இப்போதே உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள்!
மனித நடத்தை மற்றும் தூண்டுவிப்பின்பேரில் செய்யப்பட்டிருக்கும் அறிவியல் ஆராய்ச்சி அநேக வழிகளில் நமக்கு பயனளித்திருக்கிறது. ஒருவேளை ஒரு வியாதியைக் குறித்து இன்னும் ஆழமான புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருப்பதனால் அதை சமாளிக்க உதவப்பட்டிருக்கிறோம். அதே சமயத்தில், ஆவலைத் தூண்டும் கோட்பாடுகளைக் குறித்ததில், முக்கியமாக நன்கு ஸ்தாபிக்கப்பட்ட நியமங்களுக்கு முரண்படுவதாய் தோன்றக்கூடியவற்றைக் குறித்ததில் எச்சரிக்கையாய் இருப்பது விவேகமானது.
மரபியல் மற்றும் நடத்தையின் பொருளில், இந்தக் கேள்விகள் எழும்புகின்றன: நமது பொறுப்புகளை நிராகரித்துவிட்டு, நமது செயல்களுக்கு எந்தப் பழியும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாமா? அதிலிருந்து விடுவிக்கப்படும்படி கேட்கலாமா அல்லது நாம் செய்திருக்கும் தவறுக்கு வேறொருவர்மீதோ வேறொன்றன்மீதோ பழிசுமத்தி, இவ்வாறு “நான்-இல்லை” சந்ததியில் அதிகரித்துவரும் எண்ணிக்கையானோருடன் சேர்ந்துகொள்ளலாமா? கண்டிப்பாகவே கூடாது. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் எந்த வெற்றிகளுக்கும் மனப்பூர்வமாக பாராட்டுதலை ஏற்றுக்கொள்கின்றனர், ஆகவே அதேவிதமாக தாங்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பை ஏன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது?
ஆகவே, இன்று நமது வாழ்க்கை எவரால் அல்லது எதுவால் கட்டுப்படுத்தப்படுகிறதென்பதைக் குறித்து கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் என்ன சொல்கிறது என்பதாக நாம் ஒருவேளை கேட்கலாம்.
பைபிளின் கருத்து என்ன?
நாம் அனைவரும் நமது முதல் பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து சுதந்தரித்திருக்கும் பாவத்துடன் பிறந்திருக்கிறோம் என்பதை முதலாவதாக உணர வேண்டும். (சங்கீதம் 51:5) கூடுதலாக, ‘கொடிய காலங்களை’ ஜனங்கள் அனுபவிக்கும் ஒரு விசேஷ காலமான ‘கடைசிநாட்கள்’ என்பதாக அழைக்கப்படும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்துவருகிறோம். (2 தீமோத்தேயு 3:1) பொதுவாகப் பேசுகையில், நமது வாழ்க்கையை நல்ல விதத்தில் கட்டுப்படுத்துவதில் நமது முற்பிதாக்களைவிட அதிக பிரச்சினைகளை நாம் எதிர்ப்படுகிறோம் என்பதை இது காண்பிக்கிறது.
இருந்தபோதிலும், மனிதர்கள் அனைவருமே தாங்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையுடையவராய் இருக்கிறார்கள்; தங்களது சொந்த தெரிவுகளை அவர்களால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களது வாழ்க்கையின்பேரில் அவர்கள் கட்டுப்பாடுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இது ஆரம்ப காலங்கள் முதற்கொண்டே இவ்வாறு இருந்துவந்திருக்கிறது; இஸ்ரவேல் தேசத்தாரிடம் யோசுவா சொன்ன வார்த்தைகளில் இதைக் காணலாம்: “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்.”—யோசுவா 24:15.
