நாவைக் கட்டுப்படுத்தி, அன்பையும் மரியாதையையும் காட்டுங்கள்
“உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [“ஆழ்ந்த மரியாதையோடு இருக்கக்கடவள்,” NW].”—எபேசியர் 5:33.
1, 2. மணமானோர் எல்லாருமே தங்களிடம் என்ன முக்கிய கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?
நீங்கள் ஒரு பரிசை பார்சலில் பெற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் “கவனமாகக் கையாளுங்கள்” என்ற லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பார்சலை நீங்கள் எப்படிக் கையாளுவீர்கள்? அது உடைந்துவிடாமல் இருக்க, வெகு ஜாக்கிரதையாகவே கையாளுவீர்கள். அப்படியானால், திருமணம் எனும் பரிசைக் குறித்து என்ன சொல்லலாம்?
2 இஸ்ரவேலைச் சேர்ந்த நகோமி என்ற விதவை, இளம் பெண்களாகிய ஒர்பாள், ரூத் ஆகியோரிடம் இவ்வாறு சொன்னார்: “கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் [“பரிசளிக்கும்,” NW] புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக.” (ரூத் 1:3-9) ஒரு சிறந்த மனைவியைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு [அதாவது, பரிசு].” (நீதிமொழிகள் 19:14) நீங்கள் மணமானவரானால், உங்கள் மணத்துணையைக் கடவுள் தந்த பரிசாகக் கருதுவது அவசியம். அந்தப் பரிசை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?
3. கணவர்களும் மனைவிகளும் பவுலின் எந்த அறிவுரைக்குக் கவனம் செலுத்துவது அவசியம்?
3 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [“ஆழ்ந்த மரியாதையுடையவளாக இருக்கக்கடவள்,” NW].” (எபேசியர் 5:33) பேசும் விஷயத்தில், கணவர்களும் மனைவிகளும் இந்த அறிவுரைக்கு எப்படிக் கவனம் செலுத்தலாம் என்பதை இக்கட்டுரையில் சிந்திக்கப் போகிறோம்.
“கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது”—ஜாக்கிரதை
4. நாவு எப்படி நன்மையோ தீமையோ செய்யலாம்?
4 நாவானது ‘கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது’ என பைபிள் எழுத்தாளரான யாக்கோபு சொல்கிறார். (யாக்கோபு 3:8, பொது மொழிபெயர்ப்பு) கட்டுப்படுத்தப்படாத நாவு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்ற அடிப்படை உண்மையை யாக்கோபு அறிந்திருந்தார். பைபிளில் உள்ள ஒரு நீதிமொழி, யோசனையற்ற பேச்சை ‘பட்டயக்குத்துகளுக்கு’ ஒப்பிடுவதை அவர் அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், “ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம் [அதாவது, மருந்து]” என அதே நீதிமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 12:18) ஆம், நம் வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அவை புண்படுத்தலாம், அல்லது புண்களை ஆற்றலாம். உங்களுடைய வார்த்தைகள் உங்கள் மணத்துணையை எப்படிப் பாதிக்கின்றன? உங்கள் துணையிடத்தில் இதைக் கேட்டால் அவர் என்ன பதிலைச் சொல்வார்?
5, 6. என்ன காரணங்களினால் நாவை அடக்குவது சிலருக்குக் கடினமாய் இருக்கிறது?
5 உங்கள் மணவாழ்க்கையில் புண்படுத்தும் பேச்சு மெல்ல மெல்ல தலைதூக்கினால், அதற்கு இடங்கொடுக்காமல் நிலைமையைச் சரிசெய்ய உங்களால் முடியும். ஆனால், அதற்கு முயற்சி தேவை. ஏன்? ஏனென்றால் முதலாவதாக, நம் அபூரணத்துடன் போராட வேண்டியுள்ளது. வழிவழியாகப் பெற்ற பாவம், தீங்கு செய்யும் விதத்தில் நம்மை சிந்திக்கவும் பேசவும் வைக்கிறது. “ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்” என யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 3:2.
