குற்றச்செயலை ஒழிக்க போராடுதல்
“சலிப்பே இளைஞர் குற்றச்செயலுக்கு முக்கியக் காரணம் என்று இளைஞர் உறுதியுடன் சொல்கின்றனர்” என்பதாக பிரிட்டனைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றின் தலைப்புச் செய்தி கூறியது. “அதிகரிக்கும் குற்றச்செயலுக்கு வீட்டில் நடக்கும் சண்டைகளே காரணம்” என்பதாக மற்றொரு செய்தித்தாள் கூறியது. மேலும் மூன்றாவது செய்தித்தாள் இவ்வாறு கூறியது: “அடிமையாதல்கள் (addictions) ‘ஆயிரக்கணக்கான குற்றச்செயல்களைத் தூண்டுகின்றன.’ ” மணிலாவில் நிகழும் வன்முறையான குற்றச்செயல் அனைத்திலும் 75 சதவீதம் போதைப்பொருளை துர்ப்பிரயோகிப்பவர்களால் செய்யப்பட்டதாக பிலிப்பைன் பனோரமா பத்திரிகை மதிப்பீடு செய்தது.
குற்றச்செயல் சம்பந்தமான நடத்தையைத் தூண்டுவதற்குப் பிற காரணிகளும் இருக்கலாம். “மிகுதியான செல்வம் ஒரு பக்கமும், வறுமை மறுபக்கமும்” இருப்பது, நைஜீரியாவைச் சேர்ந்த போலீஸ் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலால் குறிப்பிட்டுக் காட்டப்பட்ட ஒன்றாகும். ஒத்த வயதினர் அழுத்தமும் குறைவான வேலை எதிர்பார்ப்புகளும், வலிமையான தடுப்புச் சட்டங்கள் இல்லாமையும், மதிப்புவாய்ந்த குடும்ப உறவுகளில் பொதுவாய் முறிவு ஏற்படுதலும், அதிகாரம் மற்றும் சட்டத்திற்கு மரியாதை காட்டாமையும், திரைப்படங்களிலும் வீடியோக்களிலும் மிதமிஞ்சிய வன்முறை இருப்பதும்கூட குறித்துக் காட்டப்படுகின்றன.
குற்றச்செயலில் ஈடுபடுவதால் பிரயோஜனம் ஒன்றுமில்லை என்று மக்கள் இனிமேலும் நம்பாதிருப்பது மற்றொரு காரணியாய் இருக்கிறது. பல்லாண்டு காலப்பகுதியில், “புகார் செய்யப்பட்ட திருட்டுக்களின் எண்ணிக்கையும், குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டோரின் எண்ணிக்கையும் எதிர்ப்போக்கில் சென்றிருக்கின்றன” என்று இத்தாலியைச் சேர்ந்த பலோனா யுனிவர்ஸிட்டியின் சமூகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். “புகார் செய்யப்பட்ட திருட்டுகளின் எண்ணிக்கையோடு, குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை ஒப்பிட்டால், 50க்கு 0.7 என்ற விகிதத்தில் சரிந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறியிருந்த பின்வரும் வார்த்தைகள் விசனகரமானவையும் அதே சமயத்தில் உண்மையானவையுமாய் இருக்கின்றன: “அதிகரித்துவரும் குற்றச்செயல், எல்லா நவீன தொழில்மயமாக்கப்பட்ட சமூகங்களின் ஓர் அம்சமாய்த் தோன்றுகிறது; பிரச்சினையின்மீது ஒரு குறிப்பிட்ட தாக்கத்தைக் கொண்டிருந்திருப்பதற்கு, சட்டம் மற்றும் குற்றத்திற்கான தண்டனை போன்றவற்றில் எவ்வித முன்னேற்றமும் காட்டப்பட முடியவில்லை. . . . பொருளாதார வளர்ச்சியும் தனிப்பட்ட வெற்றியும் செல்வாக்கு செலுத்தும் மதிப்பீடுகளாய் இருக்கும் நவீன நகர்ப்புற சமுதாயத்திற்கு, குற்றச்செயல் விகிதங்கள் அதிகரிப்பது தொடராதென நினைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.”
இந் நோக்குநிலை மிகவும் நம்பிக்கையற்றதா?
