கடவுளின் பெயர் என் வாழ்க்கையை மாற்றியது!
சான்டி யாசி ஸோஸி கூறியது
எங்கள் வீட்டுக் கதவை மார்மன்கள் தட்டியபோது முதலில் நானும் என் தங்கைகளும் ஒருவரையொருவர் இடித்தவாறு கட்டிலுக்கு கீழே ஒளிந்துகொண்டு கிண்டல் கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தோம்.a ஒருவழியாக கதவை திறந்தபோது, நாங்கள் எல்லாரும் பாரம்பரிய நவஹோ இனத்தவர், யாரும் எந்த வெள்ளையர் மதத்தைப் பற்றியும் எங்களிடம் பேச தேவையில்லை என்று கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டேன்.
அம்மாவும் அப்பாவும் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்குச் சென்றிருந்தார்கள். சாயங்காலம்தான் வருவார்கள். அவர்கள் வீடு திரும்பியபோது மார்மன்களிடம் நான் மரியாதையில்லாமல் பேசியது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. யாரையும் எப்போதும் மரியாதையில்லாமல் நடத்தக்கூடாது என்று எனக்கு புத்திமதி சொன்னார்கள். மற்றவர்களிடம் மரியாதையோடும் தயவோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். எதிர்பாராத விதமாக விருந்தாளி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வெளியே அன்று சாப்பாடு சமைத்தார்கள். முதலில் விருந்தாளியை சாப்பிட வைத்தார்கள். அவர் சாப்பிட்ட பின் நாங்கள் சாப்பிட்டோம்.
தனி ஒதுக்கீட்டுப் பகுதியில் வாழ்க்கை
நாங்கள் அரிஜோனாவில் ஹெளயல் மேசா என்ற இடத்தில் வசித்தோம். இது, இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதி, ஹாப்பி என்ற இடத்திலிருந்து வடமேற்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஜன நெரிசலுள்ள நகரங்கள், சந்தடிமிக்க பட்டணங்களிலிருந்து நாங்கள் வெகு தொலைவில் இருந்தோம். இது ஐக்கிய மாகாணங்களின் தென்மேற்கு பகுதி. இங்குள்ள பாலைவன காட்சி கண்ணுக்கு இனிய விருந்தளிக்கும். இடை இடையே வண்டலாக படிந்த செம்மண் பாறை குவியலை இங்கே காணலாம். உயர்ந்த செங்குத்தான சரிவுகளையுடைய மேட்டு நிலங்கள் இங்கே நிறைய உண்டு. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் எங்கள் ஆடுகளை பார்க்க முடியும். நான் பிறந்த இந்த மண்ணின் அமைதியான அழகை எவ்வளவாக நேசித்தேன்!
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது என் அம்மாவின் சகோதரிகளுடைய பிள்ளைகளும் நானும் உயிர் நண்பர்கள். அவர்கள் அமெரிக்க இந்திய இயக்கமாகிய AIMb-யின் ஆதரவாளர்கள். பூர்வீக அமெரிக்கர்களாக இருப்பதில் எனக்கு பெருமிதம் இருந்தது. பல பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்ததை குறித்து வெள்ளையர்களிடம் என் கருத்துகளை தெரியப்படுத்தினேன். இதற்கு இந்திய விவகாரங்கள் செயலகம் BIAதான் காரணம் என்று நம்பினேன். என் உறவுக்கார சகோதரர்களைப்போல வெறுப்பை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் என் இருதயத்தில் வைத்திருந்தேன். இதனால் பைபிளை வைத்திருந்த அனைவரையும் அறவே வெறுத்தேன்.
