உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 12/8 பக். 8-10
  • ஆபத்தை எவ்வாறு குறைக்கலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆபத்தை எவ்வாறு குறைக்கலாம்?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வயது, பால், மரபுவழி
  • கொலஸ்ட்ரால் காரணி
  • ஓடியாடித் திரியாத வாழ்க்கைப்பாணி
  • மிகை அழுத்தம், அதிக எடை, நீரிழிவு
  • புகைத்தல்
  • அழுத்தம்
  • உங்கள் உணவு—உங்களுக்கே விஷமாகுமா?
    விழித்தெழு!—1997
  • நல்ல ஆரோக்கியம் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
    விழித்தெழு!—1990
  • இதய நோய்—உயிருக்கு ஆபத்து
    விழித்தெழு!—1996
  • உயர் இரத்த அழுத்தம்—தவிர்ப்பதும் கட்டுப்படுத்துவதும்
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 12/8 பக். 8-10

ஆபத்தை எவ்வாறு குறைக்கலாம்?

இதயத்தமனி நோய் (CAD) மரபியல் சார்ந்த, சூழலியல் சார்ந்த மற்றும் வாழ்க்கைப் பாணி போன்ற பல காரணிகளுடன் தொடர்புடையது. CAD மற்றும் மாரடைப்பு பத்தாண்டுகளாய் இராவிட்டாலும், பல்லாண்டுகளாய் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இக் காரணிகளுடன் தொடர்புடைய ஆபத்துக்களிலிருந்து ஏற்படலாம்.

வயது, பால், மரபுவழி

வயது அதிகரிக்க அதிகரிக்க, மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது. மாரடைப்புகளில் சுமார் 55 சதவீதம் 65-க்கும் மேற்பட்ட வயதினரில் ஏற்படுகிறது. மாரடைப்பால் இறப்பவர்களில் சுமார் 80 சதவீதத்தினர் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினராக இருக்கின்றனர்.

50-க்கும் கீழ்ப்பட்ட வயதுடைய ஆண்கள் அதே வயதுடைய பெண்களைவிட அதிக ஆபத்தில் இருக்கின்றனர். மாதவிடாய் முடிவுற்ற பிறகு, ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது. ஏனெனில் எஸ்டரஜன் என்ற பாதுகாப்பு ஹார்மோனில் மிகவும் குறைவு ஏற்படுகிறது. சில மதிப்பீடுகளின்படி, எஸ்டரஜன் ஈடுசெய்யும் சிகிச்சை முறை பெண்களில் இதய நோயின் ஆபத்தை 40 அல்லது அதற்கும் மேலான சதவீதம் குறைக்கக்கூடும். ஆனாலும் சிலவகை புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாய் உள்ளது.

மரபு வழியில் பெற்றோர் மூலம் சந்ததிக்குக் கடத்தப்படுவதும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 50 வயதுக்கு முன்பே தங்கள் பெற்றோர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்திருக்கும் சந்ததியினருக்கு, மாரடைப்பு ஏற்படுவதன் ஆபத்து அதிகம் இருக்கிறது. பெற்றோர்களுக்கு 50 வயதுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலும், ஆபத்து அதிகமாகவே இருக்கிறது. அக் குடும்பத்தில் இதய நோய் இருந்துவந்த வரலாறு இருக்கையில், சந்ததிக்கும் அதுபோன்ற பிரச்சினைகள் தோன்றும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

கொலஸ்ட்ரால் காரணி

கொலஸ்ட்ரால் என்ற ஒருவகைக் கொழுப்பு, உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியம். ஈரல் அதை உண்டுபண்ணுகிறது. லிப்போ புரோட்டீன்கள் என்றழைக்கப்படும் மூலக்கூறுகளில் செல்களுக்கு இரத்தம் அதை எடுத்துச் செல்கிறது. குறை-அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (LDL கொலஸ்ட்ரால்) என்றும் மிகு-அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL கொலஸ்ட்ரால்) என்றும் இரண்டு வகைகள் உள்ளன. இரத்தத்தில் LDL கொலஸ்ட்ரால் அதிகமாய்ச் சேரும்போது, CAD ஆபத்து ஏற்படுவதற்கு கொலஸ்ட்ரால் ஒரு காரணியாகிறது.

