அகதிகளை நடத்துவதற்கு ஒரு முன்மாதிரி
இஸ்ரவேல் தேசத்திற்கு யெகோவா தேவன் கொடுத்த நியாயப்பிரமாணத்தில், எகிப்தில் அகதிகளாக இருந்த நிலைமை இஸ்ரவேலர்களுக்கு நினைப்பூட்டப்பட்டது. (யாத்திராகமம் 22:21; 23:9; உபாகமம் 10:19) ஆகவே தங்கள் மத்தியில் இருந்த அந்நியர்களை அவர்கள் அன்பாக நடத்த வேண்டும் என்று, உண்மையில் சகோதரர்களாக நடத்த வேண்டும் என்று போதிக்கப்பட்டனர்.
கடவுளுடைய நியாயப்பிரமாணம் இவ்வாறு குறிப்பிட்டது: “யாதொரு அந்நியன் [பெரும்பாலும் ஓர் அகதியாக இருந்தவர்] உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே.”—லேவியராகமம் 19:33, 34.
அந்நியர்கள் அடிக்கடி பாதிக்கப்படத்தக்கவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் இருப்பதை அறிந்தவராக, யெகோவா, அவர்களது நலனுக்கும் பாதுகாப்பிற்கும் குறிப்பான சட்டங்களைக் கொடுத்தார். அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட கீழ்க்காணும் உரிமைகளைக் கவனியுங்கள்.
நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமை: “உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்.” ‘நீ அந்நியனுடைய நியாயத்தைப் . . . புரட்டாமல் இருக்க வேண்டும்.’—லேவியராகமம் 24:22; உபாகமம் 24:17.
தசமபாகத்தில் பங்குகொள்வதற்கான உரிமை: “மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும் விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக.”—உபாகமம் 14:28, 29.
நியாயமான கூலிக்கான உரிமை: “உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.”—உபாகமம் 24:14.
கைப்பிசகாய் கொன்றுவிட்டவர்களுக்குப் புகலிடத்திற்கான உரிமை: “கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.”—எண்ணாகமம் 35:15.
சிந்திக்கிடக்கிற கதிர்களை பொறுக்குவதற்கான உரிமை: “நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.”—லேவியராகமம் 19:9, 10.
நிச்சயமாகவே, நம் சிருஷ்டிகரான யெகோவா தேவன், அகதிகளின்பேரில் கருணையுள்ளவராக இருக்கிறார், நாமும் அவ்வாறு செய்யும்போது அவர் சந்தோஷப்படுவார். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, . . . நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.”—எபேசியர் 5:1, 2.
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Boy on left: UN PHOTO 159243/J. Isaac