர்களின் காரியங்களில் இன்னும் அக்கறை உள்ளவர்களாய், சமுதாயத்தில் செயல்படும் அங்கத்தினர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது. இது மேற்கு ஆப்பிரிக்க சமுதாயங்களில் (பான்டூ மற்றும் ஷோனா), பாலினீஷியா மற்றும் மேலனீஷியாவில் (டோபூ மற்றும் மானஸ்), இண்டோ-யுரப்பிய மக்கள் பலருக்குள் (பண்டைய ஸ்கான்டிநேவியர் மற்றும் ஜெர்மானியர்கள்), குறிப்பாக சீனா மற்றும் ஜப்பானிலும் விரிவான அளவில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, முன்னோர்கள், நிகழும் காரியங்கள்மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு அல்லது உயிர்வாழும் தங்கள் உறவினர்களின் நலனைக் கட்டுப்படுத்துவதற்கு விசேஷ வல்லமைகளைக் கொண்டிருந்து பேரதிகாரம் செலுத்துவதாக நம்பப்படுகின்றனர். குடும்பத்தைப் பாதுகாப்பது அவர்களுடைய பிரதான அக்கறைகளில் ஒன்றாகும். அவர்கள் மிக உன்னத கடவுள், அல்லது கடவுட்களுக்கும் மக்களுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தர்களாகக் கருதப்படுகின்றனர்; மேலும் உயிர்வாழ்கிறவர்களிடம் கனவுகள் மூலமாகவும் அவர்களை ஆட்கொள்வதன் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். அவர்களிடமாக அச்சமும் பயபக்தியும் கலந்ததோர் மனப்பான்மை இருக்கிறது. அசட்டை செய்யப்பட்டால், முன்னோர்கள் நோயையும் மற்ற கவலைக்குரிய நிகழ்வுகளையும் ஏற்படுத்தக்கூடும். சினந்தணிவித்தல், மன்றாடுதல், ஜெபம் செய்தல், பலி ஆகியவை உயிர்வாழ்கிறவர்கள் தங்கள் முன்னோர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பல்வேறு வழிகளாகும்.”
உண்மையில், இறந்தவர்களுக்கான பயத்தின் காரணமாகவே ஒரு குடும்பத்தின் வருமானம் உறிஞ்சிக்கொள்ளப்படலாம். பெரும்பாலும், உணவையும் பானத்தையும், பலிக்காக உயிருள்ள மிருகங்களையும், விலையுயர்ந்த பாணியிலான உடையையும் தேவைப்படுத்தும் விரிவான சடங்குகள், இறந்தவர்களுக்குப் பயப்பட வேண்டும் என்று பலமாக நம்புகிறவர்களால் கேட்கப்படுகின்றன.
ஆனால் இறந்த உறவினர்கள் அல்லது முன்னோர்கள் நிஜமாகவே பயத்தையும் பயபக்தியையும் கேட்கிற ஒரு நிலையில் இருக்கிறார்களா? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் என்ன சொல்லுகிறது?
இறந்தவர்கள் உங்களுக்குத் தீங்கு செய்ய முடியுமா?
அப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருப்பதை பைபிள் ஏற்றுக்கொள்கிறது என்றறிவதில் நீங்கள் அக்கறை உள்ளவர்களாய் இருக்கக்கூடும். உபாகமம் புத்தகத்தில், இறந்தவர்களுக்குப் பயப்படுதலுடன் சம்பந்தப்பட்ட பழக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அது சொல்கிறது: ‘மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.’—உபாகமம் 18:11, 12.
அப்படிப்பட்ட சடங்குகளை யெகோவா தேவன் கண்டனம் செய்தார் என்பதைக் கவனியுங்கள். ஏன்? ஏனென்றால் அவை ஒரு பொய்யை அடிப்படையாகக் கொண்டவை. இறந்தவர்களைப் பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க பொய், ஆத்துமா தொடர்ந்து வாழ்கிறது என்பதாகும். உதாரணமாக, நேரான பாதை (ஆங்கிலம்) என்ற பத்திரிகை, இறந்தவர்களுக்கு என்ன ஆகிறது என்பதைக் குறித்து இதைச் சொன்னது: “மரணம் என்பது ஆத்துமாவின் மறைவே அல்லாமல் வேறொன்றும் அல்ல. . . . கல்லறை என்பது உடலுக்குரிய ஒரு தேக்கம் மட்டுமேயன்றி, ஆத்துமாவுக்குரியதல்ல.”
பைபிள் இதை ஒத்துக்கொள்வதில்லை. எசேக்கியேல் 18:4-ஐ நீங்களே வாசித்துப் பாருங்கள்: “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” மேலும், இறந்தவர்களின் நிலை, கடவுளுடைய வார்த்தையில் பிரசங்கி 9:5-ல் தெளிவாகச் சொல்லப்பட்டது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” இறந்தவர்களுக்காக வைக்கப்பட்ட உணவு, உயிருடனிருக்கும் யாராவது ஒருவரால் சாப்பிடப்பட்டாலொழிய அது உட்கொள்ளப்படாமல் இருப்பது ஏன் என்பதை இது விளக்குகிறது.
என்றபோதிலும், கல்லறையில் இருக்கிறவர்களுக்கு எந்த நம்பிக்கையுமின்றி பைபிள் நம்மை விட்டுவிடுவதில்லை. அவர்கள் மீண்டும் உயிர்வாழ முடியும்! பைபிள் ஓர் ‘உயிர்த்தெழுதல்’ பற்றி பேசுகிறது. (யோவான் 5:28, 29; 11:25; அப்போஸ்தலர் 24:15) இது கடவுள் வைத்திருக்கும் குறித்த நேரத்தில் நடைபெறும். இதற்கிடையில், இறந்தவர்கள் ‘எழும்புவதற்காக’ கடவுளின் குறித்த நேரம் வரும்வரையில் அவர்கள் கல்லறையில் உணர்வின்றி, ‘தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.’—யோவான் 11:11-14; சங்கீதம் 13:3.
பொதுவாக மக்கள், அறியாததைக் குறித்துப் பயப்படுகிறார்கள். திருத்தமான அறிவானது, ஆதாரமற்ற மூடநம்பிக்கைகளிலிருந்து ஒருவரை விடுவிக்கிறது. கல்லறையில் இருப்பவர்களின் நிலையைப் பற்றிய உண்மையை பைபிள் நமக்கு அளிக்கிறது. சுருங்கச்சொன்னால், நீங்கள் இறந்தவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை!—யோவான் 8:32.