நட்சத்திரங்களும் மனிதனும்—ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
நட்சத்திரங்களைப் பார்க்கும் பழக்கம் ஒன்றும் புதியதல்ல. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்லுகிறபடி, ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் விவசாயிகள் “எப்போது பயிர் செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்ள நட்சத்திரங்களைப் பார்த்தனர். பயணிகள் திசைகளைச் சொல்ல நட்சத்திரங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டனர்.” இன்றும்கூட விண்வெளிப் பயணத்தில், நட்சத்திரங்கள் இன்னும் வழிநடத்திகளாக பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தவர் நட்சத்திரத் தொகுதிகளால் அல்லது விண்மீன் குழுக்களால் சித்தரிக்கப்பட்டதாக தாங்கள் கருதிய ஆட்களைப்பற்றியும் விலங்குகளைப்பற்றியும் கட்டுக்கதைகள்கூட கண்டுபிடித்தனர். காலப்போக்கில் நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தமுடியும் என்று மக்கள் உணரலாயினர்.
வகை வகையான நட்சத்திரத் திரள்
வெறுமனே நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் பருமனுமே அச்சத்தை உண்டுபண்ணுகின்றன. பிரபஞ்சத்தில் சுமார் பத்தாயிரம் கோடி உடுமண்டலங்கள் (galaxies) அல்லது நட்சத்திரங்களின் பெரிய தொகுதிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன! “அதாவது சராசரியான அளவுள்ள கதீட்ரலில் அடைத்துவைக்கப்பட முடிந்த நெல்மணிகளின் எண்ணிக்கை,” என்பதாக சர்வதேச வானியல் கலைக்களஞ்சியம் (The International Encyclopedia of Astronomy) சொல்லுகிறது. நம்முடைய சூரிய மண்டலம் ஒரு பாகமாக இருக்கும் பால்வீதி மண்டலம் குறைந்தபட்சம் அத்தனை நட்சத்திரங்களையாவது கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நம்முடைய பூமிக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடியதும் (சூரியனைத் தவிர), ஆல்ஃபா சென்டாவுரி தொகுதியில் ஒன்றுமாக இருக்கும் நட்சத்திரம், சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. ஓர் ஆண்டில் ஒளி பயணம்செய்யும் தூரமே ஓர் ஒளி ஆண்டு. அதாவது நாம் அந்த நட்சத்திரத்தைப் பார்க்கும்போது, நம்முடைய கண்ணுக்குள் புகும் ஒளியானது நட்சத்திரத்திலிருந்து 4.3 வருடங்களுக்குமுன் புறப்பட்டு அவ்வளவு காலமாக விண்வெளியில் நொடிக்கு 2,99,792 கிலோமீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்துவந்திருக்கிறது. அதில் உட்பட்டிருக்கும் தூரத்தைக் கற்பனை செய்து பார்ப்பது நம்முடைய கற்பனாசக்திக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. இருப்பினும், அது மிக அருகாமையிலுள்ள நட்சத்திரமாகவே இருக்கிறது. சில நட்சத்திரங்கள் நம்முடைய உடுமண்டலத்திலிருந்து நூற்றுக்கணக்கான கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கின்றன. “இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்,” என்று பைபிள் தீர்க்கதரிசி அறிவித்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. (ஏசாயா 40:15) ஒரு சிறிய தூசியை யார் சட்டைசெய்கிறார்கள்?
