இசை, போதைப்பொருட்கள், மது ஆகியவையே என் வாழ்வாய் இருந்தன
நான் பூர்வீக அமெரிக்க இந்தியக் குடியைச் சேர்ந்தவன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த என் அப்பா, அ.ஐ.மா., மிச்சிகனிலுள்ள ஷுகர் ஐலேண்டைச் சேர்ந்த சிப்பவே குடியிலிருந்து வந்தவர். என் அம்மா, கனடாவிலுள்ள ஒன்டாரியோவைச் சேர்ந்த ஓட்டவா மற்றும் ஓஜிப்வா இந்தியக் குடியிலிருந்து வந்தவர்கள். என் அப்பாவின் வழியில், நான் சூ சேன்ட் மரீயிலுள்ள சிப்பவே இந்தியக் குடியின் ஓர் உறுப்பினன். கத்தோலிக்க மதம் மற்றும் போர்டிங் பள்ளிகளின் செல்வாக்கினால், நாங்கள் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டோம். அது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூசைக்குச் செல்வதை அர்த்தப்படுத்தியது.
அமெரிக்க இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டுப் பகுதியில் என் பிள்ளைப் பருவம் எளிதாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. ஒரு பிள்ளையின் நோக்குநிலையில், கோடைக்காலங்கள் மிக நீண்டவையாயும், மெல்ல நகர்வதாயும், சமாதானமாயும் இருந்தன. நாங்கள் ஊருக்கு வெளியே வெகு தூரத்தில் இருந்த பகுதியில் வசித்தோம்—குழாய் தண்ணீர் வசதி இல்லை. வீட்டுக்குள் கழிப்பறை வசதி கிடையாது, குளத்திலோ, நீர்த் தொட்டியிலோதான் நாங்கள் குளித்தோம். வீட்டுக்கு வெளிப்புறத்தில்தான் எங்கள் விளையாட்டு மைதானம். குதிரைகள், மாடுகள், மற்றும் பிற பண்ணை விலங்குகளே நாங்கள் விளையாட பயன்படுத்தியவை. அப்போது, முழு உலகமும் அதேபோன்று என்றென்றும் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
வளர்ந்துவருவதன் சவால்கள்
நான் பெரியவனாக வளர்ந்து அரசு பள்ளிக்குச் சென்றபோது, நான் ஒதுக்கீட்டுப் பகுதிக்குப் போய்வருவது மிகவும் அரிதாகிவிட்டது. பள்ளி, விளையாட்டுகள், இசை ஆகியவையே எனக்கிருந்த பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டன. ஒரு பருவவயதினனாக, 1960-களில், அக்காலத்திலிருந்த மனப்பான்மையால் செல்வாக்கு செலுத்தப்பட்டேன். எனக்கு 13 வயதானபோது, போதைப்பொருள்களும் மதுபானமும் என் வாழ்வில் நிரந்தரமாயின. சமுதாயத்துக்கு எதிராகக் கலகம் செய்வது மிகவும் பிரபலமாய் இருந்தது. சமுதாயத்துக்கு நல்லதாய்த் தோன்றியதெல்லாம் எனக்கு வெறுப்பாய் இருந்தது. மனிதர் ஒருவருக்கொருவர் ஏன் மிருகத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இச் சமயத்தில், நான் முதலாவதாக ஒரு கித்தாரைப் (guitar) பெற்றேன். எங்கள் குடும்பம் ஓர் இசைக் குடும்பம். என் அப்பா ஒரு பியானோ இசைக் கலைஞரும், காற் கொட்டுத் தாள நடனக் கலைஞராயும் (tap dancer) இருந்தார். அவருடைய சகோதரர்களும் இசையில் ஆர்வம் மிகுந்தவர்களாய் இருந்தனர். ஆகவே அப்பாவும் என் சித்தப்பா, பெரியப்பாமார்களும் ஒன்றுசேரும்போது, அதிகாலை நேரம் வரையிலும் நாங்கள் கிராமிய நடனங்களையும் (jigs) நான்கு ஜோடிகள் சேர்ந்து ஆடும் நடனத்தையும் (hoedowns) ஆடினோம். அதை நான் மிகவும் விரும்பினேன். சீக்கிரத்தில், கித்தார் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். ராக்-அண்ட்-ரோல் இசைக்குழுவினருடன் சேர்ந்துகொண்டேன். பள்ளி நடனங்களிலும் பிற நிகழ்ச்சிகளிலும் நாங்கள் பங்கு கொண்டோம். அது இயல்பாகவே மதுபானம், போதைப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பார்களுக்கும் (bar) நைட்கிளப்புகளுக்கும் வழிநடத்தியது. மரிஹுவானா மற்றும் மெத்தாம்ஃபீட்டமைன் (ஸ்பீட்) ஆகியவையே என் வாழ்க்கையின் பாகமாய் இருந்தன.