பிசாசாகிய சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறான் என்றும் எப்போதுமிராத அளவில் இப்போது முழு மனித குலத்தின்மீதும் கெட்ட செல்வாக்கை செலுத்திவருகிறான் என்றும் பைபிள் ஒப்புக்கொள்கிறது. அப்போஸ்தலனாகிய யோவானின் காலத்திலும்கூட, உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடந்ததென்பதாகவும் அது நமக்கு சொல்கிறது. (1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9, 12) எனினும், சர்வவல்லமையுள்ள கடவுள் நமது ஒவ்வொரு செயல்களையும் எவ்வாறு கட்டுப்படுத்துவதில்லையோ அல்லது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்படி நமது முடிவை முன்கூட்டியே நிர்ணயிப்பதில்லையோ, அதுபோல் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு தவறுக்கோ நாம் எதிர்ப்படும் ஒவ்வொரு தோல்விக்கோ நேரடியாகவே சாத்தான்மீது நாம் பழிசுமத்தக்கூடாது. சமநிலையான வேதாகம சத்தியம் என்னவென்றால், “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்.” (யாக்கோபு 1:14, 15) அப்போஸ்தலனாகிய பவுல் இந்த ஏவப்பட்ட வார்த்தைகளை எழுதினார்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7.
ஆகவே, யெகோவா தேவன் நமது செயல்களுக்கு தனிப்பட்ட விதமாக நம்மை பொறுப்பாளிகளாக்குகிறார். நமது மரபியல் அமைப்பினாலேயோ சுதந்தரிக்கப்பட்டிருக்கும் அபூரணத்தினாலேயோ நம்மைநாமே பொறுப்பினின்று விடுவித்துக்கொள்ளாமலிருக்க எச்சரிக்கையுள்ளவர்களாய் நாம் இருக்க வேண்டும். கடவுள், வன்செயலிலும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியிலும் ஈடுபட்டிருந்த பூர்வ சோதோம் கொமோராவின் சமுதாயத்தை, அவற்றின் சீரழிந்த செயல்களுக்காக பொறுப்பாளிகளாக்கினார். சந்தேகமில்லாமல், அந்தக் குடிமக்களை, மரபியல் பிழையாக கருதப்படும் ஏதோவொன்றின் காரணமாக துன்மார்க்கராய் இருக்கும், பரிதாபமான, துர்ப்பாக்கிய ஜீவன்களாக அவர் கருதவில்லை. அதேவிதமாக, நோவாவின் நாட்களில் வாழ்ந்த ஜனங்களைச் சுற்றி அநேக தீய செல்வாக்குகள் இருந்தன; இருந்தபோதிலும், சீக்கிரத்தில் நிகழவிருந்த ஜலப்பிரளயத்திலிருந்து அவர்கள் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் அவர்கள் ஒரு தெரிவை, ஒரு தனிப்பட்ட தீர்மானத்தை, செய்ய வேண்டியதாய் இருந்தது. வெகு சிலரே சரியான தெரிவைச் செய்தனர். பெரும்பான்மையோர் அவ்வாறு செய்யவில்லை.
நாம் கடவுளுடைய தயவைப் பெற வேண்டுமென்றால் தனிப்பட்ட கட்டுப்பாடு தேவைப்படுகிறதென்பதை எபிரெய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் உறுதிசெய்கிறார்: “நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.”—எசேக்கியேல் 3:19.
கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த உதவி
நிச்சயமாகவே, நமது தினசரி வாழ்க்கையில் தனிப்பட்ட கட்டுப்பாட்டை செலுத்துவதற்கு நம் அனைவருக்குமே உதவி தேவைப்படுகிறது; நம்மில் அநேகருக்கு இது ஒரு சவாலாகும். ஆனால் நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. சுதந்தரிக்கப்பட்டிருக்கிற நமது பாவ மனச்சாய்வுகள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் இருக்கிறபோதிலும், நமது நடத்தையை முன்னேற்றுவிக்க நாம் விரும்பினால் அவரது பரிசுத்த ஆவி மற்றும் ஏவப்பட்ட சத்தியம் ஆகிய மிகச் சிறந்த உதவிகளை அவர் நமக்கு கிடைக்க செய்வார். நமக்கிருக்கும் எந்த மரபியல் சார்ந்த முன்விதியின் மத்தியிலும் நம்மை ஒருவேளை பாதிக்கும் எந்தப் புறம்பான செல்வாக்குகளின் மத்தியிலும், நம்மால் ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள’ முடியும்.—கொலோசெயர் 3:9, 10.
