குற்றச்செயல் அதிலிருந்து விடுபட்ட நாடெங்கே?
அவருடைய ஈமச் சடங்கு, பல்லாண்டுகளில் மாஸ்கோ கண்டிருந்திராத பெரிய சடங்குகளில் ஒன்றாய் இருந்தது. மார்ச் 1, 1995-ல் கொலைகாரர்களின் குண்டுகளால் திடீரென உயிரிழந்திருந்த அந்த இளம் ரஷ்யனுக்குத் தங்கள் இறுதி மரியாதையை செலுத்துவதற்கு, வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்றனர். கிட்டத்தட்ட அவருடைய வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட விலட்யிஸலாஃப் லிஸ்ட்யெஃப், 1994-ல் அந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராய்த் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தார்; அவர் தொலைக்காட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற நபராக இருந்துவந்தார்.
மூன்றுக்கும் குறைவான வாரங்களுக்குப் பின்பு, மார்ச் 20-ல், அதன் அதிகாலை உச்சக்கட்டப் போக்குவரத்து நேரத்தின்போது, டோக்கியோ சுரங்க ரயில்வே அமைப்பு ஒரு நச்சு வாயுவினால் தாக்கப்பட்டது. பலர் இறந்தனர்; இன்னும் பலர் கவலைக்கிடமாகக் காயமடைந்தனர்.
பிறகு, ஏப்ரல் 19-ல், ஓக்லஹாமா சிட்டி, உலகெங்கும் தொலைக்காட்சி காண்போரின் முக்கிய கவனத்தைக் கவர்ந்தது. மத்தியக் கூட்டாட்சிக்குட்பட்ட கட்டடம் ஒன்று பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட ஒரு குண்டால் அப்போதுதானே தகர்க்கப்பட்டதால், சேதமடைந்து உருக்குலைந்திருந்த உடல்களை மீட்புப் பணியாளர்கள் வெளியே இழுக்கையில், அவர்கள் பயத்துடன் நோக்கினர். இறந்தோரின் எண்ணிக்கை 168-ஆக இருந்தது.
இவ்வாண்டு ஜூனின் பிற்பகுதியில், சவூதி அரேபியாவிலுள்ள டாரானுக்கு அருகில், அப்படிப்பட்ட இன்னொரு சம்பவம், 19 அமெரிக்கர்களைக் கொன்றதுடன், சுமார் 400 பேரைக் காயப்படுத்தியது. குற்றச்செயல் அதிகரிப்பது புதிய பரிமாணங்களை எடுத்துவருவதை இந் நான்கு சம்பவங்களும் விளக்குகின்றன. பயங்கரவாதத்தின் மிருகத்தனமான செயல்களினால் “சாதாரண” குற்றச்செயல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கு ஒவ்வொருவரும் ஆளாகியிருக்கும் விதத்தை மூன்று சம்பவங்களும்—ஒவ்வொன்றும் அதன் குறிப்பிடத்தக்க விதத்தில்—காட்டுகின்றன. நீங்கள் வீட்டிலிருந்தாலோ, வேலைக்குச் சென்றாலோ, அல்லது தெருவில் இருந்தாலோ, நீங்களும் அதன் பலியாட்களில் ஒருவராகும்படி குற்றச்செயல் உங்களை எட்டலாம். உண்மையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிகமாய் இப்போது குற்றச்செயலுக்கு பலியாகும் சாத்தியமிருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்தவர்களில் கிட்டத்தட்ட முக்கால் பாகத்தினர் நினைப்பதாக ஒரு பிரிட்டிஷ் சுற்றாய்வு காட்டியது. நீங்கள் வாழும் இடத்திலும் அதைப்போன்ற சூழ்நிலை இருக்கலாம்.
சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமக்கள், குற்றச்செயலை வெறுமனே கட்டுப்படுத்துவதற்கும் அதிகமானதைச் செய்யும் ஓர் அரசாங்கத்துக்காக ஏங்குகின்றனர். உண்மையிலேயே அதை ஒழிக்கும் ஓர் அரசாங்கம் அவர்களுக்கு வேண்டும். சில அரசாங்கங்கள் குற்றச்செயலைத் தடுப்பதில் பிறவற்றைவிட அதிக திறம்பட்ட விதத்தில் செயல்படுவதாகக் குற்றச்செயலின் ஒப்பீட்டு எண்ணிக்கை தெரிவித்தாலும், மனித அரசாங்கம் குற்றச்செயலுக்கு எதிரான அதன் முயற்சியில் தோல்வியுறுவதாக அந்த மொத்த சூழ்நிலை காட்டுகிறது. எனினும், அரசாங்கம் குற்றச்செயலுக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் என்று நம்புவது நிஜமற்றதாகவோ, கற்பனையாகவோ இல்லை. ஆனால் எந்த அரசாங்கம்? எப்போது?
[பக்கம் 4,5-ன் பெட்டி/வரைப்படம்]
குற்றச்செயல் நிறைந்த ஓர் உலகம்
ஐரோப்பா: ஒரு குறுகிய காலப்பகுதியில், இத்தாலியில் சொத்துக்களுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றச்செயலின் எண்ணிக்கை “முன்பு சாத்தியமற்றதாய்க் கருதப்பட்ட உச்சக்கட்ட எண்ணிக்கையை அடைந்தது” என்பதாக இத்தாலியைச் சேர்ந்த புத்தகம் ஒன்று (“தி ஆப்பர்ச்சூனிட்டி அண்ட் தி தீஃப்”) கூறினது. 1985-ல் குற்றச்செயல்கள் 1,00,000 பேருக்கு 490 என்றும், 1992 வாக்கில் 922 என்றும் முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு குடியரசான உக்ரேன் அறிக்கை செய்தது. அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. “நாம் வாழ வேண்டும்—உயிரோடிருக்க வேண்டும்—இப் பயங்கரமான காலப்பகுதியில் தப்பிப்பிழைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறோம் . . . நமக்கு ரயில் வண்டியில் போக அச்சம்—அது தடம் புரளலாம், அல்லது நாசம் செய்யப்படலாம்; பறக்க அச்சம்—அடிக்கடி கடத்தப்படலாம், அல்லது அவ் விமானம் நொறுங்கலாம்; சுரங்கப்பாதையில் ஓட்டிச்செல்ல அச்சம்—ஏனெனில் மோதல்கள் அல்லது வெடித்தல்கள் சம்பவிக்கலாம்; தெருக்களில் நடக்க அச்சம்—ஏனெனில் இரண்டு அல்லது பல முனைகளிலிருந்து செலுத்தப்படும் குண்டுவீச்சில் நீங்கள் சிக்கிக் கொள்ளலாம், அல்லது வழிப்பறி செய்யப்படலாம், கற்பழிக்கப்படலாம், அடிக்கப்படலாம், அல்லது கொல்லப்படலாம்; கார் ஓட்டிச்செல்ல அச்சம்—அது தீ வைக்கப்படலாம், தகர்க்கப்படலாம், அல்லது திருடப்படலாம்; அடுக்கு மாடி கட்டட நடைபாதைகளில், சிற்றுண்டிச்சாலைகளில், அல்லது கடைகளில் நுழைய அச்சம்—அவற்றுள் ஏதேனும் ஒன்றில் உங்களுக்குக் காயம் ஏற்படலாம், அல்லது நீங்கள் கொல்லப்படலாம்” என்று ரஷ்ய செய்தித்தாள் ஒன்று (“விவாதங்களும் உண்மைகளும்”) எழுதினதில் ஆச்சரியமில்லை. ஹங்கேரியைச் சேர்ந்த பத்திரிகையான HVG ஹங்கேரியின் வெப்பம் மிகுந்த ஒரு நகரை, ‘மேஃபியா தலைமையகத்தோடு’ ஒப்பிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் “ஒவ்வொரு புதுவித குற்றச்செயலுக்கும் தோற்றுமூலமாய் இருந்திருக்கிறது; . . . மேஃபியாக்களோடு போராடுவதற்கு போலீஸ் தயார்நிலையில் இல்லாதிருப்பதை மக்கள் காண்கையில், அச்சத்தின் சங்கிலித் தொடர்பான நிகழ்ச்சி அதிகரித்து வருகிறது” என்று கூறினது.