வியட்நாமில் இராணுவ சேவை
எனக்கு 19 வயதாகையில், நான் திருமணமாகி, ஒரு பிள்ளைக்குத் தகப்பனாகப் போகிறவனாய் இருந்தேன். அதே வயதில், ஐ.மா. கடற்படையில் சேர்க்கப்பட்டேன். அதெல்லாம் அதிக அழுத்தத்தை என்மீது கொண்டுவந்தன. அவற்றைக் கையாளுவதற்காக, போதைப்பொருள்களிலும் மதுபானத்திலுமே 24 மணிநேரமும் மூழ்கியிருந்தேன்.
கலிபோர்னியாவிலுள்ள சான் டியகோ மெரைன் கார்ப்ஸ் ரிக்ரூட் டிப்போவைச் சேர்ந்த கடற்படை கேம்ப்புக்கு நான் நியமனம் பெற்றேன். அதன்பிறகு கேம்ப் பென்டல்ட்டன் என்ற இராணுவத் தளத்தில் நடைபெற்ற சிறப்புக் காலாட்படைப் பயிற்சிக்கு நியமனம் பெற்றேன். படைத்தள தந்தி மற்றும் ரேடியோ ஆப்பரேட்டராக பயிற்சி பெற்றேன். இது 1969-ன் இறுதியில் இவ்வாறு இருந்தது. இப்போது, நிஜமான சோதனை வரவிருந்தது. அதுதான் வியட்நாமில் இராணுவ சேவை செய்வது. இவ்வாறு, 19 வயதில், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து ஒருசில மாதங்களில், வியட்நாமின் செந்நிற மண்ணில் நின்றுகொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் பிறரைப் போல் இராததால் வித்தியாசமாய் நடத்தப்பட்டவர்களின் உறுப்பினராய் இருந்தோம். அவ்வகையில் எங்களுக்கு எதிராக சமுதாயம் இழைத்த அநீதிகளின் மத்தியிலும், பூர்வீக அமெரிக்க இந்தியர்களான மற்ற அநேகருடைய விஷயத்தில் உண்மையாய் இருந்ததைப் போல், நாட்டுப்பற்று என்னை இராணுவத்தில் சேவை செய்யத் தூண்டியிருந்தது.
டா நாங்கிற்கு சற்று வெளிப்புறமிருந்த முதல் மரைன் ஏர் விங்கில் என்னுடைய முதல் நியமனம் இருந்தது. சுமார் 50 ஆண்கள்—உண்மையில், பையன்கள்—இராணுவ குடியிருப்பு காம்ப்பவுண்டுக்கு தகவல் தொடர்பை அளிப்பதற்குப் பொறுப்பாளிகளாய் இருந்தனர். வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமுக்கு இடையிலுள்ள DMZ (இராணுவத்தோடு சம்பந்தப்படாதிருந்த பகுதி [demilitarized zone]) முதல், டா நாங்கிற்குத் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் வரை எங்கள் பொறுப்பிலிருந்தது.
