அவர்கள் உலகம் எப்படி இழக்கப்பட்டது
பல்லாண்டுகளாக, ஐக்கிய மாகாணங்களைப் பற்றிய கதை, “மேற்குப் பகுதியைத் தட்டிச்சென்றது எப்படி” என்ற கூற்றால் தொகுத்துக் கூறப்பட்டது. குடியேறிய வெள்ளையர்கள் அமெரிக்கச் சமவெளிப்பகுதிகளையும் மலைப்பகுதிகளையும் கடந்து செல்வதையும், ஜான் வேன் போன்ற படைவீரர்களோடும், மாட்டிடையர்களோடும், குடியிருப்பாளர்களோடும் சேர்ந்து கொடுமையான, காட்டுமிராண்டித்தனமான, கோடாலி வீசும் இந்தியர்களோடு போரிடுவதையும் ஹாலிவுட்டின் படங்கள் காட்டின. வெள்ளையன் நிலத்துக்காகவும் தங்கத்துக்காகவும் தேடிக்கொண்டிருந்த அதே சமயத்தில், கிறிஸ்தவமண்டல பாதிரிகளில் சிலரும் பிரசங்கிகளும் ஆத்துமாக்களை இரட்சித்துவந்ததாக நம்பப்பட்டது.
ஆரம்பக் குடிகளான, அமெரிக்காவின் பூர்வீக மக்களின் நோக்குநிலையில் அந்த வரலாறு எப்படி தோன்றுகிறது? ஐரோப்பியர்கள் வந்துசேர்ந்ததும், இந்தியர்கள், “தாங்கள் ஒருபோதும் எதிர்ப்பட்டிருந்திராத மிகவும் கொள்ளையடிக்கும், கொன்றுதின்னிகளாயிருந்த வெள்ளையரான ஐரோப்பிய முற்றுகையாளர்கள் தங்களது சூழலுக்குள் புகுந்துவிட்டதைச் சமாளிக்க வற்புறுத்தப்பட்டனர்” என்று தி நேட்டிவ் அமெரிக்கன்ஸ்—ஆன் இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்ட்ரி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
போராட்டத்துக்கு வழிநடத்தின ஒத்திசைவு
ஆரம்பத்தில், வடகிழக்கு அமெரிக்கப் பகுதிக்கு முதலில் வந்துசேர்ந்த ஐரோப்பியர்களில் பலர் பூர்வீக குடிகளிடமிருந்து ஒத்துழைப்பையும் தயவையும் பெற்றனர். ஒரு பதிவு கூறுகிறது: “1607-08-ல் இருந்த பயங்கர குளிரை, ஜேம்ஸ்டவுன், வர்ஜினியாவில் புதிய உலகின் முதல் நிரந்தர ஆங்கிலேய குடியிருப்பான பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்கள், முதலில் அனுபவிக்க நேர்ந்தபோது, பௌவட்டன்களின் உதவியில்லாவிட்டால், நிலைத்திருக்க முடிந்திருக்காது. அதேபோல, மஸசூசட்ஸ், பிளிமத்-ல் பில்கிரிம் காலனி, வாம்ப்பனோவாகிடமிருந்து உதவியைப் பெற்றிராவிட்டால் தோற்றுப்போயிருக்கலாம்.” பூர்வீக குடிகளில் சிலர் மண்ணுக்கு உரமிடுவது எப்படியென்றும், பயிர்களை வளர்ப்பது எப்படியென்றும் குடியேறியவர்களுக்குக் காட்டினர். லூயிஸியனா பகுதிக்கும் ஆரிகன் தேசம் என்று அழைக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் நடைமுறையிலான ஒரு போக்குவரத்து இணைப்பைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் 1804-06-ல் மேற்கொள்ளப்பட்ட லூயிஸ் மற்றும் கிளார்க் பயணம், சக்காஜாவியா என்ற ஷோஷோன் குடியைச் சேர்ந்த பெண்ணின் உதவியும் தலையீடும் இல்லாவிட்டால் எந்தளவுக்கு வெற்றிகரமாய் இருந்திருக்கும்? அவர்கள் இந்தியர்களோடு நேருக்குநேர் வந்தபோது, அவள் அவர்களின் “சமாதான சின்னமாய்” இருந்தாள்.
