புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து குணப்படுத்தும் வார்த்தைகளுக்கு
“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்.”
கடுமையாக நிந்தித்தல்—புண்படுத்தும், தூஷணமான பேச்சை வேண்டுமென்றே பழக்கமாக பயன்படுத்துவது—பைபிளில் தெளிவாகவே கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின்படி, தனது பெற்றோரை கடுமையாக நிந்தித்த ஒருவர் மரண தண்டனைக்கு உள்ளாகக்கூடும். (யாத்திராகமம் 21:17, NW) இவ்வாறு, யெகோவா தேவன் காரியங்களை அக்கறையின்றி நோக்குவதில்லை. அவருடைய வார்த்தையாகிய பைபிள், கடவுளை சேவிப்பதாக ஒருவர் சொல்லிக்கொள்ளும்வரை, ‘சாத்தப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்’ நடக்கும் எதுவும் முக்கியத்துவமற்றது என்ற கருத்தை ஆதரிப்பதில்லை. பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.” (யாக்கோபு 1:26; சங்கீதம் 15:1, 3) ஆகவே ஒரு ஆண் தன் மனைவியை தூஷித்தால், கடவுளுடைய பார்வையில் அவனது மற்ற அனைத்து கிறிஸ்தவ கிரியைகளும் பயனற்றதாக கருதப்படும். a—1 கொரிந்தியர் 13:1-3.
கூடுதலாக, கடுமையாக நிந்திக்கும் ஒரு கிறிஸ்தவர், சபைநீக்கம் செய்யப்படுவதை எதிர்ப்படலாம். கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களையும்கூட அவர் இழந்துவிடலாம். (1 கொரிந்தியர் 5:11; 6:9, 10, NW) தெளிவாகவே, வார்த்தைகளால் புண்படுத்தும் ஒரு நபர் மிகப் பெரிய மாற்றத்தை செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆனால் இது எவ்வாறு செய்யப்படலாம்?
பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டுவருதல்
தெளிவாகவே, புண்படுத்துபவர், தன்னிடம் ஒரு வினைமையான பிரச்சினை இருக்கிறதென்பதை தெளிவாக புரிந்துகொண்டாலேயொழிய மற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளமாட்டார். எதிர்பாராத விதமாக, ஒரு ஆலோசகர் கவனித்தபடி, தூஷணமான பேச்சைப் பயன்படுத்தும் அநேக ஆண்கள் “தங்கள் நடத்தையை கொடுமையானதாக கருதுவதேயில்லை. இப்படிப்பட்ட ஆண்களுக்கு, அந்தச் செயல்கள் முழுமையாகவே சகஜமானவை; மேலும், அவை கணவன்மாரும் மனைவிமாரும் ஒருவரையொருவர் நடத்துவதற்குரிய ‘இயல்பான’ வழிகள்.” இவ்வாறு, சூழ்நிலை அவர்களது கவனத்திற்கு நேரடியாக கொண்டுவரப்பட்டாலேயொழிய அநேகர் தங்களை மாற்றிக்கொள்வதற்கான தேவையை உணரமாட்டார்கள்.
அடிக்கடி, மனைவி தனது சூழ்நிலையை ஜெபசிந்தையோடு சீர்தூக்கிப் பார்த்த பிறகு—அவளது சொந்த நலனுக்காகவும் அவளது பிள்ளைகளின் நலனுக்காகவும் கடவுளுக்கு முன்பாக அவளது கணவனின் நிலைநிற்கையின்மீதுள்ள அக்கறையாலும்—தனது எண்ணத்தை வெளிப்படையாக சொல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை உணருவாள். வெளிப்படையாக பேசுவது காரியங்களை இன்னும் மோசமாக்கலாம் என்பதற்கும் அவளது வார்த்தைகள் சரமாரியான மறுப்புகளை எதிர்ப்படலாம் என்பதற்கும் எப்போதுமே வாய்ப்பு இருக்கிறதென்பது உண்மைதான். ஒருவேளை மனைவி எவ்வாறு உரையாடலைத் துவங்குவதென்பதன்பேரில் கவனமான முன்யோசனை செலுத்துவதன் மூலம் இதை மேற்கொள்ளலாம். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்,” என்பதாக பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:11) அமைதலான நேரத்தில் சாந்தமாகவும் ஆனால் வெளிப்படையாகவும் அணுகுவது அவரது இருதயத்தை எட்டலாம்.—நீதிமொழிகள் 15:1.