டா நாங்கிற்கு அகதிகள் குவிந்த வண்ணமாய் இருந்தனர். குடிசை வீடுகளைக் கொண்ட பகுதிகள் சுற்றிலும் தோன்ற ஆரம்பித்தன. அநாதை ஆசிரமங்களும் பல இருந்தன. ஊனமுற்றிருந்த பலரடங்கிய இளம் பிள்ளைகளைப் பார்த்தது, என்மீது ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பெண்பிள்ளைகளாகவோ அல்லது சிறு பையன்களாகவோ இருந்தது எனக்கு விநோதமாய்த் தோன்றியது. அதன் காரணத்தை விரைவில் நான் கண்டுபிடித்தேன். 11 முதல் அதற்கு மேற்பட்ட வயது பையன்கள் யுத்தத்தில் போரிட்டனர். பிறகு, இளம் வியட்நாம் போர்வீரன் ஒருவனைச் சந்தித்து அவனது வயதைக் கேட்டேன். “பதினான்கு” என்பது பதிலாய் இருந்தது. அவன் ஏற்கெனவே யுத்தத்தில் மூன்று ஆண்டுகளாய் இருந்திருந்தான்! இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவனைப் பார்த்ததும் என் 14-வயது தம்பியின் நினைவு வந்தது. என் தம்பியின் அக்கறை கொல்லுவதில் அல்ல, ஆனால் லிட்டில் லீக் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் இருந்தது.
கடற்படையில் நான் சேவை செய்துகொண்டிருந்தபோது, பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகள் எனக்கு எழும்ப ஆரம்பித்தன. ஓர் இரவில், எங்கள் காம்ப்பவுண்டிலிருந்த சர்ச்சுக்குப் போனேன். அந்தக் கத்தோலிக்க மதகுரு இயேசுவைப் பற்றியும், சமாதானம் மற்றும் அன்பைப் பற்றியும் பிரசங்கித்தார்! எனக்குக் கூச்சலிட வேண்டும்போல் தோன்றியது. அவருடைய பிரசங்கம் அங்கு நடந்துகொண்டிருந்த எல்லாவற்றுக்கும் முரணாய் இருந்தது. அந்த மதச் சடங்குக்குப் பிறகு, ஒரு கிறிஸ்தவராய் இருந்துகொண்டு அதே சமயத்தில் யுத்தத்தில் போரிடுவது எப்படி நியாயமாய் இருக்க முடியும் என்று அவரிடம் கேட்டேன். அவருடைய பதில்? “அதாவது, சிப்பாயே, இப்படித்தான் நம் கர்த்தருக்காகப் போரிடுகிறோம்.” நான் வெளிநடப்புச் செய்துவிட்டு, இனி ஒருபோதும் அந்தச் சர்ச்சுடன் எந்தவித சம்பந்தமும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.
என் நியமனம் தொடர்பான பணி முடிந்தபோது, நான் உயிரோடிருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதாய் உணர்ந்தேன்; ஆனால் மனரீதியிலும் ஒழுக்கரீதியிலும் மிக அதிகம் துன்புற்றிருந்தேன். தினம்தினம் போரைப் பற்றி கேட்பது, போர் நடப்பதைப் பார்ப்பது, போர் மற்றும் மரணம் சம்பவிக்கப்போவதாக உணர்வது, என் இளம் மனதிலும் இதயத்திலும் ஆழமாய்ப் பதிந்துவிட்டது. அதெல்லாம் 25-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு சம்பவித்த போதிலும், அதைப் பற்றிய நினைவுகள் நேற்று நடந்ததைப் போலவே தோன்றுகின்றன.
