ஆக்கீ—ஜமைக்காவின் தேசிய உணவுவகை
ஜமைக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
அது ஜமைக்காவின் கரிபியன் தீவில் ஞாயிறு காலை. “காலை உணவு தயாராகிவிட்டது,” என்பதாக விருந்துக்கு அழைத்தவர் மகிழ்ச்சியுடன் அவருடைய அயல்நாட்டு விருந்தாளியிடம் அறிவிக்கிறார்.
“முட்டைப் பொறியல் காலை உணவாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறதே,” என்று அவ்விருந்தாளி கூறுகிறார்.
“ஊஹூம், இல்லை, அது ஆக்கீயும் கருவாடும்; ருசித்துப் பாருங்க,” என்று விருந்துக்கு அழைத்தவர் பதிலுரைக்கிறார்.
“பிரமாதமான சுவை,” என்று அவருடைய விருந்தாளி சொல்லுகிறார். “ஆனால் அது முட்டைப் பொறியலைப் போலவேதான் இருக்கிறது! ஆக்கீன்னா என்ன? அது ஒரு பழமா, காயா?”
“அது வெகு காலமாய்க் கேட்கப்படுகிற கேள்விதான்; தாவரவியலின்படி, ஆக்கீ ஒரு பழமாகக் கருதப்படுகிறது, ஆனால் சமைத்த பிறகோ, அது ஒரு காயாகவே பலரால் கருதப்படுகிறது” என்று விருந்துக்கு அழைத்தவர் பதிலுரைக்கிறார்.
ஆக்கீயைப் பற்றி விளக்கமாக உங்களிடம் கூறுகிறோம்.
போற்றப்படும் ஒரு மரம்
ஆக்கீ மரம் மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. ஆலிவ் சீனியரால் எழுதப்பட்ட ஏ டு ஸெட் ஆஃப் ஜமைக்கன் ஹெரிட்டேஜ் என்ற புத்தகத்தின்படி, 18-வது நூற்றாண்டில் அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலின் தலைவரால் அவை வாங்கப்பட்டபோது அத் தாவரங்கள் முதலாவதாக ஜமைக்காவை அடைந்தன. ஆக்கீ என்ற சொல் கானாவின் மொழியாகிய டுவியில் வழங்கப்படும் ஆன்க்கீ என்ற சொல்லில் இருந்து தோன்றியிருப்பதாக சிலரால் நம்பப்படுகிறது.
ஆக்கீ மரங்கள் பெரியவை, கிட்டத்தட்ட 15 மீட்டர் உயரத்திற்கு வளருகின்றன. ஜமைக்கா முழுவதிலும் அவை காணப்படுகின்றன; அவற்றின் பழம் அனைத்துத் தரப்பினராலும் உண்ணப்படுகிறது. ஆக்கீயிலிருந்து தயாரிக்கப்படும் உணவுவகை ஜமைக்காவின் தேசிய உணவுவகை என்பதாக விருப்பத்துடன் அழைக்கப்படுகிறது. பொதுவாக, வெங்காயம், மிளகு, பிற மசாலாப் பொருட்களுடன் தாளிக்கப்பட்ட சாறில், இறக்குமதி செய்யப்பட்ட காட்மீன் கருவாட்டுடன் ஆக்கீ சேர்க்கப்படுகிறது. காட் கருவாடு கிடைக்கவில்லையெனில், பிற மீன்கள் அல்லது மாமிசங்களோடோ, அல்லது தனியாகவோ ஆக்கீ உண்ணப்படுகிறது.
ஆக்கீயின் முதிராத பழம் பச்சை நிறமுடையது, ஆனால் முதிர்ந்து வரவர, நல்ல சிவப்பு நிறமாகிறது. முழுவதும் முதிர்ந்ததும், அப் பழம் வெடித்துத் திறக்கிறது, அப்போது பறிக்கப்படுவதற்குத் தயாராய் உள்ளது. பழம் திறக்கையில், மூன்று விதையலகுகள் வெளியில் தெரிகின்றன, அவை ஒவ்வொன்றின் நுனியிலும் கறுப்பு விதை ஒட்டியிருக்கிறது. அக் கறுப்பு விதைகளையும் அவ் விதையலகின் நடுவிலுள்ள சிவப்பு நிற பொருளையும் நீக்கிய பிறகு, அவ் விதையலகுகளின் வெளிர் மஞ்சள் நிறப் பகுதிகளே உண்மையில் உண்ணப்படுகின்றன.
