மொனார்க்குகளின் இயற்கை சரணாலயங்கள் கொலைக்களங்களாக மாறியுள்ளன
இடப்பெயர்ச்சி செய்வதற்காக ஆச்சரியமூட்டும் விதமாய்ப் பறந்துசென்று, கோடைகாலத்தை கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களின் வடபகுதியிலும் கழிக்கின்றன மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள். அவற்றின் ஆரஞ்சு கலந்த கறுப்பு சிறகுகளை விரித்து, கனடாவை விட்டு, ஐக்கிய மாகாணங்களினூடே காற்றில் மிதந்து வந்து, மெக்ஸிகோ நகரின் மேற்குப்பகுதி ஒன்றில் கூடுகின்றன. அங்கே, 1986-ல், மெக்ஸிகோ அரசு 3,400 மீட்டர் உயர மலைகளில் ஐந்து இயற்கை சரணாலயங்களை (nature reserves) உருவாக்கி அவற்றை பர் மரங்களால் மறைத்தது. 1994 சுற்றாய்வு ஒன்றின்படி, குறைந்தபட்சம் ஆறு கோடி மொனார்க்குகள் குளிர்காலத்தை சரணாலயங்களில் கழித்தன.
பர் மரங்களை மொனார்க்குகள் விசேஷமாய்த் தெரிவு செய்வதற்குக் காரணம், அந்த மரங்கள் ஓர் அடர்த்தியான விதானத்தை உண்டாக்குகின்றன. அது குளிர் மழையிலிருந்தும் பனியிலிருந்தும் வண்ணத்துப்பூச்சிகளைக் காக்கிறது. இந்த ஐந்து சரணாலயங்களிலும் மரம் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக மரம் வெட்டுவதை நிறுத்தமுடியவில்லை. “அரசு விதித்துள்ள தடையின் மத்தியிலும் மெக்ஸிகோவைச் சேர்ந்த சரணாலயங்களில் பர் மரத்தை வெட்டுவது, கடும் புயல் மற்றும் குளிருக்கு மொனார்க்குகள் எளிதில் பலியாகும்படி செய்கிறது. . . . மரங்களையும் அவற்றின் விதானங்களையும் இழப்பது, வண்ணத்துப்பூச்சிகள் மழையாலும் பனியாலும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது” என்று வண்ணத்துப்பூச்சி அறிவியலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மரம் வெட்டுவது பாதுகாப்பான விதானத்தை முறிக்கிறது. கேன்ஸ்வில்லில் அமைந்துள்ள ஃப்ளாரிடா பல்கலைக்கழகத்தில் உயிரியலராய் இருக்கும் லிங்கன் புரௌவர் மொனார்க்குகளின் பாதுகாப்பான விதானத்தைப் பற்றிக் குறிப்பிட்டதன்படி, “இக் காடுகள் எவ்வளவு அதிகமாய்க் குறைக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிக துளைகள் அவற்றின் காப்பு விதானத்தில் ஏற்படுகிறது.”
“மோசமான வானிலையும் மரங்களை வெட்டுவதும் வண்ணத்துப்பூச்சிகளின் அழிவுக்கேதுவானது” என்று தி நியூ யார்க் டைம்ஸ் கூறினது. பிறகு டிசம்பர் 30, 1995 இரவில் அந்த சரணாலயங்களில் பனி பொழிந்ததைப் பற்றி இவ்வாறு அறிக்கை செய்தது: “பனிக்கட்டியின்கீழ் பல வண்ணத்துப்பூச்சிகள் புதைந்திருந்தன. ஆயிரமாயிரமான உறைந்த மொனார்க்குகளை பனிப்படிவுகள் அடர்த்தியாக மூடியிருந்ததாக சரணாலயங்களில் சிலவற்றைச் சுற்றிப்பார்த்த அரசு வன அலுவலர்களும் உயிரியலர்களும் கூறினர்.”
இந்தப் பக்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் போட்டோ அந்த சோகக்கதையை உறுதிப்படுத்துகிறது.