திசுக்களிலிருந்து கொலஸ்ட்ராலை நீக்கி, அதை மறுபடியும் ஈரலுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் HDL ஒரு பாதுகாக்கும் வேலையைச் செய்வதாகக் கருதப்படுகிறது. அங்கு அது மாற்றப்பட்டு உடலிலிருந்து நீக்கப்படுகிறது. பரிசோதனையில் LDL அதிகமாகவும் HDL குறைவாகவும் இருந்தால், இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிகம். LDL அளவைக் குறைப்பது, குறிப்பிடத்தக்க அளவான ஆபத்து குறைக்கப்படுவதில் விளைவடையலாம். உணவு சம்பந்தப்பட்ட படிகள் சிகிச்சை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடற்பயிற்சியும் உதவலாம். பல்வேறு மருந்துகள் நல்ல பலன்களை உண்டாக்கலாம். ஆனால் சில மருந்துகள் துன்பமூட்டும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. a

கொலஸ்ட்ராலும் நிறைவுறு கொழுப்புகளும் (saturated fats) குறைவாய் உள்ள ஓர் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது. வெண்ணெய் போன்ற நிறைவுறு கொழுப்புகள் அதிகமாய் உள்ள உணவு வகைகளை, கனோலா எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற, குறை கொழுப்புள்ள உணவு வகைகளால் மாற்றீடு செய்வது LDL-ஐக் குறைக்கவும் HDL-ஐச் சேமிக்கவும் செய்யலாம். மறுபட்சத்தில், செயற்கை வெண்ணெய் (margarine) மற்றும் தாவரச் சத்தைக் குறைக்கும் பொருட்கள் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஹைட்ரஜனேற்றம் அடைந்த அல்லது பகுதியளவான ஹைட்ரஜனேற்றம் அடைந்த தாவர எண்ணெய்கள் LDL-ஐ அதிகரிக்கவும் HDL-ஐக் குறைக்கவும் செய்யலாம் என்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் குறிப்பிடுகிறது. கொழுப்புச்சத்து அதிகமாயுள்ள இறைச்சி வகைகளை உண்ணுவதைக் குறைப்பதும், அதற்குப் பதிலாக கொழுப்புச்சத்து குறைவாயுள்ள கோழிக்கறி அல்லது வான்கோழிக் கறித் துண்டுகளைச் சேர்த்துக்கொள்வதும் சிபாரிசு செய்யப்படுகிறது.

வைட்டமின்-ஈ, பீட்டா-கேரட்டின், மற்றும் வைட்டமின்-சி ஆகியவை விலங்குகளில் பெருந்தமனித் தடிப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் காட்டியிருக்கின்றன. இவை மனிதரில் மாரடைப்பு ஏற்படும் சாத்தியத்தையும் குறைக்கலாம் என்று ஓர் ஆய்வு முடிவெடுத்தது. தக்காளிப்பழங்கள், அடர்ந்த பச்சை இலைகள், மிளகாய் வகைகள், காரட்டுகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு வகைகள், முலாம்பழ வகைகள் போன்ற, பீட்டா-கேரட்டின் மற்றும் கேரட்டினாய்டுகளும் வைட்டமின்-சியும் அதிகமாயுள்ள காய்களையும் பழங்களையும் தினமும் உண்ணுவது CAD-யிலிருந்து சிறிது பாதுகாப்பை அளிக்கக்கூடும்.

வைட்டமின்-பி6-ம் மெக்னீசியமும் பயனுள்ளவையாய்க் கூறப்படுகின்றன. பார்லி, ஓட்ஸ், பீன்ஸ், அவரை வகைகள், மற்றும் சில வித்துக்கள், கொட்டை வகைகள் போன்ற முழு தானிய வகைகளும் (whole grains) பயனுள்ளவையாய் இருக்கலாம். கூடுதலாக, சால்மன், கானாங்கெளுத்தி, ஹெர்ரிங் அல்லது ட்யூனா போன்ற மீன் வகைகளை ஒரு வாரத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது உண்ணுவது CAD ஆபத்தைக் குறைக்கக்கூடும். ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 கலப்பு நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் (omega-3 polyunsaturated fatty acids) அதிகமாய் உள்ளன.

ஓடியாடித் திரியாத வாழ்க்கைப்பாணி

ஓடியாடித் திரியாத இயல்புடைய மக்களுக்கு மாரடைப்பு அதிகமாய் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை உடல் வேலையின்றி செலவிடுகின்றனர். ஒழுங்காக உடற்பயிற்சியும் செய்யாதிருக்கின்றனர். கடினமாக தோட்ட வேலை செய்வது, ஜாக்கிங் போவது, பளுவான பொருட்களைத் தூக்குவது அல்லது பனிப்படிவை அள்ளிக்கொட்டுவது போன்ற கடின வேலைகளுக்குப் பிறகு இம் மக்களுக்கு அடிக்கடி மாரடைப்பு ஏற்படுகின்றன. ஆனால் ஒழுங்காக உடற்பயிற்சி செய்பவர்களின் மத்தியில் இந்த ஆபத்து குறைகிறது.

