முடிவில்—குற்றச்செயலை ஒழிக்கும் ஓர் அரசாங்கம்
நம் நாளில் மக்கள் ‘தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், உண்மைப்பற்றுறுதி இல்லாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்’ இருப்பார்கள் என்று பைபிள் முன்னுரைத்தது. (2 தீமோத்தேயு 3:2, 3, NW) அப்படிப்பட்டவர்களே குற்றச்செயல் புரிகின்றனர்.
மக்கள் குற்றச்செயல் புரிவதால், அவர்கள் எந்தளவுக்கு நல்லவர்களாக மாறுகிறார்களோ அந்தளவுக்கு குற்றச்செயல் குறைக்கப்படுகிறது. ஆனால் நல்லவர்களாய் மாறுவது மக்களுக்கு ஒருபோதும் எளிதாய் இருந்ததில்லை. இன்று அது எப்போதையும்விட கடினமாய் இருக்கிறது; ஏனெனில் பைபிள் காலக்கணக்கால் உறுதி செய்யப்பட்ட ஒரு தேதியாகிய 1914-லிருந்து நாம் இக் காரிய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” வாழ்ந்துவருகிறோம். பைபிள் முன்னறிவித்தபடி, இக் காலப்பகுதி ‘கையாளுவதற்குக் கடினமான காலங்களால்,’ வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இக் கடினமான காலங்களுக்கு, ‘தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டுள்ள,’ எல்லாரையும்விட மிகப் பெரிய குற்றவாளியாகிய பிசாசான சாத்தானே காரணமாக இருக்கிறான்.—2 தீமோத்தேயு 3:1, NW; வெளிப்படுத்துதல் 12:12.
அது இன்றைய குற்றச்செயலின் திடீர் அதிகரிப்பை விளக்குகிறது. தானும் தன் ஒழுங்குமுறையும் விரைவில் அழிக்கப்படப்போவதை சாத்தான் அறிந்திருக்கிறான். மீந்துள்ள குறுகிய காலத்தின்போது, 2 தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கெட்ட குணங்களை மனிதரில் வளர்க்க சாத்தியமான எல்லா வழிகளையும் அவன் தேடுகிறான். இவ்வாறு, ஓர் அரசாங்கம் குற்றச்செயலை ஒழிப்பதற்கு, அது சாத்தானின் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாய் இருக்க வேண்டும்; அதோடு, மேற்கூறப்பட்ட வழிகளில் இனிமேலும் நடக்காதபடி மக்கள் மாறுவதற்கு உதவ வேண்டும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட இவ் வேலையை நிறைவேற்றும் திறமையுடைய அரசாங்கம் ஏதாவது இருக்கிறதா?
இதைச் செய்யும் திறமை, எந்த மனித அரசாங்கத்திடமும் இல்லை. “அனைத்து அரசு மற்றும் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முயற்சிகளையும் ஒன்றுபடுத்தி, ஒத்திசைவிக்கும் ஒரு திறம்படைத்த பொதுவான குழுவொன்றின்” தேவையை உக்ரேனில் ஒரு சட்ட ஆசிரியராயிருக்கும் ஜே. வாஸ்கோவிச் ஆலோசனையாகக் கூறுகிறார். குற்றச்செயல் பற்றி நடத்தப்பட்ட ஓர் உலக மாநாட்டில் பிலிப்பீன்ஸின் ஜனாதிபதியான ஃபிடெல் ராமோஸ் இவ்வாறு கூறினார்: “நவீனமயமாக்குதல் நம் உலகை சிறிதாக்கியிருப்பதால், குற்றச்செயல் எப்படியோ தேசிய எல்லைகளைத் தாண்டியிருக்கிறது, மேலும் ஒரு சர்வதேச பிரச்சினையாக வளர்ந்துள்ளது. அதன் விளைவாக, தீர்வுகளும் சர்வதேச அளவில் இருக்க வேண்டும்.”
“ஓர் உலகளாவிய அவலம்”
ஐக்கிய நாட்டுச் சங்கம் தேசிய எல்லைகளைக் கடந்த ஒரு (சர்வதேச) சங்கமாகும். அது நிறுவப்பட்டதிலிருந்து, குற்றச்செயலை எதிர்த்துப் போராட முயன்றிருக்கிறது. ஆனால், தேசிய அரசாங்கங்களிடம் உள்ள தீர்வைத் தவிர வேறு தீர்வுகள் அதனிடம் இல்லை. தி யுனைட்டெட் நேஷன்ஸ் அண்ட் க்ரைம் ப்ரிவென்ஷன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “உள்நாட்டுக் குற்றச்செயல்கள் பெரும்பாலான தனி நாடுகளின் கட்டுப்பாட்டை மீறியிருக்கின்றன; மேலும் தேசிய எல்லைகளைத் தாண்டிய குற்றச்செயல், சர்வதேச சமுதாயத்தின் தற்போதைய எல்லைக்கும் அப்பால் வேகமாக வளர்ந்துள்ளது. . . . ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதிகளால் இழைக்கப்படும் குற்றச்செயல் கவலைக்கிடமான விகிதங்களில் விரிவடைந்துள்ளன; உடல் ரீதியிலான வன்முறை, மிரட்டுதல் மற்றும் பொது அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றின் உருவில் கடும் விளைவுகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன. பயங்கரவாதம் குற்றமற்ற பத்தாயிரக்கணக்கான பலியாட்களின் உயிரைப் பறித்துள்ளது. தன்னலத்துக்காக பிறருக்கு தீங்கு செய்து, அடிமைப்படுத்தும் போதைப்பொருள்களின் வியாபாரம் ஓர் உலகளாவிய அவலமாகியிருக்கிறது.”
ஐக்கிய மாகாணங்களின் நான்காவது ஜனாதிபதியான ஜேம்ஸ் மேடிஸன் ஒரு சமயம் இவ்வாறு கூறினார்: “மனிதரின்மீது ஆளுகை செய்யும், மனிதரால் நிர்வகிக்கப்படும் ஓர் அரசாங்கத்தை நிறுவுவதில், பின்வரும் மிகப் பெரிய சிரமம் உள்ளது: முதலாவதாக ஆளப்படுபவரைக் கட்டுப்படுத்தும்படியாக அந்த அரசாங்கத்தை நீங்கள் தகுதிபெறச் செய்ய வேண்டும்; அடுத்ததாக, அது தன்னையே கட்டுப்படுத்தும்படி செய்ய வேண்டும்.” (பிரசங்கி 8:9-ஐ ஒப்பிடுக.) “மனிதர்மீது ஆளுகை செய்யும், மனிதரால் நிர்வகிக்கப்படும்” அரசாங்கங்களைக் கடவுள் ஆட்சி செய்யும் ஓர் அமைப்பால் மாற்றியமைப்பதே நடைமுறையான தீர்வாயிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தீர்வு நிஜமானதா?
குற்றச்செயலை ஒழிக்கும் அந்த அரசாங்கம்
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பைபிள் கூறுவதை மெய்க் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். a அது ஒரு நிஜமான அரசாங்கம். பரலோகத்தில் இருப்பதன் காரணமாக, அந்த ராஜ்யம் காணப்பட முடியாவிட்டாலும், பூமியின்மீது அது நிறைவேற்றவிருப்பவை காணப்பட முடிந்தவை. (மத்தேயு 6:9, 10) அது கிறிஸ்து இயேசுவையும், ‘சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து . . . எடுக்கப்பட்ட, பூமியின்மேல் ராஜாக்களாக ஆளுகை செய்யும் 1,44,000 பேரையும் கொண்டது.’ இச் சக்திவாய்ந்த அரசாங்கம், “திரள் கூட்டமாகிய” குடிமக்களின்மீது ஆளுகை செய்யும்; பைபிள் முன்னுரைக்கும் விதமாக, இவர்களும்கூட ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து’ வந்தவர்களாக இருப்பர். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 7:9) இவ்வாறு, ஆளுபவர்களும் குடிமக்களும் ஆகிய இரு சாராரும் சர்வதேசப் பின்னணியைச் சேர்ந்தவராய் உள்ளனர், எல்லா ஜாதிகளிலுமிருந்து வந்த உண்மையிலேயே ஐக்கியப்பட்ட ஜனங்களாய், தெய்வீக அங்கீகாரத்தை உடையோராய் உள்ளனர்.
கடவுளுடைய ஆளுகையை ஏற்றுக்கொண்டவர்களாய், யெகோவாவின் சாட்சிகள் குற்றச்செயல் பிரச்சினையைப் பெரிதளவில் தங்கள் மத்தியிலேயே மேற்கொண்டிருக்கின்றனர். எப்படி? பைபிள் நியமங்களில் அடங்கியுள்ள ஞானத்தைப் போற்றுவதற்கு கற்றுக்கொள்வதன் மூலமாகவும், அவற்றைத் தங்கள் வாழ்வில் பொருத்துவதன் மூலமாகவும், அண்டத்திலேயே மிகவும் வலிமைவாய்ந்த சக்தியான கடவுளுடைய ஆவி, மற்றும் அதன் கனியான அன்பின் மூலமாய்த் தூண்டுவிக்கப்பட தங்களையே அனுமதிப்பதன் மூலமும் அவ்வாறு மேற்கொண்டிருக்கின்றனர். “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (கொலோசெயர் 3:14) 230-க்கும் மேலான நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள் இந்த அன்பையும் ஒற்றுமையையும் கடைப்பிடிப்பதன் மூலம், கடவுளுடைய ராஜ்யம் குற்றச்செயலை ஒழிப்பதற்கு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் செயலில் காட்டுகின்றனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த 1,45,958 யெகோவாவின் சாட்சிகளை உட்படுத்தியிருந்த, 1994-ல் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின் தகவல்களிலிருந்து இது விளக்கப்படலாம். சாட்சிகளாவதற்காக வினைமையான தவறுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்திருந்ததாய் அவர்களில் பலர் ஒப்புக்கொண்டனர். பைபிளைப் படிப்பதன் மூலம் அவ்விதம் செய்வதற்கு அவர்கள் தூண்டப்பட்டனர். உதாரணமாக, 30,060 பேர் புகையிலை அல்லது போதைப்பொருளுக்கு அடிமையாவதை மேற்கொண்டனர்; 1,437 பேர் சூதாடுவதை நிறுத்திவிட்டனர்; 4,362 பேர் வன்முறை அல்லது குற்றச்செயல் சம்பந்தமான நடத்தையை சரிசெய்தனர்; 11,149 பேர் பொறாமை அல்லது பகைமை போன்ற குணங்களை மேற்கொண்டனர்; 12,820 பேர் உள்முறிந்த குடும்ப வாழ்க்கையில் மீண்டும் உள்ளமைதியை நிலைநாட்டினர்.
இக் கண்டுபிடிப்புகள் ஒரே ஒரு நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை உள்ளடக்கியபோதிலும், உலகெங்கிலுமுள்ள சாட்சிகளுக்கு அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாகவே இருக்கின்றனர். உதாரணமாக, உக்ரேனைச் சேர்ந்த ஓர் இளைஞனான யுரீயை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்த சமயத்தில் அவன் ஒரு ஜேப்படித் திருடனாய் இருந்தான். தன் “வேலையை” எளிதாக்குவதாய்த் தான் அறிந்திருந்தபடி, கூட்டங்கள் நிறைந்த மாஸ்கோவுக்குக்கூட அவன் பயணம் செய்திருந்தான்.
1993-ல், யுரீ மீண்டும் ஜனக்கூட்டங்களின் மத்தியில் இருந்தார். ஆனால், ஜூலை 23, வெள்ளிக்கிழமை, லோகோமோட்டிவ் ஸ்டேடியத்தில் கூடியிருந்த 23,000 பேருக்கு மேற்பட்டவர்களில் எவருமே அவருக்காகப் பயப்படவில்லை, ஏனெனில் அவர் இப்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் இருந்தார். உண்மையில், சர்வதேச அளவில் கூடிவந்திருந்த பார்வையாளர்களுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிநிரலில் யுரீ மேடையில் தோன்றினார். நல்லவராய் மாறினவராக, அவர் பின்வரும் பைபிள் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்: ‘திருடுகிறவன் இனித் திருடாதிருக்கக் கடவன்.’ (எபேசியர் 4:28) இப்போது ஒரு யெகோவாவின் சாட்சியாக, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிலிருக்கும் உக்ரேனியர்களுக்கு சத்திய வார்த்தைகளை விநியோகிப்பதில் யுரீ கடினமாய் உழைத்து வருகிறார்.
யுரீயைப் போன்ற எண்ணற்ற பலர், நீதி வாசமாயிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் வாழும்படியான தகுதியைப் பெறுவதற்காக, குற்றச்செயல் புரிந்துவந்த வாழ்க்கையை விட்டுவிட்டுள்ளனர். முன்னாள் பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி, சர் பீட்டர் இம்பர்ட் பின்வருமாறு கூறினதன் உண்மைத்தன்மையை இது அழுத்திக் காட்டுகிறது: “ஒவ்வொருவரும் முயலுவதற்கு மனமுள்ளவர்களாய் இருந்தால், குற்றச்செயல் வெகு சீக்கிரத்தில் கட்டுப்படுத்தப்படலாம்.” கடவுளுடைய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பைபிள் கல்வி திட்டம், “முயலுவதற்கு” அவர்களுக்குத் தேவைப்படும் தூண்டுவித்தலை நேர்மை இருதயமுள்ளோருக்கு அளிக்கிறது.
குற்றச்செயலற்ற ஓர் உலகம்
எந்தவித குற்றச்செயலானாலும், பிறர்மீதான அன்பில் குறைவுபடுவதைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்கள், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” மேலும், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்று கூறின இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர்.—மத்தேயு 22:37-39.
இவ்விரண்டு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மக்களுக்குப் போதிப்பதன் மூலம் குற்றச்செயலை ஒழிப்பதற்கு அர்ப்பணித்துள்ள ஒரே அரசாங்கம், கடவுளுடைய ராஜ்யமாய் இருக்கிறது. இன்று, இப் போதனையிலிருந்து 50 லட்சத்துக்கும் மேலான யெகோவாவின் சாட்சிகள் பயனடைகின்றனர். குற்றச்செயல் சம்பந்தமான மனச்சாய்வுகள் தங்கள் இருதயத்தில் வேரூன்றப்படாதபடி இருக்க அவர்கள் தீர்மானமாய் உள்ளனர்; குற்றச்செயலற்ற உலகை உண்டாக்கத் தேவையான தனிப்பட்ட முயற்சி என்னவாய் இருந்தாலும் அதைச் செய்வற்குத் தயாராய் உள்ளனர். அவர்களுடைய வாழ்க்கையில் கடவுள் நிறைவேற்றியிருப்பவை, தமது பரலோக அரசாங்க ஆளுகையின்கீழ் தமது புதிய உலகில் தாம் செய்யப்போவதன் ஒரு முன்னனுபவமாக மட்டுமே இருக்கின்றன. போலீஸ்காரர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அல்லது சிறைச்சாலைகளுக்குத் தேவையே இராத ஓர் உலகைக் கற்பனை செய்து பாருங்கள்!
உலகளாவிய வகையில் இதை அடைவது, கடவுளால் மட்டுமே கொண்டுவரப்படக்கூடிய, வரலாற்றிலேயே மிகப் பெரிய அரசாங்கப் புரட்சியை உட்படுத்தும். தானியேல் 2:44 இவ்வாறு கூறுகிறது: “[இன்றிருக்கும்] அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு [பரலோக] ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” சாத்தானின் தீய செல்வாக்குக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும்படியாக, கடவுள் சாத்தானையும் நசுக்கிப்போடுவார்.—ரோமர் 16:20.
ஒரு முறை மனித அரசாங்கங்கள் கடவுளுடைய பரலோக அரசாங்கத்தால் மாற்றீடு செய்யப்பட்ட பிறகு, மனிதர் ஒருபோதும் மீண்டும் ஒருவர்மீது மற்றொருவர் ஆளுவதில்லை. பரலோக அரசர்கள்—தேவதூதர்களைவிட மேலான அரசர்கள்—நீதியின் வழிகளில் மனிதகுலத்துக்குப் போதிப்பர். பிறகு, கொலைகள், நச்சு-வாயு தாக்குதல்கள், அல்லது பயங்கரவாதிகளின் வெடிகுண்டுகள் இனி இருப்பதில்லை! குற்றச்செயலைத் தோற்றுவிக்கும் சமூக அநீதிகள் இனி இருப்பதில்லை! பணக்காரர் என்றும், ஏழை என்றும் இனி இருப்பதில்லை!
“பசியுடன் இருப்பதால் ஏழை மக்கள் இரவில் தூங்க முடிவதில்லை; ஏழை மக்கள் விழித்திருப்பதால் பணக்காரர்கள் தூங்க முடிவதில்லை” என்று நைஜீரியாவிலுள்ள ஒபாஃபேமி ஆநாலாவா பல்கலைக்கழக பேராசிரியர், எஸ். ஏ. ஆலூகோ குறிப்பிட்டார். ஆனால் விரைவில், அரசாங்கம்—கடவுளுடைய அரசாங்கம்—முடிவில் குற்றச்செயலை ஒழித்துவிட்டதை அறிய வருகையில் ஒவ்வொருவரும் நிம்மதியாகத் தூங்க முடியும்!
[அடிக்குறிப்பு]
a கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன என்பதைப் பற்றியும், அதன்மீது நம்பிக்கை வைத்துள்ள மனிதகுலத்துக்கு அது என்ன நன்மை செய்யும் என்பதைப் பற்றியும் நுட்பமான விவரத்துக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை தயவுசெய்து வாசிக்கவும்.
[பக்கம் 10-ன் படம்]
முன்னாள் திருடன் ஒருவரும், அவருக்குப் பலியானவரும், இப்போது கிறிஸ்தவ சகோதரர்களாக ஐக்கியமாயிருக்கின்றனர்