இராணுவம் சாரா வாழ்க்கைக்கு மாறுவதில் போராட்டம்
வீடு திரும்பினபோது, என் இசைத்தொழிலில் முற்றிலும் ஈடுபட ஆரம்பித்தேன். என் சொந்த வாழ்க்கை சீர்குலைந்திருந்தது—எனக்குத் திருமணமாகி, ஒரு குழந்தை இருந்தது. அதற்குப் பிறகும் போதைப்பொருட்களையும் மதுபானத்தையும் நான் அதிகளவில் உட்கொண்டேன். என் மனைவியுடன் நான் வைத்திருந்த உறவு நெருக்கடிக்குள்ளானது. அது விவாகரத்து செய்வதில் விளைவடைந்தது. ஒருவேளை அதுவே என் வாழ்க்கையில் நான் மிகவும் மனச்சோர்வுக்குள்ளாகியிருந்த சந்தர்ப்பமாயிருக்கலாம். நான் என்னைத் தனியே பிரித்துவைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். வீட்டிற்கு வெளியே ஆறுதலைத் தேடினேன். ஊரைவிட்டு வெகுதொலைவில் இருந்த மினசோட்டா மற்றும் வடமேற்கு மிச்சிகன் பகுதிகளில் நன்னீர் மீன்வகையைப் பிடித்துவந்தேன்.
1974-ல், கித்தார் இசைக் கலைஞனாகவும் பாடகனாகவும் என் இசைத்தொழிலில் முன்னேற்றம் காணவேண்டி, டெனசீயிலுள்ள நாஷ்வல்லுக்கு மாறிச் சென்றேன். பிரபலமான இசை உலகுக்குள் நுழையப்போவதாய் எப்பொழுதும் நம்பிக்கொண்டு பல நைட்கிளப்புகளில் நான் இசைத்திருக்கிறேன். ஆனால் அது ஒரு கடினமான சவாலாய் இருந்தது—அங்கு திறமைமிக்க கித்தார் இசைக்கலைஞர்கள் அநேகர் இருந்தனர். அவர்களெல்லாரும் பிரசித்திபெற்ற இசைக்கலைஞர்களாவதற்கு முயற்சி செய்துவந்தனர்.
என்றபோதிலும், இவை யாவும் எனக்குச் சாதகமாய் நிகழ ஆரம்பிக்கும் ஒரு கட்டத்திலும், தொழில்முறையில் நான் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இருந்தபோதிலும், ஏதோவொன்று என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆபத்தான வாழ்க்கைப் பாணி
போதைப்பொருள்கள் கொடுக்கல்வாங்கலில் நான் தொடர்பு வைத்துவந்திருந்த ஒரு முன்னாள் நண்பரைச் சந்திக்கச் சென்றேன். 12 குண்டுகளைப் பக்கவாட்டில் அடுக்கிவைக்கும் அளவு விட்டத்தையுடைய துப்பாக்கியுடன் அவர் என்னை வரவேற்றார். அவருடைய உடம்பின் பாதிப்பகுதி மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. அவருடைய தாடை முறிந்திருந்ததால், அவருடைய வாய் நரம்பால் மூடப்பட்டும் இருந்தது. இறுக்கப்பட்டிருந்த பற்களுடன் பேசுபவராய், நடந்தவற்றை அவர் என்னிடம் தெரிவித்தார். எனக்குத் தெரியாமல், அவர் நாஷ்வல்லில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அதில் மிக அதிகளவு கொகெயின் காணாமற்போய்விட்டது. போதைப்பொருள் முதலாளிகள் அவர்மீது குற்றஞ்சுமத்தினர். அவரை அடித்து உதைப்பதற்காக அவர்கள் போக்கிரிகளை, அல்லது ரவுடிகளை அனுப்பினர். கொகெயினைத் திருப்பிக்கொடுக்கும்படியும், அல்லது கள்ள மார்க்கெட்டு மதிப்பான 20,000 டாலர் பணத்தைக் கட்டும்படியும் அவர்கள் கூறினர். அவர் பயமுறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், அவருடைய மனைவியும் குழந்தையும்கூட பயமுறுத்தப்பட்டனர். அவருடன் சேர்ந்து நான் அங்கிருப்பது எனக்கு பாதுகாப்பல்ல என்றும் நான் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிடுவதே மேலானது என்றும் கூறினார். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பதை நான் புரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