எங்கள் தேசத்தையும் உரிமைகளையும் புனித சடங்குகளை செய்வதற்கான சுதந்திரத்தையும் வெள்ளையர் பறித்துக்கொண்டதற்கு பைபிள்தான் காரணம் என்று நான் நினைத்தேன்! பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கையில் சர்ச்சுக்குச் சென்று புராட்டஸ்டன்டு, கத்தோலிக்க மத சடங்குகளில் கலந்துகொள்ள நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம். அவற்றில் கலந்துகொள்வதை தவிர்க்க என் அப்பாவின் கையெழுத்தை நானே போட்டு ஏமாற்றினேன். இந்திய பாரம்பரியங்களை மறந்து அவர்களுடைய கலாச்சாரத்தோடு ஒன்றிப் போக வைத்துவிட வேண்டும் என்பது அந்த பள்ளிகளின் நோக்கம். எங்கள் தாய்மொழியில் பேசக்கூட அனுமதி இல்லை!
இயற்கையையும் சுற்றுச்சூழலையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். ஒவ்வொரு நாள் காலையும் கிழக்கு நோக்கி பிரார்த்தனைகள் செய்து புனிதமான இந்திய சோளத்தின் மகரந்தப் பொடி தூவி நன்றி செலுத்தினோம்.c இப்படித்தான் நவஹோ முறை வழிபாடு எனக்கு சொல்லித் தரப்பட்டது. பெருமிதத்தோடு இதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டேன். பரலோகத்துக்குப் போவதைப் பற்றிய கிறிஸ்தவமண்டலத்தின் கருத்து எனக்குப் பிடிக்கவில்லை. நரகத்தின் நித்திய வாதனையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. பூமியில் வாழத்தான் மிகவும் ஆசைப்பட்டேன்.
பள்ளி விடுமுறையின்போது, மிகவும் அன்னியோன்யமாக இருந்த என் குடும்பத்தாரோடு சந்தோஷமாக காலம் கழித்தேன். எங்கள் ஹோகனை—நவஹோக்களின் வீடு—சுத்தம் செய்வதும் நெசவு நெய்வதும் ஆடுகளை மேய்ப்பதும்தான் தினந்தோறும் நான் செய்து வந்த வேலைகள். பல நூற்றாண்டுகளாகவே நாங்கள் மேய்ப்பர்களாக இருந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் எங்கள் ஹோகனை (கீழேயுள்ள புகைப்படத்தைக் காண்க.) சுத்தம் செய்தபோது ஒரு சிறிய சிவப்பு நிற புத்தகத்தை கவனித்தேன். பைபிள் புத்தகமாகிய சங்கீதமும் “புதிய ஏற்பாட்டின்” பல புத்தகங்களும் அதில் இருந்தன. அதிலிருக்கும் விஷயங்களையோ அவற்றின் அர்த்தத்தையோ பற்றி கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல், எங்கேயாவது ஓரிடத்தில் தூக்கிப் போட்டுவிடுவேன். ஆனால் அதை ஒருபோதும் தூக்கி எறிந்துவிடவுமில்லை.
திருமணம்—மாயையும் தெளிவும்
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நியூ மெக்ஸிகோ, ஆல்ப்யக்கர்கீவில் ஒரு தொழிற்கல்வி கூடத்தில் சேர திட்டமிட்டேன். ஆனால், புறப்படுவதற்கு முன் நான் திருமணம் செய்துகொள்ள போகிறவரை சந்தித்தேன். பின்னர் அவரைத் திருமணம் செய்வதற்கு ரெஸ் என்று நாங்கள் அழைக்கும் நவஹோ ஒதுக்கீட்டு பகுதிக்கு திரும்பி வந்தேன். மணவாழ்வில் பல வருடங்கள் என் பெற்றோர் சிறப்பாக வாழ்ந்திருந்தார்கள். ஆகவே நானும் திருமணம் செய்து அவர்களைப் போலவே வாழ தீர்மானித்தேன். வீட்டைக் கவனித்துவருவதில் சந்தோஷமடைந்தேன். குடும்ப வாழ்க்கையையும் அனுபவித்து களித்தேன். எங்கள் மகன் லயனல் பிறந்தபோது இன்னும் ஆனந்தமடைந்தேன். நானும் என் கணவரும் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்—அதிர்ச்சி தரும் அந்தச் செய்தியை நான் கேட்கும்வரை!
என் கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருந்தது! அவருடைய உண்மையற்ற இந்த நடத்தையால் எங்கள் மணவாழ்க்கை உடைந்து போனது. மனவேதனையை தாங்க முடியவில்லை, அவரை அடியோடு வெறுக்க ஆரம்பித்தேன். அவரை பழிவாங்க ஆசைப்பட்டேன்! ஆனால் எங்கள் மகனை யார் வளர்ப்பது, பண ஆதரவு அளிப்பது ஆகிய மணவிலக்கு சம்பந்தமான போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கையில் எனக்கு துக்கம் தாள முடியவில்லை, எதற்குமே தகுதியற்றவள் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கியது. எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. என் துக்கத்தை மறக்க பல கிலோமீட்டர் ஓடினேன். எளிதில் அடக்க முடியாமல் அழுதேன், பசி இழந்தேன். தனிமரமாய் நின்றேன்.
கொஞ்ச காலத்துக்குப்பின், என்னைப் போலவே மண வாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவித்து வந்த ஒருவருடன் தொடர்புகொள்ள ஆரம்பித்தேன். நாங்கள் இருவருமே வேதனையில் இருந்தோம். இருவருடைய நிலைமையும் ஒரே மாதிரி இருந்ததால் அவர் என்னிடம் பரிவோடு நடந்துகொண்டார், எனக்கு தேவைப்பட்ட உணர்ச்சிப்பூர்வ ஆதரவை அளித்தார். வாழ்க்கையைப் பற்றி என் மனதிலுள்ள கருத்துக்களை எல்லாம் அவரிடம் கொட்டினேன். அவர் காதுகொடுத்து கேட்டார், அவர் என்மேல் அக்கறையாய் இருப்பதை இது காட்டியது. நாங்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டோம்.
அதன் பிறகு அவரும் உண்மையற்றவர் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்! என் மனதுக்கு பெரும் கஷ்டத்தையும் வேதனையையும் அளித்தபோதிலும் அவரை விட்டு ஒரேயடியாக விலகினேன். நான் மிகவும் மனமுடைந்து போனேன். மனச்சோர்வில் மூழ்கினேன். ஆத்திரமும் அழுகையும் வந்தது, பழிவாங்க நினைத்தேன், தற்கொலை எண்ணமும் தலைதூக்கியது. இரண்டு முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். செத்தால் போதும் என்றே நினைத்தேன்.
உண்மை கடவுளைப் பற்றி இலேசான ஓர் அபிப்பிராயம்
நான் அறிந்திராத ஒரு கடவுளிடம் மிகுந்த கண்ணீரோடு ஜெபித்தேன். ஆனாலும் பிரமிக்க வைக்கும் இந்தப் பிரபஞ்சத்தை படைத்த உன்னதமான ஒருவர் இருக்க வேண்டும் என்று நம்பினேன். அழகை வாரியிறைக்கும் சூரிய அஸ்தமனங்கள் என்னை கொள்ளை கொண்டன, இந்த அதிசயங்களை எல்லாம் நாம் அனுபவித்து மகிழும்படி செய்த அந்த நபர் எவ்வளவு அருமையானவராக இருக்க வேண்டும் என்று யோசித்தேன். முன்பின் தெரியாத அவரை நேசிக்க ஆரம்பித்தேன். “கடவுளே, நீர் உண்மையில் இருந்தால் எனக்கு உதவும், என்னை வழிநடத்தும், மீண்டும் மகிழ்ச்சியாக வாழ வழிசெய்யும்” என்று அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
இதற்கிடையில் என்னைப் பற்றி என் குடும்பத்தார், முக்கியமாக என் அப்பா அதிகம் கவலைப்பட்டார். என்னை குணப்படுத்த மந்திரவாதிகளை அவர் அழைத்து வந்தார். உண்மையான மந்திரவாதி காசு கேட்க மாட்டார், அவர் சொல்வதை செய்வார் என்றார். என் பெற்றோரின் திருப்திக்காக பல சந்தர்ப்பங்களில் எங்கள் நவஹோ மத சடங்குகளையெல்லாம் செய்தேன்.
