உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 10/8 பக். 15-18
  • மென்மையான ஆனால்— திடமான ஒரு பயணி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மென்மையான ஆனால்— திடமான ஒரு பயணி
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மென்மையான அரும் படைப்பு
  • மனங்கவரும் பறக்கும் முறை
  • கூட்டமாக இடம்பெயர்வது
  • சேருமிடங்கள்
  • மோனார்க் பட்டாம்பூச்சியின் பயணம்
    யாருடைய கைவண்ணம்?
  • மொனார்க்குகளின் இயற்கை சரணாலயங்கள் கொலைக்களங்களாக மாறியுள்ளன
    விழித்தெழு!—1996
  • ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கையில் ஒரு நாள்
    விழித்தெழு!—1994
  • இயல்புணர்வு—பிறப்பிற்கு முன்பே திட்டமிடப்பட்ட ஞானம்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 10/8 பக். 15-18

மென்மையான ஆனால்— திடமான ஒரு பயணி

கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

கலைஞர் அவற்றை ஓவியம் தீட்டுகின்றனர்; கவிஞர் அவற்றைப் பற்றி எழுதுகின்றனர். எண்ணற்ற வகைகள் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கின்றன. அநேகம் காடுகளிலும் வயல்களிலும் புல்வெளிகளிலும் வாழ்கின்றன. சில, மலை உச்சிகளின் குளிர்ச்சியைத் தாங்கிக்கொள்கின்றன; மற்றவை, வனாந்தரங்களின் வெப்பத்தை தாங்கிக்கொள்கின்றன. அனைத்து பூச்சிகளிலும் மிக அழகான ஒன்று என்பதாக அவை விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மிக அழகான, நேர்த்தியான ஜீவராசியை சந்தேகமில்லாமல் நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதுதான் பட்டாம்பூச்சி. எனினும், ஒரு வகையான பட்டாம்பூச்சி, பயணம் செய்வதில் அதன் ஆச்சரியமூட்டும் சாகசங்களுக்காக உலகளாவிய விதத்தில் புகழ்பெற்றிருக்கிறது. மென்மையான ஆனால் திடமான இந்தப் பயணிதான் மொனார்க். சிருஷ்டிப்பின் இந்த அரும் ஜீவராசியையும் அதன் வியக்கத்தக்க இடப்பெயர்ச்சிகளையும் இன்னும் உன்னிப்பாக பார்ப்போமாக.

மென்மையான அரும் படைப்பு

இதமான ஒரு வெயில் நாளில், நீங்கள் ஒரு புல்வெளியில் இருப்பதாக கற்பனைசெய்து பாருங்கள். உணவுக்காகவும் பானத்திற்காகவும் முடிவில்லாமல் தேடும் முயற்சியில், வனப்பூக்களிடையே இங்குமங்கும் சிறகடித்துப் பறக்கும் அந்த நளினமான, இறக்கைகள்கொண்ட ஜாலங்களையே கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருங்கள். கைகளை நீட்டியவாறு அசையாமல் நில்லுங்கள். ஒன்று அருகே வருகிறது. ஓ, உங்களது கைமீது அது அமரப்போகிறது! அது எவ்வளவு மிருதுவாக வந்து அமர்கிறது என்பதைக் கவனியுங்கள்.

இப்போது உன்னிப்பாக பாருங்கள். பவுடர்போன்ற மென்மையான, ஆரஞ்சு நிற இரு ஜோடி இறக்கைகள், கறுப்பு நிறத்துடன் நுட்பமான டிஸைன்களையுடைய ஓரங்களால் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அமெரிக்காவில் குடியேறிய ஆங்கில மக்களால் அது மொனார்க் (மன்னன்) என்று பெயரிடப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது; அவர்கள், ஆரஞ்சு நகரத்தின் மன்னரான வில்லியம் என்பவரோடு அதைச் சம்பந்தப்படுத்தினர். இந்த மொனார்க் பட்டாம்பூச்சி உண்மையிலேயே ஒரு மன்னன்தான். ஆனால் வெறும் அரை கிராம் எடையுள்ளதும் எட்டிலிருந்து பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள இறக்கையை கொண்டுள்ளதுமான இந்த மென்மையான அழகு வடிவம், நீண்ட கடினமான பிரயாணங்களை செய்யும் ஆற்றலுள்ளது.

