உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 10/15 பக். 4-7
  • மரித்தோரின் நிலை என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரித்தோரின் நிலை என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனிதவர்க்கத்துக்கு மரணம் உத்தேசிக்கப்படவில்லை
  • என்ன வாக்குறுதி?
  • ஆவி மண்டலத்திலிருந்து செய்திகள்
  • யெகோவா, சத்தியமும் அன்புமுள்ள ஒரு கடவுள்
  • இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது?
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • மரணத்திற்குப் பின் வாழ்க்கை—எவ்வாறு, எங்கே, எப்போது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • அழியாத ஆவி ஒன்றுண்டா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • இறந்தவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்களா?
    கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 10/15 பக். 4-7

மரித்தோரின் நிலை என்ன?

மரணத்துக்குப் பின் தொடர்ந்து வாழும் ஆத்துமாவை அல்லது ஆவியை இறந்தவர் உடையவராக இருக்கிறார் என்ற ஊகமே மரித்தோரைப் பற்றிய பயத்துக்கு அடிப்படையாகும். இந்தக் கருத்து தவறு என்பதாக பைபிள் தெளிவாக கற்பிக்கிறதென்றால், மரித்தோர் உங்களுக்குத் தீங்குசெய்ய முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. அப்படியென்றால் பைபிள் என்ன சொல்கிறது?

மரித்தோரின் நிலைமையைப் பற்றி கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்லுகிறது: “உயிரோடிக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.”—பிரசங்கி 9:5, 6.

அதை முன்னிட்டுப் பார்க்கையில், மரித்தோர் உங்களுக்கு உதவிசெய்யவோ அல்லது தீங்குசெய்யவோ முடியுமா? இல்லை என்பதாக வேதாகமம் சொல்கிறது. மரித்தோர் உணர்வற்றவர்களாகவும் மெளனமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உயிரோடிருப்பவர்களோடு தொடர்புகொள்ளவோ எந்த உணர்ச்சியையும்—அன்பை அல்லது வெறுப்பை—வெளிப்படுத்தவோ எந்த ஒரு செயலையும் நடப்பிக்கவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை.

‘ஆம், உண்மைதான், சரீரத்தினுடைய மரணத்தைப் பற்றி நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அது உண்மையாக இருக்கலாம்,’ என்பதாக சிலர் சொல்லக்கூடும். ‘ஆனால் சரீர மரணம் வாழ்க்கையின் முடிவாக இல்லை; அது வெறுமென ஆவியை உடலிலிருந்து விடுவித்துவிடுகிறது. அந்த ஆவி உயிரோடிருப்பவர்களுக்கு உதவிசெய்ய அல்லது தீங்குசெய்ய முடியும்.’ உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் இவ்விதமாக நினைக்கின்றனர்.

உதாரணமாக, மடகாஸ்கரில் வாழ்க்கை வெறும் இடைநிலை மாற்றமாகவே கருதப்படுவதன் காரணமாக, ஒரு பிணத்தைப் புதைப்பதும் அதை வெளியிலெடுப்பதும் ஒரு திருமணத்தைக் காட்டிலும் அதிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு நபர் அவருடைய மூதாதையரிடமிருந்து வந்தார், மரணத்தின் போது அவர்களிடம் திரும்பிச் செல்கிறார் என்பதாக நம்பப்படுகிறது. ஆகவே காலப்போக்கில் சிதைந்துவிடும் தன்மையுள்ள மரக்கட்டையாலும் உலர்ந்த செங்கலாலும் உயிரோடிருப்பவர்களுக்கு வீடுகள் கட்டப்படுகையில், மரித்தோரின் கல்லறையான “வீடுகள்” பொதுவாக அதிக விஸ்தாரமாகவும் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றன. பிணம் தோண்டியெடுக்கப்படும் சமயத்தில், குடும்பத்தினரும் நண்பர்களும் தாங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நினைக்கின்றனர், பெண்கள் மரித்த உறவினரின் எலும்புகளைத் தொடுவார்களேயானால் அவர்கள் குழந்தைப் பேற்றை அடைவார்களெனவும் நம்புகிறார்கள். ஆனால், மறுபடியுமாக கடவுளுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது?