பூமிக்கு மிக அருகாமையிலிருக்கும் விண்கோள் சந்திரன். அது பூமியின்மீது திட்டவட்டமான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. அதன் ஈர்ப்புசக்தி சில இடங்களில் கடலேற்றத்திற்கும் (high tide) கடலிறக்கத்திற்கும் (low tide) இடையில் 15 மீட்டருக்கும் அதிகம் வித்தியாசத்தையும்கூட உண்டுபண்ணுகிறது. மூன்று பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறபடி சந்திரனின் ஈர்ப்புசக்தியே பூமியின் அச்சை 23 டிகிரி சாய்ந்திருக்கும்படி செய்வதாக இப்போது நம்பப்படுகிறது. இதன் காரணமாக பருவ காலங்களின் முறையான மாற்றங்கள் ஏற்படுவதை நிச்சயப்படுத்திவிடுகிறது. (நேச்சர், பிப்ரவரி 18, 1993) நம்முடைய கோளின்மீது சந்திரன் அத்தகைய இயற்பியல் சம்பந்தமான பாதிப்பைக் கொண்டிருப்பதால், நூற்றுக்கணக்கான கோடி நட்சத்திரங்களைப்பற்றி என்ன என்று கேட்பது நியாயமானதே. ஆனால் முதலாவது, பைபிளைப் போன்ற பழங்கால ஊற்றுமூல நூல்கள் நட்சத்திரங்களைப் பற்றி நமக்கு என்ன கூறுகின்றன?
வேதாகமத்தில் நட்சத்திரங்கள்
நட்சத்திரங்களைப்பற்றி பைபிள் சொல்லர்த்தமாகவும் அடையாளர்த்தமாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சங்கீதக்காரன் சொல்கிறதுபோல, நட்சத்திரங்கள் பூமிக்கு ஒளிகொடுப்பதில் உதவுவதற்காக படைப்பாளர், “இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும்” உண்டாக்கினார். (சங்கீதம் 136:9, Tanakh) பின்னர் உண்மைத்தன்மையுள்ள ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை செய்கையில், கடவுள் சொன்னார்: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்.” (ஆதியாகமம் 15:5) அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.”a (1 கொரிந்தியர் 15:41) இவ்வாறு சொல்வதன்மூலம் நட்சத்திரங்களிடையே வித்தியாசங்கள் உண்டு என்பதைக் குறிப்பிட்டுக்காட்டினார். அதேசமயம், ஏராளமான இந்த நட்சத்திரங்களும் அவற்றின் மகிமையும் அவற்றின் சிருஷ்டிகருடைய கட்டுப்பாட்டு எல்லைக்கு புறம்பானவையாய் இல்லை: “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.”—சங்கீதம் 147:4.
மறுபட்சத்தில், வேத எழுத்துக்களில் ஆட்களையும் ஆட்சியாளர்களையும் தேவதூதர்களையும் குறிப்பதற்காக நட்சத்திரங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதைக் காண்கின்றோம். யாக்கோபின் மகன் யோசேப்பு கண்ட ஒரு கனவில் அவனுடைய பெற்றோர் ‘சூரியனாகவும் சந்திரனாகவும்’ அவனுடைய சகோதரர்கள் ‘நட்சத்திரங்களாகவும்’ சித்தரிக்கப்படுகின்றனர். தேவதூதர்கள் “விடியற்காலத்து நட்சத்திரங்கள்” என்று குறிப்பிடப்படுகின்றனர். பாபிலோன் ராஜா இஸ்ரவேல் தேசத்தின் தாவீதிய ஆட்சியாளர்களாகிய, “தேவனுடைய நட்சத்திரங்களுக்கு” மேலாக செல்ல முயல்வதாக பேசப்படுகிறான். கிறிஸ்தவ சபைகளில் உள்ள நிலையற்ற ஆட்கள் “மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களு”க்கு ஒப்பாக பேசப்படுகின்றனர். சபையின் உண்மைத்தன்மையுள்ள மூப்பர்களின் குழுக்களோ கிறிஸ்துவின் வலது கரத்தில் உள்ள ‘நட்சத்திரங்களாக’ இருப்பதாய் குறிப்பிடப்படுகின்றன.—ஆதியாகமம் 37:9, 10; யோபு 38:7; ஏசாயா 14:13; யூதா 13; வெளிப்படுத்துதல் 1:16.