இச் சூழ்நிலை உண்மையிலேயே அவ்வளவு மோசமானதா? சில இடங்களில் குற்றச்செயல் குறைந்திருப்பதாக அறிக்கை செய்யப்படவில்லையா? மெய்தான், சில இடங்களில் அவ்விதம் குறைந்திருப்பதாய் அறிக்கை செய்யப்படுகின்றன, ஆனால் புள்ளி விவரங்கள் தவறாக வழிநடத்துவதாய் இருக்கலாம். உதாரணமாக, கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பிலிப்பீன்ஸில் குற்றச்செயல் 20 சதவீதம் குறைந்ததாய் அறிக்கை செய்யப்பட்டது. ஆனால் கார் திருடர்களும் வங்கிக் கொள்ளையர்களும் முறையே, காரைத் திருடுவதையும் வங்கியைக் கொள்ளையடிப்பதையும் நிறுத்தியிருந்தனர் என்றும், “ஆள் கடத்தல்களை ஆரம்பித்திருந்தனர்” என்றும் ஓர் அதிகாரி நம்புவதாக ஏஷியாவீக் விளக்கினது. ஒருசில வங்கிக் கொள்ளைகளும் கார் திருட்டுக்களும் குற்றச்செயல்களின் மொத்த எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்குக் காரணமாய் இருந்தபோதிலும், ஆள்கடத்தல்களில் நான்கு மடங்கு அதிகரிப்பை முன்னிட்டுப் பார்க்கையில் இக் குறைவானது, அதன் முக்கியத்துவத்தில் அதிகத்தை இழந்தது!
ஹங்கேரியைப் பற்றி அறிக்கை செய்கையில், HVG பத்திரிகை இவ்வாறு எழுதியது: “1993-ன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், குற்றச்செயல் எண்ணிக்கைகள் 6.2 சதவீதம் குறைந்துள்ளன. அந்தக் குறைவு . . . முக்கியமாய் நிர்வாக சம்பந்தமான மாற்றங்களால் ஏற்பட்டவை என்பதைப் போலீஸார் குறிப்பிட மறந்தனர்.” இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட திருட்டு, மோசடி, அல்லது நாச வேலைகளில் உட்பட்ட மதிப்பின் அளவு, 250 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆகவே இந்த அளவுக்குக் குறைவான மதிப்புள்ள சொத்து சம்பந்தமான குற்றச்செயல்கள் இனி பதிவு செய்யப்படுவதில்லை. சொத்தை உட்படுத்தும் குற்றச்செயல்களே நாட்டின் குற்றச்செயல்கள் அனைத்திலும் முக்கால் பாகமாய் இருப்பதால், குற்றச்செயலில் குறைவு நிஜமாய் இருக்க வாய்ப்பில்லை.
குற்றச்செயலின் துல்லியமான எண்ணிக்கைகளைக் கணக்கிடுவது கடினம் என்பது ஒத்துக்கொள்ளத்தக்கது. பல குற்றச்செயல்கள்—ஒருவேளை குறிப்பிட்ட வகைகளில் 90 சதவீதம் வரை—புகார் செய்யப்படாமல் போவது காரணமாக உள்ளது. ஆனால் குற்றச்செயல் குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதைப் பற்றி விவாதிப்பது உண்மையில் பொருத்தமற்றது. குற்றச்செயல் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவரேயன்றி, வெறுமனே குறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவதில்லை.
அரசாங்கங்கள் முயலுகின்றன
மிக அதிகம் வளர்ச்சியடைந்துள்ள நாடுகள், குற்றச்செயல் கட்டுப்பாட்டுக்கு அவற்றின் வருடாந்தர பட்ஜெட்டுகளில் சராசரியாக 2 முதல் 3 சதவீதம் வரையான பணத்தைச் செலவிடுகின்றன, அதே சமயத்தில் வளர்முக நாடுகள் அதைவிட அதிகமாய், சராசரியாக 9 முதல் 14 சதவீதம் வரையான பணத்தைச் செலவிடுகின்றன என்று 1990-ல் ஐக்கிய நாடுகளின் ஒரு சுற்றாய்வு காட்டினது. போலீஸ் படைகளை அதிகரிப்பதற்கும் மேம்பட்ட வசதிகளை அவற்றிற்கு அளிப்பதற்கும் சில இடங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் விளைவுகள் பொருத்தமற்றவையாய் இருக்கின்றன. ஹங்கேரியின் குடிமக்களில் சிலர் இவ்வாறு புகார் செய்கின்றனர்: “குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் போதுமானளவு போலீஸ்காரர்கள் இருப்பதில்லை; ஆனால் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கைது செய்வதற்குப் போதுமானவர்கள் எப்பொழுதுமே இருக்கின்றனர்.”