குற்றம்சாட்டுவதற்கு பதிலாக, புண்படுத்தும் பேச்சு எவ்வாறு தன்னை பாதிக்கிறது என்ற நோக்குநிலையில் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மனைவி முயற்சி செய்ய வேண்டும். “நான்” வாக்கியங்கள் அடிக்கடி சிறப்பான பலனளிக்கின்றன. உதாரணத்திற்கு, ‘நான் வேதனைப்படுகிறேன், ஏனென்றால் . . . ’ அல்லது ‘நீங்கள் . . . என்று சொல்லும்போது நான் நிலை குலைந்துபோய்விடுகிறேன்.’ அப்படிப்பட்ட வாக்கியங்கள் இருதயத்தை எட்டும் சாத்தியத்தை அதிகமாக பெற்றிருக்கின்றன; ஏனெனில் அவை அந்த நபரைத் தாக்குவதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினையைத் தாக்குகின்றன.—ஆதியாகமம் 27:46–28:1-ஐ ஒப்பிடுக.
மனைவியின் உறுதியான ஆனால் சாதுரியமான தலையீடு நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும். (சங்கீதம் 141:5-ஐ ஒப்பிடுக.) ஒரு நபர், ஸ்டீவன் என நாம் அவரை அழைக்கலாம், இதை உண்மையென கண்டார். “என்னால் பார்க்க முடியாத, எனக்குள் இருந்த தூஷிப்பவனை என் மனைவி அடையாளம் கண்டுகொண்டு, அதை எனக்கு வெளியரங்கமாக்குவதற்கான மனதிடத்தைக் கொண்டிருந்தாள்,” என்பதாக அவர் சொல்கிறார்.
உதவிபெறுதல்
ஆனால் கணவன் பிரச்சினையை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டால் மனைவி என்ன செய்யலாம்? இந்தத் தருணத்தில் சில மனைவிமார் வெளிப்புற உதவியை நாடுகின்றனர். அப்படிப்பட்ட துயர்மிகுந்த சமயங்களில், யெகோவாவின் சாட்சிகள் தங்களது சபை மூப்பர்களை அணுகலாம். கடவுளுடைய ஆவிக்குரிய மந்தையை மேய்க்கும்போது அன்பாகவும் தயவாகவும் இருக்கும்படியும், அதேசமயத்தில் கடவுளுடைய வார்த்தையின் ஆரோக்கியமான போதனையைக் குறித்து “எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும்” இவர்களை பைபிள் துரிதப்படுத்துகிறது. (தீத்து 1:9; 1 பேதுரு 5:1-3) திருமணத் தம்பதிகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவது அவர்களது வேலையாக இல்லாத அதே சமயத்தில், ஒரு துணை மற்றொரு துணையின் கடுமையான பேச்சினால் துன்பப்படும்போது மூப்பர்கள் சரியாகவே அக்கறை காண்பிக்கின்றனர். (நீதிமொழிகள் 21:13) பைபிள் தராதரங்களை நெருக்கமாக பின்பற்றுபவர்களாக, இந்த நபர்கள் தூஷணத்தை பொருட்படுத்தாமல் விடுவதோ குறைவுபடுத்துவதோ இல்லை. b
எளிதாக பேச்சுத்தொடர்புகொள்ள, கணவனுக்கும் மனைவிக்கும் மூப்பர்கள் ஒருவேளை உதவக்கூடும். உதாரணத்திற்கு, உடன் வணக்கத்தாரான தன் கணவரால் பல வருடங்களாக சொற்களால் தாக்கப்பட்ட ஒரு பெண் ஒரு மூப்பரை அணுகினாள். மூப்பர் அவர்கள் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் தனித்தனியே பேசும்போது, மற்ற துணையை தலையிடாமல் செவிகொடுத்துக் கேட்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். மனைவி பேசுவதற்கான சமயம் வந்தபோது, பொத்துக்கொண்டு வரும் தனது கணவனின் கோபத்தை இனியும் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்பதாக அவள் சொன்னாள். பல வருடங்களாக, ஒவ்வொரு நாளின் மாலையிலும் அவர் வீட்டிற்குள் நுழையும்போது கடுகடுப்பாக வருவாரா இல்லையா என்பதை ஒருபோதும் அறியாததால், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருந்ததாக அவள் விளக்கினாள். ஆத்திரத்தால் வெடிக்கும்போது, அவளது குடும்பத்தைப் பற்றியும் அவளது நண்பர்களைப் பற்றியும் அவளைப் பற்றியும் தரக்குறைவான காரியங்களை அவர் சொல்வார்.