என்றபோதிலும், நிலத்தை ஐரோப்பியர் பயன்படுத்திய விதத்தாலும் உணவுப்பொருட்கள் குறைவாய் இருந்ததாலும், வட அமெரிக்காவிற்குள் மிகுந்தளவில் குடியேற்றம் நடைபெற்றபோது முற்றுகையாளர்களுக்கும் பூர்வீக குடிகளுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. 17-வது நூற்றாண்டில், 30,000 நாரகன்செட் குடிகள் மஸசூசட்ஸில் இருந்தனர் என்று கனடாவைச் சேர்ந்த வரலாற்று வல்லுநர் ஈயன் கே. ஸ்டீல் கூறுகிறார். அவர்களின் தலைவர் மீயன்ட்டனோமோ, “ஆபத்தை உணர்ந்தவராய், . . . ஒரு பொதுவான அமெரிந்திய எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க மோஹாக் குடிகளுடன் உறவை வளர்த்துக்கொள்ளும்படி தேடிச்சென்றார்.” 1642-ல் மான்ட்டோக் குடிகளிடம், “அவர்கள் [ஆங்கிலேயர்] இருப்பதைப்போலவே நாமும் ஒன்றாய் இருக்க [வேண்டும்], இல்லையெனில், சீக்கிரத்தில் நாம் போய்விடுவோம், ஏனெனில் நம் முன்னோர்களிடம் ஏராளமான மான்களும், தோல்வகைகளும் இருந்தன, நமது சமவெளிகளில் மான்கள் நிறைந்திருந்தன, காடுகள் நிறைந்திருந்தன, [வான்கோழிகள்] நிறைந்திருந்தன, நம் சிறுகுடாவில் மீன்களும் பறவையும் நிறைந்திருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்த ஆங்கிலேயர் நம் நிலத்தை எடுத்துக்கொண்டதோடு, அரிவாள்களால் புல்லை வெட்டுகின்றனர், கோடாலியால் மரங்களை வெட்டுகின்றனர், அவர்களின் பசுக்களும் குதிரைகளும் புல்லைத் தின்னுகின்றன, அவர்களின் பன்றிகள் நம் கிளிஞ்சல் படுகைகளைச் சேதப்படுத்துகின்றன, மேலும் நாம் அனைவரும் பட்டினி கிடப்போம்” என்று அவர் சொல்லியிருந்ததாக அறிக்கை செய்யப்பட்டது.—வார்பாத்ஸ்—இன்வேஷன்ஸ் ஆஃப் நார்த் அமெரிக்கா.
ஓர் ஒற்றுமையான பூர்வீக அமெரிக்கக் கூட்டணியை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட மீயன்ட்டனோமோவின் முயற்சிகள் தோல்வியுற்றன. 1643-ல், ஒரு பழங்குடிப் போரில், மாஹிகன் குடியின் தலைவரான அன்கஸ் என்பவரால் அவர் பிடிக்கப்பட்டு, ஒரு கலகக்காரனாய் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆங்கிலேயர் மீயன்ட்டனோமோவை சட்டப்பூர்வமாக குற்றவாளியாகத் தீர்ப்பளித்து அவரைத் தூக்கிலிட முடியவில்லை. ஒரு வசதியான தீர்வை அவர்கள் கண்டுபிடித்தனர். ஸ்டீல் தொடர்ந்து சொல்கிறார்: “எந்தவொரு குடியேற்ற நாட்டின் எல்லைக்கும் அப்பாலிருந்தவரைத் [மீயன்ட்டனோமோவை] தூக்கிலிட முடியாமல், ஆணையர்கள், அன்கஸே அவரைத் தூக்கிலிடும்படியும் அதை நிரூபிக்க ஆங்கிலேய சாட்சிகளை வைத்துக்கொள்ளும்படியும் செய்தனர்.”