6 நாவைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நம் அபூரணம் மட்டுமல்ல, குடும்ப சூழலும் காரணமாய் இருக்கிறது. சிலருடைய விஷயத்தில் அவர்களுடைய பெற்றோர்கள், “இணங்காதவர்களாயும் . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும்” இருந்திருக்கலாம். (2 தீமோத்தேயு 3:1-3) அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த பிள்ளைகள் பெரியவர்களான பிறகு அதே மாதிரியான குணங்களை வெளிக்காட்டுகிறார்கள். ஆக, அபூரணமோ வளர்ந்த சூழலோ புண்படுத்தும் விதத்தில் பேசுவதை நியாயப்படுத்திவிடாது. இருந்தாலும், இந்தக் காரணங்களை அறிந்திருப்பது, புண்படுத்தும் விதத்தில் பேசாதபடி நாவை அடக்குவது ஏன் சிலருக்கு மிகக் கடினமாய் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
புண்படுத்தும் விதத்தில் பேசுவதைத் தவிருங்கள்
7. ‘சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிடுங்கள்’ என கிறிஸ்தவர்களுக்கு பேதுரு கொடுத்த அறிவுரை எதை அர்த்தப்படுத்துகிறது?
7 கணவனோ மனைவியோ புண்படுத்தும் விதத்தில் பேசுவதற்கு என்ன காரணம் இருந்தாலும், அது அன்பு இல்லாததையும் துணையை மதிக்காததையும் காட்டுகிறது. ஆகவே, ‘சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிடுங்கள்’ என நல்ல காரணத்துடன்தான் கிறிஸ்தவர்களுக்கு பேதுரு அறிவுரை வழங்கினார். (1 பேதுரு 2:2) ‘புறங்கூறுதல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, ‘புண்படுத்தும் விதத்தில் பேசுவதை’ அர்த்தப்படுத்துகிறது. ‘ஆட்களை சொல் அம்பு கொண்டு தாக்குவது’ என்ற கருத்தை இது தருகிறது. கட்டுப்படுத்தப்படாத நாவினால் வரும் பாதிப்புகளை இது எவ்வளவு தெளிவாக விளக்குகிறது!
8, 9. புண்படுத்தும் விதத்தில் பேசும்போது என்ன நடக்கிறது, மணத்துணைகள் இதைத் தவிர்ப்பது ஏன் அவசியம்?
8 புண்படுத்தும் பேச்சினால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாததுபோல் தோன்றலாம், ஆனால், கணவனோ மனைவியோ அவ்வாறு பேசுகையில் என்ன நடக்கிறது என்பதைச் சிந்தியுங்கள். தன் துணையை முட்டாள், சோம்பேறி, அல்லது சுயநலவாதி என்று சொல்லும்போது, அந்தக் கணவன் அல்லது மனைவியின் சுபாவமே அதுதான் என முத்திரை குத்துவதுபோல் ஆகிவிடுகிறது. இது ஒருவருடைய மதிப்பைக் குறைத்துப்போடுகிறது. இது உண்மையிலேயே அன்பற்ற செயல். துணையின் குறைகளைப் பெரிதுபடுத்திச் சொல்வதைப் பற்றி என்ன? “ஒருநாளும் நேரத்திற்கு வருவது கிடையாது” அல்லது “ஒருநாளும் நான் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பது கிடையாது.” இவையெல்லாம் குறைகளைப் பெரிதுபடுத்தி சொல்வதாகத்தானே இருக்கும்? இப்படிச் சொல்வது பதிலடி கொடுக்கத் தூண்டுகிறது. இதனால், வாக்குவாதம் சூடுபிடிக்கிறது.—யாக்கோபு 3:5.
9 சதா புண்படுத்தும் விதத்தில் பேசும்போது மணவாழ்வில் இறுக்கம் நிலவுகிறது; இந்த இறுக்கத்தினால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீதிமொழிகள் 25:24 இவ்வாறு சொல்கிறது: “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.” (நீதிமொழிகள் 25:24) இந்த வார்த்தைகள் சண்டைக்கார கணவனுக்கும்கூட பொருந்துகின்றன. கணவன், மனைவி ஒருவரையொருவர் தாக்கும் விதத்தில் குத்தலாகப் பேசும்போது நாளடைவில் அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும்; ஒருவேளை, கணவனுக்கு அல்லது மனைவிக்கு தன்மீது அன்பில்லை, அன்பைப் பெறவே தான் தகுதியற்றவன்/ள் என்ற உணர்வைக்கூட ஏற்படுத்திவிடும். அப்படியானால், நாவை அடக்குவது முக்கியம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. ஆனால் இதைச் செய்வது எப்படி?
‘நாவுக்குக் கடிவாளம் போடுங்கள்’
10. நாவைக் கட்டுப்படுத்துவது ஏன் முக்கியம்?
10 “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது” என யாக்கோபு 3:8 குறிப்பிடுகிறது. இருந்தாலும், குதிரையில் சவாரி செய்பவர் கடிவாளத்தைப் பிடித்து அதைக் கட்டுப்படுத்துவதுபோல நம் நாவுக்குக் கடிவாளம் போட நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். “ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.” (யாக்கோபு 1:26; 3:2, 3) நம் நாவைப் பயன்படுத்தும் விதம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. இது உங்கள் துணையோடுள்ள உறவை மட்டுமல்ல, யெகோவா தேவனோடுள்ள உங்கள் உறவையும் பாதிக்கிறது.—1 பேதுரு 3:7.