கானானைச் சேர்ந்த யாபீன் ராஜாவின் சேனாதிபதி ‘சிசெராவோடே நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து யுத்தம்பண்ணின,’ என்று பைபிளில் உள்ள பதிவு ஒன்று கூறுகிறது. இந்த ராஜா இஸ்ரவேலரை 20 வருடங்களாக ஒடுக்கிவைத்திருந்தான். இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்ற யெகோவா இஸ்ரவேலைச் சேர்ந்த நியாயாதிபதி பாராக்கை நியமித்தார். சிசெராவுக்கு தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தபோதிலும், அவனுக்கெதிராக யெகோவா பாராக்குக்கு அபாரமான வெற்றியைத் தந்தார். வெற்றிப் பாட்டில் இஸ்ரவேலர்கள்: “வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின,” என்று பாடினர். நட்சத்திரங்கள் சரியாக எவ்வாறு யுத்தம் செய்தன என்பதைப்பற்றிய எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. யுத்தத்தில் நட்சத்திரங்கள் நேரடியான ஒரு செல்வாக்கைக் கொண்டிருந்தன என்று ஊகிப்பதற்குப் பதிலாக, இந்தக் கூற்றானது இஸ்ரவேலர்களின் சார்பாக ஏதோவொரு வகை தெய்வீக தலையிடுதல் நடந்திருக்கிறது என்று நம்புவதே மிக நியாயமானதாக இருக்கிறது.—நியாயாதிபதிகள் 5:20.
பெத்லகேமின் ‘அந்த நட்சத்திரம்’
பைபிளில் குறிப்பிடப்பட்ட மிகவும் நன்கு அறியப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்று பெத்லகேமின் ‘நட்சத்திரமாக’ இருக்கலாம். இயேசு தொழுவம் ஒன்றில் பிறந்த பிறகு, தம்முடைய பெற்றோரால் எடுத்துச்செல்லப்பட்ட வீட்டுக்கு “கிழக்கிலிருந்து” வந்த சாஸ்திரிகளை வழிநடத்தியது இந்த நட்சத்திரமே. அந்த நட்சத்திரம் என்ன? நிச்சயமாகவே அது சாதாரணமான ஒன்று அல்ல. ஏனென்றால் அது சாஸ்திரிகள் சுமார் 1,600 கிலோமீட்டர் தொலைவுக்கு பின்பற்றி செல்லுமளவுக்குக் கீழே காணப்பட்டது. ‘அந்த நட்சத்திரம்’ அவர்களை முதலில் எருசலேமுக்கு வழிநடத்திற்று. இதைக் கேள்விபட்டு ஏரோது ராஜா அவர்களை விசாரித்து பின்னர் குழந்தை இயேசுவைக் கொல்ல தீர்மானித்தான். பிறகு ‘அந்த நட்சத்திரம்’ இயேசு வாழ்ந்திருந்த குறிப்பிட்ட வீட்டுக்கு சாஸ்திரிகளை வழிநடத்திற்று. நிச்சயமாகவே சாதாரண எந்தவொரு நட்சத்திரமும் இதைச் செய்ய முடியாது. நட்சத்திரத்தைப் போன்ற இந்தப் பொருள் கடவுளிடமிருந்து தோன்றியதா? சாஸ்திரிகளின் வருகை “பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளைகளையும்” கொலைசெய்வதற்கு மறைமுகமாக வழிநடத்திற்று. ஆகவே ‘அந்த நட்சத்திரம்,’ கடவுளுடைய குமாரனை அழிக்கும் முயற்சியில் கடவுளுடைய எதிரி சாத்தானால் உபயோகிக்கப்பட்ட ஒன்று என முடிவுக்கு வருவது நியாயமல்லவா?—மத்தேயு 2:1-11, 16.
அந்த சாஸ்திரிகள் கிழக்கிலிருந்து, ஒருவேளை மாயமந்திரம், பில்லிசூனியம், ஜோதிடம் போன்றவற்றின் பழங்காலத்து மையமாக திகழ்ந்த பாபிலோனிலிருந்து வந்தார்கள் என்பதையும் மனதில் வைத்திருக்க வேண்டும். அநேக விண்மீன்களுக்கு பாபிலோனிய கடவுட்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நேபுகாத்நேச்சார் ராஜாவின் நாட்களில், அவனுடைய யுத்த படையெடுப்பில் எந்த வழியில் செல்லவேண்டும் என்பதை தீர்மானிக்க அவனுக்கு உதவுவதில் குறிசொல்லுதல் உபயோகப்படுத்தப்பட்டது.—எசேக்கியேல் 21:20-22.
