இளைஞர் கேட்கின்றனர். . .
தீமைகள் நிகழ கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?
தன் சொந்த நாட்டில்—முன்பு யுகோஸ்லாவியா என்று அறியப்பட்டிருந்த நாட்டில்—போர் மூண்டபோது, லிடியா வெறுமனே ஒரு பருவவயதினளாக இருந்தாள். “ஓர் இருண்ட தங்குமிடத்தில் பல இரவுபகல்களை நான் கழித்தேன்,” என்று அவள் நினைவுகூருகிறாள். “கொல்லப்படுவதில் முடிவடைவதை அர்த்தப்படுத்துவதாய் இருந்தாலும்கூட, அடிக்கடி வெளியில் ஓட வேண்டும் போல் எனக்கு இருந்தது! போருக்கு முன்பு, உங்களுக்குத் தேவையானவையெல்லாம் இருந்தன; ஆனால் இப்போது, வெறுமனே உயிரோடிருப்பதற்கே நீங்கள் சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பீர்கள்.”
போரால் ஏற்பட்ட மன அழுத்தங்களும் கவலைகளும் விரைவில் லிடியாவை ஆவிக்குரிய வகையில் கடுமையாக பாதித்தன. அவள் இவ்வாறு கூறுகிறாள்: “வாரக்கணக்கில் நாங்கள் பிரசங்க ஊழியத்துக்கோ, கூட்டங்களுக்கோ போக முடியவில்லை. யெகோவா எங்களை நிராகரித்து வருவதாக உண்மையிலேயே நான் எண்ணினேன். நான் என்னிடமே இவ்வாறு கேட்டுக்கொள்வேன், ‘ஏன் அவர் இப்போது நமக்கு உதவுவதில்லை?’ ”
போர்கள், குற்றச்செயல், வன்முறை, நோய், பேரழிவுகள், விபத்துகள்—இவை போன்ற தீமைகள் இளைஞருக்கும்கூட சம்பவிக்கலாம். மேலும் ஒருவர் தனிப்பட்ட வகையில் கடும் அவலநிலைக்குள்ளாகையில் நீங்கள் இயல்பாகவே இவ்வாறு கேட்கலாம், ‘இத் தீமைகள் நிகழ கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?’
கடந்த காலங்களில் கடவுளுடைய மனிதர் அதுபோன்ற கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். உதாரணமாக, கடவுளுடைய மக்களிடையே அவகீர்த்தி உண்டாக்கும் விவகாரங்களின் நிலையை ஆபகூக் தீர்க்கதரிசி கண்டபோது, அவர் இவ்வாறு புலம்பினார்: “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன?” (ஆபகூக் 1:2, 3) கிறிஸ்தவ இளைஞர் சிலர் இன்று அதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
தன் தகப்பனின் எதிர்பாரா மரணத்திற்குப் பிறகு ஓர் இளம் கிறிஸ்தவப் பெண் உணர்ந்த விதத்தை எண்ணிப் பாருங்கள். அவள் இவ்வாறு கூறுகிறாள்: “எனக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது, ஜன்னலுக்கு வெளியே பார்த்து கூச்சலிட்டு, யெகோவாவை நோக்கி கத்தினேன். . . . எல்லாவற்றுக்கும் அவரையே பழிசுமத்தினேன். இது எப்படி சம்பவிக்க முடியும்? ஒரு சிறந்த தகப்பனாயும், ஓர் அன்புக் கணவனாயும் இருந்த அப்பாவுக்கு இவ்வாறு சம்பவித்துவிட்டதே—யெகோவாவுக்கு அக்கறை இல்லையா?” இது போன்ற ஒரு சூழ்நிலையில், கொஞ்சம் குழப்பமாயும், வருத்தமாயும், அல்லது கோபமாயும்கூட உணருவது சகஜம்தான். உண்மையுள்ள ஆபகூக் தீர்க்கதரிசியும்கூட கொடுமை நிகழ அனுமதிக்கப்பட்டபோது துன்புற்றார் என்பதை நினைவுகூருங்கள். இருந்தபோதிலும், ஒருவர் கடும் நிந்தையான உணர்வுகளை வளர்த்துவந்தால், அப்போதுதான் ஆபத்து. அவர் ‘கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடைபவராய்’ ஆகலாம்.—நீதிமொழிகள் 19:3.
