உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 8/8 பக். 25-27
  • வானவியலே என் பொழுதுபோக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வானவியலே என் பொழுதுபோக்கு
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நட்சத்திரமா அல்லது கிரகமா?
  • உதவி கிடைக்கிறது
  • சந்திரனும் கிரகங்களும்
  • நட்சத்திரங்கள்
  • சில எச்சரிக்கைகள்
  • நட்சத்திரங்களும் மனிதனும்—ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
    விழித்தெழு!—1994
  • ஈடிணையற்ற நம் சூரிய குடும்பம் எப்படி வந்தது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • ஆகாய வரைபடம்—அன்றும் இன்றும்
    விழித்தெழு!—2000
  • சூரியன் அதன் விநோதமான இயல்புகள்
    விழித்தெழு!—2001
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 8/8 பக். 25-27

வானவியலே என் பொழுதுபோக்கு

தென் பசிபிக்கில் உள்ள நியூ ஜீலாந்தின் வட தீவில் நான் வாழ்ந்துவருகிறேன். நான் 15 வயது இளைஞனாய் இருந்த சமயத்திலிருந்தே வானவியலில் ஆர்வமுள்ளவனாய் இருந்திருக்கிறேன். அது, நீங்கள் விரும்பும் அளவுக்கு எளிமையாகவோ அல்லது சிக்கலாகவோ இருக்கக்கூடிய ஓர் அமைதலான பொழுதுபோக்காகும். வானவியலை அனுபவிக்க நீங்கள் இயற்பியல் பட்டம் பெற்றிருக்கவோ அல்லது கணித மேதையாக இருக்கவோ வேண்டியதில்லை என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.

பெரும்பாலான பொழுதுபோக்குகள் ஏதோவொரு கருவியைத் தேவைப்படுத்துகின்றன. ஆகவே, உங்களுக்கு என்ன தேவைப்படும்? முக்கியமாக உங்கள் கண்கள். உங்கள் வீட்டின் வெளிச்சமான அறைகளிலிருந்து இரவின் இருளிலே நீங்கள் முதலில் செல்லும்போது, குறைவான வெளிச்சத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள உங்கள் கண்களுக்கு சுமார் பத்து நிமிடங்கள் எடுக்கும். நீங்கள் ஒரு நகரவாசியாக இருந்தால், தெரு விளக்குகள் மற்றும் வீட்டு விளக்குகள் குறுக்கிடுவதை நீங்கள் கவனிப்பீர்கள். அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்? நன்றாக பார்ப்பதற்கு, இப்படிப்பட்ட வெளிச்சங்களுக்கு மறைவான ஓர் இடத்தில் நில்லுங்கள்.

சந்திரன் இல்லாத, இருள் நிறைந்த, மேகமில்லா இரவில் நீங்கள் மிகச் சிறந்த காட்சியை அனுபவிப்பீர்கள். சந்திரன், வளிமண்டலத்தில் இதமாக ஒளி வீசுகிறது; இது அநேக மங்கலான நட்சத்திரங்களை மறைந்துவிடச் செய்கிறது. வெறும் கண்ணால் நீங்கள் எவ்வளவு நட்சத்திரங்களைப் பார்க்க முடியும்? பொதுவாக, 2,000-லிருந்து 4,000 வரை பார்க்கலாம். அடிவானத்திற்கு அருகேயுள்ள நட்சத்திரங்களைப் பார்ப்பது மிகவும் கடினம், ஏனெனில் வளிமண்டலத்தின் கெட்டியான போர்வை வழியாக நீங்கள் பார்க்கிறீர்கள். இது, அதிக மங்கியத்தன்மையையும், அதிக ஒளிச்சிதைவையும் ஏற்படுத்துகிறது. முதலில் அண்ணாந்து பார்க்கும்போது கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதாக தோன்றினாலும், வெறும் கண்களுக்கோ ஓரளவுக்கு குறைந்த எண்ணிக்கை மாத்திரமே காணப்படுகிறதென்பது சில ஆட்களை ஆச்சரியப்படுத்துகிறது.

நட்சத்திரமா அல்லது கிரகமா?

