இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் இன்பமாய் பொழுதைக் கழிப்பது எப்படி?
“நிறைய ஜாலியான காரியங்கள நாங்க நிச்சயமாவே செய்றோம். எங்க சபையில நாங்க ஒன்றுகூடிவருவதற்காக உண்மையான முயற்சி எடுக்கிறோம். ஆரோக்கியகரமானதாக இருக்கும் உல்லாசத்த நாங்க அனுபவிக்கிறோம். உலகத்தில உள்ள அநேக பிள்ளைகளால இப்படி சொல்ல முடியாது.”—ஜெனிஃபர்.
பொழுதுபோக்கு—அது எல்லாருக்குமே அவ்வப்போது தேவை. பொழுதுபோக்கானது, “ஒரு நபரின் மனம் மற்றும் உடல் சம்பந்தமான நலனிற்கு ஒரு முக்கிய பங்களிப்பை” கூட செய்யக்கூடும் என்பதாக தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்லுகிறது. ஏன், “நகைக்க ஒரு காலமுண்டு,” அதாவது, நேரத்தை மகிழ்ந்து அனுபவிப்பதற்கு ஒரு காலம் உண்டு என்று பைபிள்தானே சொல்லுகிறது!—பிரசங்கி 3:1, 4. a
“பொழுதுபோக்கு” என்ற வார்த்தை “இளைப்பாறும்பொருட்டு விளையாடுகை” என்று அர்த்தப்படுகிறது. (தமிழ் லெக்ஸிக்கன்) வருத்தகரமாக, ‘கேளிக்கைக்காக’ இளைஞர் செய்யும் அநேக காரியங்கள்—கட்டுப்பாடற்ற விருந்துகளை அனுபவிப்பது அல்லது போதைப்பொருள் மற்றும் மதுபான துர்ப்பிரயோகத்தில் ஈடுபடுவது அல்லது கள்ளத்தனமான பாலுறவு போன்றவை—உண்மையில் புத்துணர்வு அளிப்பவையாக இருப்பதேயில்லை, ஆனால் நாசகரமானவையாய் இருக்கின்றன. ஆகவே, அனுபவிக்கத்தக்கவையாயும் ஆரோக்கியகரமானவையாயும் இருக்கிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்பது உண்மையான சவாலாக இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ஜெனிஃபர் குறிப்பிடுவதுபோல, அது செய்யப்பட முடியும்!
ஒன்றுசேர்ந்து காரியங்களைச் செய்வது
சமீபத்தில் விழித்தெழு! இந்தப் பொருளைக் குறித்து அநேக இளைஞர்களைப் பேட்டி கண்டது. மற்ற இளைஞருடன் ஒன்றுகூடிவருவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். நீங்களும் அதேவிதமாக உணருகிறவராக இருந்து—ஆனால் பெரும்பாலும் அதற்கான ஓர் அழைப்பைப் பெறாதவராக இருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஏன் முன்முயற்சி எடுக்கக் கூடாது? உதாரணமாக, தென் ஆப்பிரிக்க பெண்ணாகிய லீ இவ்வாறு சொல்கிறாள்: “குறிப்பிட்ட ஒரு திரைப்படத்த எனக்கு பார்க்கணும்னு தோணினா, என்னுடைய நண்பர்களில ஒருத்திக்கு நான் ஃபோன் பண்ணுவேன், அப்படியே அதப்பற்றி மற்ற நண்பர்கள்கிட்டயும் சொல்லிருவோம்.” வழக்கமாக அவர்கள் அந்தத் திரைப்படத்தின் முந்தின நேர காட்சிக்குச் செல்வார்கள். அதற்குப்பின்னர் அவர்களுடைய பெற்றோர் வந்து அவர்களை வாகனத்தில் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள்; அவர்கள் ஒன்றாகச்சேர்ந்து உள்ளூர் உணவகம் ஒன்றில் சாப்பிடுகிறார்கள்.