அப்படியானால், கடுங்கோபமான மற்றும் கடும் நிந்தையான உணர்வுகளுக்கு இடம் கொடுப்பதை நீங்கள் எப்படி தவிர்க்க முடியும்? முதலில், தீமை எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தீமைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை
நாம் இவ்வாறு துன்புற வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் எண்ணியதில்லை என்பதை பைபிள் தெளிவாக்குகிறது. அவர் முதல் தம்பதியை, வேதனை மற்றும் துன்பத்திலிருந்து விடுபட்ட ஒரு பரதீஸ் வீட்டில் வைத்தார். (ஆதியாகமம் 1:28) சந்தேகமின்றி, காரியங்கள் தவறாய்ப் போன விதத்தை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்: பின்பு பிசாசாகவும் சாத்தானாகவும் அறியப்படலான காணக்கூடாத ஆவி சிருஷ்டி, ஆதாம் ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதிருக்கும்படி தூண்டினான். (ஆதியாகமம், அதிகாரம் 3; வெளிப்படுத்துதல் 12:9) இதைச் செய்ததினிமித்தம், தனது சந்ததி அனைத்தையும் பாவத்துக்கும் அதன் அழிவுக்கேதுவான விளைவுகளுக்கும் ஆதாம் குற்றமுடையதாக்கிவிட்டான்.—ரோமர் 5:12.
மனிதகுலத்தின்மீது தீமையைக் கொண்டுவந்தது கடவுள் அல்ல, மனிதனே என்பது தெளிவாயுள்ளது. (உபாகமம் 32:5; பிரசங்கி 7:29) இன்று மக்கள் துன்புறும் எல்லா தீமைகளும்—நோய், மரணம், போர்கள், அநீதிகள் ஆகியவை அனைத்தும்—ஆதாம் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனதினிமித்தம் விளைவடைந்தன. மேலுமாக, “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” என்று பைபிள் அழைக்கும் விஷயத்திற்கு நாம் எல்லாருமே ஆளாகிறோம். (பிரசங்கி 9:11, NW) கொடுமையுள்ளவர், நீதியுள்ளவர் ஆகிய இரு சாராருமே திடீர் விபத்துகளையும் அவலங்களையும் அனுபவிக்கின்றனர்.
கொடுமையைக் கடவுள் அனுமதித்தல்
கொடுமைக்குக் கடவுள் காரணர் அல்லர் என்பது ஆறுதல் அளிப்பதாய் இருக்கும் அதே சமயத்தில், ‘கொடுமை தொடர்ந்திருக்க அவர் ஏன் அனுமதிக்கிறார்?’ என்று நீங்கள் இன்னும் யோசிக்கலாம். திரும்பவும், ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதங்களை இது சம்பந்தப்படுத்துகிறது. ஆதாம் கீழ்ப்படியாமற்போனால், அவன் இறப்பான் என்று கடவுள் கூறினார். (ஆதியாகமம் 2:17) இருந்தபோதிலும், விலக்கப்பட்ட மரத்திலிருந்து புசித்தால் அவள் சாகவே மாட்டாள் என்று பிசாசு ஏவாளிடம் கூறினான்! (ஆதியாகமம் 3:1-5) மொத்தத்தில், சாத்தான் கடவுளை ஒரு பொய்யர் என அழைத்தான். மேலுமாக, மனிதன் செய்யவேண்டியதைக் கடவுள் அவனுக்குச் சொல்ல வேண்டியதன்றி, தானாகவே தீர்மானங்கள் செய்தால், இன்னும் பலனடையலாம் என்று சாத்தான் அர்த்தப்படுத்தினான்!
கடவுள் இக் குற்றச்சாட்டுகளைப் புறக்கணிக்க முடியாது. ஒரு சகவகுப்பு மாணவன் ஓர் ஆசிரியரின் அதிகாரத்தை எதிர்த்துச் சவால் விடுவதை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த ஆசிரியர் அவனை அப்படியே விட்டுவிட்டால், பிற மாணவர்களும் அதே போன்று செய்ய ஆரம்பிப்பர். அதைப் போலவே, சாத்தானின் சவாலை யெகோவா நேருக்கு நேர் சந்திக்காதிருந்தால், சர்வலோக ரீதியில் குழப்பங்கள் ஆரம்பித்திருக்கும். சாத்தானின் வழியில் காரியங்களைச் செய்ய மனிதனை அனுமதிப்பதன் மூலம் யெகோவா அதைச் செய்தார். சாத்தான் வாக்களித்த, கடவுளுடையதைப் போன்ற சுதந்திரத்தை மனிதன் அனுபவிக்கிறானா? இல்லை. சாத்தானின் ஆட்சி, அழிவையும் துன்பத்தையும் கொண்டுவந்திருப்பதன் மூலம், அவனை ஒரு தீய பொய்யனாய் நிரூபித்திருக்கிறது!