ஒரு வாரத்தில் மூன்று அல்லது நான்கு தடவை 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை வேகவேகமாய் நடப்பது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சி இதயத்தின் இறைக்கும் திறனை முன்னேற்றுவிக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் செய்கிறது.

மிகை அழுத்தம், அதிக எடை, நீரிழிவு

அதிக இரத்த அழுத்தம் (மிகை அழுத்தம்) தமனி சுவர்களுக்குச் சேதம் ஏற்படுத்தி, LDL கொலஸ்ட்ரால் தமனியின் உள் உறைக்குள் நுழைந்துவிடும்படி செய்து, முளை (plaque) சேர்வதை அதிகப்படுத்துகிறது. முளைப் படிவுகள் அதிகரிக்க அதிகரிக்க, இரத்த ஓட்டத்துக்கு அதிகத் தடை ஏற்பட்டு இரத்த அழுத்தத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது.

இரத்த அழுத்தம் ஒழுங்காக பரிசோதிக்கப்பட வேண்டும். ஏனெனில் பிரச்சினை இருப்பதன் வெளிப்படையான அடையாளம் ஏதும் இல்லாமல் இருக்கக்கூடும். விரிவு அழுத்தத்தில் (diastolic pressure) ஏற்படும் ஒரு-புள்ளி குறைவு ஒவ்வொன்றுக்கும் (கீழ் எண்), மாரடைப்பு ஏற்படும் ஆபத்து 2-லிருந்து 3 சதவீதம் வரை குறைக்கப்படக்கூடும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து வகைகளை உட்கொள்ளுதல் பலனுள்ளதாய் இருக்கலாம். உணவுக் கட்டுப்பாடு, சில சந்தர்ப்பங்களில் உப்பு உட்கொள்வதைக் குறைப்பது, அத்துடன் உடல் எடையைக் குறைப்பதற்காக ஒழுங்கான உடற்பயிற்சி செய்வது ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

அதிக எடை உயர் இரத்த அழுத்தத்திற்கும் அசாதாரண கொழுப்பு வகைகளைக் கொண்டிருப்பதற்கும் காரணமாகிறது. கொழுப்புச்சத்தைத் தவிர்ப்பது அல்லது அதற்கான சிகிச்சை அளிப்பது நீரிழிவு வராமல் தடுப்பதற்கு ஒரு முதன்மையான வழியாய் இருக்கிறது. நீரிழிவு CAD-ஐ அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் ஆபத்தையும் அதிகரிக்கிறது.

புகைத்தல்

சிகரெட் புகைப்பது CAD தோன்றுவதற்கு ஒரு பலத்த காரணியாகும். ஐக்கிய மாகாணங்களில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் அனைத்திலும் சுமார் 20 சதவீதத்துக்கு நேரடிப் பொறுப்புள்ளதாய் இருக்கிறது. மேலும் 55 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கு நேரடிப் பொறுப்புள்ளதாய் இருக்கிறது. சிகரெட் புகைப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. நிக்கட்டின், கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற, நச்சுள்ள வேதிப்பொருட்களை, இரத்த ஓட்டத்திற்குள் செலுத்துகிறது. ஆகவே இவ் வேதிப்பொருட்கள் தமனிகளைச் சேதப்படுத்துகின்றன.

புகைப்பவர்கள் தாங்கள் வெளிவிடும் புகைக்கு காப்பின்றி இருப்பவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். புகைப்பவர்களோடு சேர்ந்து வாழும் புகைக்காதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகமாய் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இவ்வாறு, புகைக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதன் மூலமாக, ஒரு நபர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் ஆபத்தைக் குறைக்கலாம். தங்களுக்குப் பிரியமான புகைக்காதவர்களின் உயிரையும் காக்கலாம்.