பிரகாசமான ஒரு சுடரைப் பார்ப்பதுதானே, அது நட்சத்திரமா அல்லது கிரகமா என்ற கேள்வியை எழுப்புகிறது. நட்சத்திரங்கள் ஒளிமூலங்களாகும். அவை, மின்காந்த சிக்னல்களை விண்வெளியில் பாய்ச்சும் மிகப் பெரிய அணு ஆற்றல் இயந்திரங்கள். அவை நம் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. சூரியனைத் தவிர்த்து, மிக அருகாமையிலுள்ள நட்சத்திரம் 4.3 ஒளி-ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. ஒளி, நொடிக்கு 2,99,000 கிலோமீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்கிறது. நட்சத்திர ஒளி நம்மிடம் வந்துசேர அவ்வளவு தூரம் பிரயாணம் செய்வதால் அது மங்கிவிடுகிறது. மேலும், பூமியின் அதிக அடர்த்தியான வளிமண்டலத்தையும் அது ஊடுருவிச்செல்ல வேண்டும். வளிமண்டலம் ஒளிக்கதிர்களை இங்கும் அங்குமாக வளைத்துவிடுகிறது. “டிவின்கில் டிவின்கில் லிட்டில் ஸ்டார், ஹௌ ஐ வன்டர் வாட் யூ ஆர்,” என்பதாக நர்ஸரி ரைம் ஒன்று சொல்கிறது. இது, மௌனமான வானங்களுக்கு கொஞ்சம் உயிரூட்டுகிறது. மின்னுவதாய் இருந்தால் அது ஒரு நட்சத்திரமாகும்.

எனினும், கிரகங்களோ சந்திரனைப் போலவே சூரியனிடமிருந்து ஒளி பெற்று பிரகாசிக்கின்றன. சூரிய குடும்பமான சூரிய மண்டலத்தின் துணைப் பகுதிகளாக, அவை ஒப்பிடுகையில் நமக்கு அருகாமையில் இருக்கின்றன. ஆகவே வெறும் கண்களால் நாம் பார்க்கும் கிரகங்கள், ஒரேசீரான மற்றும் மின்னாத ஒளியைப் பிரகாசிக்கின்றன.

உதவி கிடைக்கிறது

நீங்கள் கூடுதலாக துணிந்து செயல்பட விரும்பினால், என் பொழுதுபோக்கை இன்னும் சந்தோஷகரமாக்கும் நண்பர்கள் சிலரைக் குறித்து சொல்கிறேன். முதலாவது ஸ்டார் அட்லஸ். நான் தற்போது வைத்திருப்பது நார்டன்ஸ் ஸ்டார் அட்லஸ், திருத்திய பதிப்பு. அது வானங்களின்பேரில் மிகச் சிறந்த வரைபடங்களையும் வானவியல் சொல்லகராதியைத் தெரிந்துகொள்ள பயில்பவர்களுக்கு உதவும் தகவலையும் கொண்டிருக்கிறது.

என் இரண்டாவது நண்பன் ப்ளானிஸ்ஃபியர் ஆகும். ஒன்றன்மேல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும் இரண்டு ப்ளாஸ்டிக் தட்டுகளை அது கொண்டிருக்கிறது. அவை டோம் ஒன்றினால் நடுவில் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஜன்னலுடன் இருக்கும் மேல் தட்டு, நட்சத்திர சார்ட் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும் கீழ் தட்டின்மீது சுழற்றப்படலாம். தேவைப்படும் நேரம் மற்றும் தேதியின்படி செட் செய்யப்படலாம். வருடத்தின் நேரத்திலும் காலத்திலும், உங்களுக்கு சௌகரியமான இடத்திலும், உங்கள் அட்சரேகையில் எந்த நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்பதை இப்போது உங்களால் தீர்மானிக்க முடியும். நியூ ஜீலாந்தில், பிலிப்ஸ் ப்ளானிஸ்ஃபியர், அநேக புத்தகக்கடைகளிலிருந்து உடனடியாக வாங்கப்படலாம் அல்லது ஆர்டர் செய்யப்படலாம். ஒரு ப்ளானிஸ்ஃபியரை வாங்கும்போது, உங்களது சொந்த ஊரின் அட்சரேகையை, நிலநடுக்கோட்டிற்கு வடக்கேயோ தெற்கேயோ நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு தொலைநோக்கியை (telescope) வாங்க வேண்டுமா? இந்தப் பொழுதுபோக்கை நீங்கள் நாடினால், கடைசியில் அதை வாங்குவீர்கள் என்று நான் நினைக்கிறேன். மூன்று வகைகள் இருக்கின்றன—ஒலிவிலக்கி (refracting), பிரதிபலிப்பு (reflecting), ஒலிவிலக்கி-பிரதிபலிப்பு (refracting-reflecting). வானவியல் மற்றும் தொலைநோக்கிகளைக் குறித்த புத்தகங்களுக்காக பொது நூலகத்திற்குச் செல்லுங்கள். பிரதிபலிப்புத் தொலைநோக்கியை நீங்களாகவே செய்வது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் சுலபமானது. வானவியல் தொலைநோக்கியை எவ்வாறு செய்வது என்பதன்பேரில் குறைந்த விலையில் ஒரு புத்தகத்தை வாங்குங்கள். ஓர் ஆர்வமூட்டும் திட்டமாக அதைக் காண்பீர்கள்.