இந் நிகழ்ச்சி என் வாழ்க்கையைக் கொஞ்சம் பயமுறுத்தியது. அதை உணர்ந்துகொள்ளாமலேயே ஒரு வன்முறை உலகின் பாகமாய் நான் ஆகிவிட்டிருந்தேன். என் இசையுலகிலும் போதைப்பொருள் உலகிலும் எனக்குத் தெரிந்த பெரும்பான்மையோர் ஒரு கைத்துப்பாக்கியை எப்போதும் உடன் வைத்திருந்தனர். என் சொந்த பாதுகாப்பை முன்னிட்டு ஒரு .38 கைத்துப்பாக்கியை நான் வாங்கும் அளவுக்குச் சென்றுவிட்டேன். பிரபலமான இசை உலகுக்குள் நெருங்கிச் செல்லச்செல்ல, அதிக தியாகம் செய்ய வேண்டியிருந்ததை நான் உணர்ந்தேன். ஆகவே, பிறகு, லத்தீன் அமெரிக்க இசை பயில்வதற்காக நாஷ்வல்லை விட்டு பிரேஸிலுக்குச் செல்ல திட்டமிட்டேன்.
கேள்விகள் பல, பதில்களோ சில
மதத்திடம் எனக்கு எதிர்மறையான அனுபவங்கள் இருந்தபோதிலும், கடவுளை வணங்குவதில் எனக்குத் தணியா ஆவல் இருந்தது. பதிலளிக்கப்படாத கேள்விகள் எனக்கு இன்னும் இருந்துவந்தன. ஆகவே நான் சத்தியத்தைத் தேட ஆரம்பித்தேன். நன்கு ஸ்தாபிக்கப்பட்டிராத பல்வேறு சர்ச் தொகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால் திருப்தியடையவில்லை. மினசோட்டாவில் ஒரு சர்ச்சுக்குச் சென்றிருந்ததைப் பற்றிய நினைவு எனக்கு வருகிறது. அன்று மினசோட்டாவைச் சேர்ந்த வைக்கிங்ஸ் கால்பந்தாட்ட அணியின் போட்டிவிளையாட்டு இருந்ததால் அந்தப் பாதிரி பிரசங்கத்தைச் சுருக்கிக்கொண்டார். வைக்கிங்ஸ் அணிக்கு வெற்றி கிடைக்க வீட்டுக்குச் சென்று ஜெபிக்கும்படி அவர் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்! நான் எழுந்து வெளியேறிவிட்டேன். மேலெழுந்தவாரியான போட்டி விளையாட்டு நடவடிக்கைகளுடன் கடவுளை சம்பந்தப்படுத்தும் அற்பமான எண்ணம் இந்நாள்வரை என்னைக் கோபமடையச் செய்கிறது.
மினசோட்டாவில் உள்ள டூலுத் நகரில் நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில், ஒரு நண்பர் என் அபார்ட்மெண்ட்டில் காவற்கோபுர பிரதி ஒன்றை விட்டுச் சென்றார். அதிலிருந்த மத்தேயு 24-ம் அதிகாரத்தைப் பற்றிய விளக்கத்தை நான் வாசித்தேன். அது உண்மையாய் தொனித்தது. ‘யெகோவாவின் சாட்சிகள் எனப்படும் இவர்கள் யார்? யெகோவா யார்?’ என்றெல்லாம் அது என்னைச் சிந்திக்கவைத்தது. 1975 வரை எனக்கு பதில்கள் கிடைக்கவில்லை. அதே நண்பர் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் a என்ற புத்தகத்தையும் ஒரு பைபிளையும் என்னிடம் விட்டுச் சென்றார்.