11. ஒரு சிறிய கருத்துவேறுபாடு பெரிய வாக்குவாதமாக வெடிக்காதபடி எப்படித் தடுக்கலாம்?
11 உங்கள் துணையிடம் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதைக் கவனிப்பது ஞானமான செயல். பிரச்சினை எழும்போது, அதனால் ஏற்படும் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு முயலுங்கள். ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் இடையே எழுந்த பிரச்சினையைக் கவனியுங்கள். இதை ஆதியாகமம் 27:46–28:4-ல் காணலாம். “ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். இதைக் கேட்டு ஈசாக்கு கடுகடுப்புடன் பதில் அளித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, ரெபெக்காளுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தாத, தேவபயமுள்ள ஒரு பெண்ணைப் பார்த்து தனக்கு மனைவி ஆக்கிக்கொள்ளும்படி தங்கள் மகன் யாக்கோபுவை அவர் அனுப்பினார். கணவன், மனைவிக்கு இடையே ஏதோ கருத்துவேறுபாடு வருகிறதென வைத்துக்கொள்ளலாம். அப்போது, துணையைப் பற்றி குறைகூறாமல் பிரச்சினையைப் பற்றி பேசும்போது அந்தச் சிறிய பிரச்சினை பெரிய வாக்குவாதமாக வெடிக்காதபடி தடுக்கலாம். உதாரணமாக, “நீ/நீங்கள் என்னுடன் நேரம் செலவிடுவதே கிடையாது!” என்று சொல்வதற்குப் பதிலாக, “நாம் இரண்டு பேரும் சேர்ந்து கொஞ்ச நேரம் செலவிட்டால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன்” என்று சொல்லலாமே. மணத்துணைகள் ஒருவரையொருவர் குறைகூறாமல் பிரச்சினைக்குக் கவனம் செலுத்த வேண்டும். யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்பதை ஆராய்ந்து கொண்டிருப்பதைத் தவிருங்கள். “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்” என ரோமர் 14:19 கூறுகிறது.
‘கசப்பையும் கோபத்தையும் மூர்க்கத்தையும் நீக்கிவிடுங்கள்’
12. நாவைக் கட்டுப்படுத்த நாம் ஜெபத்தில் எதைக் கேட்க வேண்டும், ஏன்?
12 நாவை அடக்குவது என்பது புண்படுத்தும் விதத்தில் பேசாமலிருப்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், நம் வார்த்தைகள் வாயிலிருந்து அல்ல, இருதயத்திலிருந்தே வருகின்றன. இயேசு இவ்வாறு சொன்னார்: “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.” (லூக்கா 6:45) ஆகவே, உங்களுடைய நாவைக் கட்டுப்படுத்துவதற்கு தாவீதைப் போல நீங்களும் ஜெபம் செய்ய வேண்டியிருக்கலாம். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” என அவர் ஜெபித்தார்.—சங்கீதம் 51:10.
13. கசப்பும், கோபமும், மூர்க்கமும் எவ்வாறு புண்படுத்தும் பேச்சுக்கு வழிநடத்தலாம்?
13 புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசாதிருக்கும்படி மட்டுமல்ல, அதற்குக் காரணமான உணர்ச்சிகளை தவிர்க்கும்படியும் எபேசியர்களை பவுல் ஊக்குவித்தார். “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது” என அவர் எழுதினார். (எபேசியர் 4:31) ‘கூக்குரல், தூஷணம்’ ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு முன் ‘கசப்பு, கோபம், மூர்க்கம்’ ஆகியவற்றைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள். ஒருவருக்குள் குமுறிக்கொண்டிருக்கிற கோபமே, புண்படுத்தும் பேச்சாக வெளிப்படுகிறது. ஆகவே, உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் இருதயத்தில் கசப்பையும் கோபத்தையும் வைத்திருக்கிறேனா? நான் “எளிதில் சினம் கொள்”கிறேனா?’ (நீதிமொழிகள் 29:22, பொ.மொ.) ஆம் என்றால், இப்படிப்பட்ட உணர்ச்சிகளை மேற்கொள்வதற்கு உதவிகேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள், கோபத்தை வெளிக்காட்டாதபடி உங்களையே கட்டுப்படுத்துங்கள். சங்கீதம் 4:4 இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.” உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இனியும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டால் நீதிமொழிகள் 17:14-ல் உள்ள அறிவுரையைப் பின்பற்றுங்கள்: “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு [“அங்கிருந்து போய்விடு,” NW]” என அது சொல்கிறது. கோபம் வருகையில் அந்த இடத்தைவிட்டு போய்விடுங்கள்; தணியும் வரையில் அந்த இடத்திற்கு வராதீர்கள்.
