எல்லா காட்மீன்களும் எங்கே போய்விட்டன?
காட்மீன்கள் தண்ணீரில் அவ்வளவு ஏராளமாக இருந்ததால் “படகை ஓட்டிச் செல்வதுகூட கடினமாயிருந்தது.” இவ்வாறு 1497-ல் ஆய்வுப்பயணி ஜான் காபட் உலகிலேயே ஏராளமான மீன்கள் கிடைக்கும் இடங்களில் ஒன்றான நியூபௌண்ட்லாந்திலுள்ள கிராண்ட் பேங்க்ஸை விவரித்தார். 1600-களின் பிற்பகுதியில், நியூபௌண்ட்லாந்தில் பிடிக்கப்பட்ட காட்மீன்களின் வருடாந்தர அளவு கிட்டத்தட்ட 1,00,000 மெட்ரிக் டன்னை எட்டியிருந்தது. அடுத்த நூற்றாண்டில் பிடிக்கப்பட்ட மீன்களின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்தது.
இருப்பினும், இச்சூழ்நிலையில் இன்று திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது இருக்கும் காட்மீன்களின் எண்ணிக்கை அந்தளவுக்கு குறைந்திருப்பதால் 1992-ல் கனடா நாட்டு அரசாங்கம்தானே அட்லான்டிக் கடலில் காட்மீன்களைப் பிடிப்பதற்கு தடைவிதித்தது. இதனால், 35,000 மக்கள் மற்ற துறைகளில் வேலைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. மீன்பிடிப்பைத் தடை செய்யும் சட்டம் 1997-லும்கூட தொடர்ந்து அமலில் உள்ளது. ஆனால் எல்லா காட்மீன்களும் எங்கே போய்விட்டன?
1960-களில் சர்வதேச மீன்பிடிப்பு படகுகள், பெருமளவு காட் மீன்களை பிடிப்பதற்காக நியூபௌண்ட்லாந்தின் கரையை விட்டுத் தொலைவிலிருந்த கடலின் மீன்பிடிப்பு பகுதிகளில் வந்து குவிந்தன. 1968-ல் பன்னிரண்டுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து வந்த மீன்பிடிப்பு படகுகள் ஒரு வருடத்திற்கு 8,00,000 டன் மீன்களை நியூபௌண்ட்லாந்தின் கடலில் இருந்து எடுத்துச்சென்றன. முந்தைய நூற்றாண்டில் சராசரி வருடாந்தர மீன்பிடிப்பு அளவைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
குளிர்ந்த தண்ணீர், சீல்களின் அதிகரிப்பு, காட்மீன்களின் இடப்பெயர்ச்சி ஆகியவையும்கூட காட்மீன்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவுக்கு பங்குவகித்திருக்கிறபோதிலும், இவற்றின் அழிவுக்கு மனிதர்களின் பேராசையையே பெருமளவு குற்றம்சாட்டவேண்டும். கடற்துறை உயிரியலாளர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இதற்கு காரணம் அதிகமான மீன்பிடிப்பே.”
அட்லான்டிக் கடலிலுள்ள காட்மீன்களுக்கு எத்தகைய எதிர்காலம் உள்ளது? முதிர்ச்சியடைந்து, முட்டையிட்டு, இனத்தை பெருக்குவதற்கு போதுமான அளவு சிறிய மீன்கள் இருக்கின்றனவா என சிலர் சந்தேகிக்கிறார்கள். செ. ஜானின் தி ஈவினிங் டெலிகிராம் இவ்வாறு குறிப்பிட்டது: “கனடாவின் மிகப்பழம்பெரும் தொழிலான அட்லான்டிக் காட்மீன்வளம், சரித்திர புத்தகங்களில் மட்டுமே செழித்திருக்கும்.” இருப்பினும், இன்னும் நம்பிக்கை இருக்கிறது!
சீக்கிரத்தில், கடவுள் வாக்கு கொடுத்திருக்கிற நீதி வாசமாயிருக்கும் புதிய உலகத்தில், பேராசைக்கு இடமிருக்காது என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (2 பேதுரு 3:13) யெகோவா ‘பூமியைக் கெடுக்கிறவர்களை கெடுத்து’ அவரைப் பிரியப்படுத்தவும் சேவிக்கவும் விரும்புகிறவர்களை ஆசீர்வதிப்பதற்காக நிலத்தையும் சமுத்திரத்தையும் உயிரினங்களால் நிரம்பியிருக்கும்படி செய்வார்.—வெளிப்படுத்துதல் 11:18.
[படத்திற்கான நன்றி]
© Tom McHugh, The National Audubon Society Collection/PR
Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.