குற்றச்செயல் சம்பந்தமாகக் கடுமையான சட்டங்கள் இயற்றுவது அவசியமாயிருப்பதைப் பல அரசாங்கங்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளன. உதாரணமாக, டைம் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் ஆள்கடத்தல்கள் அதிகரித்துவருவதால்,” அங்குள்ள அரசாங்கங்கள் “கடுமையானதும் பலனற்றதுமான” சட்டங்களை இயற்றுவதன் மூலம் பிரதிபலித்துள்ளன. . . . சட்டங்களை இயற்றுவது ஒரு விஷயமாயிருக்க, அவற்றைப் “பொருத்துவது மற்றொரு விஷயமாய் இருக்கிறது” என்று அது ஒத்துக்கொள்கிறது.
பிரிட்டனில், 1992-ல் இருந்த குறைந்தபட்சம் 40 லட்சம் வீடுகளை உள்ளடக்குவதாய், 1,00,000-க்கும் மேற்பட்ட அயலவர் காவல் திட்டங்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. அதைப்போன்ற திட்டங்கள் மத்திப 1980-களில் ஆஸ்திரேலியாவில் செயற்படுத்தப்பட்டன. அவர்களுடைய நோக்கம், “பொதுமக்கள் பாதுகாப்பு பற்றி குடிமக்களுக்கிருக்கும் உணர்வை மேம்படுத்துவதன் மூலம், அயலவரிடம் நடைபெறும் குற்றச்செயலையும் சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சிகளையும் புகார் செய்வதில் குடியிருப்பாளர்களுடைய மனோபாவங்களையும் நடத்தையையும் மேம்படுத்துவதன் மூலம், மேலும் உடைமைகளை அடையாளப்படுத்துவதன் உதவியாலும், பலனுள்ள பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்துவதாலும், குற்றச்செயலுக்கு ஆளாவதைக் குறைப்பதன் மூலம்” குற்றச்செயலைக் குறைப்பது என்று ஆஸ்திரேலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிரிமினாலஜி என்ற புத்தகம் கூறுகிறது.
போலீஸ் நிலையங்களை வணிகத்தலங்களுடன் இணைப்பதற்கு, மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்கள் இணைப்புகளைக் கொண்ட தொலைநோக்கி சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. போலீஸ், வங்கிகள், மற்றும் கடைகளால் குற்றத் தடுப்பாகவோ, சட்ட மீறுதல் செய்பவர்களைக் கண்டுபிடிக்கும் ஒரு கருவியாகவோ வீடியோ புகைப்படக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கொள்ளையடிப்பவர்களையும் கார் திருடுபவர்களையும் பிடிக்கும் முயற்சியில், நைஜீரியாவில் உள்ள போலீஸ் துறையினர், நெடுஞ்சாலைகளில் தணிக்கைச் சாவடிகளைக் கொண்டிருக்கின்றனர். மோசடியை எதிர்த்துப் போராட, வணிகத்தில் நடைபெறும் தவறான நடவடிக்கைகள் சம்பந்தமாக ஒரு செயற்படையை அரசாங்கம் நிறுவியுள்ளது. சமுதாயத் தலைவர்களாலான போலீஸ்-சமூக உறவுக் குழுக்கள், குற்ற நடவடிக்கையையும், சந்தேகத்துக்குரிய இயல்புடையோரையும் பற்றி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆளின்றி பொதுவாக வீடுகள் விடப்படுவதில்லை என்றும் பலர் காவல் நாய்களை வைத்திருக்கின்றனர் என்றும் பிலிப்பீன்ஸுக்கு சுற்றுப்பயணம் செல்பவர்கள் குறிப்பிடுகின்றனர். தொழில் பிரமுகர்கள் தங்களுடைய தொழிலைக் காக்க தனியார் பாதுகாப்புக் காவலர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். கார்களுக்கான திருட்டு எதிர்ப்புக் கருவிகள் நன்கு விற்பனையாகின்றன. அவ்வாறு செய்ய முடிந்தவர்கள் பலத்த பாதுகாப்புள்ள உட்கோட்டங்களிலோ, கூட்டாதிக்க உரிமைகளுடைய கட்டடங்களுக்குள்ளோ பாதுகாப்பாய் இருக்கின்றனர்.