14. வன்மம் வைத்திருப்பது எவ்வாறு மணவாழ்வைப் பாதிக்கிறது?
14 மூர்க்கத்தையும் கோபத்தையும் எதிர்த்து சமாளிப்பது எளிதல்ல, அதுவும் பவுல் சொன்னதுபோல் ‘கசப்பினால்’ பிறக்கும் கோபத்தை எதிர்த்து சமாளிப்பது கொஞ்சமும் எளிதல்ல. இங்கு பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தைக்கு, “சமரசத்தை விரும்பாத கடும் கோபம்,” ‘தவறுகளைக் கணக்கு வைக்குமளவுக்கு வெறுப்பு’ என்றெல்லாம் விளக்கம் அளிக்கப்படுகிறது. கணவன், மனைவிக்கு இடையே தலைதூக்கும் பகைமை சில சமயங்களில் அடர்ந்த மூடுபனிபோல் ஆகிவிடுகிறது; அது வெகுகாலத்திற்கும்கூட நீடிக்கலாம். மனத்தாங்கலை முற்றிலும் சரிசெய்யாவிட்டால், தம்பதியர் ஒருவரையொருவர் வெறுத்தொதுக்க ஆரம்பிக்கலாம். மணத்துணை எப்போதோ செய்த தவறுகளுக்கெல்லாம் மனதில் வன்மம் வைத்திருப்பது அர்த்தமற்றது. நடந்தது நடந்ததுதான், அதைச் சரிசெய்ய முடியாது. ஒரு தவறை மன்னித்துவிட்டால் அந்தத் தவறை அடியோடு மறந்துவிட வேண்டும். அன்பு, “தீங்கை கணக்கு வைக்காது.”—1 கொரிந்தியர் 13:4, 5.
15. புண்படுத்தும் விதத்தில் பேசிப் பழகியவர்கள் தங்களுடைய பேச்சை மாற்றிக்கொள்வதற்கு எது உதவும்?
15 சாதாரணமாகவே புண்படுத்தும் விதத்தில் பேசுகிற ஒரு குடும்பத்தில் நீங்கள் வளர்க்கப்பட்டதால் நீங்களும் அப்படியே பேசி பழகியிருந்தால் என்ன செய்வது? உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். வாழ்க்கையின் பல அம்சங்களில் நீங்கள் ஏற்கெனவே கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறீர்கள், அவற்றை மீறி நீங்கள் நடந்துகொள்ள மாட்டீர்கள். அதே விதமாக, உங்களுடைய பேச்சில் எப்படிக் கட்டுப்பாடு வைப்பீர்கள்? உங்களுடைய வாயிலிருந்து தகாத வார்த்தைகள் வரும் முன்னே அவற்றைத் தடுப்பீர்களா? எபேசியர் 4:29-ல் சொல்லப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீங்கள் கடைப்பிடிக்க விரும்பலாம். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்” என அது சொல்கிறது. இதைச் செய்வதற்கு, ‘பழைய சுபாவத்தையும் அதன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னை உண்டாக்கியவரின் சாயலுக்கு ஏற்ப பூரண அறிவடையும்படி புதுப்பிக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.’—கொலோசெயர் 3:9, 10, NW.
“அந்தரங்கமான பேச்சு”—அவசியம்
16. மௌனம் சாதிப்பது ஏன் மணவாழ்வைப் பாதிக்கிறது?
16 ஒரு கணவனோ மனைவியோ பேசிக்கொள்ளாமல் மௌனம் சாதித்தால், எதையுமே சரிசெய்ய முடியாது, அது மணவாழ்வைத்தான் பாதிக்கும். துணையைத் தண்டிப்பதற்காகவே ஒருவர் மௌனம் சாதிக்கிறார் என்று சொல்லிவிட முடியாது; விரக்தியோ மனச்சோர்வோகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது மன இறுக்கத்தைக் கூட்டவே செய்யும், இருக்கிற பிரச்சினையைத் தீர்த்து வைக்காது. ஒரு மனைவி சொன்ன விதமாக, “திரும்பவும் பேச ஆரம்பித்தாலும், நடந்த பிரச்சினையைப் பற்றி பேசவே மாட்டோம்”; இப்படியிருந்தால் அந்தப் பிரச்சினை தீரவே தீராது.
