தூஷணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவது
“இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.”—மத்தேயு 12:34.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இயேசு கிறிஸ்து மேற்காணும் வார்த்தைகளைச் சொன்னார். ஆம், ஒரு நபரின் வார்த்தைகள் அடிக்கடி அவரது உள்ளார்ந்த உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் பிரதிபலிக்கின்றன. அவை புகழத்தக்கவையாக இருக்கலாம். (நீதிமொழிகள் 16:23) மறுபட்சத்தில், அவை வஞ்சிப்பவையாகவும் இருக்கலாம்.—மத்தேயு 15:19.
ஒரு பெண் தனது கணவனைக் குறித்து இவ்வாறு சொன்னாள்: “அவருக்கு பொசுக்கென்று கோபம் வரும், அவருடன் வாழ்வது சுரங்கப்பகுதியில் நடந்துசெல்வதைப்போல் அடிக்கடி இருக்கிறது—கோபப்பட்டு வெடிப்பதற்கு அவரை எது தூண்டும் என உங்களுக்கு ஒருபோதும் தெரிவதில்லை.” ரிச்சர்ட், தன் மனைவியைக் குறித்ததில் இதே விதமான ஒரு நிலையை விளக்குகிறார். “லிடியா எப்போது சண்டைபோடலாமென காத்துக்கொண்டிருக்கிறாள். அவள் வெறுமனே பேசுவது இல்லை; நான் என்னவோ ஒரு பிள்ளை என்பதுபோல் என்னைப் பார்த்து விரலை சுட்டிக்காண்பித்து அவள் அந்தளவுக்கு வெறுப்போடு சீறுவாள்,” என சொல்கிறார்.
சந்தேகமில்லாமல், வாக்குவாதங்கள் சிறந்த திருமணங்களிலும்கூட வெடித்தெழலாம், அனைத்து கணவன்மாரும் மனைவிமாரும் ஏதாவது சொல்லிவிட்டு பின்பு அதற்காக வருத்தப்படுகின்றனர். (யாக்கோபு 3:2) ஆனால் திருமணத்தில் தூஷணம் அதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது; ஒருவரது துணையின்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டுமென்றோ கட்டுப்படுத்தவேண்டுமென்றோ நோக்கங்கொண்டு சொல்லப்படும் தரக்குறைவான மற்றும் குறைகூறும் பேச்சை அது உள்ளடக்குகிறது. சிலசமயங்களில், தீங்குண்டாக்கும் பேச்சு, சாந்தமான பொய் தோற்றத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, அமைதலாகப் பேசினாலும் உள்ளே கெட்ட எண்ணமுடையவனாய் இருந்த ஒரு மனிதனைப் பற்றி சங்கீதக்காரனாகிய தாவீது விளக்கினார்: “அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல் மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.” (சங்கீதம் 55:21; நீதிமொழிகள் 26:24, 25) கடுமையான பேச்சு, வெளிப்படையாகவே குரோதமானதாக இருந்தாலும்சரி மறைமுகமாக இருந்தாலும்சரி, அது ஒரு திருமணத்தை பாழாக்கக்கூடும்.
அது எவ்வாறு ஆரம்பமாகிறது
எது ஒரு நபரை தூஷிக்க தூண்டுகிறது? பொதுவாக, அப்படிப்பட்ட பேச்சை பயன்படுத்துவதானது, ஒருவர் பார்க்கக்கூடியவற்றோடும் கேட்கக்கூடியவற்றோடும் தொடர்புபடுத்தப்படலாம். அநேக நாடுகளில், குத்தலாக பேசுவது, மதிப்பில்லாமல் பேசுவது, அவமானப்படுத்துவது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுபவையாகவும் நகைச்சுவையாகவும்கூட கருதப்படுகின்றன. a குறிப்பாக கணவன்மார், “உண்மையான” ஆம்பிளைகளை ஆதிக்கம் செலுத்துவோராகவும் சொற்தாக்குதல் செய்வோராகவும் அடிக்கடி வருணித்திருக்கும் மக்கள்தொடர்பு சாதனங்களால் செல்வாக்கு செலுத்தப்படலாம்.