பைனாகுலர்கள் வானத்தின் அகன்ற காட்சியைக் காண்பிக்கின்றன. கறுப்பு நிற வெல்வட் வானத்தில் இரத்தினங்களைப்போல் காட்சியளிக்கும் அழகிய நட்சத்திர கூட்டங்களை உங்களால் பார்க்க முடியும். மேகங்களின் கீற்றுகளைக் காண்பீர்கள், அவை தூசியாலும் வாயுக்களாலும் நிறைந்த மேகங்களான நெபுலாஸாக இருக்கின்றன. புறவெளியில் பல ஒளி-ஆண்டுகளுக்கு அப்பால் அவை இருக்கின்றன. பால்வீதியின் பிரகாசிக்கும் தொகுதியை பூமியின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்க்கலாம். மேலும், நமக்கு அருகாமையிலுள்ள விண்வெளியில் எப்போதாவது நுழைந்துவிடும் அலைந்து திரிகிற எரிநட்சத்திரங்களைத் தேடுவதற்கோ அல்லது பார்ப்பதற்கோ வானத்தை முழுமையாகப் பார்வையிட பைனாகுலர்கள் மிகச் சிறந்தவையாகும். உள்ளூர் செய்தித்தாள்கள், இரவில் ஆகாயத்தைப் பார்க்க உங்களுக்கு உதவுவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் வாராந்தர கட்டுரைகளை ஒருவேளை கொண்டிருக்கலாம்.

நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை வைத்திருக்கிறீர்களா? பயில்பவர் மகிழ்ந்தனுபவிக்கும் வானவியல் சார்ந்த புரோகிராம்களோடுகூட சில நுட்பமான புரோகிராம்களும் இருக்கின்றன. என் பொழுதுபோக்கு சம்பந்தமான எல்லாவித தகவலையும் சேகரித்து வைப்பதற்காக நான் என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறேன். வானவியல் சம்பந்தமான புகழ்பெற்ற பத்திரிகைகளும் இருக்கின்றன. அவ்வப்போது, விழித்தெழு! இந்தத் தலைப்பின்பேரில் கட்டுரைகளை அச்சிடுகிறது.

சந்திரனும் கிரகங்களும்

சந்தேகமில்லாமல், சந்திரனைக் கண்டுபிடிப்பதில் எந்தக் கஷ்டமும் இல்லை. பார்வைக்குத் தென்படும்போது, இரவு ஆகாயத்தில் அது மேலோங்கிக் காணப்படுகிறது. இரவு விடியலை நோக்கும்போது முழு நிலவு கிழக்கிலிருந்து மேற்கிற்கு பயணம் செய்வதாகத் தோன்றுவதாய், உண்மையிலேயே அழகானதாக இருக்கிறது. நட்சத்திரங்களை வழிகாட்டியாக பயன்படுத்தி இன்னும் நுணுக்கமாக கவனிப்பது, நாம் சென்றுகொண்டிருக்கும் அதே திசையாகிய மேற்கிலிருந்து கிழக்கில்தான் சந்திரனும் பயணம் செய்கிறது என்பதைக் காண்பிக்கிறது. ஓரிரண்டு மணிநேரத்திற்கோ அல்லது இரண்டு அடுத்தடுத்த இரவுகளுக்கோ இதைக் கவனியுங்கள். சந்திரனோடு ஒப்பிட்டு நகராத நட்சத்திரங்களின் இடத்தை கவனியுங்கள். சுற்றுப்பாதையில் சந்திரன் செல்லும் வேகத்தைவிட அதிக வேகத்தில் பூமி அதன் அச்சில் சுழல்வதால், சந்திரனைக் கடந்து சென்றுவிடுகிறோம்.