மனங்கவரும் பறக்கும் முறை

சில பட்டாம்பூச்சிகள் குளிர்காலம் ஆரம்பமானவுடன் தொலைதூரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதாய் சொல்லப்படுகிறபோதிலும், மொனார்க் மட்டும்தான் சரியான இடங்களுக்கும் அப்பேர்ப்பட்ட திரளான எண்ணிக்கையிலும் அதுபோன்ற தொலைதூரப் பிரயாணங்களைச் செய்கிறது. மொனார்க் இடம்பெயர்ந்து செல்வதானது, உண்மையிலேயே பட்டாம்பூச்சிகளின் ஓர் அபூர்வ நிகழ்வாகும். எதையும் தாங்கவல்ல இந்தப் பயணிகள் செய்யும் மனங்கவரும் சில செயல்களைச் சிந்தியுங்கள்.

இலையுதிர் காலத்தில் கனடாவிலிருந்து கிளம்பி, குளிர்கால வாசஸ்தலங்களான கலிபோர்னியாவையோ மெக்ஸிகோவையோ நோக்கிச்செல்லும் இந்தப் பிரயாணம், 3,200 கிலோமீட்டரையும் தாண்டுவதாய் உள்ளது. பெரிய ஏரிகள், ஆறுகள், சமவெளிகள் மற்றும் மலைகளைத் தாண்டி அவை செல்கின்றன. அவற்றில் லட்சக்கணக்கானவை, மத்திய மெக்ஸிகோவிலுள்ள சியெர்ரா மாடரே மலைகளுக்கு மேலே உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக இடம்பெயர்ந்து செல்கின்றன.

இளம் பட்டாம்பூச்சிகள் இப்படிப்பட்ட பிரயாணத்தை முன்பு செய்ததேயில்லை என்பதையும் இடம்பெயர்ந்து செல்லவிருக்கும் இடங்களைப் பார்த்ததேயில்லை என்பதையும் நீங்கள் கருத்தில்கொள்ளும்போது, அப்படிப்பட்ட பிரயாணங்கள் இன்னுமதிக ஆச்சரியமூட்டுபவையாய் இருக்கின்றன. ஆனால் அவை மயிரிழை பிசகாமல், பறக்கும் திசையை உணர்ந்தும் கொள்கின்றன; குளிர்கால தங்குமிடங்களை சென்றடைகையில் அதை அறிந்தும் கொள்கின்றன. அதை எவ்வாறு செய்கின்றன?

கனடியன் ஜியோக்ரஃபிக் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தெளிவாகவே, அவற்றின் அடக்கமான சிறிய மூளைகளுக்குள் அதிக சிக்கலான மரபணு செயல்திட்டம் இருக்கிறது; தேனீக்கள் செய்வதுபோல சூரிய கதிர்களின் கோணங்களையோ பறவைகளை வழிநடத்துவதாய் தோன்றும் பூமியின் காந்த ஆற்றல்களத்தையோ கவனித்து பிரதிபலிப்பதற்கான ஏதோவொரு செயல்திட்டம் ஒருவேளை இருக்கிறது. குறிப்பிட்ட சீதோஷ்ண நிலைகளையோ ஈரப்பத நிலைகளையோ கண்டுபிடிப்பதற்கான திறன், அவற்றின் இறுதிப் பிரயாணத்தில் உதவலாம். ஆனால் இதுவரை பதில்கள் அறிவியலை திகைக்கச் செய்திருக்கின்றன.” பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் உயிரினங்களைப்போல், “அவை இயல்பாகவே ஞானமுள்ளவையாக இருக்கின்றன.”—நீதிமொழிகள் 30:24, NW.