விளையாட்டு நடவடிக்கைகளும் ஆரோக்கியகரமான பயிற்சிக்கும் நல்ல கூட்டுறவுக்கும் வாய்ப்புகளை அளிக்கின்றன. (1 தீமோத்தேயு 4:8) இளம் ரோலின் சொல்கிறாள்: “நான் எங்க போக விரும்புறேங்கிறத முதல்ல என்னுடைய குடும்பத்தாரோட கலந்து பேசுறேன், அதுக்கப்புறம் எங்கக்கூட சேர்ந்துக்கிறதுக்காக ஒரு சின்ன தொகுதிய அழைக்கிறோம்.” உண்மையில், மற்றவர்களுடன் சேர்ந்து பங்கெடுக்கத்தக்க ஏராளமான ஆரோக்கியகரமான விளையாட்டுகளை கிறிஸ்தவ இளைஞர் கண்டுபிடித்திருக்கின்றனர்: ஒருசிலவற்றைக் குறிப்பிடவேண்டுமானால், பனிச்சறுக்குதல், சைக்கிள் ஓட்டுதல், மென்னோட்டம், டென்னிஸ், தளக்கட்டுப் பந்தாட்டம், உதை பந்தாட்டம், கை பந்தாட்டம் விளையாடுதல் ஆகியவை.
ஓர் உல்லாசமான நேரத்தை அனுபவிப்பதற்காக அதிக பணத்தைச் செலவிடவோ உயர் ரக கருவி ஒன்றில் முதலீடு செய்யவோ வேண்டவே வேண்டாம். “என் பெற்றோரும், நண்பர்களும், நானும் பக்கத்துல உள்ள மலைகளிலயும் காட்டுப்பகுதிகளிலயும் நடந்து போய் நிறைய இன்பமான மணிநேரங்கள செலவழிச்சிருக்கோம்,” என்பதாக பருவவயது கிறிஸ்தவ பெண் ஒருத்தி சொல்கிறாள். “வெளியில சுத்தமான காற்றில நல்ல நண்பர்களோட இருப்பதுதானே, எவ்வளவு சந்தோஷகரமானதா இருக்குது!”
கட்டியெழுப்பும் தோழமைக் கூட்டங்கள்
என்றபோதிலும், அநேக இளைஞருக்கு, உல்லாசமாக இருப்பது என்பது தோழமைக் கூட்டங்களுக்குச் செல்வதை அர்த்தப்படுத்துகிறது. “சாப்பிடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் நண்பர்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்கிறாள் இளம் ஆவோடா. கிறிஸ்தவர்கள் மத்தியில் தோழமைக் கூட்டங்கள் அவற்றிற்குரிய இடத்தைக் கொண்டிருக்கின்றன. இயேசு கிறிஸ்துதாமே விசேஷ விருந்துகளுக்கும், கல்யாணங்களுக்கும், மற்ற சமூக கூட்டங்களுக்கும் சென்றார். (லூக்கா 5:27-29; யோவான் 2:1-10) அதேவிதமாகவே, ஆரம்பகால கிறிஸ்தவர்கள், உணவுக்காகவும் கட்டியெழுப்பும் கூட்டுறவுக்காகவும் ஒன்றுகூடிவந்த சமயங்களை அனுபவித்துக் கழித்தனர்.—யூதா 12-ஐ ஒப்பிடுக.
ஒன்றுகூடி வரும் ஓர் ஏற்பாட்டைச் செய்வதற்கு உங்கள் பெற்றோர் உங்களை அனுமதித்தால், பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் ஒவ்வொருவரும் இன்பமாகப் பொழுதைக் கழிப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும் நீங்கள் என்ன செய்யலாம்? கவனமான திட்டமிடுதலே அதற்கான வழிமுறை. (நீதிமொழிகள் 21:5) அதை இவ்வாறு விளக்கலாம்: எத்தனை நண்பர்களை உங்களால் சரியான மேற்பார்வையுடன் வைத்துக்கொள்ள முடியுமோ அத்தனை பேரை மட்டும் அழைப்பது புத்தியான காரியமாக இருக்கிறது. சிறிய கூட்டங்கள், ‘களியாட்டுகளாக,’ அல்லது ‘கட்டுப்பாடற்ற விருந்துகளாக’ மாறும் சாத்தியம் குறைவானதே.—கலாத்தியர் 5:21, பயிங்டன்.
