வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வேட்டையாடுவதையும் மீன் பிடிப்பதையும் ஒரு கிறிஸ்தவர் எப்படிக் கருத வேண்டும்?
வேட்டையாடுவதையும் மீன் பிடிப்பதையும் பைபிள் கண்டனம் செய்வதில்லை. (உபாகமம் 14:4, 5, 9, 20; மத்தேயு 17:27; யோவான் 21:6) இருந்தாலும், ஒரு கிறிஸ்தவர் வேட்டையாடுகிறவராகவோ மீன் பிடிக்கிறவராகவோ இருந்தால் அவர் பைபிளிலுள்ள பல நியமங்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நோவாவும் அவருடைய சந்ததியாரும் மிருகங்களைக் கொன்று சாப்பிட கடவுள் அனுமதித்தார், ஆனால், சாப்பிடுவதற்கு முன்பு இரத்தத்தை நீக்கிவிட வேண்டுமென ஒரு நிபந்தனை விதித்தார். (ஆதியாகமம் 9:3, 4) மிருகங்களுடைய உயிருக்கு யெகோவாவே ஊற்றுமூலராக இருப்பதால் அவற்றின் உயிருக்கு மதிப்பு காட்டுவதை இந்தக் கட்டளை வலியுறுத்தியது. எனவே, கிறிஸ்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்காகவோ சந்தோஷத்திற்காகவோ மிருகங்களைச் சாகடிப்பதில்லை. உயிருக்கு மதிப்புக்கொடுக்காத விதத்தில் ஈவிரக்கமின்றியும் அவற்றைச் சாகடிப்பதில்லை.—நீதிமொழிகள் 12:10.
இது சம்பந்தமாக நாம் சிந்திப்பதற்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது நம் மனநிலையை உட்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. மீனவர்களாக இருந்த சில அப்போஸ்தலர்கள் நிறைய மீன்களைப் பிடித்தபோது சந்தோஷப்பட்டிருப்பார்கள். இருந்தாலும், மீன் பிடிப்பதிலோ வேட்டையாடுவதிலோ தங்களுக்கு இருந்த திறமையைக் குறித்து அவர்கள் பெருமையடித்துக் கொண்டதாக எந்தப் பதிவுமில்லை. அல்லது, தங்களுடைய வீரத்தை நிரூபிப்பதற்காகவோ மற்றவர்களோடு போட்டி போடுவதற்காகவோ அவற்றில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. அல்லது, மிருகங்களை விரட்டி பிடிப்பதிலும் அவற்றுடன் மல்லுக்கட்டுவதிலும் அவற்றைச் சாகடிப்பதிலும் கிடைக்கும் கிளர்ச்சிக்காக அவற்றை வேட்டையாடியதாகவும் எங்கும் சொல்லப்படவில்லை.—சங்கீதம் 11:5; கலாத்தியர் 5:26.
எனவே, நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவாவைப் போலவே நானும் உயிரை மதிக்கிறேனா? வேட்டையாடுவதைக் குறித்தும் மீன் பிடிப்பதைக் குறித்துமே நான் சதா யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேனா? என்னுடைய வாழ்க்கைமுறை எதை நிரூபிக்கிறது? வேட்டையாடுவதை நான் அதிகமாய் நேசிக்கிறேன் என்பதையா அல்லது கடவுளுடைய ஊழியனாக இருக்க நான் ஆசைப்படுகிறேன் என்பதையா? வேட்டையாடுவதிலோ மீன் பிடிப்பதிலோ ஈடுபடுவது யெகோவாவை வணங்காதவர்களோடு நெருக்கமாகப் பழகவேண்டிய நிலைக்குள் என்னைத் தள்ளுகிறதா? அல்லது, என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளாமல் விட்டுவிட செய்கிறதா?’—லூக்கா 6:45.
உணவுக்காக வேட்டையாடும் அல்லது மீன் பிடிக்கும் சிலர், வேட்டையாடுவதற்கோ மீன் பிடிப்பதற்கோ தோதான சமயங்களில் ஆன்மீக விஷயங்களை கொஞ்சம் ஓரங்கட்டி வைப்பதில் தவறில்லை என்று நினைக்கலாம். இருந்தாலும், நாம் கடவுளுடைய காரியங்களுக்குக் கொடுக்கவேண்டிய இடத்தை வேறு எந்தக் காரியத்திற்கும் கொடுக்காமல் இருக்கையில் அவர்மீது நமக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இருப்பதைக் காண்பிக்கிறோம். (மத்தேயு 6:33) அதோடு, வேட்டையாடுவது, மீன் பிடிப்பது சம்பந்தமாக ‘இராயன்’ விதித்திருக்கும் எல்லா சட்டங்களுக்கும் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிகிறார்கள். அரசாங்கம் அந்தச் சட்டங்களை வலியுறுத்தினாலும் சரி வலியுறுத்தாவிட்டாலும் சரி, அவர்கள் அதற்குக் கீழ்ப்படிகிறார்கள்.—மத்தேயு 22:21; ரோமர் 13:1.
வேட்டையாடுவதிலும் மீன் பிடிப்பதிலும் யெகோவாவின் நோக்குநிலையைப் பின்பற்றுவதற்கு, சிலர் தங்களுடைய சிந்தையை அவருடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். (எபேசியர் 4:22-24) மறுபட்சத்தில், மற்றவர்கள் தங்களுடைய மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு எடுக்கிற தீர்மானங்களை நாம் மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு அளித்த ஆலோசனை மிகப் பொருத்தமாக இருக்கிறது: “நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலை . . . போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.” (ரோமர் 14:13) இப்படிப்பட்ட சுயநலமற்ற அன்பையும் மரியாதையையும் காண்பிப்பது சபையில் சமாதானத்தை உருவாக்குகிறது. அதோடு, உயிரின் ஊற்றுமூலரான நம் படைப்பாளரையும் சந்தோஷப்படுத்துகிறது.—1 கொரிந்தியர் 8:13.a
[அடிக்குறிப்பு]
a 1990 மே 15 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.