அபாயத்துக்குக் காரணமாய் இருக்கையில்
அரிதாக, ஆக்கீயை உண்பதுடன் தொடர்புடையதாய் உள்ள உணவுநச்சு சம்பவங்கள்—விசேஷமாக சிறார்களில்—இருந்திருக்கின்றன. முதிராத பழங்களை உண்ணும்போது உணவுநச்சு ஏற்படுவதாக புலனாய்வுகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. வெடித்துத் திறப்பதற்கு முன்பு அப் பழத்தில் ஓர் அமினோ அமிலமான ஹைப்போகிளைசீன் இருப்பதாய் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
கொழுப்பு அமிலங்கள் (fatty acids) சிதைவுறுவதுடன் ஹைப்போகிளைசீன் குறுக்கிடுவதாக உயிர்வேதியியலார்கள் கண்டறிந்துள்ளனர். இது, ஆக்கீயை உண்பவரின் இரத்தத்தில் பல்வகைப்பட்ட சிறிய கார்பன் சங்கிலி அமிலங்கள் சேருவதற்கு வழிநடத்தலாம்; அதனால் தூக்கக் கலக்கத்தையும் ஆழ்மயக்கத்தையும் உண்டாக்கலாம். இரத்தத்தில் உள்ள, வளர்சிதை மாற்றத்துக்கு இன்றியமையாததாய் இருக்கும் குளுகோஸின் உற்பத்தியையும் ஹைப்போகிளைசீன் தடை செய்கிறது.
திறவாதிருக்கும் பழங்கள் சமைக்கப்படுகையில், ஆக்கீயிலுள்ள ஹைப்போகிளைசீன் கரைக்கப்படுவதாக ஆய்விலிருந்து பெறப்பட்ட உண்மைகள் காட்டுகின்றன. ஆகவே, ஆக்கீயை சமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட நீர் வடிக்கப்படவேண்டும்; பிற உணவை சமைப்பதற்காக பயன்படுத்தப்படக் கூடாது. முதிராத ஆக்கீகளை உண்பது அல்லது சமைப்பதைப் பற்றிய எச்சரிக்கைகள் அவ்வப்போது பொது சுகாதார துறையால் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
தங்கள் வாழ்நாள் முழுவதும் அதை உண்டிருப்பதாகவும், தீய விளைவுகளால் ஒருபோதும் துன்புறாதிருப்பதாகவும், ஆக்கீயை விரும்பி உண்ணுபவர்கள் பலர் கூறுகின்றனர். ஆகவே, ஆக்கீ அபாயத்துக்குக் காரணமாய் இருக்கலாம் என்பதை சிலர் மறுக்கலாம்.
பிரபலமாகி வருதல்
உணவுநச்சு பற்றிய அறிக்கைகள் அவ்வப்போது வருகிறபோதிலும், ஆக்கீயும் கருவாடும் ஜமைக்காவின் ஓர் உணவுவகையாக பிரபலமாகி வருகிறது. இருந்தபோதிலும், இரண்டையும் சேர்த்து உண்பது நிறுத்தப்படலாம்; ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட காட்மீனின் விலை திடீரென சமீப ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. ஆனால், பிற மீன்வகைகள், மாமிச வகைகள் ஆகியவற்றோடு சேர்த்து ஆக்கீ தயாரிக்கப்பட முடியும். ஆகவே பெரும்பான்மையோர் ஜமைக்காவின் இத் தேசிய உணவை ஒருவேளை நிறுத்திவிடப்போவதில்லை.
ஆக்கீயை உண்பதற்கான உங்களது ஆர்வம் தூண்டப்பட்டால், அதை ருசிக்க நீங்கள் இங்கு வரவேண்டியதாய் இராமல் இருக்கலாம்; ஏனெனில் அது ஒரு பிரபலமான ஏற்றுமதிப் பொருளாகியிருக்கிறது. ஆம், ஆக்கீ டப்பாக்களில் அடைக்கப்பட்டு, பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது; விசேஷமாக ஜமைக்காவைச் சேர்ந்தவர்கள் பலர் குடியேறியுள்ள நாடுகளுக்கு அவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆகவே, நீங்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட ஆக்கீயை உங்கள் நாட்டில் கண்டாலோ, ஜமைக்காவை பார்வையிடச் சென்றாலோ, கொஞ்சம் ஆக்கீயையும் கருவாட்டையும் சேர்த்து உண்ண முயலுங்கள். யாருக்குத் தெரியும்? அதன் பிரத்தியேகமான சுவையால் நீங்களும் அதை விரும்பி உண்பவராகலாம்!
[பக்கம் 17-ன் படம்]
க்கீ மரத்தின் பழம்