படுக்கையின் பக்கத்தில் ரேடியோவை மாத்திரம் வைத்துக்கொண்டு தனிமையில் என் ஹோகனில் பல நாட்களை கழித்தேன். இயேசுவை என் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாததால் பாதிரியாரின் கண்டன உரையை வெறுப்போடு கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு சலித்துப்போய் விட்டது! வெள்ளையரின் மதமும் சரி, என்னுடைய மதமும் சரி, போதும்போதுமென்று ஆகிவிட்டது! என் சொந்த வழியில் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்தேன்.
என் ஹோகனில் தனியாக இருக்கையில் அந்த சிறிய சிவப்பு நிற புத்தகம் திரும்பவும் என் கண்ணில் பட்டது. அது பைபிளின் ஒரு பாகம் என்பதை புரிந்துகொண்டேன். தாவீது ராஜா பட்ட துன்பங்களையும் அனுபவித்த மனச்சோர்வையும் பற்றி சங்கீதத்தைப் படித்தபோது தெரிந்துகொண்டேன், அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. (சங்கீதம் 38:1-22; 51:1-19) ஆனால் எனக்குள் இருந்த பெருமையின் காரணமாக வாசிப்பவற்றிற்கு கவனம் செலுத்தாமல் அவற்றை சீக்கிரத்தில் என் மனதிலிருந்து வெளியேற்றினேன். வெள்ளையரின் மதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சோர்வு என்னை வாட்டியபோதிலும் என் மகனை நல்ல விதமாக கவனித்து வந்தேன். எனக்கு உற்சாகம் தந்தது அவன்தான். டிவி-யில் ஜெபங்கள் செய்யப்படும் மத நிகழ்ச்சிகளை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தேன். உதவி கேட்டு இலவச அழைப்பு எண் 800-ஐ பயன்படுத்தி அவசர அவசரமாக ஃபோனில் அவர்களோடு தொடர்புகொண்டேன். ஆனால் அதற்கு 50 அல்லது 100 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் சொன்னபோது கோபத்துடன் ஃபோனை வைத்துவிட்டேன்.
மணவிலக்கு விசாரணைகளின்போது நான் மிகவும் துவண்டு போனேன். எங்கள் இன நீதிபதியிடம் என் கணவர் உண்மையை சொல்லாதபோது மிகவும் வேதனைப்பட்டேன். மகனை யாரோடு வைத்துக்கொள்வதென்ற போராட்டத்தால் எங்கள் மணவிலக்கு முடிவாவதற்கு நீண்ட காலம் எடுத்தது. ஆனால் எனக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணை முழுவதிலும் அப்பா எதுவும் சொல்லாமல், எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் மனதில் ரொம்பவே நொறுங்கிப் போயிருந்ததை அவர் புரிந்துகொண்டார்.
சாட்சிகளோடு முதல் சந்திப்பு
ஒவ்வொரு நாளும் கழிந்தால் போதும் என வாழ தீர்மானித்தேன். ஒரு சமயம் நவஹோ குடும்பத்தார் என் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசுவதைக் கவனித்தேன். இரகசியமாக அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். வந்தவர்கள் வீடு வீடாக போய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என் வீட்டுக்கும் வந்தார்கள். சான்ட்ரா என்ற ஒரு நவஹோ பெண் தன்னை யெகோவாவின் சாட்சி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். வேறு எதையும்விட யெகோவா என்ற அந்தப் பெயரே என் மனதில் பதிந்துவிட்டது. “யெகோவா யார்? நீங்கள் ஒரு புதிய மதத்தவராக இருக்க வேண்டும். சர்ச்சில் ஏன் எனக்கு கடவுளுடைய பெயரை சொல்லித் தரவில்லை” என்று கேட்டேன்.
அவள் தன் பைபிளில் சங்கீதம் 83:17-ஐக் காட்டினாள். ‘யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்’ என அதில் எழுதப்பட்டிருந்தது. கடவுளுக்கு ஒரு தனிப்பட்ட பெயர் இருக்கிறது; அவருடைய மகன் இயேசு கிறிஸ்து, யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருந்தார் என அவள் விளக்கினாள். யெகோவாவையும் இயேசுவையும் பற்றி எனக்குக் கற்றுத்தருவதாக சொல்லிவிட்டு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தாள்.d அதிக சந்தோஷமடைந்த நான், “ஆம், இந்தப் புதிய மதத்தை நான் முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று சொன்னேன்.
ஒரே இரவில் அந்தப் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். அதிலிருந்த விஷயங்கள் புதியதாகவும், வித்தியாசமாகவும் இருந்தன. வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு என்பதை அது விளக்கியது. வாழ்க்கையில் எனக்கு திரும்பவும் ஒரு பிடிப்பு ஏற்படுவதற்கு இதுவே தேவைப்பட்டது. பைபிளை படிக்க ஆரம்பித்தேன். பைபிளிலிருந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தபோது ஆனந்தமடைந்தேன். கற்றுக்கொண்ட எல்லா காரியங்களையும் விசுவாசித்தேன். அவை அர்த்தமுள்ளதாயிருந்தன. அதுவே சத்தியமாகவும் இருக்க வேண்டும்!
லயனலுக்கு ஆறு வயதாக இருந்தபோது பைபிள் சத்தியத்தை அவனுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். நாங்கள் சேர்ந்து ஜெபம் செய்தோம். யெகோவா அக்கறையுள்ளவர், நாம் அவரை நம்பியிருக்க வேண்டும் என்று சொல்லி ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டோம். சில சமயங்களில் நான் அப்படியே துவண்டு போய்விடுவேன். அப்போதெல்லாம் அவன் தன்னுடைய சிறிய பட்டுக் கைகளால் என்னை அணைத்துக்கொண்டு, “அழாதீங்க அம்மா, யெகோவா நம்மை பாத்துக்குவாரு” என்று உறுதியோடு சொல்லும்போது எனக்கு யானை பலம் வந்துவிடும். அது எனக்கு எவ்வளவு ஆறுதலை தந்து, பைபிளைத் தொடர்ந்து படிக்க உறுதியையும் அளித்தது! வழிநடத்துதலுக்காக இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தேன்.
கிறிஸ்தவ கூட்டங்களின் பாதிப்பு
யெகோவாவுக்கு நன்றியுணர்வால் தூண்டப்பட்டு, டியூபா நகரில் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு போய்வர மொத்தம் 240 கிலோமீட்டர் பிரயாணம் செய்தோம். கோடை காலத்தில் வாரத்தில் இரண்டு தடவையும் குளிர் காலத்தில் கடும் சீதோஷணநிலை காரணமாக ஞாயிறு தோறும் முழு நாளும் கூட்டங்களுக்குச் சென்றோம். ஒரு சமயம் பாதி வழியில் எங்கள் கார் நின்றுவிட்டபோது இடை இடையே பல வண்டிகளில் பயணித்து ராஜ்ய மன்றத்தை அடைந்தோம். நீண்ட தூர பிரயாணங்கள் களைப்பாகத்தான் இருந்தன, ஆனால் நாம் சாகிறமாதிரி இருந்தால் தவிர கூட்டங்களை ஒருபோதும் தவறவிடக்கூடாது என்று லயனல் சொன்ன குறிப்பு யெகோவாவிடமிருந்து வரும் ஆவிக்குரிய போதனைகளை ஏனோதானோ என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை என் மனதில் ஆழமாக பதிய வைத்தது.
