உலகை கவனித்தல்
புகையிலையும் வேலைவாய்ப்புகளும்
“புகையிலை பொருட்களுக்கு செலவு செய்வதைக் குறைப்பது” ஐக்கிய மாகாணங்களின் சில பகுதிகளில் “வேலைவாய்ப்பை அதிகரிக்கும்” என்பதாக தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்-ல் வெளிவந்த ஒரு அறிக்கை சொல்கிறது. முன்பு புகையிலையின்பேரில் செலவிடப்பட்ட நிதி எவ்வாறு மற்ற காரியங்களின்பேரில் செலவிடப்பட்டு இறுதியில் உலகமுழுவதுமாக வேலைவாய்ப்புகளில் அதிகரிப்பை ஏற்படுத்தலாம் என்பதைக் காண்பிப்பதற்கு கம்ப்யூட்டர் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டன. புகையிலை தொழிற்சாலை கணக்கிட்டிருக்கும் அளவுக்கு புகையிலை-வளர்ப்புப் பகுதிகள் வேலைகளை இழக்காது என்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “புகையிலை பற்றிய முக்கிய அக்கறை, வேலைவாய்ப்பின் பேரில் அது ஏற்படுத்தும் தாக்கத்தின்மீது இல்லாமல், உடல் ஆரோக்கியத்தின்பேரில் அது உண்டாக்கும் பேரளவான பாதிப்பின்மீது இருக்க வேண்டும்,” என்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏன்ஜெல்ஸ் டைம்ஸ்-ன்படி, அமெரிக்க மருத்துவ குழு, பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரை தங்களது பங்குகளை 13 புகையிலை கம்பனிகளுக்கு விற்குமாறும் கேட்டுக்கொண்டது. அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷனைச் சேர்ந்த ஸ்காட் பாலின், இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் வியாதியையும் மரணத்தையும் தொடர்ந்து விற்றுவரும் கம்பனிகளை நாம் ஆதரிக்கக்கூடாது.”
உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள்
ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு, முதன்முறையாக, உலகத்திலேயே மிகப் பெரிய கட்டிடம் ஐக்கிய மாகாணங்களில் இல்லை. உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர குடியிருப்பிற்கான கவுன்ஸில், விண்தொடு கட்டிடங்களைத் தீர்மானிக்கும் சர்வதேச அமைப்பாக, மலேசியாவிலிருக்கும் கோலாலம்பூரிலுள்ள பட்ரோனஸ் ட்வின் டவர்ஸுக்கு அந்தச் சிறப்புப் பட்டத்தை அளித்திருக்கிறது. இதற்கு முன்பு சாதனைக்குரிய பதிவில் இடம்பெற்ற கட்டிடமாகிய சிகாகோவிலுள்ள ஸியர்ஸ் டவர், அதன் தொலைக்காட்சி கம்பங்களோடு சேர்த்து அளவிடப்பட்டால் அதுதான் இன்னும் மிக உயரமான கட்டிடமாக இருக்கிறது. எனினும், அந்தக் கம்பங்கள் கட்டிடத்தின் கட்டமைப்பினுடைய பாகங்களல்ல என்பதாக அந்த கவுன்ஸில் தீர்மானித்தது. ஆசியாவிலுள்ள அநேக நாடுகளில் உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவது, அந்தப் பகுதியில் ஏற்படும் ஆச்சரியமூட்டும் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக ஆதரவாளர்களால் கருதப்படுகிறது. உண்மையில், பட்ரோனஸ் ட்வின் டவர்ஸ் இறுதியில் தனது மேன்மையான பெயரை இழக்கும்; அந்தப் பெயர் இந்தப் பத்தாண்டின் முடிவிற்குள், சீனாவிலுள்ள ஷாங்காயில் கட்டி முடிக்க அட்டவணையிடப்பட்டிருக்கும் உலக நிதி மையத்திற்கு கொடுக்கப்படும்.
கடற்பறவை விடுவித்தல்?