அன்றிரவு அந்தப் புத்தகத்தை நான் வாசித்தேன். முதல் அதிகாரத்தை முடிப்பதற்குள், நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எனக்குத் தெரிந்தது. என் மனதிலிருந்து ஒரு முக்காடு அகற்றப்பட்டுவிட்டதுபோல் இருந்தது. அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தேன். மறுநாள், என் வீட்டுத் தெருவைக் கடந்துசென்று, அருகில் வசித்துவந்த சில சாட்சிகளிடம், பைபிளை என்னுடன் சேர்ந்து படிக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
பிரேஸிலுக்குப் பயணப்படும் என் திட்டங்களை நான் கைவிட்டுவிட்டேன். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். யெகோவாவின் உதவியுடன், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அடிமைப்பட்டு இருந்த போதைப்பொருட்களையும் மதுபானத்தையும் அறவே நிறுத்திவிட்டேன். ஒருசில மாதங்களுக்குள், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நான் பங்குபெற்றுக்கொண்டிருந்தேன்.
என்றபோதிலும், நான் ஒரு பிரச்சினையை எதிர்ப்பட வேண்டியிருந்தது. ஒரு நிலையான வேலையில் நான் ஒருபோதும் நிலைத்திருக்கவில்லை. ஒரு திட்டநேர வேலைபார்க்க வேண்டிய எண்ணம்தானே எனக்கு வெறுப்பூட்டியது. இப்போது நான் ஒரு பொறுப்புள்ள நபராய் ஆகவேண்டியிருந்தது. ஏனெனில் டெபி என் வாழ்வில் மீண்டும் வந்துசேர்ந்துவிட்டிருந்தாள். முன்பு எனக்கும் அவளுக்கும் காதலீடுபாடு இருந்துவந்தது; ஆனால் ஒரு பள்ளி ஆசிரியையாக ஆக வேண்டி அவள் கல்லூரிக்குச் சென்றுவந்தாள். நானோ ஓர் இசைக் கலைஞனாய் ஆகப்போகிறவனாக இருந்தேன். இப்போது அவளும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டாள். நாங்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் கவர்ந்திழுக்கப்பட்டோம். எங்களுக்குத் திருமணம் முடிந்தது. பிறகு, கனடாவைச் சேர்ந்த ஒன்டாரியோவிலுள்ள சூ சேன்ட் மரீ நகரில் சாட்சிகளாக 1976-ல் முழுக்காட்டப்பட்டோம். காலப்போக்கில், எங்களுக்கு நான்கு பிள்ளைகள்—மூன்று பையன்களும் ஒரு பெண்பிள்ளையும்—ஆகிவிட்டனர்.
என் குடும்பத்தைப் பராமரிப்பதற்கென்று, இசைக்கருவிகள் விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்ததுடன், ஜாஸையும் கித்தாரையும் முன்னாயத்தமின்றி இசைப்பது பற்றியும் கற்பித்தேன். பதிவு செய்யும் ஸ்டூடியோ ஒன்றையும் நான் இயக்கிவந்தேன். எப்பொழுதாவது நைட்கிளப்புகளில் இசைத்தேன். பிறகு, ஆச்சரியப்படும் வகையில், தொழில் முறை இசையுலகில் முன்னணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் எனக்குச் சாதகமாய் வந்தன. பிரசித்திப்பெற்ற இசைக்கலைஞர்களின் பாடல் பதிவுக்கென்று பின்னணி இசைக்கும்படி மூன்று முறை நான் அணுகப்பட்டேன். மிகவும் அரியதோர் சந்தர்ப்பமாய் இது இருந்தது. உண்மையில், இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாய் இது இருந்தது. புகழ்பெற்ற ஜாஸ் குழுவினருடன் இசைப்பதற்காக கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்குப் போகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால் அடிக்கடி பயணம் செய்வது, இசைக் கச்சேரிகள், பதிவு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கே திரும்பிச் செல்ல வேண்டிய நிலை வரும் என்று எனக்குத் தெரிந்தது. சுமார் ஐந்து விநாடிகளில் அந்த அளிப்பைப் பற்றி சிந்தித்ததும், “வேண்டாங்க, ரொம்ப நன்றி” என்று மரியாதையுடன் மறுத்தேன். போதைப்பொருள்கள், மதுபானம், ரவுடிகளிடமிருந்து ஆபத்துக்கள் போன்றவை அடங்கிய என் முன்னாள் வாழ்க்கையைப் பற்றி நினைத்ததுதானே, இது அந்தளவுக்குப் பிரயோஜனமானது அல்ல என்பதை நான் உணரும்படி செய்தது. என் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் நான் நடத்திவந்த புதிய கிறிஸ்தவ வாழ்க்கை எனக்கு மிகமுக்கியமானதாய்த் தெரிந்தது.