கணவனுடைய வார்த்தைகள் அவளை எவ்வாறு உணர வைத்தன என்பதை மனைவி விளக்கும்படி மூப்பர் கேட்டுக்கொண்டார். “எவரும் என்மீது அன்பு செலுத்த முடியாதளவுக்கு நான் வெறுப்பை ஏற்படுத்தும் ஒருத்தி என்பதாக உணர்ந்தேன்,” என அவள் பதிலளித்தாள். “நான் சிலசமயங்களில் என் அம்மாவிடம் இவ்வாறு கேட்பேன், ‘அம்மா, சேர்ந்து வாழ முடியாதளவுக்கு நான் அவ்வளவு பொறுத்துக்கொள்ள முடியாத ஒருத்தியா? நான் நேசிக்கப்பட முடியாதவளா?’ ” அவரது வார்த்தைகள் தன்னை எவ்வாறு உணரச்செய்தன என்பதை அவள் விளக்கினபோது, அவளது கணவன் அழ ஆரம்பித்துவிட்டார். முதன்முறையாக, தனது வார்த்தைகளால் தனது மனைவியை எந்தளவுக்கு ஆழமாக புண்படுத்திவந்திருக்கிறார் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
உங்களால் மாற முடியும்
முதல் நூற்றாண்டிலுள்ள சில கிறிஸ்தவர்களுக்கு தூஷணமான பேச்சைக் குறித்து பிரச்சினை இருந்தது. ‘கோபத்தையும் மூர்க்கத்தையும் பொறாமையையும் தூஷணத்தையும் வம்பு வார்த்தைகளையும்’ விட்டுவிடும்படி கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்கு அறிவுரை கூறினார். (கொலோசெயர் 3:8) எனினும், கடுமையான பேச்சு நாவைக் காட்டிலும் இருதயத்தின் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. (லூக்கா 6:45) ஆகவேதான் பவுல் இவ்வாறு கூடுதலாக சொன்னார்: ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, . . . புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.’ (கொலோசெயர் 3:9, 10) ஆகவே மாற்றம், வித்தியாசமாக பேசுவதை மாத்திரம் உட்படுத்துவதில்லை ஆனால் வித்தியாசமாக உணர்வதையும் உட்படுத்துகிறது.
புண்படுத்துமாறு பேசும் கணவருக்கு, தன் நடத்தையை உண்மையிலேயே எது தூண்டுவிக்கிறது என்பதை தீர்மானிக்க ஒருவேளை உதவி தேவைப்படலாம். c சங்கீதக்காரனின் மனப்பான்மையைப் பெற்றிருக்க அவர் விரும்பலாம்: ‘தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்.’ (சங்கீதம் 139:23, 24) உதாரணத்திற்கு: அவரது துணையின்மீது ஆதிக்கம் செலுத்தவோ கட்டுப்படுத்தவோ தேவை இருப்பதாக ஏன் அவர் உணருகிறார்? சொற்களால் தாக்குவதை எது தூண்டுகிறது? அவரது தாக்குதல்கள் ஆழமான மனக்கசப்பின் ஒரு அறிகுறியா? (நீதிமொழிகள் 15:18) ஒருவேளை அவரது வளர்ப்பிலே எப்போதும் குறைகூறும் பேச்சு இருந்ததன் விளைவாக, யோக்கியதையற்றவன் என்ற உணர்ச்சிகளால் அவர் அவதிப்படுகிறாரா? அப்படிப்பட்ட கேள்விகள், தனது நடத்தைக்கான காரணங்களை தெரிந்துகொள்ள ஒரு நபருக்கு உதவலாம்.
எனினும், தூஷணமான பேச்சை களைந்தெறிவது கடினமானது, முக்கியமாக குத்தலாக பேசுவோரான பெற்றோராலோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் நடத்தையை முன்னேற்றுவிக்கும் ஒரு நாகரிகத்தாலோ மனதில் பதிந்திருந்தால் அது கடினமாக இருக்கிறது. ஆனால் கற்றுகொள்ளப்படும் எவற்றையும் நேரத்தாலும் முயற்சியாலும் விட்டுவிட முடியும். இந்த விஷயத்தில் பைபிள் மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. நன்கு ஊறிப்போன நடத்தையையும்கூட நிர்மூலமாக்க அது ஒருவருக்கு உதவக்கூடும். (2 கொரிந்தியர் 10:4, 5-ஐ ஒப்பிடுக.) எவ்வாறு?
