இறால்—பண்ணையிலிருந்து ஒரு ருசிமிக்க உணவு?
ஈக்வடாரிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஆம், கோடிக்கணக்கானோரால் ரசித்து உண்ணப்படும் இந்தக் கடல் உணவான ருசிமிக்க உணவு அடிக்கடி பண்ணையிலிருந்து வருகிறது. ஆனாலும், கடலில் வளர்ந்த இறால் வகையிலிருந்து பண்ணையில் வளர்ந்த இறால் வகையில் அப்படியே வேறுபாடு இருந்தால், அது கொஞ்சமாய் இருப்பதால், பெரும்பாலும் அதை வாங்குபவருக்கு இது ஒருபோதும் தெரிவதில்லை. உண்மையில், ஈக்வடாரிலுள்ள இறால் குளங்கள் பலவற்றில் கடலிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட இறால் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன.
ஒன்றரை சென்டிமீட்டர் நீளமே உடைய இந்த இறால் குஞ்சுகள், லார்வெரோஸ் என்றழைக்கப்படும் மீனவர்களால், கடற்கரையோரங்களிலுள்ள சதுப்புநிலத் தாவரம் சூழ்ந்துள்ள கழிமுகப் பகுதிகளிலோ, அலைகள் கரையில் மோதும் இடங்களிலோ வலைபோட்டுப் பிடிக்கப்படுகின்றன. பிறகு அவை வளர்க்கப்படும்படி குளங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. என்றபோதிலும், இந்த விதத்தில் போதியளவு இறால் கிடைக்கப்பெறுவதில்லை. இவ்வாறு, இறால் பண்ணைகள் பல, அவற்றின் குளங்களுக்கு வேண்டிய இறால் குஞ்சுகளை அளிக்க, நவீன கடல் உணவு வளர்ப்பு முறைகளோடு சேர்ந்திருக்கும் பொரிப்பகங்களைச் சார்ந்திருக்கின்றன. இறால் பண்ணைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் பேரில் ஓர் உன்னிப்பான பார்வையிடுவோம்.
ஒரு பொரிப்பகத்திற்கு விஜயம்
நாங்கள் பார்வையிட்ட பொரிப்பகம், பசிபிக் கடலோரத்தில் அமைந்த ஓர் அழகிய கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது. இறால் பொரிப்பகம் ஒன்று, அதன் சிக்கலான நீர் விநியோக அமைப்பின் தேவைகளைப் பெறுவதற்காக அதிகளவு உவர்நீருக்கு அருகில் அமைக்கப்பட வேண்டும். கடலிலிருந்து நீர் பம்ப் செய்யப்பட்டு, வடிகட்டப்பட்டு, தேவைப்பட்டால் சூடாக்கப்பட்டு, பிறகு உள்ளேயிருக்கும் வெவ்வேறு தொட்டிகளுக்குச் செலுத்தப்படுகிறது.
நேர்த்தியாக உடையணிந்திராத கடல் உயிரியலர்கள், தொழில் வல்லுநர்கள், பிற பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு சிநேகப்பான்மையான தொகுதியினரை நாங்கள் சந்தித்தோம். நாங்கள் முதலில் சென்று பார்வையிட்டது, முதிர்வறை. இங்கு, இயற்கைச் சூழ்நிலையில் வளர்ந்து, முழு வளர்ச்சியடைந்த இறால்கள் 17,000 லிட்டர் கொள்ளளவுள்ள முதிர்வு தொட்டிகளில் வைக்கப்படுகின்றன. “இந்த இறால்கள் உண்பதற்கானவையல்ல, அவை முழு வளர்ச்சியடைந்தவையாய் பிடிக்கப்பட்டன, குஞ்சு பொரித்து வளர்க்கப்படுவதற்காகக் கொண்டுவரப்படுகின்றன” என்று எங்கள் வழிகாட்டி விளக்கினார்.