ஆப்பிரிக்கா: ஒரு மேற்கு ஆப்பிரிக்க தேசத்தில் “உயர் கல்வி நிறுவனங்கள்” “இரகசியமான கொள்கையினையுடைய பிரிவின் உறுப்பினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாத அலையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்: அர்த்தமுள்ள ஏதாவதொரு கல்வியைப் பயிலும் திறமையில் வளருவதைக் கிட்டத்தட்ட தடை செய்யும் அளவுக்கு அதை அனுபவித்து வந்தன” என்று நைஜீரியாவின் டெய்லி டைம்ஸ் அறிக்கை செய்தது. அது தொடர்ந்து இவ்வாறு கூறினது: “அந்த அலை உயிர் மற்றும் உடைமையிழப்போடு சேர்ந்து பரவலாகி வருவது அதிகரிக்கிறது.” மற்றொரு ஆப்பிரிக்க நாட்டைப் பற்றி, தென் ஆப்பிரிக்காவின் தி ஸ்டார் இவ்வாறு அறிக்கை செய்தது: “இரண்டு விதமான வன்முறைகள் உள்ளன: ஜாதிகளுக்கிடையேயான போர், மற்றும் சாதாரண குற்றச்செயல் சம்பந்தப்பட்ட வன்முறை. முதல் விதம் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருக்கிறது, இரண்டாவது விதம் மிகவும் அதிகரித்துள்ளது.”
ஓஷேனியா: ஒவ்வொரு ஆண்டும் “குற்றச்செயலின் காரணமாக குறைந்தபட்சம் 2,700 கோடி டாலர் செலவாகிறது, அல்லது ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைக்கும் கிட்டத்தட்ட 1,600 டாலர் செலவாகிறது” என்று தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிரிமினாலஜி ஆஃப் ஆஸ்திரேலியா மதிப்பீடு செய்தது. இது “உள்நாட்டு மொத்த உற்பத்திப் பொருளில் சுமார் 7.2 சதவீதமாய்” இருக்கிறது.
அமெரிக்காக்கள்: சமீப காலத்தில் அடுத்தடுத்து 12 ஆண்டுகளில், வன்முறையான குற்றச்செயலில் ஓர் அதிகரிப்பை கனடாவின் தி குளோப் அண்ட் மெய்ல் அறிக்கை செய்தது; இவ்வதிகரிப்பெல்லாம், “கடந்த பத்தாண்டுக்கும் மேலாக வன்முறையில் 50 சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு போக்கின் பாகமாய் இருக்கின்றன.” இதற்கிடையில் கொலம்பியாவில், சமீப ஆண்டொன்றில், 1,714 ஆள் கடத்தல்கள் செய்யப்பட்டிருப்பதாக, அதாவது, “அதே காலப்பகுதியில் உலகின் பிற பாகங்களில் பதிவாகியுள்ள ஆள் கடத்தல்கள் எல்லாவற்றையும்விட இரு மடங்குக்கும் அதிகமானவை” என்று கொலம்பியாவின் எல் டியெம்ப்போ அறிக்கை செய்தது. மெக்ஸிகோவின் நீதித்துறையின்படி, சமீப ஆண்டொன்றின்போது, தலைநகரில் நான்கு மணிநேரத்துக்கு ஒரு முறை பாலியல் குற்றச்செயல் இழைக்கப்பட்டது. தனி நபரின் மதிப்பு குறைந்திருப்பது இந்த 20-வது நூற்றாண்டை வேறுபடுத்திக் காட்டுகிறது என்று ஒரு பெண் பிரதிநிதி குறிப்பிட்டுக் காட்டினார். “உபயோகித்த பிறகு தூக்கியெறியும் ஒரு சந்ததியில் நாம் வாழ்கிறோம்” என்று அவர் முடிவாகக் கூறினார்.
உலகளவு: “1970-களிலும் 1980-களிலும் உலகளவில் குற்றச்செயல் நடவடிக்கையில் ஒரு நிலையான அதிகரிப்பை” தி யுனைட்டெட் நேஷன்ஸ் அண்ட் க்ரைம் ப்ரிவென்ஷன் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. அது இவ்வாறு கூறுகிறது: “பதிவு செய்யப்பட்ட குற்றச்செயல்களின் எண்ணிக்கை 1975-ல் சுமார் 33 கோடியிலிருந்து 1980-ல் கிட்டத்தட்ட 40 கோடியாக அதிகரித்தது; மேலும் 1990-ல் 50 கோடியை எட்டியிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது.”