ஏசாயா தீர்க்கதரிசி பாபிலோனிய ஆலோசகர்களுக்கு இவ்வாறு சவால் விடுத்தார்: “உனக்கு [பாபிலோனுக்கு] ஆலோசனைகள் கிடைத்தபோதிலும் வல்லமையற்று இருக்கிறாய். உன்னுடைய ஜோதிடர் வந்து உன்னை ரட்சிக்கட்டும்—நட்சத்திரங்களை ஆராய்ந்து, வானங்களின் பாகங்களை வரைபடமிட்டு ஒவ்வொரு மாதமும் உனக்கு நடக்கப்போவதை சொல்லட்டும். இதோ, அவர்கள் வைக்கோலைப்போல் இருக்கிறார்கள், நெருப்பு அவர்களை சுட்டெரிக்கும்; அவர்களால் தங்களைக்கூட ரட்சிக்கமுடியாது; . . . உன்னை மீட்க ஒருவனும் விட்டுவைக்கப்பட மாட்டான்.” ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படியே, வல்லமைபடைத்த பாபிலோன் பொ.ச.மு. 539-ல் மகா கோரேசுவினால் வீழ்த்தப்பட்டது. அந்த பாபிலோனிய ஜோதிடர்கள் நட்சத்திரங்கள் வாயிலாக கொடுப்பதாக உரிமைபாராட்டும் வழிநடத்துதல், சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் பேரழிவாக மாறியது.—ஏசாயா 47:13-15, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்.
அப்படியானால் நட்சத்திரங்களிலிருந்து நாம் ஒன்றுமே கற்றுக்கொள்ள முடியாது என்று இது அர்த்தப்படுத்துகிறதா?
[பக்கம் 5-ன் பெட்டி]
சிலர் என்ன சொல்லியிருக்கின்றனர்
ஜோதிடம்: “வானவியலின் ஒரு துணையாகவும் கூட்டாகவும் அது இருக்கிறது.”—ஜெர்மானிய வானவியல் வல்லுநர், யோஹானஸ் கெப்லர் (1571-1630).
“ஜோதிடம் ஒரு அறிவியலல்ல, ஆனால் ஒரு வியாதி. . . . அது ஒரு மரம். அதன் நிழலில் அனைத்து வகை மூடநம்பிக்கைகளும் செழித்து வளர்கின்றன.”—இடைக்கால யூத அறிஞர், மோசஸ் மைமானடிஸ் (1135-1204).
“ஒரு பழங்காலத்து அறிவியல். இது வானத்தில் நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கும் இடங்களை வைத்து, தனிப்பட்டவரின் ஆளுமை மற்றும் நடத்தையைக் கணிக்கவும், எதிர்கால போக்குகள் மற்றும் சம்பவங்களை முன்னுரைக்கவும் முடியும் என்பதாக உரிமைபாராட்டுகிறது. . . . ஒருவேளை சுமார் கி.மு. 6-வது நூற்றாண்டின்போது—ஈராக்கின் தென்பகுதியில் வாழ்ந்த கல்தேயர்கள் தனிப்பட்டவரின் ஜாதகத்தை அறிமுகப்படுத்தியதாக கருதப்படுகின்றனர். இது பிறக்கும்போது நிலையான நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன், ஐந்து கோள்கள் ஆகியவையும் செலுத்திய செல்வாக்குகளோடு சம்பந்தப்பட்டதாய் இருந்தது. . . . ஜோதிடத்தின் செய்முறைகளும் ஜாதகங்களின் விளக்கமும், வானவியல் வல்லுநர்களாலும் மற்ற பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்களாலும் உண்மைகளைவிட சொந்த விளக்கங்களைப் பொறுத்தவையாகவும் ஏற்றுக்கொள்ளப்படாதவையாகவும் காணப்பட்ட கருத்துக்களைச் சார்ந்திருக்கின்றன.”—C. A. ரோனான், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜின், ஈஸ்ட் ஏஷியன் ஹிஸ்டரி ஆஃப் சயன்ஸ் ட்ரஸ்டின் திட்ட ஒருங்கினைப்பாளர் மற்றும் இந்த மேற்கோள் எடுக்கப்பட்ட தி இன்டர்நேஷனல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் அஸ்ட்ரானமியின் கட்டுரை எழுத்தாளர்.