கடவுளால் நியமிக்கப்பட்ட பங்குகளைப் பற்றிய சரியான கண்ணோட்டம்
அடிக்கடி, சொற்களால் புண்படுத்தும் ஆண்கள், கணவன் மற்றும் மனைவிக்கான கடவுளால் நியமிக்கப்பட்ட பங்குகளைக் குறித்து தவறான புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, பைபிள் எழுத்தாளராகிய பவுல், மனைவிமார் ‘சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என்றும் “புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்” என்றும் குறிப்பிடுகிறார். (எபேசியர் 5:22, 23) தலைமைத்துவம் முழுமையான கட்டுப்பாட்டிற்கான உரிமையை தனக்கு அளிக்கிறது என்பதாக கணவன் ஒருவேளை உணரலாம். ஆனால் இது அவ்வாறு இல்லை. அவரது மனைவி, அவருக்கு கீழ்ப்படிந்திருந்தாலும், அவரது அடிமையல்ல. அவள் அவருக்கு “உதவிசெய்பவள்” மற்றும் “ஏற்ற துணை.” (ஆதியாகமம் 2:18, NW) இவ்வாறு பவுல் கூடுதலாக சொல்கிறார்: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.”—எபேசியர் 5:28, 29.
கிறிஸ்தவ சபையின் தலைவராக, இயேசு, சரமாரியான குறைகூறுதல் அடுத்து எப்போது என சீஷர்கள் நடுக்கத்தோடு கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்படி ஒருபோதும் அவர்களை திட்டவில்லை. அதற்கு மாறாக, அவர் பரிவோடு இருந்து, இவ்வாறு அவர்களது மதிப்பை காத்துக்கொண்டார். “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” என்பதாக அவர்களுக்கு அவர் வாக்களித்தார். (மத்தேயு 11:28, 29) இயேசு எவ்வாறு தமது தலைமைத்துவத்தை செலுத்தினார் என்பதை ஜெபசிந்தையோடு தியானிப்பது, தனது தலைமைத்துவத்தை இன்னும் அதிக சமநிலையான கண்ணோட்டத்தில் பார்க்க ஒரு கணவனுக்கு உதவலாம்.
அழுத்தங்கள் எழும்பும்போது
பைபிள் நியமங்களை அறிந்துகொள்வது ஒரு விஷயம்; அழுத்தத்தின்போது அவற்றை பொருத்திப் பிரயோகிப்பது மற்றொரு விஷயம். அழுத்தங்கள் எழும்பும்போது, கணவன் கடுமையான பேச்சுப் பாணியை மறுபடியும் உபயோகிப்பதை எவ்வாறு தவிர்க்கலாம்?
கணவன் சோர்வாக இருக்கும்போது சொற்களால் தாக்கிப் பேசுவது ஆண்மைக்குகந்த அடையாளம் அல்ல. பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” (நீதிமொழிகள் 16:32) உண்மையான ஆண் தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார். இவ்வாறு சிந்திப்பதன் மூலம் அவர் ஒற்றுணர்வைக் காண்பிக்கிறார்: ‘என் வார்த்தைகள் என் மனைவியை எவ்வாறு பாதிக்கின்றன? அவளது நிலையில் இருந்தால் நான் எவ்வாறு உணருவேன்?’—மத்தேயு 7:12-ஐ ஒப்பிடுக.
எனினும், சில சூழ்நிலைகள் கோபத்தை தூண்டலாம் என பைபிள் ஒப்புக்கொள்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.” (சங்கீதம் 4:4) இவ்வாறும் குறிப்பிடப்பட்டிருக்கிறது: “கோபப்படுவதில் எந்தத் தவறுமில்லை, ஆனால் குத்தலாக பேசுவதன் மூலமாகவோ அவமானப்படுத்துவதன் மூலமாகவோ தரக்குறைவாக பேசுவதன் மூலமாகவோ சொற்களைக் கொண்டு தாக்குவது தவறானது.”
ஒரு கணவன் தனது பேச்சின்மீதுள்ள கட்டுப்பாட்டை இழப்பதாக உணர்ந்தால், மாறுதலுக்காக வேறு காரியத்தில் ஈடுபட அவர் கற்றுக்கொள்ளலாம். ஒருவேளை அறையைவிட்டு வெளியே செல்வதோ உலாவச் செல்வதோ சாந்தமாவதற்கு ஒரு தனிப்பட்ட இடத்தைக் காண்பதோ ஞானமானதாக இருக்கலாம். நீதிமொழிகள் 17:14 இவ்வாறு சொல்கிறது: “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.” எரிச்சல் தணிந்த பிறகு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருங்கள்.