‘ஒழுங்கற்றுத் திரிகிறவர்களுடன்’ கூட்டுறவு கொள்வதைத் தவிர்க்கும்படி முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள். (2 தெசலோனிக்கேயர் 3:11-15) மேலும், போக்கிரித்தனமாகவும் கட்டுப்பாடற்றவர்களாகவும் இருப்பதாக அறியப்பட்ட இளைஞரை அழைப்பது ஒரு கூட்டத்தை நாசமாக்க நிச்சயமான வழியாக இருக்கிறது. நீங்கள் யாரை அழைக்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றாலும், அதே நண்பர் வட்டத்திற்கே உங்களை கட்டுப்படுத்தாதீர்கள். “விரிவாக்குங்கள்,” சபையிலுள்ள முதிர்ந்தவர்கள் உட்பட, இன்னும் சிலரை அறிந்துகொள்ளுங்கள்.—2 கொரிந்தியர் 6:13, NW.
நீங்கள் சிற்றுண்டிகளை அளிக்கப்போகிறீர்களா? அப்படியானால், உங்கள் விருந்தினர்கள் இன்பமாக நேரத்தைக் கழிப்பதற்கு அவை ஊதாரித்தனமாக அல்லது செலவுமிக்கவையாக இருக்க வேண்டியதில்லை. (லூக்கா 10:38-42) “சிலநேரங்களில் நாங்கள் பிஸா இரவை வைத்திருக்கிறோம்,” என்கிறாள் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸன்சா என்றொரு பெண். விருந்தினர்கள் பெரும்பாலும் தாங்களே ஒருசில உணவு வகைகளைக் கொண்டுவர முன்வருவார்கள்.
ஒரு கூட்டத்தில் வெறுமனே டிவி பார்ப்பது, பாட்டு கேட்பது, அல்லது உரையாடுவது தவிர உங்களால் செய்ய முடிந்த சில காரியங்கள் யாவை? “நாங்க அந்த சாயங்காலம் பற்றி வழக்கமா முன்னாலேயே திட்டம் போட்டிறுவோம்,” என்கிறாள் ஸன்சா. “நாங்க கேம்ஸ் விளையாடியிருக்கோம் அல்லது நாங்க சேர்ந்து பாட்டு பாடுறதுக்காக யாராவது ஒருத்தர பியானோ போட ஏற்பாடு செய்திருக்கோம்.” மாஸானி எனப்பட்ட ஆப்பிரிக்க இளைஞன் இவ்வாறு சொல்லுகிறான்: “நாங்க சிலவேளை சீட்டு, ட்ராட்ஸ் [செக்கர்ஸ்], செஸ் விளையாடியிருக்கோம்.”
ஏற்கெனவே மேற்கோள் காட்டப்பட்ட ஜெனிஃபர், விழித்தெழு!-விடம் சொன்னாள்: “பைபிள் கேம்ஸ் விளையாடுறதுக்காக எங்கள அழைக்கிற ஒரு மூப்பர் எங்க சபையில இருக்கார். நல்லா விளையாடணும்னா உங்களுக்கு நல்ல பைபிள் அறிவு இருக்கணும்.” மற்ற இளைஞரைப் பார்த்து விழித்தெழு! பிரதிநிதி கேட்டார்: “பைபிள் கேம்ஸ் விளையாடுறது பொருந்தாத ஒண்ணுன்னு நீங்க நினைக்கலையா?” அவர்கள் உண்மையில் சத்தம்போட்டு “இல்லை!” என்று பதிலளித்தனர்.