கரைக்கு அருகாமையிலுள்ள கடற்பகுதியில் பெரும் கச்சாயெண்ணெய்க் கசிவு ஏற்பட்டால், வனவாழ்வின்மீது உண்டாகும் பாதிப்பு கடுந்துயர் மிகுந்ததாய் இருக்கலாம். சிலசமயங்களில் அமைப்புகள்—அவை அநேகம், ஊதியமில்லாமல் பணிசெய்வோரைக் கொண்டிருக்கின்றன—செய்ய முடிந்ததைச் செய்ய உடனடியான நடவடிக்கை எடுக்கின்றன. எண்ணெய்யால் மூடப்பட்ட கடற்பறவைகளை சுத்தம்செய்வது முதல் முன்னுரிமைகளில் ஒன்றாகும். ஆனால் இந்த நடவடிக்கை எந்தளவுக்கு திறம்பெற்றதாயும் நீடிப்பதாயும் இருக்கிறது? சுத்தம் செய்யப்பட்டு அவற்றின் வாழிடங்களில் திரும்பவிடப்படும் ஆயிரக்கணக்கானவற்றில், பெரும்பாலானவை பத்து நாட்களுக்குள்ளாக இறந்துவிடுகின்றன என்பதாக நவீன ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. ஏன்? மனிதனால் கையாளப்படுவதன் அதிர்ச்சியோடுகூட, அந்தப் பறவைகள் அலகுகளால் தங்கள் இறகுகளைக் கோதி சுத்தம்செய்ய முயற்சி செய்யும்போது கொஞ்சம் எண்ணெய்யை விழுங்கியிருக்க வேண்டும், இது இறுதியில் அவற்றை கொன்றுவிடும். இதை எதிர்த்துத்தாக்க, பிரிட்டனில் கையாளப்படும் பறவைகளுக்கு, வெள்ளைக் களிமண், மரக்கரி, க்ளுகோஸ் ஆகியவற்றின் ஒரு கலவை உட்கொள்ள கொடுக்கப்படுகிறது. விஷங்களை அவற்றின் வயிற்றிலிருந்து கழியப் பண்ணுவதற்கான ஒரு முயற்சியாக இது இருக்கிறது. அப்படியிருந்தும், வெகு சில பறவைகளே இனப்பெருக்கம் செய்ய போதுமான காலம்வரை உயிர்வாழ்கின்றன; சுத்தம் செய்தல் “சிங்காரிப்புச் செயல்” போன்ற ஒன்றாகவே கருதப்படலாம் என்பதாக உயிரின சூழலியல் ஆய்வாளர் ஒருவர் சொன்னதாக லண்டனின் தி சன்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது.
ஈரலழற்சி-C-யும் இரத்தமும்
ஃபிரெஞ்ச் நாஷனல் நெட்வொர்க் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தினால் கொடுக்கப்பட்ட ஒரு அறிக்கை, “பிரான்ஸில் 5,00,000-லிருந்து 6,00,000 ஜனங்கள் ஈரலழற்சி-C வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக” முடிவு செய்கிறது. ல மான்ட் என்ற பாரிஸ் செய்தித்தாளின்படி, ஈரலழற்சி-C வைரஸினால் உண்டாக்கப்படும் வியாதிகளில் 60 சதவீதம் இரத்தமேற்றுதல்களாலோ சிரைவழியே மருந்து ஏற்றப்படுவதாலோ ஏற்படுகிறது. கூடுதலாக, சரியாக கிருமிகள் நீங்க தூய்மையாக்கப்படாத சாதனங்களால் பெறப்பட்ட மருத்துவ சிகிச்சையின்போது சில ஜனங்களுக்கு தொற்றிக்கொள்கிறது. ஈரலழற்சி-C, கரணை நோயிற்கோ (cirrhosis) அல்லது ஈரல் புற்றுநோயிற்கோ வழிநடத்தலாம்.
புகைப்பதை நீங்கள் நிறுத்தும்போது
ஒரு நபர் புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களுக்குள்ளாகவே, உடல் நன்மைக்கேதுவான மாற்றங்களடைய ஆரம்பிக்கிறது. புகைப்பவர் புகைப்பதை நிறுத்திய பிறகு குறிப்பிட்ட காலங்களில் நடக்கும் நன்மைக்கேதுவான மாற்றங்களின் கீழ்க்காணும் பட்டியலை ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரசுரித்தது. இருபது நிமிடங்கள்: இரத்த அழுத்தமும் நாடித் துடிப்பின் வீதமும் சகஜ நிலைக்கு வருகின்றன. கைகள் மற்றும் பாதங்களின் வெப்பம் சகஜ நிலைக்கு அதிகரிக்கிறது. எட்டு மணிநேரம்: இரத்தத்திலுள்ள கார்பன் மோனாக்ஸைட் அளவு சாதாரண அளவை எட்டுகிறது; இரத்தத்திலுள்ள பிராணவாயு அளவு வழக்கமான அளவுக்கு அதிகரிக்கிறது. இருபத்தி நான்கு மணிநேரம்: மாரடைப்பின் சாத்தியம் குறைகிறது. நாற்பத்தி எட்டு மணிநேரம்: நரம்பு நுனிகள் மறுபடியும் வளர ஆரம்பிக்கின்றன; ருசிப்பதற்கும் முகர்வதற்குமான திறமை மேம்படுகிறது; நடப்பது சுலபமாகிறது. இரண்டு வாரங்களிலிருந்து மூன்று மாதங்கள் வரை: இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; நுரையீரல் செயல்பாடு 30 சதவீதத்திற்கு அதிகரிக்கிறது. ஒன்றிலிருந்து ஒன்பது மாதங்கள்: இருமல், சைனஸ் சளித்தேக்கம், களைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை குறையும்; நுரையீரல் மயிர் மறுபடியும் வளர ஆரம்பிக்கும். ஒரு வருடம்: இதயத்தமனி நோயின் அபாயம் புகைப்பவருக்கிருப்பதைக் காட்டிலும் பாதியளவே இருக்கிறது.