கொரிந்து சபையிலிருந்த அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் நடத்தையில் கருத்தைக் கவரும் மாற்றங்களைச் செய்தனர். ஏவப்பட்ட பதிவு நமக்கு இவ்வாறு சொல்கிறது: “வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11.
ஆகவே நம்முடைய அபூரணத்தோடு நாம் போராடிக்கொண்டிருந்தால், அவற்றிற்கு பணிந்துவிடாமல் இருப்போமாக. யெகோவாவுடைய உதவியோடு, ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக’ முடிந்திருக்கிறதென்பதை அநேக நவீன நாளைய கிறிஸ்தவர்கள் நிரூபித்திருக்கின்றனர். தங்கள் மனங்களை உண்மையுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவற்றால் நிரப்புகின்றனர்; மேலும் ‘அவற்றையே சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.’ அவர்கள் பலமான ஆவிக்குரிய உணவை உட்கொள்கின்றனர்; அதைப் பயன்படுத்துவதன் மூலம் நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறிந்திருக்கின்றனர்.—ரோமர் 12:2; பிலிப்பியர் 4:8; எபிரெயர் 5:14.
அவர்களது போராட்டங்கள், தற்காலிக தோல்விகள் மற்றும் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியைக்கொண்டு அவர்கள் பெற்ற இறுதியான வெற்றிகள் ஆகியவற்றை அறிந்துகொள்வது உற்சாகமூட்டுகிறது. நமது நடத்தையை மாற்றுவது அடிக்கடி இருதயத்தையும் அதன் ஆவல்களையும் உள்ளடக்குகிறது என்பதாக கடவுள் உறுதிப்படுத்துகிறார்: “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினாலே நீ துன்மார்க்கனுடைய வழிக்கும் . . . தப்புவிக்கப்படுவாய்.”—நீதிமொழிகள் 2:10-12, 17.
ஆகவே, நித்திய ஜீவனை—பொல்லாத உலகத்தின் தொந்தரவுகளில்லாத, பலவீனப்படுத்தும் அபூரணங்களில்லாத வாழ்க்கையை—உங்கள் இலக்காக ஆக்க நீங்கள் விரும்பினால், இப்போது உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தவும் பரம ஞானத்தால் வழிநடத்தப்படவும் ‘பிரயாசப்படுங்கள்.’ (லூக்கா 13:24) இச்சையடக்கமாகிய கனியைப் பிறப்பிக்கும்படி யெகோவாவின் பரிசுத்த ஆவியின் உதவியைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையை கடவுளுடைய சட்டங்களுக்கு இசைவாக கொண்டுவருவதை உங்களது இருதயத்தின் ஆவலாக்கி, இந்த அறிவுரையை பின்பற்றுங்கள்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) இயேசு கிறிஸ்துவினுடைய மீட்பின் பலியின்பேரிலுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் அனைத்து மரபியல் குறைபாடுகளையும் யெகோவா தேவன் சரிப்படுத்தப்போகும் அவரது புதிய உலகில் “நித்திய ஜீவனைப்” பற்றிக்கொள்வதற்கு, இந்த உலகத்தில் உங்களது வாழ்க்கையை கட்டுப்படுத்த நீங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்பது தகுந்தது!—1 தீமோத்தேயு 6:19; யோவான் 3:16.
[பக்கம் 9-ன் படம்]
பைபிளைப் படிப்பது, ஆழமாக பதிந்துள்ள பலவீனங்களை மேற்கொள்ள நமக்கு தேவைப்படும் பலத்தை அளிக்கும்
[பக்கம் 9-ன் படம்]
கடவுளுடைய ஒழுக்க தராதரங்களைப் பின்பற்ற பைபிள் படிப்பு நமக்கு உதவும்