“அது சவாலாக இருக்கிறது,” என்றாள் ஒரு பருவவயது பெண். “அது ஜாலியா இருக்கும்!” என்றாள் மற்றொருத்தி. பைபிள் விளையாட்டுகள் உல்லாசமாக இருப்பதற்காக விளையாடப்பட்டு, போட்டி மனப்பான்மை கட்டுக்குள் வைக்கப்படும்போது, அவை இன்பகரமானவையாகவும் அறிவூட்டுபவையாகவும் இருக்கலாம்!—ஜூன் 22, 1972, விழித்தெழு! பிரதியில், “ஒன்று கூடுவதை இன்பகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைத்துக்கொள்ளுதல்” என்பதைப் பார்க்கவும்.
குடும்ப உல்லாசம்
ஏதாவது சில வகையான பொழுதுபோக்குகளைக் குடும்பங்களாகச் சேர்ந்து அனுபவிப்பது பைபிள் காலங்களில் வழக்கத்திற்கு மாறானதாக இல்லை. (லூக்கா 15:25) என்றபோதிலும், பெற்றோரைப் பற்றிய குழந்தைகளின் புத்தகம் (ஆங்கிலம்) என்பதன் இளம் நூலாசிரியர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், “இந்தக் காலத்தில் பெற்றோரும் குழந்தைகளும் அவ்வளவு அலுவலாக இருப்பதால், காரியங்களைத் திட்டமிட எவருக்குமே நேரம் இருப்பதில்லை . . . வெறுமனே உல்லாசமாக இருக்கும் காரியங்களைச் சேர்ந்து செய்வதற்காக ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் நேரத்தைச் செலவிடும்படி பார்த்துக்கொள்வது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்.”
“வெள்ளிக்கிழமை எங்கள் குடும்ப தினம்,” என்கிறாள் ஆப்பிரிக்க இளம் பெண் பாக்கி. “நாங்க வழக்கமா ஒண்ணா சேர்ந்து கேம்ஸ் விளையாடுவோம்.” உங்கள் உடன்பிறந்தவர்களையும் மறந்துவிடக் கூடாது. இளம் ப்ரான்வன் சொல்கிறாள்: “வரைதலையும் மற்ற கலைச்சுவையுள்ள காரியங்களயும் என்னுடைய தங்கச்சிகூட சேர்ந்து செய்றது எனக்கு சந்தோஷமா இருக்குது.” நீங்கள் முன்முயற்சி எடுத்து உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து செய்ய ஏதாவதொரு உல்லாசமான நடவடிக்கையைப் பற்றி சொல்ல முடியுமா?
நீங்கள் தன்னந்தனியாக இருந்தால்
நீங்கள் தன்னந்தனியாக இருந்தால் என்ன செய்வது? நீங்கள் எப்போதுமே சலிப்புற்றவராகவும் தனிமையாகவும் இருக்க வேண்டும் என்று அது அர்த்தப்படுத்துவதில்லை. அப்படிப்பட்ட நேரங்களைப் பயன்படுத்துவதற்கு, பயன்தரத்தக்கதும் அனுபவிக்கத்தக்கதுமான அநேக வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, விருப்ப வேலைகள். இசை கற்றுக்கொள்வதை பைபிள் காலங்களிலிருந்தே ஆண்களும் பெண்களும் அதிக பயன்தருவதாய் கண்டிருக்கின்றனர். (ஆதியாகமம் 4:21; 1 சாமுவேல் 16:16, 18) “நான் பியானோ வாசிக்கிறேன்,” என்கிறாள் ரேச்சல். “சலிப்பா இருக்கிறப்ப செய்யக்கூடிய ஒரு காரியம் அது.” உங்களுக்கு இசை நாட்டம் இல்லை என்றால், தையல், தோட்டக்கலை, தபால் தலை சேகரித்தல், அல்லது அயல் மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு அனுபவிக்கக்கூடும். ஒரு போனஸாக, பிற்பட்ட வருடங்களில் உங்களுக்கு உதவியானவையாய் நிரூபிக்கும் சில திறமைகளையும்கூட நீங்கள் வளர்த்துக்கொள்ளக்கூடும்.