மனிதவர்க்கத்துக்கு மரணம் உத்தேசிக்கப்படவில்லை

யெகோவா தேவன் மனிதனை வாழ்வதற்காகவே படைத்தார் என்பதையும் கீழ்ப்படியாமையின் விளைவே மரணம் என்பதாக அவர் பேசியிருப்பதையும் கவனிப்பது அக்கறையூட்டுவதாக உள்ளது. (ஆதியாகமம் 2:17) வருந்தத்தக்கவிதமாக, முதல் மனுஷனும் மனுஷியும் பாவம் செய்தார்கள், இதன் விளைவாக பாவம் எல்லா மனிதவர்க்கத்துக்கும் சாவுக்கேதுவான ஒரு சுதந்தரமாக பரவியது. (ரோமர் 5:12) ஆகவே, முதல் மனித ஜோடி கீழ்ப்படியாமற்போனது முதற்கொண்டு மரணம் வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் உண்மையாக, ஆம் துயர்தரும் ஓர் உண்மையாக இருந்து வருகிறது என்பதாக நீங்கள் சொல்லலாம். நாம் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டோம், இதன் காரணமாகவே, மரணத்தை ஒரு முடிவாக ஏற்றுக்கொள்வது எண்ணற்ற லட்சக்கணக்கானோருக்கு ஏன் இத்தனைக் கடினமாக இருக்கிறது என்பது ஓரளவு விளங்குகிறது.

பைபிள் பதிவின்படி, கீழ்ப்படியாமை மரணத்தைக் கொண்டுவரும் என்ற கடவுளுடைய எச்சரிப்பை மறுத்துபேசுவதன் மூலம் சாத்தான் மரணத்தைக்குறித்து முதல் மனித ஜோடியை ஏமாற்ற முயற்சிசெய்தான். (ஆதியாகமம் 3:4) ஆனால் கடவுள் சொன்னவிதமாகவே மனிதர்கள் மரிக்கிறார்கள் என்பது காலப்போக்கில் வெகு தெளிவாக ஆனது. இதன் காரணமாக, சாத்தான் நூற்றாண்டுகளினூடாக வேறு ஒரு பொய்யை அறிமுகப்படுத்தினான்: அது சரீரத்தின் மரணத்துக்குப்பின் மனிதனின் பாகமாயிருக்கும் ஏதோ ஓர் ஆவி தொடர்ந்து வாழ்கிறது என்பதாகும். இயேசு “பொய்க்குப் பிதா” என்றழைத்த பிசாசாகிய சாத்தானுக்கு இப்படிப்பட்ட மோசடி பொருந்துகிறது. (யோவான் 8:44) மறுபட்சத்தில் மரணத்துக்கு கடவுளுடைய பரிகாரம் ஒரு நம்பிக்கையூட்டும் வாக்குறுதியாக இருக்கிறது.

என்ன வாக்குறுதி?

அநேகர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதே இந்த வாக்குறுதியாக இருக்கிறது. “உயிர்த்தெழுதல்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதற்குரிய கிரேக்கச் சொல் அனாஸ்டாஸிஸ் என்பதாகும். சொல்லின் நேர்பொருளின்படி “மறுபடியுமாக எழுந்து நிற்பதை” அது அர்த்தப்படுத்துகிறது. ஆம், மனிதன் மரணத்தில் படுத்துவிடுகிறான், ஆனால் கடவுள் அவருடைய வல்லமையைக் கொண்டு ஒரு நபரை மறுபடியுமாக எழுந்திருக்கச் செய்ய முடியும். மனிதன் உயிரை இழந்துவிடுகிறான், ஆனால் மறுபடியுமாக கடவுளால் அதை அவனுக்குத் தரமுடியும். கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து, “பிரேதக்குழிகளிலுள்ள [ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள, NW] அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்,” என்பதாகச் சொன்னார். (யோவான் 5:28, 29) அப்போஸ்தலன் பவுல், ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . தேவனிடத்தில் நம்பிக்கைக்கொண்டிருக்கிறேன்,’ என்பதாக வெளிப்படுத்தினார். (அப்போஸ்தலர் 24:15) கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் வாழ்ந்த யோபு என்ற கடவுளுடைய உண்மையுள்ள ஊழியனும்கூட ஓர் உயிர்த்தெழுதலில் தன்னுடைய நம்பிக்கையை அறிவித்தார்: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்.”—யோபு 14:14, 15.