வேதனைகளே இல்லாமல் என்றுமாக வாழும் வாழ்க்கையை வலியுறுத்தும் பாடல்களைக் கூட்டங்களில் பாடும்போது கண்கள் கலங்கிவிடும். யெகோவாவின் சாட்சிகள்தான் எனக்கு ஆறுதல் அளித்து உற்சாகப்படுத்தினார்கள். எங்களை சாப்பாட்டிற்கும் சிற்றுண்டிக்கும் வரும்படி வீட்டுக்கு அழைத்து உபசரித்தார்கள். அவர்களுடைய குடும்ப படிப்புகளில் எங்களையும் சேர்த்துக் கொண்டார்கள். அவர்கள் எங்கள்மீது அக்கறை காட்டினார்கள், நாங்கள் பேசுகையில் செவிகொடுத்துக் கேட்டார்கள். எங்கள் நிலையை புரிந்துகொள்வதிலும் யெகோவா தேவன் அக்கறையுள்ளவர் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துவதிலும் மூப்பர்கள் முக்கிய பங்கு வகித்தனர். உண்மையான நண்பர்கள் கிடைத்ததில் எனக்கு ஒரே ஆனந்தம். அவர்கள் எனக்கு இளைப்பாறுதல் அளித்தார்கள், என்னால் இனிமேலும் தாங்க முடியாது என்று நான் அழுத சமயங்களில் என்னோடு சேர்ந்து அழுதார்கள்.—மத்தேயு 11:28-30.
இரண்டு முக்கிய தீர்மானங்கள்
யெகோவாவின் ஏற்பாடுகளினால் மனநிறைவோடு வாழ ஆரம்பித்த சமயத்தில்தான் என் காதலன் சமரசம் செய்துகொள்வதற்கு வந்தார். இன்னும் நான் அவரை காதலித்தேன். அவருடைய வேண்டுகோளை என்னால் மறுக்க முடியவில்லை. திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டோம். சத்தியம் அவரை மாற்றிவிடும் என்று நினைத்தேன். அதுவே என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு! நான் சந்தோஷமாக இருக்கவில்லை. மனசாட்சி என்னை அதிகம் உறுத்தியது. அவர் சத்தியத்தை விரும்பாததை அறிந்தபோது கலக்கமாக இருந்தது.
மூப்பர் ஒருவரிடம் மனம்விட்டு பேசினேன். பைபிளிலிருந்து வசனங்களை எடுத்துக்காட்டி, என்னுடைய தீர்மானத்தைக் குறித்து என்னோடு சேர்ந்து ஜெபித்தார். யெகோவா என்னை ஒருபோதும் புண்படுத்த மாட்டார், மனவேதனையை அளிக்க மாட்டார், ஆனால் மனிதர்களிடம் எவ்வளவுதான் அன்பைப் பொழிந்தாலும் புண்படுத்தி, வேதனைப்படுத்துவார்கள் என்பதை புரிந்துகொண்டேன். உண்மையில் சட்டப்படி அல்லாத இப்படிப்பட்ட திருமணங்களில் பாதுகாப்பு இல்லை என்பதையும் அறிந்துகொண்டேன். எனவே ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த உறவை துண்டித்துக்கொள்வது அதிக கஷ்டமாகவும் வேதனையாகவும் இருந்தது. பொருளாதார கஷ்டம் ஏற்படுமென்றாலும் நான் யெகோவாவை முழு இருதயத்தோடு நம்புவது அவசியமாக இருந்தது.
யெகோவாவை நேசித்தேன், அவரை சேவிக்க தீர்மானித்தேன். 1984, மே 19-ம் தேதி யெகோவா தேவனுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன். என் மகன் லயனலும் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சி. எங்கள் குடும்பத்தாரிடமிருந்தும் முன்னாள் கணவரிடமிருந்தும் வந்த துன்புறுத்துதல்களுக்கு அளவே இல்லை. ஆனால் நாங்கள் யெகோவாவின் கைகளில் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். நாங்கள் ஏமாந்துவிடவில்லை. என் குடும்பத்தார் அமைதியாகிவிட்டார்கள், எங்களுடைய புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு 11 வருடங்கள் எடுத்தன.
நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன், அவர்களும் யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். மனச்சோர்வுக்கும் தற்கொலைக்கும் என்னை பறிகொடுத்துவிட்டதாக நினைத்த என் அப்பா, தைரியமாக என் பக்கம் பேசினார். மீண்டும் என்னை சந்தோஷமாக பார்ப்பதில் அவருக்கு திருப்தி. உணர்ச்சி சம்பந்தப்பட்ட காயங்கள் ஆறுவதற்கு யெகோவாவிடம் ஜெபிப்பதும், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்வதும் கடவுளுடைய வார்த்தையின்படி நடப்பதும் மிக முக்கியம் என்பதை அறிந்துகொண்டேன்.