ஈசாக்கு போன்ற விசுவாசமுள்ள மனிதர், தியானம்பண்ணுவதற்காக தனிமையான நேரங்களை நாடினர், என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (ஆதியாகமம் 24:63) ஹான்ஸ் என்ற பெயருடைய ஓர் இளம் ஆஸ்திரிய மனிதன் சொல்கிறான்: “சூரியன் அஸ்தமிப்பதை பார்க்கிறதுக்காக நான் அவ்வப்போது தோட்டத்திலுள்ள ஒரு அமைதலான இடத்துக்கு போய் உட்காருவேன். இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்து, என்னை யெகோவாகிட்ட நெருக்கமா உணர வைக்குது.”
யெகோவாவின் சேவையில் ‘மகிழ்ந்திருத்தல்’
யெகோவா தேவனை சேவிப்பதில் கிறிஸ்து ‘மகிழ்ச்சியை’ காண்பார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் சொன்னது. (இசையாஸ் ஆகமம் 11:3, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வது உண்மையில் பொழுதுபோக்காக இல்லை என்றாலும், அது புத்துணர்ச்சியூட்டுவதாயும் மனநிறைவு அளிப்பதாயும் இருக்கலாம்.—மத்தேயு 11:28-30.
ஏற்கெனவே மேற்கோள் காட்டப்பட்ட ஹான்ஸ், வேறொரு மகிழ்விக்கும் அனுபவத்தை நினைவுகூருகிறான். அவன் சொல்கிறான்: “[வணக்கத்திற்காக] மாநாட்டு மன்றம் ஒண்ண கட்டுற இடத்துல செலவிட்ட அந்த வார இறுதி நாட்கள நானும் என் நண்பர்களும் நெனச்சு பார்க்க விரும்புறோம். எப்படி ஒண்ணா சேர்ந்து வேல செய்றதுன்னு நாங்க கற்றுக்கொண்டோம், மேலும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரிஞ்சுகிட்டோம். பின்னால நெனச்சு பார்த்தா, ஜாலியாவும் பிரயோஜனமாவும் இருந்த ஒண்ண செஞ்சோங்கிற திருப்தியான உணர்ச்சி எங்களுக்கு இருக்கு.”
இந்தக் கிறிஸ்தவ இளைஞர் அளிக்கும் சான்று ஒரு உண்மையை தெள்ளத்தெளிவாக்குகிறது: நீங்கள் இன்பமாகப் பொழுதைக் கழிப்பதைத் தவறவிட வேண்டியதில்லை. பைபிள் நியமங்களைப் பின்பற்றுங்கள். கற்பனாசக்தியைப் பயன்படுத்துங்கள்! ஆரோக்கியகரமான முன்முயற்சிகளை எடுங்கள்! உங்களைத் தகர்ப்பவையாய் இராமல் உங்களைக் கட்டியெழுப்புகிறவையாய் இருக்கும் வழிகளில் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதைக் கண்டறிவீர்கள்.
[அடிக்குறிப்பு]
a எமது ஜூலை 22, 1996 பிரதியில், “இளைஞர் கேட்கின்றனர் . . . மற்ற இளைஞர் ஏன் எல்லா விதமான கேளிக்கைகளையும் அனுபவிக்கின்றனர்?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
“வெளியில சுத்தமான காற்றில நல்ல நண்பர்களோட இருப்பதுதானே, எவ்வளவு சந்தோஷகரமானதா இருக்குது!”
[பக்கம் 23-ன் படம்]
நண்பர்களுடன் இன்பமாய் பொழுதைக் கழிப்பதற்கு நீங்கள் அதிகமான பணத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை