இதய நாய்—உயிருக்கு ஆபத்து
ஒவ்வொரு ஆண்டும் உலகளவிலுள்ள லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் மாரடைப்பு நோய்களால் தாக்கப்படுகின்றனர். பின்விளைவுகள் சிலவற்றோடு மட்டும் பலர் பிழைத்துக்கொள்கின்றனர். மற்றவர்களோ பிழைப்பதில்லை. இன்னும் பிறருக்கு, “பயனுள்ள விதத்தில் மறுபடியும் இயல்பாக செயல்படுவது சந்தேகத்துக்குரியது” எனப்படும் அளவுக்கு இதயம் சேதமடைந்துவிடுகிறது என்றும், “ஆகவே, கூடுமானவரை மாரடைப்பு நோய்களை முளையிலேயே கிள்ளிவிடுவது மிகவும் அவசியம்” என்றும் இதய நோய் மருத்துவரான பீட்டர் கான் கூறுகிறார்.
இதயம் என்பது இரத்தத்தை இறைத்து உடல் முழுவதற்கும் செலுத்தும் ஒரு தசை. இரத்தத்தை இழக்கும்போது இதயத் தசையின் ஒரு பகுதி செயலிழந்துவிடுவதால் மாரடைப்பு (myocardial infarction) ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியமாய் இருப்பதற்கு, இரத்தத்தின்மூலம் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனும் பிற ஊட்டச்சத்துக்களும் இதயத்திற்குத் தேவை. இவற்றை, இதயத்தின் வெளிப்புறத்தைச் சுற்றியிருக்கும் இதயத் தமனிகளின் (coronary arteries) வழியாக அது பெறுகிறது.
இதயத்தின் எந்தப் பகுதியையும் நோய்கள் தாக்கலாம். என்றபோதிலும், மிகவும் பொதுவாக ஏற்படும் நோய், முற்றிய பருவத்தில் மட்டுமே தெரியவரும் நோயான இதயத்தமனி நோய் (Coronary artery disease); இது அத்திரோஸ்கிலிரோஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்படுகையில், முளை (plaque), அல்லது கொழுப்புப் படிவுகள் தமனியின் சுவர்களில் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், முளை மேலும் மேலும் சேர்ந்து கடினமாகி, தமனிகளைக் குறுக்கிவிடலாம். அதனால் இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடைசெய்யலாம். அடிப்படையாய் இருக்கும் இந்த இதயத்தமனி நோயே (CAD) பெரும்பாலான மாரடைப்பு நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
இதயத்துக்குச் செலுத்தப்படும் ஆக்ஸிஜனின் அளவைவிட, அதிகளவு ஆக்ஸிஜன் இதயத்துக்குத் தேவைப்படுகையில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தமனிகளில் ஏற்படும் அடைப்பு திடீரென்று மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மிகவும் மோசமாய்க் குறுக்கப்படாத தமனிகளிலும், படிந்திருக்கும் முளைகள் பல துண்டுகளாக உடைந்து, இரத்த உறைக்கட்டி (thrombus) ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன. நோய்ப்பட்ட தமனிகள் திடீர்ச் சுருக்கத்துக்கு உள்ளாகலாம். திடீர்ச் சுருக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் இரத்தம் உறைந்துவிடலாம். அப்போது, தமனியை இன்னும் சுருங்கச்செய்யும் ஒரு வேதிப்பொருள் விடுவிக்கப்படுகிறது. அதுவே மாரடைப்பைத் தூண்டுவிக்கிறது.
நீண்ட நேரமாக இதயத் தசைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காதிருக்கும்போது, அருகிலுள்ள திசு சேதமடையக்கூடும். திசுக்களில் சிலவற்றின் தசை மீண்டும் உருவாவதைப்போல், இதயத் தசை மீண்டும் உருவாவதில்லை. மாரடைப்பு நீண்டநேரம் இருக்கையில், இதயம் அதிக சேதமடைகிறது. இறப்பு நேரிடுவதற்கும் அதிக சாத்தியம் இருக்கிறது. இதயத்தின் மின்னமைப்பு சேதமடைந்தால், அந்த இதயத்தின் வழக்கமான துடிப்பு சீரற்றதாய் ஆகலாம், அதனால் இதயம் கட்டுப்பாடில்லாமல் படபடக்க (உதற) ஆரம்பிக்கலாம். அப்படிப்பட்ட இரத்த ஊட்டக்குறைவால், தேவையான அளவு இரத்தத்தை மூளைக்கு இறைக்கும் இதயத்தின் திறன் தோல்வியடைகிறது. பத்து நிமிடங்களுக்குள் மூளை செயலிழந்து இறப்பு நேரிடுகிறது.
எனவே, பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் விரைவில் தலையிட வேண்டியது அவசியம். அது இதயத்தைத் தொடர்ந்து சேதமடைவதிலிருந்து விடுவிக்கலாம், இரத்த ஊட்டக்குறைவு வராமல் தடுக்கவோ, அதற்கான சிகிச்சை அளிக்கவோ செய்யலாம், ஒருவரின் உயிரையே காக்கலாம்.