மொனார்க்குகள் திறம்பெற்ற விதத்தில் பறப்பவையாகவும் இருக்கின்றன. அவை, மணிக்கு சுமார் 12 கிலோமீட்டர் வேகத்தில் மிதந்தபடி பறக்கின்றன; மணிக்கு சுமார் 18 கிலோமீட்டர் வேகத்தில் வானளாவப் பறக்கின்றன; அவற்றில் ஒன்றைப் பிடிக்க முயன்றிருக்கும் எவரும் அறிந்திருக்கிற பிரகாரம், அவை இன்னும் வேகமாக, மணிக்கு சுமார் 35 கிலோமீட்டர் வேகத்தில் சிறகடித்துப் பறக்கின்றன. காற்றை பயன்படுத்திக்கொள்வதில் அவை மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்றன—சேருமிடத்தை நோக்கி தென்மேற்கே செல்வதற்கு, கிழக்கைநோக்கி வீசும் காற்றை எதிர்த்து வளைந்துவளைந்து செல்லக்கூடியவையாகவும் இருக்கின்றன. சிக்கலான பறக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி, காற்றின் வேகத்திலும் திசையிலும் ஏற்படும் மாற்றங்களை அவை மேற்கொள்கின்றன. பொறி அமைப்பில்லா சறுக்கு விமானத்தின் ஓட்டுநர்களைப் போலவும் (glider pilots) பருந்துகளைப் போலவும், எழு வெவ்வளியில் (மேல்நோக்கி எழும் வெப்பக்காற்றோட்டத்தில்) அவை பறக்கின்றன. ஒரு தகவல் மூலத்தின்படி, மொனார்க்குகள் நாளுக்கு 200 கிலோமீட்டர் தூரம்வரை பொதுவாக பிரயாணம் செய்கின்றன. அவை பகல்வெளிச்சத்தில் மாத்திரம்தான் பறக்கின்றன. இரவில், ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் அதே இடத்தில் அவை இளைப்பாறுகின்றன.

எப்போதாவது உயரப் பறப்பதையோ மிதந்தபடி பறப்பதையோவிட அதிகத்தை மொனார்க் செய்வதாக டொரன்டோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான டேவிட் ஜிபோ கற்றறிந்திருக்கிறார். அவர் இவ்வாறு அறிக்கை செய்கிறார்: “இடம்பெயரும் வாத்துக்கள் (migrating geese) உபயோகிப்பதைக் காட்டிலும் அதிக புத்திசாலித்தனமான வழிகள் என நான் நினைக்கும் வழிகளில் பட்டாம்பூச்சிகள் காற்றை பிரயோஜனப்படுத்துபவையாய் இருக்க வேண்டும்.” சிறகடிப்பு, உயரப்பறத்தல் மற்றும் தீனி உண்ணுதல் போன்ற வழக்கமான செயல்கள், முழு குளிர்காலத்திற்கும் இளவேனிற்காலத்தில் மீண்டும் வடக்கை நோக்கி பறப்பதற்கும் தேவைப்படும் போதுமானளவு கொழுப்புடன் மொனார்க்குகள் மெக்ஸிகோவிற்கு வந்துசேர உதவுகின்றன. பேராசிரியர் ஜிபோ இவ்வாறும் சொல்கிறார்: “மிதந்தபடி பறப்பதன் மூலமாகத்தான் அவை அந்த நீண்ட பிரயாணத்தை முடித்து பலத்தோடும் ஆரோக்கியத்தோடும் வந்து சேருகின்றன.”

கூட்டமாக இடம்பெயர்வது

ராக்கி மலைக்கு மேற்கிலிருக்கும் மொனார்க்குகள் தெற்கே இடம்பெயர்ந்து கலிபோர்னியாவில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன என்பதாக வெகு காலமாக அறியப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் தென் கரையோரத்தின் நெடுக உள்ள இடங்களிலிருக்கும் ஊசியிலை மரங்களிலும் யூக்கலிப்டஸ் மரங்களிலும் கூட்டங்கூட்டமாக அவை தொங்கிக்கொண்டிருப்பது காணப்படலாம். ஆனால் கிழக்கு கனடாவிலுள்ள திரள்கூட்டமான மொனார்க்குகள் எங்கே இடம்பெயர்ந்து செல்கின்றனவென்பது சிறிது காலத்திற்கு புதிராகவே இருந்தது.