அழுத்தம்

உணர்ச்சிப்பூர்வ அல்லது மன அழுத்தத்தில் இருக்கையில், CAD இருப்பவர்கள், ஆரோக்கியமான தமனிகளை உடையவர்களைவிட, மாரடைப்பு மற்றும் மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணம் ஆகியவற்றின் அதிக ஆபத்தை எதிர்ப்படுகின்றனர். ஓர் ஆய்வின்படி, முளைகளால் பாரமடைந்த தமனிகள் அதைச் சுருக்கமடையச் செய்வதற்கு அழுத்தம் காரணியாகலாம். இது இரத்த ஓட்டத்தை 27 சதவீதம்வரை குறைக்கிறது. இலேசாக நோயுற்ற தமனிகளிலும்கூட குறிப்பிடத்தக்க அளவில் சுருக்கம் காணப்பட்டது. கடும் அழுத்தம், தமனியின் சுவர்களிலுள்ள முளையைக் கிழித்துவிடும்படியான சூழலை உருவாக்கலாம் என்றும் அது மாரடைப்பைத் தூண்டுவிக்கிறது என்றும் மற்றொரு ஆய்வு தெரிவித்தது.

கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் ஆன் ஹெல்த் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சிலர் ஒரு கெட்ட மனநிலையுடனேயே வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் எரிந்து விழுகிறவர்களாயும், கோபப்படும் இயல்புடையவர்களாயும், எளிதில் கோபமூட்டப்படுபவர்களாயும் இருக்கின்றனர். அதே சமயத்தில் பெரும்பான்மையோர் இலேசான சீண்டுதல்களைப் புறக்கணித்துவிடுகின்றனர். எதிர்க்கும் இயல்புடையவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக மிதமிஞ்சி மாறிவிடுகின்றனர்.” நாள்பட்ட கோபமும் எதிர்ப்பு மனப்பான்மையும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இதயத்துடிப்பின் வீதத்தை அதிகரிக்கின்றன. மேலும் இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ராலைச் சேர்ப்பதற்கு ஈரலைத் தூண்டுகிறது. இது இதயத்தமனிகளைச் சேதப்படுத்துகிறது. CAD ஏற்படுவதற்கும் காரணியாகிறது. கோபம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை இரட்டிப்பாக்குவதாய்க் கருதப்படுகிறது. இது இரண்டு மணிநேரத்துக்காவது உடனடி அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் நிலைத்திருக்கிறது. எது உதவலாம்?

தி நியூ யார்க் டைம்ஸ்-ன்படி, உணர்ச்சிப்பூர்வ முரண்பாடுகளில் அமைதியாய் இருக்க முயன்றவர்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்று டாக்டர் மரீ மிட்டல்மன் கூறினார். இது நூற்றாண்டுகளுக்கு முன்பு, “சாந்தமனது உடலுக்கு ஜீவன்” என்பதாக பைபிளில் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகளை ஒத்திருப்பதுபோலவே தோன்றுகிறது.—நீதிமொழிகள் 14:30, தி.மொ.

அழுத்தத்தில் இருப்பது என்றால் என்னவென்று அப்போஸ்தலனாகிய பவுலுக்குத் தெரிந்திருந்தது. தினமும் அவரை நெருக்கிய கவலைகளைப் பற்றி அவர் பேசினார். (2 கொரிந்தியர் 11:24-28) ஆனால் அவர் கடவுளிடமிருந்து உதவியை அனுபவித்து இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.

இதய நோய்களுடன் பிற காரணிகள் தொடர்புடையவையாய் இருக்கும் அதே சமயத்தில், இங்குக் கலந்தாலோசிக்கப்பட்டவை ஆபத்தைக் கண்டுகொள்ள உதவலாம். அதனால் மட்டுமே ஒருவர் பொருத்தமான நடவடிக்கை எடுக்க முடியும். என்றபோதிலும் சிலர், மாரடைப்புக்குப் பிறகு ஏற்பட்ட பின்விளைவுகளுடன் வாழ்வது என்றால் எப்படியிருக்கும் என்று கேட்டுக்கொள்கின்றனர். எந்தளவுக்கு உடல்நலத்தைப் பெறுவது சாத்தியம்?

[அடிக்குறிப்பு]

a மருத்துவ, உடற்பயிற்சி, அல்லது உணவு சம்பந்தப்பட்ட சிகிச்சைகளை விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. ஆனால் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட தகவலை அளிக்கிறது. தான் என்ன செய்யப்போகிறார் என்பது பற்றி அவரவரே தீர்மானிக்க வேண்டும்.

[பக்கம் 9-ன் படங்கள்]

புகைப்பது, எளிதில் கோபப்படுவது, கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களை உண்ணுவது, ஓடியாடித் திரியாத வாழ்க்கை நடத்துவது ஆகியவை மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்