உயிர்த்தெழுதலைப் பற்றிய தெளிவான வாக்குறுதி மரித்தோர் ஆவி உருவில் உயிரோடிருக்கிறார்கள் என்ற கருத்தை தவறானது என்று நிரூபிக்கவில்லையா? மரித்தோர் பரலோகத்தில் அல்லது ஏதோ ஓர் ஆவி உலகத்தில் உயிரோடிருந்து வாழ்வதை அனுபவித்துக்கொண்டிருப்பார்களேயானால், உயிர்த்தெழுதலின் நோக்கம் என்ன? அவர்கள் ஏற்கெனவே தங்களுடைய வெகுமதியை அல்லது முடிவைப் பெற்றுவிட்டிருப்பார்கள் அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் படிக்கையில், ஒரு புதிய உலகில்—ஒரு பரதீஸில்—நம்முடைய அன்புள்ள தந்தை, யெகோவா வாக்களித்திருக்கும் ஓர் உயிர்த்தெழுதலின் மூலமாக அந்தப் பெரிய விழிப்பூட்டப்படும் சமயம் வரும் வரையாக மரித்தோர் உண்மையில் மரித்தவர்களாக, உணர்வற்றவர்களாக, நித்திரைப் பண்ணுகிறவர்களாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது. ஆனால் மரணம் என்பது சரீரமும் ஆவியும் பிரிந்து போவதை அர்த்தப்படுத்தவில்லையென்றால், ஆவி தொடர்ந்து வாழ்ந்துக்கொண்டில்லையென்றால், ஆவி உலகத்திலிருந்து வருவதாகத் தோன்றும் செய்திகளைப் பற்றியதென்ன?

ஆவி மண்டலத்திலிருந்து செய்திகள்

ஆவி மண்டலத்திலிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படும் செய்திகள் எண்ணற்றவையாக இருந்திருக்கின்றன. உண்மையில் அவற்றின் ஊற்றுமூலம் என்ன? பைபிள், “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே,” என்று நம்மை எச்சரிக்கிறது. (2 கொரிந்தியர் 11:14, 15) ஆம், அதிக சுலபமாக மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்துவதற்கு, பேய்கள் (கலகக்கார தூதர்கள்) சில சமயங்களில் உதவியாக இருப்பது போல பாசாங்குசெய்து உயிரோடிருப்பவர்களோடு தொடர்புகொண்டு வந்திருக்கின்றன.

அப்போஸ்தலன் பவுல், இந்த மோசடி நடவடிக்கையைக் குறித்து கூடுதலாக எச்சரிக்கிறார்: “சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1) ஆகவே மரித்தோரிடமிருந்து வருவதாகச் சொல்லப்படும் எந்த ஒரு பதிலும், “நீதியின் ஊழியக்காரருடைய” வேஷத்தைத் தரித்துக்கொண்டு, மதசம்பந்தமான ஒரு பொய்யை முன்னேற்றுவித்து, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திலிருந்து மக்களை விலகிப்போகச் செய்து மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாக்கும் பேய்களிடமிருந்தே வருவதாக இருக்கவேண்டும்.

மரித்தோரால் ஒன்றும் சொல்லமுடியாது, ஒன்றும் செய்ய முடியாது அல்லது எதையும் உணரமுடியாது என்பதை உறுதிசெய்வதாய் சங்கீதம் 146:3, 4 சொல்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” “பிரியும்” அந்த ஆவி என்ன? அது சுவாசிப்பதால் காத்துக்கொள்ளப்படும் ஒரு நபரின் உயிர் சக்தியே ஆகும். ஆகவே, இறந்த அந்த நபர் சுவாசிப்பதை நிறுத்தினபோது, அவருடைய உணர்வுகள் இனிமேலும் வேலைசெய்வதில்லை. அவர் முற்றிலும் உணர்வற்ற ஒரு நிலைக்குள் பிரவேசிக்கிறார். ஆகவே அவர் உயிரோடிருப்பவர்களைக் கட்டுப்படுத்துவது கூடாத காரியமாகும்.

அதன் காரணமாகவே பைபிள் மனிதனின் மரணத்தை ஒரு மிருகத்தின் மரணத்தோடு ஒப்பிட்டு, இருவருமே மரணத்தின்போது உணர்வற்ற நிலையை அடைவதாகவும் எடுக்கப்பட்ட இடமாகிய மண்ணுக்கேத் திரும்புவதாகவும் குறிப்பிடுகிறது. பிரசங்கி 3:19, 20 சொல்கிறது: “மனுபுத்திரனுக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.”

மக்கள் மரித்தோரோடு தொடர்புகொள்ள முடியும், அவர்களால் பாதிக்கப்பட முடியும் என்பதாக நினைக்கும்படிக்கு அவர்களை வஞ்சிக்க பேய்கள் முயற்சி செய்வதை அறிந்தவராய், யெகோவா தேவன் தம்முடைய மக்களாகிய பூர்வ இஸ்ரவேலரை இவ்வாறு எச்சரித்தார்: “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.”—உபாகமம் 18:10-12.

மரித்தோர் நமக்குத் தீங்குசெய்ய முடியும் என்ற கருத்து கடவுளிடமிருந்து வரவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. அவர் சத்தியத்தின் தேவன். (சங்கீதம் 31:5; யோவான் 17:17) தம்மை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்ளும் சத்தியப் பிரியர்களுக்கு மகத்தான ஓர் எதிர்காலத்தை அவர் வைத்திருக்கிறார்.—யோவான் 4:23, 24.