சந்தேகமில்லாமல், எவரும் பரிபூரணர் அல்ல. கடுமையாக பேசும் பிரச்சினையையுடைய கணவன் ஒருவேளை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம். இது நடக்கும்போது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். “புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத்” தரித்துக்கொள்வது தொடர்நிகழ்ச்சியாகும், ஆனால் பெரிய வெகுமதிகளை அறுவடை செய்யும் ஒன்றாகும்.—கொலோசெயர் 3:10.
குணப்படுத்தும் வார்த்தைகள்
ஆம், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:21) புண்படுத்தும் பேச்சு, திருமணத்தை கட்டியெழுப்புவதும் பலப்படுத்துவதுமான வார்த்தைகளால் மாற்றீடு செய்யப்பட வேண்டும். பைபிள் பழமொழி ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.”—நீதிமொழிகள் 16:24.
சில வருடங்களுக்கு முன்பு, திறம்பட்ட விதத்தில் செயல்பட பலமான குடும்பங்களுக்கு உதவிய காரணக்கூறுகள் எவை என்பதை தீர்மானிக்க ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. “இந்தக் குடும்பங்களின் அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் நேசித்ததாகவும் அவ்வாறு அவர்கள் நேசித்ததை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே இருந்ததாகவும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டது,” என்பதாக திருமண நிபுணரான டேவட் ஆர். மேஸ் அறிக்கை செய்கிறார். “அவர்கள் ஒருவரையொருவர் அங்கீகரித்தனர், தனிப்பட்ட மதிப்புணர்வை ஒருவருக்கொருவர் கொடுத்தனர், பாசத்தோடு பேசுவதற்கும் நடந்துகொள்வதற்கும் ஒவ்வொரு நியாயமான வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டனர். மிக இயல்பாகவே, அவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பதை அனுபவித்ததும், அவர்களது உறவுகளை மிகவும் திருப்திகரமாக்கிய விதங்களில் ஒருவரையொருவர் பலப்படுத்தியதுமே விளைவாக இருந்தது.”
தேவபயமுள்ள எந்தக் கணவனும், வார்த்தைகளால் தனது மனைவியை வேண்டுமென்றே புண்படுத்தினால், அவளை நேசிப்பதாக உண்மையோடு சொல்ல முடியாது. (கொலோசெயர் 3:19) சந்தேகமில்லாமல், தனது கணவனை சொற்களால் தாக்கும் மனைவியைக் குறித்ததிலும் இதுவே உண்மையாக இருக்கும். உண்மையில், எபேசியர்களுக்கு பவுல் அளித்த புத்திமதியைப் பின்பற்றுவது, கணவன், மனைவி ஆகிய இருவரது கடமையாகவும் இருக்கிறது: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.”—எபேசியர் 4:29.
[அடிக்குறிப்புகள்]
a புண்படுத்தும் நபரை ஆணாக நாங்கள் குறிப்பிட்டாலும், இங்குள்ள நியமங்கள் பெண்களுக்கும் சம அளவில் பொருந்தும்.
b மூப்பராக ஆவதற்கோ தொடர்ந்து மூப்பராக சேவிப்பதற்கோ தகுதிபெற, ஒரு நபர் தாக்குபவராக இருக்கக்கூடாது. ஜனங்களை சரீரப்பிரகாரமாக தாக்குபவராகவோ அவர்களை குத்தலான வார்த்தைகளால் அதட்டி அடக்குபவராகவோ அவர் இருக்க முடியாது. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்களது சொந்த குடும்பங்களை நன்றாக நடத்துவோராக இருக்க வேண்டும். மற்ற இடங்களில் அவர் எவ்வளவு தயவாக நடந்துகொண்டாலும், ஒரு நபர் வீட்டில் அராஜகனாக இருந்தால் அவர் தகுதிபெறுவதில்லை.—1 தீமோத்தேயு 3:2-4, 12.
c ஒரு கிறிஸ்தவர் சிகிச்சையை நாடுகிறாரா என்பது தனிப்பட்ட ஒரு தீர்மானம். எனினும், அவர் பெறும் எந்தச் சிகிச்சையும் பைபிள் நியமங்களோடு முரண்படுவதில்லை என்பதை அவர் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
[பக்கம் 9-ன் படம்]
பேச்சுத்தொடர்புகொள்ள ஒரு தம்பதிக்கு, ஒரு கிறிஸ்தவ மூப்பர் உதவக்கூடும்
[பக்கம் 10-ன் படம்]
கணவன்மாரும் மனைவிமாரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உண்மையான முயற்சி எடுக்க வேண்டும்