1976-ல் இந்தப் புதிர் வெளிப்பட்டது. அவற்றின் குளிர்கால தங்குமிடம் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டது—மெக்ஸிகோவின் சியெர்ரா மாடரே மலைகளிலுள்ள காடு நிறைந்த ஒரு சிகரம். உயரமான, சாம்பல்-பச்சை நிற ஃபர் (fir) மரங்களின் கிளைகள்மீதும் அடிமரங்கள்மீதும் கோடிக்கணக்கான பட்டாம்பூச்சிகள் அடர்த்தியாக காணப்பட்டன. மனதில் பதிந்துவிடும் இந்தக் காட்சி, வருகையாளர்களை கவர்ந்திழுப்பதாய் இன்னும் இருக்கிறது.

கனடாவில் மொனார்க்குகளை ஒட்டுமொத்தமாக பார்க்கக்கூடிய சிறந்த இடங்களில் ஒன்று, ஒன்டாரியோவிலுள்ள பாயின்ட் பிலி தேசிய பூங்காவாகும்; தெற்கே இடம்பெயர்வதற்காக தயாராகும்படி அங்கே அவை கும்பலாக கூடுகின்றன. கோடைகாலத்தின் பிற்பகுதியில், கனடாவிலுள்ள இந்தத் தென்முனையில் அவை ஒன்றுகூடி, மெக்ஸிகோவிலுள்ள குளிர்கால தங்குமிடத்திற்கு செல்ல தெற்கே பிரயாணப்படுவதற்குமுன், காற்றும் சீதோஷணமும் சாதகமாக ஆகும்வரை ஈரி ஏரியின் வட கடலோரத்தில் காத்துக்கொண்டிருக்கின்றன.

சேருமிடங்கள்

பாயின்ட் பிலியில் ஆரம்பித்து, ஐக்கிய மாகாணங்களின் கண்டத்தினூடே நீண்ட பிரயாணத்தைத் துவங்குவதற்கு, ஈரி ஏரியைத் தாண்டி ஒவ்வொரு தீவுதீவாக அவை பிரயாணம் செய்கின்றன. வழியிலே, மற்ற மொனார்க் கூட்டங்கள் இடம்பெயர்வதில் அவற்றுடன் சேர்ந்துகொள்கின்றன. மெக்ஸிகோ நகரத்தின் வடமேற்கு மலைகளின் உச்சியில், குளிர்காலத்தைக் கழிப்பதற்காக பத்து கோடி என கணக்கிடப்பட்டிருக்கும் மொனார்க்குகள் ஒன்றுகூடுகின்றன.

மற்ற இடப்பெயர்வுகள், ப்ளாரிடா மூலமாகவும் கரிபியனைத் தாண்டியும் நடைபெற்று, யுகாடன் தீபகற்பத்திலோ குவாதமாலாவிலோ இன்னும் கண்டுபிடிக்கப்படாத இடங்களில் முடிவடையலாம். மெக்ஸிகோவாக இருந்தாலும்சரி மற்ற குளிர்கால தங்குமிடங்களாக இருந்தாலும்சரி, மலைக் காடுகளின் ஓரளவு சிறு பகுதிகள் சிலவற்றில் மொனார்க்குகள் கும்பலாக கூடுகின்றன.

