நட்சத்திரங்களில் உங்களுக்கு என்ன இருக்கிறது?
பிரேஸிலிலுள்ள விழித்தெழு! நிருபர்
“அடுத்த ஜூலையில் நாம் செவ்வாய் கிரகத்தோடு மோதுகிறோம் என நட்சத்திரங்களில் இருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” இவை கோல் போர்ட்டருடைய சந்தப்பாட்டின் வார்த்தைகளாக இருக்கின்றன. மனிதனின் எதிர்காலம் எப்படியோ நட்சத்திரங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற பொதுவான மற்றும் பழங்கால நம்பிக்கையை இவ்வார்த்தைகள் நன்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன.a ஆனால் விண் கோள்களுக்கும் இந்தப் பூமியில் உள்ள மனிதவர்க்கத்தின் வாழ்க்கைக்கும் மெய்யான தொடர்பு ஏதேனும் இருக்கிறதா? இருக்குமானால், மனிதவர்க்கம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? இல்லையென்றால், நட்சத்திரங்கள் என்ன நோக்கத்தைத்தான் நிறைவேற்றுகின்றன?
சமீபத்திய திடீர் சம்பவங்கள் சிலவற்றை நாம் கவனிக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி அநேக ஆட்கள் அக்கறையுடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. பெர்லின் மதில் விழுந்தது, முன்னாள் சோவியத் யூனியனின் திடீர் சிதறல், அரசியல் தலைவர்கள்மேல் நம்பிக்கையின்மை, ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மேலெழும்பும் இன வெறுப்பு, இந்தியாவிலும் அயர்லாந்திலும் மத விரோதம், அநேக நாடுகளைப் பாதிக்கிற தீவிர பணவீக்கம், இளைஞரின் எதிர்ப்பு போன்றவை இச்சம்பவங்களில் அடங்கும். ஹாம்பர்க் பல்கலைக்கழகத்திலிருந்து வரும் ஓர் அறிக்கையின்படி, இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததிலிருந்து 1992 தான் போர்கள் நிறைந்த வருடமாக இருந்தது. அவ்வருடத்தில் பல்வேறு நாடுகளில் ஆயுதந்தரித்த 52 சண்டைகள் நடந்திருக்கின்றன. ‘நிலையான நிலைமை, சமாதானம், பாதுகாப்பு போன்றவற்றுக்காக நாம் எங்கே போக முடியும்?’ என்று சமாதானத்தை நாடும் மக்கள் இயல்பாகவே கேட்கின்றனர்.
எதிர்காலத்தின் அநிச்சயம் பல்வேறு வடிவில் குறிசொல்லுவதன் ஒரு திடீரதிகரிப்புக்கு வழி நடத்தியிருக்கிறது. ஜோதிடம் அநேகமாக நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. வானவியலிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கும் இந்த ஜோதிடம் “மனித விவகாரங்களின் மீதும் ஆகாய நிகழ்ச்சிகளின் மீதும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள், தாங்கள் இருக்கும் இடங்களையும் அம்சங்களையும் பொறுத்து செலுத்தும் செல்வாக்குகள் என்று கருதப்படுபவற்றைப்பற்றி குறிசொல்வது” ஆகும். இன்று, லட்சக்கணக்கான மக்களால் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய குறிப்புகளுக்காக தங்களுடைய ஜாதகத்தைப் பார்க்காதிருக்க முடிகிறதில்லை.b
ஜோதிடர்கள் மற்ற துறைகளிலும் எதிர்காலத்தை முன்னுரைப்பதாக உரிமை பாராட்டிக்கொள்கின்றனர். திருமண வாழ்க்கை பிரச்சினைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளின் முடிவு, அரசியல் தலைவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், புதிய வியாபாரம் ஒன்றைத் தொடங்குவதற்கான சிறந்த தேதி, லாட்டரியில் ஜெயிக்க உபயோகிக்கும் எண்கள் போன்றவை இத்துறைகளில் உள்ளடங்கும்.
நேன்ஸி ரீகன், ஜோதிடர் ஜோன் க்விக்லியிடம் தவறாமல் ஆலோசனை பெற்றிருந்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தியறிக்கை ஒன்று அறிவித்தது. ஐக்கிய மாகாணங்களின் அப்போதைய ஜனாதிபதியாகிய தன் கணவர் எப்போது பேச்சுக்களைக் கொடுக்கவேண்டும், அவருடைய விமானம் எப்போது பறக்கத் தொடங்கவேண்டும் இறங்கவேண்டும் என்றெல்லாம் ஆலோசனை பெற்றார். “போப் ஜூலியஸ் II [1503-13] தன்னுடைய முடிசூட்டு விழாவிற்கான தினத்தைத் தீர்மானிக்கவும், பால் III [1534-49] ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திற்கான தகுந்த மணிநேரத்தைத் தீர்மானிக்கவும் ஜோதிடத்தைப் பயன்படுத்தினர்,” என்பதாக நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா வெளிப்படுத்திற்று. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு ஆலோசனை கூற ஜோதிடத்தைப் பயன்படுத்தும் ஒரு சுவிஸ் நிறுவனத்தின் இயக்குநராகிய ஆல்ஃப்ரட் ஹூக், மிகச் சிறந்த பலன்களை உறுதியளிக்கிறார். “நட்சத்திரங்களில் அது எழுதப்பட்டிருக்கிறது,” என்று அவர் உறுதிப்படுத்துகிறார்.
தெளிவாகவே, மனிதர்களின் வாழ்க்கைமீது நட்சத்திரங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்று அநேகர் கருதுகின்றனர். ஜோதிடம் எவ்வாறு தொடங்கிற்று? ஜோதிடத்தைப் பற்றியும் ஜோதிடர்களைப் பற்றியும் பூர்வீக புத்தகமாகிய பைபிள் ஏதேனும் சொல்கிறதா?
[அடிக்குறிப்புகள்]
a “பூர்வீக சீனாவில், . . . வானத்தில் காணப்படும் அடையாளங்களும் இயற்கை சேதங்களும், அரசன் மற்றும் அவனுடைய ராஜ்யத்தின் செய்கைகளையும் தவறான செய்கைகளையும் பிரதிபலிப்பதாக கருதப்பட்டு வந்தன.”—தி இன்டர்நேஷனல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் அஸ்ட்ரானமி.
b “(ஒருவர் பிறந்த நேரத்தைப் போன்ற) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோள்கள் மற்றும் ராசிகள் இருக்கும் சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடமே” ஜாதகம். இது ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்கால சம்பவங்களை முன்னுரைக்க முயற்சிக்க ஜோதிடர்களால் பயன்படுத்தப்படுகிறது.