உண்மைகளைவிட சொந்த விளக்கங்களைப் பொறுத்தவையாக இருப்பதை விளக்க, ரோனான் இவ்வாறு விவரிக்கிறார்: மேற்கத்தியரின் மனதில் சிவந்த கோளாகிய செவ்வாய், போரோடும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடும் சம்பந்தப்படுத்தப்படுகிறது. ஆனால் சீனர்களுக்கோ, சிவப்பு ஒரு அழகான நிறமாக இருக்கிறது; மேலும் செவ்வாய் அனுகூலமான செல்வாக்கைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. மாறாக, மேற்கத்திய புராணக்கதைகள் வெள்ளியை வெள்ளையோடும் அழகோடும் தொடர்புபடுத்துகின்றன. சீனர்களுக்கு “வெள்ளை . . . மரணம், அழுகுதல், அழிவு போன்றவற்றின் நிறமாகக் கருதப்படுகிறது. ஆகவே, வெள்ளி ‘போரின் மங்கலான கோள்’ என்பதாக குறிப்பிடப்பட்டது.”
ரோனான் தொடர்ந்து விவரிக்கிறார்: “இது பழங்காலத்து அறிவியல் என்ற தன்மையை உடையதாய் இருந்தபோதிலும், ஜோதிடம் பூர்வ காலங்களில் வானவியல் ஆராய்ச்சியை வளரச்செய்வதிலும், அதற்கான செலவுத்தொகையைக் கொடுப்பதிலும் ஒரு உபயோகமான பங்கை வகித்தது.”
நோபெல் பரிசு பெற்ற பத்தொன்பது பேர் மற்ற அறிவியல் அறிஞர்களோடு சேர்ந்து, “ஜோதிடத்திற்கு ஆட்சேபணைகள்—192 முன்னணி விஞ்ஞானிகளின் ஒரு அறிக்கை,” என்ற தலைப்பில் 1975-ல் கொள்கை விளக்க அறிக்கை ஒன்றை விடுத்தனர். அது அறிவித்ததாவது: “பண்டைக் காலங்களில் மக்கள் . . . பூமியில் இருந்து கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையில் உள்ள அதிக தூரங்களைப்பற்றி எந்தவித யோசனையும் இல்லாதிருந்தனர். இப்போதோ அந்தத் தூரங்கள் அளக்கப்பட முடியும் மற்றும் அளக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே தூரத்திலுள்ள கோள்களும் அதைவிட இன்னும் அதிதூரத்திலுள்ள நட்சத்திரங்களும் உண்டாக்கும் புவியீர்ப்பு விசையும் மற்ற பாதிப்புகளும் அளக்க முடியாதவண்ணம் எவ்வளவு குறைவாக இருக்கின்றன என்பதை நம்மால் காணமுடியும். பிறக்கும் கணத்தில் நட்சத்திரங்களும் கோள்களும் செலுத்தியிருக்கும் வல்லமையால் எந்த வழியிலாவது நம்முடைய எதிர்காலங்களை வடிவமைக்க முடியும் என்று கற்பனை செய்வது ஒரு தவறாகவே இருக்கிறது.”b
[அடிக்குறிப்புகள்]
a நவீன வானவியல் பவுலின் வார்த்தைகளை உறுதிப்படுத்துகிறது. ஏனென்றால், நட்சத்திரங்கள் நிறத்திலும், பருமனிலும், கொடுக்கும் ஒளியின் அளவிலும், தட்பவெப்பநிலையிலும், ஒப்பு அடர்த்தியிலும் வித்தியாசப்படுகின்றன.
b ஜோதிடத்தின் பேரில் கூடுதலான தகவலுக்கு, விழித்தெழு! மே 8, 1987, பக்கங்கள் 3-9-ஐப் பார்க்கவும்.