முதிர்வறையில் விளக்குகளைப் பயன்படுத்துவதில் ஒரு கண்டிப்பான திட்டம் பின்பற்றப்படுகிறது. மாலை 3 மணிக்கும் நள்ளிரவுக்கும் இடையில்—இணை சேரும் காலம்—குறைந்த வெளிச்சத்தில் எரியும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. பணியாளர்கள் டார்ச் விளக்குகளைக் கொண்டு குஞ்சு பொரிக்கத் தயார் நிலையிலுள்ள பெண் இறால்களைத் தேடுகின்றனர். பினெயஸ் வன்னிமெய் இனங்களைச் சேர்ந்த பெண் இறால்களை எளிதில் கண்டறியலாம். ஏனெனில் அவற்றின் அடிவயிற்றுப் பகுதியில், விந்துக்கள் அடங்கிய ஒரு கற்றையை வெளிப்புறமாக ஆண் இறால் இணைக்கிறது. பணியாளர்கள் சினைப்பட்டிருக்கும் ஒரு பெண் இறாலைக் கண்டுபிடித்துவிட்டால், அது அங்கிருந்து அகற்றப்பட்டு, அதைவிடச் சிறிய, 260 லிட்டர் கொள்ளளவுள்ள, குஞ்சுபொரிக்கும் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அங்கு, சினைப்பட்டிருக்கும் பெண் இறால், ஒரு கூம்பு வடிவ தொட்டியின் மேற்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மேடையின்மீது—ஒரு தொட்டிக்கு ஒரு பெண் இறால் வீதம்—அவள் 1,80,000 அல்லது அதற்கும் மேற்பட்ட முட்டைகளை இடும்வரையில் வைக்கப்படுகிறது. முட்டைகள் வெளியேற்றப்படுகையில், அவை ஜெல்லி போன்ற விந்துக் கற்றையுடன் தொடர்பு கொள்ளும்போது, கருவுறுகின்றன. அதன்பிறகு, அந்த முட்டைகளும் நீரும் குஞ்சுபொரிக்கும் தொட்டியின் புனல் போன்ற அடிப்பகுதியின் வழியாக வடிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் குஞ்சுபொரிக்கும்போது, முட்டைகளின் எண்ணிக்கையைத் தொழில் வல்லுநர்கள் பதிவு செய்கின்றனர்.
குஞ்சுபொரித்ததற்குப் பல மணிநேரம் கழித்து, லார்வாக்கள் குறிப்பிட்ட அளவுகளில் வளர்ப்புத் தொட்டிகள் என்றறியப்படும் தொட்டிகளுக்கு மாற்றப்படுகின்றன. இவை மிகப் பெரிய குளியலறைத் தொட்டிகளைப் போன்று காணப்படுகின்றன. அவை சுமார் 11,000 லிட்டர் நீர் கொள்ளும். அடுத்த 20 முதல் 25 நாட்களுக்கு, இத் தொட்டிகள் வளர்ந்துவரும் லார்வாக்களுக்கு உறைவிடமாய் இருக்கின்றன. இந்த லார்வாக்கள் கடற்பாசிகளையும் உலர்ந்த கடல் உணவுகளையும் உணவாகக் கொள்கின்றன.