லைப்ரரியிலிருந்து பாலியல் மற்றும் வன்முறை
கனெடிகட்டிலுள்ள ஸ்டாம்ஃபர்ட்டின் தி அட்வோகேட்-ன்படி, அ.ஐ.மா.-விலுள்ள கனெடிகட்டில் சில லைப்ரரிகள், காதல்புரிதல் மற்றும் தெளிவான வன்முறையை சித்தரிக்கும் திரைப்படங்களை எடுத்தச்செல்ல பிள்ளைகளை அனுமதிக்கின்றன. சில சமயங்களில், இன்டர்நெட்டோடு இணைக்கப்பட்டிருக்கும் லைப்ரரி கம்ப்யூட்டர்களை தடையின்றி பிள்ளைகள் பயன்படுத்தலாம். என்ன வகையான தகவல்கள் இளைஞருக்கு கிடைக்கின்றன என்பதன்பேரில் இது கூடுதலான கேள்விகளை எழுப்புகிறது. அநேக பெற்றோர் அதிர்ச்சி தெரிவித்தனர், ஆனால் லைப்ரரியில் பணிபுரிவோர், லைப்ரரியிலிருந்து பிள்ளைகள் என்ன எடுத்துச்செல்கிறார்கள் என்பதை கவனிப்பதற்கு பெற்றோருக்கு மாத்திரமே உரிமையும் பொறுப்பும் இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். “இது ஒரு சிக்கலான நிலைமை,” என்பதாக அங்குள்ள அலுவலரான ரனே பிஸ் கருத்துத் தெரிவித்தார்; “அதிக கட்டுக்கதைகள் பிள்ளைகளுக்கு ஏற்றவையாக ஒருவேளை இருக்காது,” என்பதாக குறிப்பிட்டார்.
பெண் உறுப்பு அறுக்கப்படுதல்
ஐக்கிய மாகாணங்களில் புகலிடத்தைப் பெற்ற ஒரு இளம் ஆப்பிரிக்க பெண், பெண் இனப்பெருக்க உறுப்பை அறுப்பதன்பேரில் மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளாள் என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. அந்தப் பெண், கட்டாய திருமணத்தின் ஒரு நிபந்தனையாக இருந்த பெண் உறுப்பு அறுக்கப்படுவதிலிருந்து தான் தப்பி ஓடுவதாக குறிப்பிட்டாள். அநேக ஆப்பிரிக்க நாடுகளில், சிறுமிகளின் இனப்பெருக்க உறுப்புகளின் சில பகுதிகள், குழந்தைப் பருவத்திலோ அல்லது பெண்மைப் பருவத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதாகவோ அறுத்தெடுக்கப்படுகின்றன. இது எந்த மயக்கமருந்தோ சுகாதார முன்னெச்சரிக்கைகளோ இல்லாமல் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. உணர்ச்சிப்பூர்வமான பெரும் பாதிப்போடுகூட, விளைவுகள் நோய்த்தாக்கம், இரத்தப்போக்கு, கருவுறாமை மற்றும் மரணமாகக்கூட இருக்கலாம். (விழித்தெழு! ஏப்ரல் 8, 1993-வது ஆங்கிலப் பிரதியில் பக்கங்கள் 20-24-ஐக் காண்க.) செய்தித்தாளின்படி, எட்டு கோடியிலிருந்து 11 கோடியே 50 லட்சம் வரையான பெண்கள் இந்தப் பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் இதை சட்டவிரோதமானதாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தேனீக்களின் செல்வழி கவனிக்கப்படுதல்
வெறும் 16 மில்லிமீட்டர் உயரமுள்ள, உலகத்திலேயே மிகச் சிறிய ரடார் ஆன்டனாக்கள், பிரிட்டிஷ் தேனீக்கள் சிலவற்றின் பின்புறத்தில் இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆன்டனாக்கள், தேனீக்கள் செல்லும்வழியை கண்டுபிடிக்க உதவும் கருவிகளாகும். இந்தப் பரிசோதனை இன்னும் சிறிய ஆன்டனாக்கள் தயாரிக்கப்படுவதில் விளைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது; அது இறுதியில் ஆப்பிரிக்க செட்ஸி ஈக்களின் பறக்கும் விதங்களை கண்காணிக்க அவற்றோடு இணைக்கப்படும். இது, இந்தப் பூச்சிகளால் கடத்தப்படும் தூக்கவியாதியை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆன்டனாக்களுக்கு சக்தியளிக்க எந்த பாட்டிரிகளும் தேவைப்படுவதில்லை; ஏனெனில், வரக்கூடிய செல்வழி கண்டுபிடிப்பு சிக்னல்களிலிருந்து அவற்றிற்கு தேவைப்படும் அனைத்து சக்தியையும் பெற்றுக்கொள்ளக்கூடிய திறமையை அவை பெற்றிருக்கின்றன. அந்த நன்மைகளோடுகூட, தேன்கூடுகளை இன்னும் திறம்பட்ட விதத்தில் கண்டுபிடிப்பதன் நோக்கத்தில், தேனீக்களின் பழக்கங்களைப் பற்றிய தங்களது அறிவை விஞ்ஞானிகள் முன்னேற்றுவிப்பதை எதிர்பார்க்கின்றனர்.