அதே விதமாக, மரியாதைக்குறைவான பேச்சை உபயோகிக்கும் அநேகர், எப்போதும் கோபத்தாலும் மனக்கசப்பாலும் ஏளனமான பேச்சாலும் பொரிந்துகொண்டிருக்கும் பெற்றோர்களுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டிருந்தனர். இவ்வாறு சிறுவயது முதற்கொண்டே, இந்த வகையான நடத்தை சகஜம் என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றனர்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஒரு பிள்ளை, பேச்சுப் பாணியைக் காட்டிலும் அதிகத்தை கற்றுக்கொள்ளலாம்; தன்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் மாறுபட்ட கருத்தையும் அவன் தனக்குள் உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பிள்ளை கடுமையாக பேசப்பட்டால், அவன் தகுதியற்றவன் என்ற உணர்ச்சியோடு வளரலாம், கடுங்கோபங்கொள்ளும்படியும் தூண்டப்படலாம். ஆனால் பிள்ளை, தனது அம்மாவை தனது அப்பா சொற்களால் தாக்குவதை வெறுமனே தற்செயலாக கேட்டால் அப்போது என்ன? பிள்ளை மிகவும் சிறியதாக இருந்தாலும், பெண்கள்மீது அப்பாவிற்கு இருக்கும் இகழ்ச்சி அவன் மனதில் பதிந்துவிடக்கூடும். ஒரு ஆண் பெண்களைக் கட்டுப்படுத்துபவனாக இருக்க வேண்டும் என்றும் அவர்களை பயமுறுத்துவதன் மூலமோ புண்படுத்துவதன் மூலமோ கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அப்பாவின் நடத்தையைப் பார்த்து ஒரு பையன் கற்றுக்கொள்ளலாம்.
கோபமான பெற்றோர் ஒருவர் கோபமான ஒரு பிள்ளையை வளர்க்கலாம்; அவன் ‘பெரும்பாதகம்’ செய்யும் ‘கோபத்தின் தலைவனாக’ ஆகும்படி வளரக்கூடும். (நீதிமொழிகள் 29:22, அடிக்குறிப்பு, NW) புண்படுத்தும் பேச்சின் மரபுரிமைப் பண்பு, இவ்வாறு, ஒரு சந்ததியிலிருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படலாம். பலமான காரணங்களுடன், பவுல் தகப்பன்மாருக்கு இவ்வாறு ஆலோசனை கொடுத்தார்: ‘உங்கள் பிள்ளைகளுக்கு . . . கோபமூட்டாதிருங்கள்.’ (கொலோசெயர் 3:21) தியோலாஜிகல் லெக்ஸிகன் ஆஃப் தி நியூ டெஸ்டமென்ட்-படி, ‘கோபமூட்டுதல்’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “போரிடுவதற்கு தயாராக்குவதும் தூண்டுவதும்” என்ற அர்த்தத்தை கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகமில்லாமல், பெற்றோர் செலுத்தியிருக்கும் செல்வாக்கு, சொற்களாலோ மற்றபடியோ பிறரைத் தாக்குவதை சரி என ஆக்கிவிடுவதில்லை; ஆனால் கடுமையான பேச்சினிடமாக உள்ள ஒரு மனப்பான்மை எவ்வாறு ஆழமாக பதிந்துவிடலாம் என்பதை விளக்குவதற்கு அது உதவுகிறது. ஓர் இளம் நபர் சரீரப்பிரகாரமாக தனது மனைவியை கொடுமைப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் தனது வார்த்தைகளாலும் தனது மனப்பாங்கினாலும் அவளை கொடுமைப்படுத்துகிறாரா? பெண்களின்பேரில் தனது தகப்பனுக்குள்ள இகழ்ச்சியே தன் மனதிலும் பதிந்திருக்கிறதென்பதை சுய-பரிசோதனை ஒரு நபருக்கு வெளிக்காட்டலாம்.
தெளிவாகவே, மேல்காணும் நியமங்கள் பெண்களுக்கும் பொருந்தலாம். ஒரு தாய் தனது கணவனை தூஷித்தால், மகளும் திருமணமானவுடன் தனது கணவனை அதே விதமாக நடத்தக்கூடும். பைபிள் பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.” (நீதிமொழிகள் 21:19) இருந்தபோதிலும், தூஷிக்கும் இந்த விஷயத்தில் ஒரு ஆண் குறிப்பாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏன்?
கொடுமைப்படுத்துவோரின் வல்லமை
திருமணத்தில் பொதுவாக மனைவியைக் காட்டிலும் கணவனுக்கு மிகுந்த அதிகார வல்லமை இருக்கிறது. சரீர தீங்கின் எந்த அச்சுறுத்துதலையும் இன்னும் அதிக அச்சமூட்டுவதாக ஆக்குபவராய் அவர் கிட்டத்தட்ட எப்போதுமே சரீரப்பிரகாரமாய் அதிக பலம்பொருந்தியவராக இருக்கிறார். b கூடுதலாக, ஆணுக்கு அடிக்கடி மேம்பட்ட வேலைத் திறமைகளும் சுயமாகவே சம்பாதிப்பதற்கான அதிக திறமைகளும் நிதி சம்பந்தமான அதிக அனுகூலங்களும் இருக்கின்றன. இதன் காரணமாக, சொற்களால் தாக்கப்பட்ட பெண், மாட்டிக்கொண்டதுபோலும் தனிமையாயிருப்பது போலும் ஒருவேளை உணரலாம். ஞானவானாகிய சாலொமோன் ராஜா சொன்ன கூற்றை அவள் ஒருவேளை ஒப்புக்கொள்வாள்: “நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.”—பிரசங்கி 4:1.
