நம்புவதற்கரிய சந்திப்பு
“என் வாழ்க்கையில் நான் செய்திருக்கும் மிகக் கிளர்ச்சியூட்டும் காரியம்!” தனது நம்புவதற்கரிய சந்திப்பை க்றிஸ்டி அவ்வாறே விவரித்தாள். மெக்ஸிகோ வளைகுடாவில் டால்ஃபின்களுடன் சேர்ந்து நீந்த முடிந்திருந்தால் நீங்களும் இப்படித்தான் உணர்ந்திருப்பீர்களா?
டால்ஃபின்கள் நீந்துவதையோ, தங்கள் வால்களை வைத்து பின்னோக்கிச் செல்வது, நீரிலிருந்து எழும்பி மலைப்பூட்டும் உயரங்களுக்குத் துள்ளுவது போன்ற விதங்களில் நீரில் சாகசங்களைச் செய்வதையோ, மனிதர் தங்கள்மீது சவாரி செய்யவிடுவதையோ காண்பதிலிருந்து ஒவ்வொருவருமே கிளர்ச்சி அடைகிறார்கள். இந்தக் காட்சிகளை வெறுமனே காண்பதுதானே, நீருக்குள் சென்று அந்த டால்ஃபின்களுடன் விளையாட வேண்டுமென்று ஒரு நபரை ஆசைப்பட வைக்கிறது.
க்றிஸ்டி எப்போதுமே இவ்வாறு உணர்ந்திருக்கிறார். பின்னர் ஒரு நாள், அவர் மெக்ஸிகோ வளைகுடாவில் படகோட்டிக்கொண்டும் நீந்திக்கொண்டும் இருக்கையில், அவருக்கு முன்பாக ஒரு தலை திடீரென்று எட்டி பார்த்தது. சீக்கிரத்தில், தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ள மூன்று டால்ஃபின்கள் தங்களுடன் விளையாட ஒரு கூட்டாளியைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைப்பதுபோல் தோன்றியது. முதலில், க்றிஸ்டிக்குக் கொஞ்சம் பயமாகவே இருந்தது, ஆனால் பின்னர் அவர் அந்த டால்ஃபின்களுடன் பழக ஆரம்பித்ததும் அவரது பயம் கிளர்ச்சியாக மாறியது. அவை அடுத்து என்ன செய்யப்போகின்றன என்பதைப் பார்ப்பதற்காக நிலைமையை அவற்றின் கையில் விட்டுவிட்டு, அவர் பதற்றமின்றி இருந்தார்.
க்றிஸ்டி சொன்னார்: “ஒரு டால்ஃபின் திடீரென்று எனக்கு முன்பாக எட்டிப் பார்க்கும்—அப்போது, நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். நான் அதனுடன் கொஞ்சிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க ஆரம்பித்தேன்—எப்படி என்னுடைய நாயுடன் செய்வேனோ அதேப்போல.”
டால்ஃபின்களின் புத்திக்கூர்மையின் காரணமாக அவை ஆட்களை மகிழ்விப்பதில் பிரபலமானவையாக இருக்கின்றன; மேலும் அவை மக்களிடம் சிநேகபான்மையுடன் இருப்பதால், அவற்றின் சாகசங்களைச் செய்வதற்காக டால்ஃபின்களுக்கு எப்போதும் உணவைக் கொடுத்து வசப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவற்றைப் பயிற்றுவிப்பவர்களில் பெரும்பாலானோர் சொல்கின்றனர்.
டால்ஃபின்களுடன் சேர்ந்து வேலைசெய்வதில் மிகவும் அனுபவிக்கத்தக்க காரியம் எதுவென்று கேட்கப்பட்டபோது, அ.ஐ.மா.-வில் ஃப்ளாரிடாவிலுள்ள ஸீ உவர்ல்டின் விலங்கு நடத்தை ஆய்வாளராகிய லிஸ் மாரிஸ் இவ்வாறு சொன்னார்: “அது அவற்றின் இயல்பு என்று நினைக்கிறேன். அவை இயல்பாகவே அவ்வளவு விளையாட்டுத்தன்மையுடனும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் இருப்பதால், நீங்கள் நிஜமாகவே அவற்றுடன் ஒரு தொடர்பை வளர்த்துக்கொள்ள முடியும் . . . தொடுதலுக்கும் பாசத்துக்கும் அவை நன்கு பிரதிபலிக்கின்றன.” கடவுளால் வாக்குப்பண்ணப்பட்ட புதிய காரிய ஒழுங்குமுறையில், நாம் அனைவருமே க்றிஸ்டியுடையதைப் போன்ற நம்புவதற்கரிய அநேக சந்திப்புகளை எதிர்ப்பட முடியும்.