கொடுமை என்றென்றுமாய்த் தொடர்ந்திருக்க கடவுள் அனுமதிப்பாரா? அனுமதிக்க மாட்டார். சாத்தான் எழுப்பிய விவாதங்களைத் தீர்ப்பதற்கு, கடவுள் விரைவில் எல்லாக் கொடுமைக்கும் ஒரு முடிவைக் கொண்டு வருவார். (சங்கீதம் 37:10) ஆனால் அதுவரையில் நாம் எப்படி சமாளிப்பது?
உங்களை உட்படுத்துகிற ஒரு விவாதம்
முதலில், கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான இந்த விவாதம் உங்களை உட்படுத்துகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்! எப்படி? யோபு என்ற நீதிமானின் பெயரில் உள்ள பைபிள் புத்தகத்தை எண்ணிப்பாருங்கள். உண்மையுள்ள வணக்கத்தானுக்கு யோபுவை ஓர் உதாரணமாகக் கடவுள் சுட்டிக்காட்டியபோது, சாத்தான் இவ்வாறு பிரதிபலித்தான்: “நன்மையாக எதையாவது பெறாவிட்டால் யோபு உம்மை வணங்குவானா?” (யோபு 1:9, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்) உண்மையில், அழுத்தங்களுக்குட்படுத்த தான் அனுமதிக்கப்பட்டால், எந்த மனிதனையும் கடவுளைச் சேவிப்பதிலிருந்து தன்னால் விலக்க முடியும் என்று சாத்தான் விவாதித்தான்!—யோபு 2:4, 5.
ஆகவே, கடவுள் பயமுள்ள மக்கள் அனைவரையும் சாத்தான் நிந்தித்திருக்கிறான். அவன் உங்களையும் நிந்தித்திருக்கிறான். என்றபோதிலும், நீதிமொழிகள் 27:11 இவ்வாறு கூறுகிறது: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” ஆம், வேதனை தரும் சிரமங்கள் இருந்தபோதிலும் நீங்கள் கடவுளைச் சேவிக்கையில், சாத்தானை ஒரு பொய்யனாக நிரூபிப்பதில் நீங்கள் உண்மையிலேயே உதவுகிறீர்கள்!
தீயவற்றை எதிர்ப்படுகையில், உட்பட்டுள்ள விவாதங்களைப் பற்றி எண்ணுவது எளிதல்ல என்பது ஒத்துக்கொள்ளத்தக்கதே. தன் தாய் இறந்தபோது பத்து வயதே ஆகியிருந்த டையன் இவ்வாறு கூறுகிறாள்: “என் வாழ்வில் நேரிட்ட சோதனைகளால் நான் கல்நெஞ்சமுடையவளாகவோ, கடும் நிந்தை உணர்வுடையவளாகவோ மாறிவிடுவேனோ என்று பயந்தேன்.” என்றபோதிலும், கடவுள் ஏன் கொடுமையை அனுமதித்திருக்கிறார் என்பதை அறிந்திருப்பது, அவளுடைய பிரச்சினைகளைப் பற்றி ஒரு சரியான நோக்குநிலையைப் பெற அவளுக்கு உதவியிருக்கிறது. இப்போது அவள் கூறுகிறாள்: “என் வாழ்வில் கையாளுவதற்குக் கடினமான காரியங்கள் இருந்தாலும், யெகோவாவின் கரம் எப்போதும் என்னோடு இருந்திருக்கிறது.”
டையன் ஒரு மிக முக்கியமான உண்மையை நமக்கு நினைப்பூட்டுகிறாள்: நம் சொந்த பலத்தில் இவ்வழுத்தங்களைச் சமாளிக்க யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. சங்கீதம் 55:22 இவ்வாறு நிச்சயமளிக்கிறது: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” இளம் கோட்டோயோ இதை உண்மையெனக் கண்டாள். 1995-ல் கோப், ஜப்பானைக் குலுக்கிய பூமியதிர்ச்சியில் தன்னுடைய பெற்றோர் கொல்லப்பட்டபோது, அவள் அவலநிலையை எதிர்ப்பட்டாள். தன்னைக் குறித்தும் தன் உடன்பிறந்தவர்களைக் குறித்தும் பேசுபவளாய், அவள் இவ்வாறு கூறுகிறாள்: “யெகோவாவின்மீது சார்ந்திருக்க என் தாய் எங்களுக்குக் கற்பித்ததால், நாங்கள் சகித்திருக்க முடியும்.”