சந்திரன் முழு வடிவில் இருக்கும்போது வானவியல் நிபுணர் ஒரு பிரச்சினையை எதிர்ப்படலாம்—அளவுக்கதிகமான வெளிச்சம். அமாவாசைக்கு 4-லிருந்து 7 நாட்கள் பின்போ அல்லது 22-லிருந்து 24 நாட்கள் பின்போ சந்திரனைப் பார்ப்பதை நான் எப்போதுமே மிகவும் மகிழ்ந்தனுபவித்திருக்கிறேன். ஏனெனில், அதன் மலைகளின் நிழல்களும் பிறையின் ஓரங்களும் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கின்றன. சந்திரன், வெறும் கண்களால் பார்த்து அதன் நிலையான பரப்பின் அம்சங்களைக் கவனிப்பதற்கு நமக்கு அருகாமையிலிருக்கும் ஒரே வானொளிக் கோளமாக இருப்பதன் காரணமாக, நீங்கள் வடக்கில் இருக்கிறீர்களா அல்லது தெற்கில் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து அதன் பரப்பு வித்தியாசமாக காணப்படுகிறது.

கான்ஸ்டலேஷன்ஸ் அல்லது நட்சத்திர தொகுதிகளுக்கும்கூட இது பொருந்தும். இவ்வாறு உங்களது அர்த்தக்கோளத்திற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் வரைபடங்களை பயன்படுத்துவதை அது உங்களுக்கு விருப்பமானதாக்கும். இல்லையென்றால், அவை தலைகீழாகவும் காணப்படும், பின்புறமிருந்து முன்புறமாகவும் காணப்படும். இது முக்கியமாக பயில்பவருக்கு சற்று குழப்பமூட்டுவதாய் இருக்கும். வானவியல் தொலைநோக்கி, பார்க்கப்படும் பொருட்களை தலைகீழாக தோன்றச்செய்யும் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால் கிரகங்கள் எங்கே இருக்கின்றன? முதலாவதாக, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன: எக்லிப்டிக் மற்றும் சோடியாக் என்பவை யாவை?

எக்லிப்டிக் என்பது நட்சத்திரங்களைப் பின்னணியாக கொண்டு ஒவ்வொரு வருடமும் சூரியன் பயணம் செய்வதாக தோன்றும் பாதையாகும். எக்லிப்டிக், வானத்துக்குரிய நிலநடுக்கோட்டில் கிட்டத்தட்ட 23.5 டிகிரிகள் குறுக்கே செல்கிறது. “மிருகங்களின் வட்டம்” என்பதாக அழைக்கப்படும் சோடியாக் என்பது, இரு பக்கங்களிலும் சுமார் 8 டிகிரிகளுக்கு எக்லிப்டிக்கைப் பின்தொடரும் கற்பனை தொகுப்பாகும். வெறும் கண்களால் பார்க்க முடிந்த சூரியனும், சந்திரனும் கிரகங்களும் சோடியாக் வரையறைக்குள்தான் எப்போதும் இருக்கின்றன. பல இரவுகள் தொடர்ந்து பார்த்த பிறகு நீங்கள் ஒரு கிரகத்தைக் காண்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். ஏனெனில் அசையாததாய் தோன்றும் நட்சத்திரங்களோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும்போது, வித்தியாசமான இடங்களில் கிரகம் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் நான் எந்தக் கிரகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்? புதனும் சுக்கிரனும் எப்போதுமே சாயங்காலங்களில் மேற்கிலும் காலை வேளைகளில் கிழக்கிலும் இருக்கும், ஒருபோதும் உச்சியில் இருக்காது. சந்திரன் மாத்திரம்தான் வீனஸை போட்டிபோடுகிறது. சுக்கிரனை விடிவெள்ளியாகவோ மாலைநேர நட்சத்திரமாகவோ நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள். பூமிக்கு அப்பால் சூரியனை சுற்றிவரும் கிரகங்கள் கிழக்கிலிருந்து மேற்கிற்கு பயணம் செய்கின்றன. செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் ஆகியவையும்கூட நேரடியாக கண்களுக்கு தெரிபவை. அவற்றின் நிலையைக் குறித்து தகவலளிக்கும் ஏதோவொரு மூலத்தை அணுக வேண்டிய அவசியம் ஆரம்பத்தில் இருக்கலாம், ஏனெனில், அவை நட்சத்திரங்களுக்குள் மறைந்திருக்கின்றன.