யெகோவா, சத்தியமும் அன்புமுள்ள ஒரு கடவுள்

நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பன், “பொய்யுரையாத தேவன்,” வாக்களித்திருக்கிறார்: மரித்து கல்லறையில் வைக்கப்பட்டிருக்கும் லட்சோபலட்ச மக்கள் நீதியுள்ள ஒரு புதிய உலகில் நித்தியமாக வாழும் எதிர்பார்ப்போடு உயிர்த்தெழுப்பப்படுவர்! (தீத்து 1:1, 3; யோவான் 5:28) உயிர்த்தெழுதலைப்பற்றிய இந்த அன்புள்ள வாக்குறுதி, அவருடைய மனித படைப்புகளின் நலனில் ஆழ்ந்த அக்கறையும், மரணத்தையும் துயரத்தையும் வருத்தத்தையும் முடிவுக்குக்கொண்டுவர இருதயப்பூர்வமான ஆசையும் அவருக்கு இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே மரித்தோரைக் குறித்து பயப்படவோ அவர்களையும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் குறித்து அனாவசியமாக கவலைக்கொள்ளவோ அவசியமில்லை. (ஏசாயா 25:8, 9; வெளிப்படுத்துதல் 21:3, 4) நம்முடைய அன்பும் நீதியுமுள்ள தேவன், யெகோவா, மரணத்தின் வேதனையைத் துடைத்தழித்து அவர்களை உயிர்த்தெழுப்ப முடியும், உயிர்த்தெழுப்பவும் செய்வார்.

வாக்களிக்கப்பட்ட நீதியுள்ள அந்தப் புதிய உலக பூமியில் நிலைமைகள் எவ்விதமாக இருக்கும் என்பதைப் பற்றி ஏராளமான விவரிப்புகள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகின்றன. (சங்கீதம் 37:29; 2 பேதுரு 3:13) அது சமாதானமும் மகிழ்ச்சியும் எல்லா உடன் மானிடரிடமாக அன்பும் கொண்டிருக்கும் ஒரு காலமாக இருக்கும். (சங்கீதம் 72:7; ஏசாயா 9:7; 11:6-9; மீகா 4:3, 4) அனைவருக்கும் பாதுகாப்பான, நேர்த்தியான வீடுகளும் அனுபவித்து மகிழக்கூடிய வேலையும் இருக்கும். (ஏசாயா 65:21-23) அனைவருக்கும் சாப்பிடுவதற்கு ஏராளமான நல்ல பொருட்கள் இருக்கும். (சங்கீதம் 67:6; 72:16) அனைவரும் அபரிமிதமான ஆரோக்கியத்தை அனுபவித்துக்களிப்பார்கள். (ஏசாயா 33:24; 35:5, 6) அப்போஸ்தலர்களும் வரம்புக்குட்பட்ட கூடுதலான எண்ணிக்கையினரும் இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சிசெய்யும்போது, மற்றவர்களின் ஆத்துமாக்கள் மரணத்துக்குப்பின் பரலோகத்தில் ஆசீர்வாதமான நிலைமைகளை அனுபவிப்பதைப்பற்றி எந்தக் குறிப்பும் பைபிளில் இல்லை. (வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:6) மரித்துவிட்டிருக்கும் கோடிக்கணக்கான ஆட்கள் மரணத்துக்குப்பின் தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிருந்தால் அது விசித்திரமாக இருக்கும்.

ஆனால் மரித்தோர் உயிருள்ள ஆத்துமாக்களாக வாழ்ந்துக்கொண்டில்லை என்ற பைபிளின் தெளிவான போதகத்தை நாம் அறிந்திருக்கும்போது, இது விசித்திரமாக இல்லை. அவர்களால் உங்களுக்குத் தீங்குசெய்ய முடியாது. ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருப்பவர்கள், கடவுளுடைய குறிக்கப்பட்ட சமயத்தில் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படும் வரையாக, உணர்வற்றவர்களாக வெறுமென அமைதியாக இருக்கிறார்கள். (பிரசங்கி 9:10; யோவான் 11:11-14, 38-44) அப்படியென்றால் நம்முடைய நம்பிக்கைகளும் ஆசைகளும் கடவுள்மீதே சார்ந்திருக்கின்றன: “இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்.”—ஏசாயா 25:9.

[பக்கம் 7-ன் படம்]

கடவுளுடைய வார்த்தை தெளிவாக காண்பிக்கிற விதமாக, மரித்தோர் உயிர்த்தெழுதல் வரையாக முற்றிலும் செயலற்றவர்களாக இருக்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்