டிவி, வலிப்போடு சம்பந்தப்படுத்தப்படுகிறது
இந்தியாவில் செயற்கைக்கோள் டிவி அறிமுகப்படுத்தப்பட்டு, 24 மணிநேரமும் காணும் வாய்ப்பை அளித்திருப்பதானது, பிள்ளைகளில் நரம்புக் கோளாறுகள் அதிகமாக ஏற்படுவதற்கு வழிநடத்துகிறது. ஆல் இண்டியா நியூராலஜி அப்டேட்—1996 மாநாட்டில், முன்னிலையிலுள்ள நரம்பியல் மருத்துவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டனர். அம்ரிட்ஸர் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் துறையின் தலைவரான, டாக்டர் அஷோக் உபால் இவ்வாறு குறிப்பிட்டார்: “பிள்ளைகள் இப்போது நீண்ட நேரங்களுக்கு தொலைக்காட்சியை கண்சிமிட்டாமல் பார்க்கின்றனர்; இது, நரம்பியல் மருத்துவர்கள் ‘போட்டோ-ஸ்டிமியுலஸ் சென்சிடிவ் எபிலெப்ஸி அல்லது தொலைக்காட்சியால் உந்துவிக்கப்படும் வலிப்பு’ என்று பெயரிட்டிருக்கும் ஒரு நிலை அதிகரிப்பதில் விளைவடைகிறது.” டாக்டர் உபால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தொலைக்காட்சி பார்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதிக நேரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சமமான இடைவெளிகளில் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என அறிவுரையளித்தார்.
கொலையாளி பிடிபட்டாயிற்று
மெக்ஸிகோவில் வெகு சில பெண்களே புகையிலை உபயோகித்தாலும், 40 வயதைத் தாண்டியவர்களில் அநேகர், புகைத்தலோடு பொதுவாக சம்பந்தப்படுத்தப்படும் நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதாக ஹெல்த் இன்டர்அமெரிக்கா செய்திமடல் அறிக்கை செய்கிறது. காரணம்? “விறகடுப்புகளைக் கொண்டு சமைப்பது,” என்பதாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கூறினர். பீட்டர் பாரே என்ற மருத்துவ பேராசிரியரின்படி, பிரச்சினை அவ்வளவாக கவனிக்கப்படவில்லை, ஏனெனில், “விறகின் புகை உடல்நலத்திற்கு மிகப் பெரிய ஆபத்தளிப்பதாய் அடிக்கடி கருதப்படுவதில்லை. மரணம் பொதுவாக இருதயக் கோளாறினால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது; ஆனால் பிரச்சினையின் உண்மையான காரணம், விறகின் புகைக்கு அதிகமாக ஆளாவதாகும்.” உலகம் முழுவதுமாக 40 கோடி மக்கள் அபாயத்திலிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிடுகிறது, அவர்களில் பெரும்பான்மையோர் சரியான காற்றோட்டமில்லாத சிறிய கட்டிடங்களில் விறகடுப்புகளைப் பயன்படுத்தும் கிராமப்புற பெண்களாவர். புகைப்போக்கியை கட்டுவது உதவும், ஆனால் டாக்டர் பரேயின்படி, “பல நூற்றாண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்திருக்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுமாறு அவர்களை சம்மதிக்க செய்வதுதான் மிகப் பெரிய சவால்.”