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்களை ஒளியின் கவரத்தக்க மூலங்களாக நீங்கள் எப்போதும் காண்பீர்கள். இந்த நட்சத்திரக் கூட்டங்களை நன்கு அறிந்துவைத்திருப்பது, சிருஷ்டிகரின் பிரமிப்பூட்டும் வேலைப்பாடோடு புதிய சிநேகத்தை ஆரம்பிப்பதாய் இருக்கலாம்.

சில நட்சத்திரங்கள் குறிப்பாக நமக்கு ஆர்வமூட்டுபவையாய் இருக்கின்றன. அதில் ஒன்று சிரியஸ்; அதுதான் மிகப் பிரகாசமான நட்சத்திரம். அது இரட்டை நட்சத்திரமாகவும் இருக்கிறது, ஒரு பொதுவான நடுப்பகுதியுள்ள சுற்றுப்பாதையில் இரண்டு நட்சத்திரங்கள் இருக்கின்றன. மிகப் பிரகாசமான நட்சத்திரங்களில் இரண்டாவது கானோபஸ் ஆகும். விண்வெளி ஓடங்கள், இந்த நட்சத்திரத்தைப் பயன்படுத்தி விண்வெளியில் தங்கள் இடத்தைக் கண்டுபிடித்திருக்கின்றன; மேலும் கம்மான்ட் தகவல் தொடர்பை இன்னும் எளிதாக்க தங்கள் ஆன்டனாக்களை பூமியினிடமாக திருப்புவதற்குப் பயன்படுத்தியிருக்கின்றன.

சில எச்சரிக்கைகள்

(1) வானவியல் ஒரு பொழுதுபோக்காகவே இருக்க வேண்டும், நம்மை ஆட்கொள்ளும் ஒன்றாக இருக்கக்கூடாது. மிகச் சிறந்த விதி, “சிருஷ்டிப்பிற்கு முன்பு சிருஷ்டிகர்.” (2) தொலைக்காட்டியையோ பைனாகுலர்களையோ பயன்படுத்தி சூரியனையோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள வானத்தையோ ஒருபோதும் பார்க்காதீர்கள்; அதனால் நீங்கள் ஒருவேளை இழக்கப்போவது உங்கள் கண்பார்வையையே. (3) நீங்கள் வாசிக்கும் அனைத்தையுமே நம்பிவிடாதீர்கள். நிரூபிக்கப்படாத கோட்பாடுகளைப்போலவே பழைய புத்தகங்களும் உங்களை வஞ்சிக்கக்கூடும். (4) பணம் கொடுத்து சாதனங்களை வாங்கும்போது அவசரப்படாதீர்கள், ஏனெனில் நீங்கள் ஆர்வத்தை ஒருவேளை இழந்துவிடலாம்.

என் பொழுதுபோக்கு, கண்டுபிடிப்பும் ஆச்சரியமும் நிரம்பிய முடிவில்லா சாகசச்செயலாகும். கடவுளுடைய புதிய உலகத்தில் என்றென்றுமாக வாழ்ந்தாலும்கூட பிரபஞ்சத்தைக் குறித்த எல்லா மர்மங்களையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. (பிரசங்கி 3:11; 8:17) ஆனால் அதைக் குறித்து அதிகமதிகமாக கற்றுக்கொள்வது என்றென்றுமாக மனங்கவரக்கூடியதாக இருக்கும்.—அளிக்கப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்