எதிர்கால நம்பிக்கை
துன்பங்கள், அபூரணம், பொய்ப் பித்தலாட்டம், வெறுப்பு ஆகியவை சுவடு தெரியாமல் மறையப் போகும் காலத்துக்கு காத்திருக்கிறேன். நவஹோக்களாகிய நாங்கள் வாழுமிடத்திலும் ஒருசமயம் இருந்த பீச் பழமரங்களும் வாதுமை மரங்களும் துளிர்த்து, பூத்து, காய்த்து, குலுங்குவதை கற்பனை செய்து பார்க்கிறேன். வித்தியாசமான இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து நதிகள், மழை ஆகியவற்றின் உதவியோடு வறண்ட தேசங்களை அழகான பூங்காவனமாக மாற்றும் அந்த சந்தோஷமான சமயத்தை எண்ணிப் பார்க்கிறேன். சமீப காலங்களாக இருந்துவருவது போல பகைமை ஏதுமின்றி, எங்கள் ஹாப்பி அயலாரோடும் மற்ற இனத்தாரோடும் நாங்கள் தேசத்தை பகிர்ந்துகொண்டு சேர்ந்து வாழ்வதை கற்பனை செய்து பார்க்கிறேன். கடவுளுடைய வார்த்தை எவ்வாறு எல்லா இனத்தாரையும், குலத்தாரையும், தேசத்தாரையும் ஐக்கியப்படுத்துகிறது என்பதை இப்போது கண்ணார காண்கிறேன். எதிர்காலத்தில், உயிர்த்தெழுதலின் மூலமாக மரித்தவர்களோடு குடும்பத்தாரும் நண்பர்களும் ஒன்றுசேருவதை பார்க்கப் போகிறேன். நித்தியமாக வாழும் எதிர்பார்ப்போடு ஆனந்தம் பொங்கும் சமயமாக அது இருக்கும். இந்த அதிசயமான எதிர்பார்ப்பைப் பற்றி கற்றுக்கொள்ள யாருக்காவது விருப்பமில்லாதிருக்கும் என்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது.
நவஹோ தேசத்தில் தேவராஜ்ய விஸ்தரிப்பு
டியூபா நகரில் ஒரு ராஜ்ய மன்றத்தையும் நவஹோ, ஹாப்பி ஆகியோருக்கு உரிய தனி ஒதுக்கீட்டுப் பகுதிகளில்e சின்லீ, கேயென்டா, டியூபா நகரம், கெம்ஸ் கேனியான் ஆகிய நான்கு சபைகளின் வளர்ச்சியையும் பார்த்து பூரித்துப்போகிறேன். 1983-ல் முதன்முதலாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்தபோது, ஒரு நாள் நவஹோ மொழியில் அது நடத்தப்படும் என்று நினைத்தேன். இன்று அது வெறும் நினைப்பு மட்டுமல்ல நிஜமும்கூட. 1998 முதல் பள்ளி நவஹோ மொழியில் நடத்தப்பட்டு வருகிறது.
கடவுளுக்கு ஒரு தனிப்பட்ட பெயர் இருப்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது முடிவில்லா ஆசீர்வாதங்களைத் தந்துள்ளது. நவஹோ மொழியில் வெளியிடப்பட்ட நிகூகாஜி ஹூலாஜூ லினா பஹோஸூடூ! (பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!), ஹார்ஃபீஷ் ஏய் காட் நிஹா யூ ஹூலா? (கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?) சமீபத்தில் வெளியான (நி ஏய் காட் பிக்கிஸ் டீலிஜோ ஏட்டீ? (நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்!) ஆகிய சிற்றேடுகளில் காணப்படும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் குறிப்புகளை வாசித்து அதை பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. டீனே எனப்பட்ட நவஹோ மக்கள் உட்பட எல்லா தேசத்தவரும் இனத்தவரும் மொழியினரும் நன்மையடையும் பொருட்டு இந்தப் பைபிள் கல்வியை முன்நின்று நடத்துவதற்காக உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாருக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.—மத்தேயு 24:45-47.