இறால் முதிர்ச்சியடையும் இடம்
இப்பொழுது போஸ்ட் லார்வாக்கள் என்று அழைக்கப்படும் இறால்கள், பண்ணைகளுக்கு மாற்றப்படுகின்றன. அங்கு மாற்றப்பட்டதும், பொரிப்பகத்திலிருந்து பெறப்பட்ட இறால்கள், மற்றும் கடலிலேயே பொரிக்கப்பட்ட அவற்றின் இனத்தைச் சேர்ந்த இறால்கள் ஆகிய இரண்டு வகை இறால்களும் ஒரேவிதமான கவனிப்பைப் பெறுகின்றன. புதிய வெப்பநிலைக்கும், நீரின் உப்புத்தன்மை அளவுகளுக்கும் ஏற்றாற்போல் அவற்றைச் சரிசெய்துகொள்வதைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக போஸ்ட் லார்வாக்கள் சிறிய குளங்களில் வைக்கப்படுகின்றன. ஒருசில நாட்களுக்குப் பிறகு, அவை பெரிய குளங்களில் போடப்படுவதற்குத் தயாராய் உள்ளன. இந்த செயற்கைக் குளங்கள் ஒரு நீர்த்தேக்கக் கால்வாய்க்கு அருகில் இருக்கின்றன. கடலில் இருந்தோ கழிமுகப்பகுதியில் இருந்தோ நீர் ஒழுங்காக இந்தக் கால்வாய்க்குள் பம்ப் செய்யப்படுகிறது. அவ்வாறு அருகிலிருக்கும் குளங்கள் சுமார் 12 முதல் 25 ஏக்கர் அளவு வரை வேறுபட்டவையாய் உள்ளன. மூன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு, இறால் குஞ்சுகள் இக் குளங்களில் வளரும்படி விடப்படுகின்றன.
வளர்ச்சிப் பருவத்தின் போது, குளங்களிலுள்ள நீரில் ஆக்ஸிஜன் அளவு தினமும் கண்காணிக்கப்படுகிறது. மேலும், உணவளிக்கும் திட்டத்தைச் சரிசெய்துகொள்வதற்காக இறாலின் வளர்ச்சி விகிதம் வாரந்தோறும் சரிபார்க்கப்படுகிறது. வாரத்திற்கு 1 முதல் 2 கிராம் வரை கூடும் எடை, தொடர்ந்து அவ்வாறு கூடுவதற்கு முயற்சி செய்யப்படுகிறது.
அறுவடைக்காலம்
அறுவடைக்காலத்தில், குளத்துநீர் வடிகட்டப்பட்டு வருகையில், குளத்து வாசலில் அவை நெருங்கிவரும்போது, அவை வலைபோட்டுப் பிடிக்கப்படுகின்றன, அல்லது பம்ப் செய்து வெளியேற்றப்படுகின்றன. பிறகு, புதிதாக அறுவடை செய்யப்பட்ட இறால்கள், உடனடியாக பேக் செய்யப்படும் உற்பத்தித் தலங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதற்காக, அலசப்பட்டு ஐஸ் போடப்படுகின்றன. அங்கு, வாங்குபவர் திட்டமாய்ச் சொன்னாலே ஒழிய, இறால்களின் தலைகள் அகற்றப்படுகின்றன. ஆனால் அவற்றின் வால்கள் உரிக்கப்படாமல் விட்டுவிடப்படுகின்றன. அந்த இறால்கள் கழுவப்படுகின்றன. அதன் உருவத்தின்படி பிரிக்கப்படுகின்றன. அதன்பிறகு, பேக் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்படுவதற்காக உறைய வைக்கப்படுகின்றன. பொதுவாக ஐந்து பவுண்டு எடையுள்ள பெட்டிகளில் அனுப்பப்படுகின்றன.
ஆகவே, அடுத்த தடவை நீங்கள் இறாலை ரசித்து உண்ணும்போது, இந்த ருசிமிக்க கடல் உணவு, லத்தீன் அமெரிக்கா அல்லது ஆசியாவைப் போன்ற ஓரிடத்தில், குளத்தில் வைத்தே வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவுகூரலாம்.
[பக்கம் 24-ன் படம்]
அறுவடையின்போது இறாலின் உருவம்
[பக்கம் 24-ன் படம்]
மீனவர்கள் இறால் குஞ்சுகளை வலைபோட்டுப் பிடிக்கின்றனர்
[பக்கம் 25-ன் படம்]
பொரிப்பகத்துக்குள் வளர்ப்புத் தொட்டிகள்
[பக்கம் 25-ன் படம்]
பேக் செய்யப்படுமிடத்தில் இறாலைச் சுத்தப்படுத்துதல்
[பக்கம் 25-ன் படம்]
உருவத்தின்படி இறாலை பேக் செய்தல்