லண்டன் செய்தித்தாளான தி இன்டிபென்டென்ட் இவ்வாறு குறிப்பிட்டது: “சட்ட அமைப்பில் நம்பிக்கை குறைவுபடுகையில், அதிகமதிகமான எண்ணிக்கையில் குடிமக்கள் தங்கள் சமுதாயங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்பாடு செய்துகொள்கின்றனர்.” அதிகமதிகமான மக்கள் எதிர்ப்பதற்கு தயார் நிலையில் இருக்கின்றனர். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், இரண்டில் ஒரு வீட்டார் தங்களுக்கென்று குறைந்தபட்சம் ஒரு துப்பாக்கியையாவது சொந்தமாய் வைத்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
குற்றச்செயலுக்கு எதிராகப் போராட புதிய முறைகளை அரசாங்கங்கள் தொடர்ந்து அபிவிருத்தி செய்துவருகின்றன. ஆனால், ஐநா செய்திமூலங்களின்படி, “சட்ட அமலாக்கப் பணியாளர்களைப் பயிற்றுவிப்பதும்கூட” ஈடுகட்ட முடியாதளவுக்கு திறமிக்க மக்கள் பலர் “குற்றச்செயல் நடவடிக்கையில் தனித்தன்மையுடைய முறைகளை மேற்கொள்ளுகின்றனர்” என்பதாக உக்ரேனில் அக்கடமி ஆஃப் ஹோம் அஃபயர்ஸ்-ஐச் சேர்ந்தவரான வி. ஃப்ஸ்யவாலாட்டாஃப் கூறுகிறார். தந்திரமான குற்றவாளிகள், மிகுதியான கள்ளப்பணத்தை தொழில்களிலும் சமூக சேவைகளிலும் புழங்கும்படி செய்து, சமுதாயத்தோடு அதைக் கலந்து, “சமுதாயத்தில் உயர்ந்த நிலையைத் தங்களுக்கென்று சம்பாதித்துக்கொள்கின்றனர்.”
நம்பிக்கை இழத்தல்
சில நாடுகளில் அதிகரித்துவரும் எண்ணிக்கையானோர், அரசாங்கமே பிரச்சினையின் ஒரு பாகமாயிருப்பதாக நம்புமளவுக்கு ஆகிவிட்டனர். “நாங்கள் கைது செய்யும் சந்தேகப் பேர்வழிகளில் சுமார் 90 சதவீதத்தினர் போலீஸாராகவோ, இராணுவத்தாராகவோ இருக்கின்றனர்” என்று குற்றச்செயல் தடுப்பு தொகுதி ஒன்றின் தலைவர் கூறியதை ஆசியாவீக் மேற்கோள் காட்டியது. அது உண்மையோ இல்லையோ, இதுபோன்ற அறிக்கைகள் ஒரு சட்ட இயற்றுநர் பின்வருமாறு குறிப்பிடும்படியாகச் செய்தது: “சட்டத்தை நிலைநாட்ட ஆணையிடுபவர்கள்தாமே சட்டமீறுபவர்களாய் இருந்தால், நமது சமுதாயம் தொல்லைக்குள்ளாகிறது.”
உயர் அதிகாரிகளை உட்படுத்தும் ஊழல் அவதூறுகள், உலகின் வெவ்வேறு பாகங்களிலுள்ள அரசாங்கங்களை நிலைகுலையச் செய்துள்ளன, குடிமக்களின் நம்பிக்கையை மேலுமாக பலவீனப்படுத்துகின்றன. குற்றச்செயலை ஒழிப்பதில் அரசாங்கத்தின் திறத்தில் நம்பிக்கையை இழப்பதோடு, அவ்வாறு செய்வதற்கு இருக்கும் அவற்றின் தீர்மானத்தை மக்கள் சந்தேகப்படுகின்றனர். ஒரு கல்வியாளர் இவ்வாறு கேட்டார்: “தாங்கள்தாமே குற்றச்செயலில் மூழ்கியிருக்கையில், இந்த அதிகாரிகள் எப்படி குற்றச்செயலை எதிர்த்துப் போராட முடியும்?”
அரசாங்கங்கள் அடிக்கடி மாறுகின்றன, ஆனால் குற்றச்செயல் அப்படியே இருக்கிறது. இருந்தபோதிலும், குற்றச்செயலே இராமற்போகும் ஒரு காலம் விரைவாக வந்துகொண்டிருக்கிறது!
[பக்கம் 7-ன் படம்]
குற்றச்செயல் தடுப்புகள்: மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட டிவி காமிரா மற்றும் மானிட்டர், சுருள்-இழுவை ஸ்டீல் கதவு, பயிற்றுவிக்கப்பட்ட நாயோடு காவலர்
[பக்கம் 8-ன் படம்]
குற்றச்செயல் மக்களைத் தங்கள் சொந்தக் கதவுக்குப் பின்னால் சிறைக் கைதிகளாக்குகிறது