பிழைப்புக்காக வேலை பார்த்து வருகிறேன், அதே சமயத்தில் தவறாமல் துணைப் பயனியர் ஊழியத்தையும் செய்து வருகிறேன். திருமணம் செய்யாதிருக்கும் என் நிலையை போற்றுகிறேன்; எந்த கவனச்சிதறல்களும் இல்லாமல் யெகோவாவை சேவிக்கவே ஆசைப்படுகிறேன். என் ஜனத்தாரிடமும் மற்றவர்களிடமும், முக்கியமாக மனமுடைந்தவர்களிடமும், “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என்று சொல்வது எனக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.—சங்கீதம் 34:18.
பைபிள் வெள்ளையரின் மதம் என்று இனியும் நான் நினைப்பதில்லை. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், அதைக் கற்றுக்கொண்டு அதற்கேற்ப வாழ விரும்பும் அனைவருக்காகவும் எழுதப்பட்டுள்ளது. யெகோவாவின் சாட்சிகள் உங்களைச் சந்திக்க வரும்போது எவ்வாறு உண்மையாகவே சந்தோஷமாயிருக்க முடியும் என்பதை அவர்கள் உங்களுக்கு காட்டுவதற்கு அனுமதியுங்கள். என்னுடைய வாழ்க்கையை மாற்றிய அந்தப் பெயரை, யெகோவா என்ற கடவுளுடைய பெயரைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் உங்களுக்குச் சொல்கிறார்கள்! “ஆஊ, டியின் காட் பிஸி ஜிஹோவா வோல்யே” (“ஆம், கடவுளுடைய பெயர் யெகோவா.”)(g01 7/8)
[அடிக்குறிப்புகள்]
a மார்மன் மதத்தைப் பற்றி விவரமாக தெரிந்துகொள்ள நவம்பர் 8, 1995 விழித்தெழு!-வைக் காண்க.
b AIM என்பது 1968-ல் பூர்வீக அமெரிக்கர் ஒருவர் ஆரம்பித்த குடியுரிமை அமைப்பு. இது BIA-வை எதிர்த்து வந்தது. BIA என்பது 1824-ல் தேசத்திலுள்ள இந்தியர்களின் நலனை முன்னேற்றுவிப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்டதாக கருதப்படும் அரசாங்க ஏஜென்ஸி. ஒதுக்கீட்டுப் பகுதிகளிலுள்ள தாதுப்பொருட்கள், தண்ணீர், இன்னும் பிற உரிமைகளையும் இந்தியர் அல்லாதவர்களுக்கு BIA குத்தகைக்கு விட்டது.—உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா.
c மகரந்தம் புனிதமானதாக கருதப்படுகிறது, இது உயிரையும் புதுப்பித்தலையும் அடையாளப்படுத்தும் வகையில் பிரார்த்தனைகளிலும் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மகரந்தப்பொடி தூவப்பட்ட பாதையில் ஒருவர் சென்றால் சரீரம் தூய்மையடையும் என்பது நவஹோ மக்களின் நம்பிக்கை.—அமெரிக்க இந்தியர்களின் மதங்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்).
d யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்தது, இப்போது பிரசுரிக்கப்படுவதில்லை.
e கூடுதலான தகவலுக்கு “அமெரிக்க இந்தியர்கள்—அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?” என்ற தொடர் கட்டுரைகளை செப்டம்பர் 8, 1996 தேதியிட்ட விழித்தெழு!-வில் காண்க.
[பக்கம் 17-ன் படம்]
நவஹோ ஹோகன்
[பக்கம் 17-ன் படம்]
என் மகன் லயனலோடு
[பக்கம் 19-ன் படம்]
1993-ல் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாநாட்டில் ருஷ்ய நண்பர்களோடு
[பக்கம் 20-ன் படம்]
அரிஜோனாவில் கேயென்டா சபையில் என் ஆவிக்குரிய குடும்பத்தாரோடு