பல்லாண்டுகளாக, PBS-க்கு (பொது ஒலிபரப்பு சேவை [Public Broadcasting Service]) கல்வி சார்ந்த மெய்விளக்க நிகழ்ச்சிகளுக்கான ஒலிபரப்புப் பொறியியலராய் வேலை பார்த்தேன். என்னுடைய தற்போதைய வேலையில், வட அரஸோனாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்காக ஓப்பி ஒதுக்கீட்டுப் பகுதியைச் சேர்ந்த குடிகளுடன் வீடியோ தகவல் தொடர்பை ஒத்திசைவிக்கிறேன்.
என் சொந்த இனத்தவர்களுடன்
நான் யெகோவா தேவனுக்கு என்னை ஒப்புக்கொடுத்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இருபது ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்வையும் அனுபவித்திருக்கிறேன். டெபி, எங்கள் 19 வயது மகன் டிலன் மற்றும் எங்கள் 16 வயது மகள் லெஸ்லீ ஆகியோர் அனைவரும் முழு நேர ஊழியத்தில் இருக்கின்றனர். உண்மையில், இப்போது டிலன் நியூ யார்க்கிலுள்ள வால்க்கில் என்ற பகுதியிலுள்ள உவாட்ச் டவர் சங்கத்தின் அச்சு மற்றும் பண்ணைக் கட்டிடங்களில் சேவை செய்துவருகிறான். எங்களுடைய இளம் பையன்களான, 12 வயது கேசீ, 14 வயது மார்ஷல் ஆகிய இருவரும் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து சமீபத்தில் முழுக்காட்டப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ பிரசங்கிப்புக்குத் தேவை அதிகமாய் உள்ள இடத்துக்கு மாறிச்செல்லுவதற்கான அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதன்படி, நவகோ மற்றும் ஓப்பி இந்தியக் குடியினருக்கு மத்தியில் சேவை செய்ய, அரஸோனாவிலுள்ள கீம்ஸ் கேன்யான் நகருக்கு வந்தோம். நான் அந்தச் சபையில் ஒரு மூப்பர். பூர்வீக அமெரிக்க இந்தியக் குடியினர்களோடு மறுபடியும் சேர்ந்து வாழ்ந்துவருவது ஒரு தனி இன்பம். இங்கிருப்பவர்களுக்கும், சுற்றுவட்டாரங்களில் இருப்பவர்களுக்கும் இடையில், நாகரிகத்திலும், வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் இருக்கும் முரண்பாட்டினால், மிஷனரி வேலையில் இருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறோம். நாங்கள் ஆறு பேரும், வசதியான ஒரு வீட்டை விட்டு, அதை விடச் சிறிய, நடமாடும் வீட்டில் (mobile home) வாழும்படி ஆனது. இங்கு, வாழ்க்கை அதை விடக் கடினம். பல வீடுகளில் உள்ளேயே குழாய், கழிப்பறை வசதிகள் இல்லை. வெளியேதான் அவ்வசதிகள் உள்ளன. சில குடும்பங்கள் குளிர்காலத்தில் விறகு மற்றும் கரியைப் பெற்றுவருவதற்காக கிலோமீட்டர் கணக்கில் பயணம் செய்கின்றனர். பொதுமக்களுக்கென்றுள்ள கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கப்படுகிறது. பல தெருக்களில் பாதை அமைக்கப்படாததால் வரைபடத்தில் குறிக்கப்படுவதில்லை. குழந்தைப் பருவத்தில் ஒதுக்கீட்டுப் பகுதியில் வளர்ந்துவந்திருந்ததால், இச் சூழ்நிலையை நான் ஏற்றுக்கொண்டேன், இது கடினமாய் இருக்கவில்லை. இப்போது, அன்றாட வாழ்வின் அத்தியாவசிய வேலைகளை மட்டுமே செய்வதற்கு எவ்வளவு கடின உழைப்பும் சக்தியும் தேவைப்படுகிறது என்பதை நானும் என் குடும்பத்தினரும் போற்றுகிறோம்.