குளிர்கால தங்குமிடத்திற்கு நீண்ட தூரம் அவை பிரயாணம் செய்வதானது, வெதுவெதுப்பான சூரியவொளியுள்ள புல்வெளிகளான ஓய்விடத்திற்கு அவற்றை கொண்டுசெல்லும் என்பதாக ஒருவர் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு இல்லை. அவை செல்லும் இடமான மெக்ஸிகோவின் எரிமலைத் தொடர் குளிர்ச்சியான இடமாகும். எனினும், மலை உச்சிகளின் சீதோஷ்ணநிலை, அவை குளிர்காலத்தில் தங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. கிட்டத்தட்ட முழுமையாகவே மந்தநிலையில் காலத்தைக் கழிப்பதற்கு தேவையானளவு குளிர்ச்சியாக அது இருக்கிறது—இவ்வாறு, அவை மெக்ஸிகோவிற்கு பறந்து சென்று, குளிர்காலத்தைக் கழித்து மீண்டும் புறப்படுவதற்கு அனுமதிக்கும்படி அவற்றின் வாழ்நாளை எட்டு அல்லது பத்து மாதங்களுக்கு நீடிக்கச்செய்கிறது. அது ஓய்வுகாலத்தைப்போன்ற ஒன்றாக இருக்கிறதென்று நீங்கள் சொல்லலாம்.

இளவேனிற்காலம் ஆரம்பமாகிறது, மொனார்க்குகளும் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. பகல்நேரம் அதிகரிக்கையில், இந்தப் பட்டாம்பூச்சிகள் வெயிலில் சிறகடித்து, இனச்சேர்க்கை செய்ய ஆரம்பித்து, மீண்டும் வடக்கை நோக்கி பறக்க ஆரம்பிக்கின்றன. சில, திரும்பவும் முழு பிரயாணத்தையும் முடிக்கின்றன என்பதாக நம்பப்படுகிறது; ஆனால் கனடாவிலுள்ள கோடைகால தங்குமிடங்களுக்கும் வட ஐக்கிய மாகாணங்களுக்கும் வந்துசேர்வது பொதுவாக அவற்றின் சந்ததிதான். முட்டைகள், கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள், பட்டாம்பூச்சிகள் ஆகிய பருவங்களைத் தாண்டும் மூன்று அல்லது நான்கு சந்ததிகள் கண்டத்திற்கு மெல்லத் திரும்புகின்றன. நூறு அல்லது அதற்கும் அதிகமான சினைமுட்டைகளுள்ள பெண்பூச்சி, வனப்பூக்கள் நிறைந்த பகுதிகளிடையே சிறகடித்துச் சென்று, பால்போன்ற சாறுள்ள காட்டுச்செடியின் இளம், மிருதுவான இலைகளுடைய கீழ்ப்பகுதியில் ஒன்றொன்றாக முட்டை இடுகிறது. ஆகவே இந்த உருமாற்றம் நடந்துகொண்டேயிருக்கிறது, கோடைகால வீட்டை நோக்கிய மொனார்க்கின் பிரயாணமும் தொடர்கிறது.

உண்மையிலேயே, மொனார்க் ஆளை அசத்தும் ஒரு ஜீவராசி. அதன் செயல்களை கவனிக்கவும் ஆராயவும் மனிதர்கள் என்னே ஒரு சிலாக்கியம் பெற்றிருக்கிறார்கள். எனினும், ஆச்சரியம் உண்டாக்காத விதத்தில், மெக்ஸிகோவிலுள்ள நீண்டநாளைய புதிரான மொனார்க்கின் தங்குமிடமும் கலிபோர்னியாவிலுள்ள சேருமிடங்களும்கூட மனித வியாபாரத்தினால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றன. சிருஷ்டிப்பின் மென்மையான இந்த அழகு வடிவங்கள், செல்வதற்கு வேறிடத்தைக் கொண்டிருக்கின்றன என நினைப்பது, அவை அற்றுப்போவதில் விளைவடையலாம். போற்றத்தக்க விதத்தில், அப்படிப்பட்ட ஒரு முடிவிலிருந்து அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது அருகாமையிலிருக்கும், சிருஷ்டிகரின் வாக்குப்பண்ணப்பட்ட பரதீஸிய பூமியில், மென்மையான ஆனால் திடமான இந்தப் பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான இடத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படும்போது எவ்வளவு சிறப்பாக இருக்கும்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்