கணவன், சம்பந்தசம்பந்தமில்லாத இரண்டு நிலைகளுக்கிடையில் இப்படியும் அப்படியுமாக இருந்தால்—ஒரு நிமிடம் மரியாதையோடும் மற்றொரு சமயம் குறைகூறுபவராயும் இருந்தால்—மனைவி குழம்பிப்போய்விடலாம். (யாக்கோபு 3:10-ஐ ஒப்பிடுக.) மேலும், அவளது கணவன் போதுமானளவு பொருளுதவி அளிப்பவராய் இருந்தால், கடுமையான பேச்சுக்கு இலக்காகும் ஒரு மனைவி, திருமணத்தில் ஏதோவொரு தவறிருக்கிறது என நினைப்பது தன் குற்றமே என உணரலாம். தனது கணவனின் நடத்தைக்காக தன்மீதேகூட அவள் பழிசுமத்திக்கொள்ளலாம். “சரீரப்பிரகாரமாக தாக்கப்படும் ஒரு மனைவியைப்போல், அதற்கு நான்தான் ஏதோவொரு வகையில் காரணமாயிருக்கிறேன் என்பதாக நான் எப்போதுமே நினைத்திருக்கிறேன்,” என்பதாக ஒரு பெண் ஒப்புக்கொண்டாள். மற்றொரு மனைவி இவ்வாறு சொல்கிறாள்: “நான் அவரைப் புரிந்துகொள்ள இன்னும் கடினமாக முயற்சி செய்து, அவருடன் ‘பொறுமையாக இருந்தால்,’ சமாதானத்தைக் கண்டடைய முடியும் என்பதாக நான் நம்பும்படி செய்யப்பட்டேன்.” துக்ககரமாக, மோசமாக நடத்தப்படுவது பெரும்பாலும் தொடர்கிறது.
அநேக கணவன்மார், தாங்கள் நேசித்து அருமையானவளாக கருதுவதற்கு வாக்குறுதி அளித்த பெண்ணை ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது உண்மையில் துக்ககரமானது. (ஆதியாகமம் 3:16) ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைக் குறித்து என்ன செய்யலாம்? “பிரிந்துசெல்ல நான் விரும்பவில்லை. அவர் என்னை இழிவாக பேசுவதை நிறுத்த வேண்டுமென்று மட்டும்தான் விரும்புகிறேன்,” என்பதாக ஒரு மனைவி சொல்கிறாள். ஒன்பது வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, ஒரு கணவர் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “என் உறவு இழிவான பேச்சால் நிறைந்திருக்கிறது என்றும் நான்தான் இழிவாய் பேசுபவன் என்றும் உணருகிறேன். கண்டிப்பாக இதை மாற்றிக்கொள்வதையே விரும்புகிறேன், பிரிந்துசெல்வதையல்ல.”
பின்வரும் கட்டுரை காண்பிக்கப்போகும் விதமாக, புண்படுத்தும் பேச்சினால் அல்லல் நிறைந்த திருமண வாழ்க்கையை அனுபவிப்போருக்கு உதவி இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a தெளிவாகவே, முதல் நூற்றாண்டிலும் அதேதான் உண்மையாக இருந்தது. “கிரேக்கர்களுக்கு, மற்றவர்களை அவமதிப்பது எவ்வாறு என்பதையோ தங்களுக்கெதிரான அவமதிப்பை தாங்கிக்கொள்வது எவ்வாறு என்பதையோ தெரிந்துகொள்வது வாழ்க்கைக் கலைகளில் ஒன்றாக இருந்தது,” என்பதாக தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் தியாலஜி குறிப்பிடுகிறது.
b சொற்தாக்குதல், வீட்டு வன்முறைக்கு வழிநடத்தும் முதல் படியாக இருக்கலாம். (ஒப்பிடுக: யாத்திராகமம் 21:18.) தாக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “அடிகள், குத்துகள், கழுத்தை நெறிப்பது போன்ற உயிரை அச்சுறுத்தும் காரியங்களை எதிர்த்து, பாதுகாப்பு சட்டத்தைக் கோரும் ஒவ்வொரு பெண்ணும், அவற்றுடன்கூட, சரீரப்பிரகாரமாயிராத வேதனைமிக்க கொடுமையையும் நீண்ட காலமாக அனுபவித்திருக்கிறாள்.”
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
துக்ககரமாக, அநேக கணவன்மார், தாங்கள் நேசித்து அருமையானவளாக கருதுவதற்கு வாக்குறுதி அளித்த பெண்ணை ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர்
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
பெற்றோர் ஒருவரையொருவர் நடத்தும் விதம் பிள்ளையை பாதிக்கிறது