ஒதுக்கீட்டுப் பகுதியில் அமெரிக்க இந்தியர்களுக்கென்று ஆட்சி எல்லை இருந்தபோதிலும், அவர்கள் எல்லா அரசாங்கங்களையும் தொல்லைப்படுத்தும் அதே பிரச்சினைகளை—உள்நாட்டுச் சண்டைகள், பாரபட்சம், குறைந்த நிதி வசதிகள், பணத்தைத் தகாதமுறையில் கையாளுதல், அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு மத்தியில் குற்றச்செயல் போன்றவற்றையும்கூட—எதிர்ப்பட்டு வருகின்றனர். மதுபானம் அருந்துதல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், வேலையில்லா திண்டாட்டம், வீட்டினர் துர்ப்பிரயோகம், திருமண மற்றும் குடும்பப் பிரச்சினைகள் ஆகிய கொடுமைகளை அமெரிக்க இந்தியர்கள் எதிர்ப்படுகின்றனர். ஆனாலும், சிலர் தங்களுடைய தற்போதைய நிலைக்கு வெள்ளையர்கள் மீது பழிசுமத்துகின்றனர். ஆனால் வெள்ளையரும் அதே தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். என்றபோதிலும், குடும்பத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உடன் குடியினரிடமிருந்தும் அழுத்தம் வந்தபோதிலும், பூர்வீக அமெரிக்க இந்தியர்களில் பலர் யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் கல்வி புகட்டும் வேலைக்குப் பிரதிபலிக்கின்றனர். கடவுளுடன் நட்பு கொள்வதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என்பதை அவர்கள் காண்கின்றனர். பலர் கிறிஸ்தவக் கூட்டங்களில் ஆஜராவதற்காக, ஒரு வழி பயணத்துக்கு மட்டுமே 120 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரம் செல்கின்றனர். நவகோ மற்றும் ஓப்பி குடியினருடன் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டு வருவதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
யெகோவாவின் ஆட்சி, ‘பூமியைக் கெடுப்பவர்களைக் கெடுக்கும்’ நாளுக்காகவும், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் முழுவதும் ஓர் ஐக்கியப்பட்ட குடும்பத்தைப்போல் சமாதானத்துடனும் ஒத்திசைவுடனும் சேர்ந்து வாழும் சமயத்திற்காகவும் நான் காத்திருக்கிறேன். அப்போது, கனடாவில் சிப்பவே குடியைச் சேர்ந்த ஒரு சிறுவனாய், எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டுமென்று நான் விரும்பினேனோ, அதேபோல் வாழ்க்கை இருக்கும். (வெளிப்படுத்துதல் 11:18; 21:1-4)—பர்ட்டன் மக்கர்ச்சீயால் கூறப்பட்டது.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது; இப்போது அச்சிடப்படுவதில்லை.
[பக்கம் 13-ன் படம்]
கடவுளைப் பற்றி எனக்கிருந்த கேள்விகளுக்கு பதில்களை நான் தேடிக்கொண்டிருந்தேன்
[பக்கம் 15-ன் படங்கள்]
மேலே: என் குடும்பம், மற்றும் இடது புறத்தில், ஒரு நவகோ நண்பன்
கீழே: ராஜ்ய மன்றத்துக்கு அருகில் எங்கள் நடமாடும் வீடு