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இளம்பெண் லிடியாவைப் பற்றியென்ன? காலப்போக்கில், யெகோவா தன்னை முற்றிலும் கைவிட்டுவிடவில்லை என்பதை உணர ஆரம்பித்தாள். இப்போது அவள் கூறுகிறாள்: “யெகோவா எங்களுக்கென எப்போதும் இருந்தார். அவர் எங்களுக்கு வழிகாட்டினார், எங்கள் நடைகளை நடத்தினார்.”
யெகோவா—அக்கறையுள்ள ஓர் அன்பான கடவுள்
தீமைகள் உங்களுக்கு சம்பவிக்கையில், நீங்களும் கடவுளிடமிருந்து உதவியை அனுபவிக்க முடியும். ஏன்? ஏனெனில் யெகோவா உங்களைப் பற்றி அக்கறை கொள்கிறார்! மேலும், நல்லவர்களுக்கு தீமைகள் சம்பவிக்க அவர் அனுமதிக்கிறபோதிலும், அன்பான ஆறுதலையும் அவர் அளிக்கிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) அவர் அவ்வாறு செய்யும் ஒரு வழியானது, கிறிஸ்தவ சபையின் மூலமாகும். நீங்கள் திடீரென உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கப்படுகையில் உங்களைப் பலப்படுத்தக்கூடிய, ‘சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவர்களை’ நீங்கள் அங்குக் காண முடியும். (நீதிமொழிகள் 18:24) கோட்டோயோ இவ்வாறு நினைவுகூருகிறாள்: “பூமியதிர்ச்சிக்குப் பிறகு முதல் நாளிலிருந்தே சகோதரர்கள் கூடிவந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம்; உற்சாகத்தையும் தேவையான பொருட்களையும் நாங்கள் பெற்றோம். அது என்னைப் பாதுகாப்பாக உணரச் செய்தது. யெகோவாவும் சகோதரர்களும் இருக்கும் வரையில், நாம் எதையும் சகிக்க முடியும் என்று நான் உணருகிறேன்.”
யெகோவா உங்களை ஒரு தனி நபராய் அறிந்திருப்பதால், தீமைகள் சம்பவிக்கையில் உங்கள் தேவைகளையும் அவர் பார்த்துக்கொள்வார். தன் தகப்பனின் இழப்பைத் தான் சமாளித்திருந்த விதத்தை டான்யல் நினைவுகூருபவராய், இவ்வாறு கூறுகிறார்: “யெகோவா உங்களுக்கு ஒரு தகப்பனாகிறார்; அவருடைய அமைப்பு, முன்மாதிரியான ஆவிக்குரிய ஆட்களை அளிக்கிறது. என் அப்பா இருந்திருந்தால் நான் அவரோடு என்ன கேள்விகளைக் கலந்தாலோசித்திருப்பேனோ, அவற்றுக்கான பதில்களை யெகோவா எப்போதும் அளிக்கிறார்.” அதைப்போலவே டையனும், தன் தாய் இறந்தது முதல் யெகோவாவின் அன்பான கவனிப்பை அனுபவித்திருக்கிறாள். அவள் இவ்வாறு கூறுகிறாள்: “உற்சாகம், வழிநடத்துதல், ஆலோசனை ஆகியவற்றை அளித்திருக்கும் வயதானவர்களும் ஆவிக்குரிய வகையில் முதிர்ந்தவர்களுமானவர்களின் மூலமாக, எந்த உற்சாகமிழப்பையும் சமாளிக்கும்படி அவர் என்னை வழிநடத்தியும் உதவியுமிருக்கிறார்.”
தீமைகளை அனுபவிப்பது ஒருபோதும் இன்பமாய் இராதென்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்டவற்றை கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்பதை அறிவதில் ஆறுதலடையுங்கள். அந்தப் பிரச்சினையைக் கடவுள் வெகு விரைவில் தீர்ப்பார் என்று உங்களுக்கு நீங்களே நினைப்பூட்டிக்கொள்ளுங்கள். ஏன், நாம் அனுபவித்திருக்கும் தீமைகளின் எல்லாத் தடங்களும் காலப்போக்கில் நீக்கப்பட்டிருக்கும்! (ஏசாயா 65:17; 1 யோவான் 3:8) சமாளிக்க நமக்கு உதவுவதற்காக கடவுள் அளிக்கும் எல்லா ஏற்பாடுகளையும் சாதகமாய்ப் பயன்படுத்துவதன் மூலம், சாத்தானைப் பொய்யனாக நிரூபிப்பதில் உங்கள் பங்கை நீங்கள் செய்ய முடியும். தக்க சமயத்தில், ‘உங்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்.’—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 19-ன் படங்கள்]
தீமைகள் அனைத்தையும் விரைவில் யெகோவா ஒழிப்பார்