17. கிறிஸ்தவர்கள் தங்களுடைய மணவாழ்க்கையில் பிரச்சினையை எதிர்ப்படுகையில் என்ன செய்ய வேண்டும்?
17 கணவன், மனைவிக்குள் மன இறுக்கம் தொடர்ந்திருக்கும்போது தீர்வு காண்பது எளிதல்ல. நீதிமொழிகள் 15:22 (NW) இவ்வாறு குறிப்பிடுகிறது: “அந்தரங்கமான பேச்சு இல்லையென்றால் திட்டங்கள் வெற்றியடையாது; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.” நீங்கள் உங்களுடைய துணையோடு உட்கார்ந்து பிரச்சினையைக் குறித்துப் பேச வேண்டும். அதோடு, துணை சொல்வதைத் திறந்த மனதுடனும் இருதயத்துடனும் கேட்க வேண்டும். அப்படிப் பேசிக்கொள்ள முடியாது என தெரிந்தால், கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களின் உதவியை நாடலாமே? அவர்கள் பைபிள் அறிவும், பைபிள் நியமங்களைப் பொருத்துவதில் அனுபவமும் உள்ளவர்கள். அப்படிப்பட்ட மூப்பர்கள், “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” இருக்கிறார்கள்.—ஏசாயா 32:2.
போராட்டத்தில் வெல்ல முடியும்
18. ரோமர் 7:18-23 என்ன போராட்டத்தைப் பற்றி சொல்கிறது?
18 நம் நாவை அடக்குவது ஒரு போராட்டம்தான். நம் செயல்களைக் கட்டுப்படுத்துவதும் ஒரு போராட்டம்தான். அப்போஸ்தலன் பவுல் தான் எதிர்ப்பட்ட போராட்டத்தைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” நம் ‘அவயவங்களில் இருக்கிற பாவப்பிரமாணத்தினால்’ நம் நாவையும் பிற அவயவங்களையும் தவறாகப் பயன்படுத்துவதற்குத் தூண்டப்படுகிறோம். (ரோமர் 7:18-23) என்றாலும், நாம் போராடியே ஆக வேண்டும்; அப்போது, கடவுளுடைய உதவியுடன் அதில் வெல்ல முடியும்.
19, 20. நாவை அடக்குவதற்கு, இயேசுவின் முன்மாதிரி எவ்வாறு கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் உதவும்?
19 அன்பும் மரியாதையுமிக்க மணவாழ்வில் யோசனையற்ற, புண்படுத்துகிற பேச்சுக்கே இடமில்லை. இந்த விஷயத்தில் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒருபோதும் தம் சீஷர்களிடம் புண்படுத்தும் விதத்தில் பேசவில்லை. இந்தப் பூமியில் அவருடைய கடைசி இரவில், தம் அப்போஸ்தலர்கள் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தபோது, அவர்களை அவர் கடிந்துகொள்ளவில்லை. (லூக்கா 22:24-27) “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என பைபிள் அறிவுரை கொடுக்கிறது.—எபேசியர் 5:25, 27.
20 அப்படியானால், மனைவிகளைப் பற்றி என்ன? மனைவி தன் “புருஷனிடத்தில் ஆழ்ந்த மரியாதையோடு இருக்கக்கடவள்.” (எபேசியர் 5:33, NW) தன் கணவருக்கு மரியாதை கொடுக்கிற மனைவி அவரிடம் புண்படுத்தும் விதத்தில் பேசி, கூச்சல் போடுவாளா? “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாறென்றும், நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 11:3) கிறிஸ்து தம்முடைய தலையாக இருக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பது போல, மனைவி தன்னுடைய தலையாக இருக்கும் கணவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். (கொலோசெயர் 3:18) எந்தவொரு அபூரண மனிதனாலும் இயேசுவை அப்படியே பின்பற்ற முடியாதுதான்; என்றாலும், அவருடைய ‘அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவர’ முயலுகையில் தங்களுடைய நாவை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் போராட்டத்தில் கணவர்களும் மனைவிகளும் வெல்ல முடியும்.—1 பேதுரு 2:21.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• கட்டுப்படுத்தப்படாத நாவு மணவாழ்வுக்கு எப்படித் தீங்கு செய்யலாம்?
• நாவை அடக்குவது ஏன் கடினம்?
• பேச்சைக் கட்டுப்படுத்த நமக்கு எது உதவுகிறது?
• மணவாழ்வில் இறுக்கம் நிலவுகையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 24-ன் படம்]
பைபிள் அடிப்படையில் மூப்பர்கள் உதவி அளிக்கிறார்கள்