முற்றுகையிடும் குடியிருப்பாளர்களுக்கும் பூர்வீக மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக இருந்துவந்த சண்டைகளை மட்டுமின்றி, வெள்ளையன் வட அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பிருந்தே பழங்குடிகளுக்கு மத்தியில் இருந்துவந்த ஒருவரையொருவர் அழித்துக்கொள்ளும் போட்டியையும் நம்பிக்கைத்துரோகத்தையும்கூட இது எடுத்துக்காட்டுகிறது. ஆங்கிலேயர், வட அமெரிக்காவைக் கைப்பற்றிக் குடியிருக்கும்படி, பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக நடத்திய போர்களில், சில பழங்குடியினர் அவர்களுக்கு ஆதரவாகவும், மற்றவர்களோ பிரெஞ்சுக்காரருக்கு ஆதரவாகவும் இருந்தனர். எந்தப் பக்கம் தோற்றது என்பதைப் பொறுத்தல்லாமல், அதில் உட்பட்டிருந்த எல்லா பழங்குடியினரும் மிகுந்த இழப்பையும் நஷ்டத்தையுமே அடைந்தனர்.
“தவறாகப் புரிந்துகொள்ளுதலாகிய பெரும்பிளவு”
பின்வருவது ஐரோப்பிய முற்றுகையின் ஒரு நோக்குநிலையாகும்: “அடிக்கடி மிகவும் பிந்தியநிலையாகும்வரை, இந்தியக் குடிகளின் தலைவர்கள் புரிந்துகொள்ளாதிருந்தது என்னவெனில், ஐரோப்பியர்கள் இந்தியர்களை நோக்கிய விதமாகும். அவர்கள் வெள்ளையரில்லை, அல்லது கிறிஸ்தவருமில்லை. அவர்கள் காட்டுமிராண்டிகள்—காட்டுத்தனமான மற்றும் மிருகத்தனமானவர்கள்—பலரது கருத்துப்படி, ஓர் ஆபத்தான மற்றும் உணர்ச்சியற்ற, அடிமைச் சந்தைகளுக்குப் பயன்படும் பொருளாவர்.” இந்த உயர்வெண்ணம், பழங்குடியினர்மீது நாசகரமான விளைவுகளில் முடிந்தது.
அந்த ஐரோப்பிய நோக்குநிலை பூர்வீக அமெரிக்கர்களுக்குப் புரிந்துகொள்ளப்பட முடியாதவொன்றாய் இருந்தது. விழித்தெழு!-வுடன் நடத்தப்பட்ட ஒரு சமீப நேர்காணலின்போது, நவகோ குடிகளின் ஆலோசகரான ஃபில்மர் புளூஹௌஸ் அழைத்தவிதமாக, “தவறாகப் புரிந்துகொள்ளுதலாகிய பெரும்பிளவு” அங்கிருந்தது. பூர்வீக குடியினர் தங்கள் நாகரிகத்தைத் தாழ்வானதாக நோக்கவில்லை, ஆனால், அதற்கு மாறாக, முற்றிலும் வேறுபட்ட மதிப்புகளைக் கொண்ட, வேறுபட்ட ஒன்றாக நோக்கினர். ஓர் உதாரணமாக, நிலத்தை விற்பது இந்தியர்களுக்கு முற்றிலும் நூதனமானதாக இருந்தது. வாயுவை, காற்றை, நீரை சொந்தமாக்கிக்கொள்ளவும், விற்கவும் உங்களால் முடியுமா? அப்படியானால் நிலத்தை ஒருவர் ஏன் சொந்தமாக்கிக்கொள்ளவும் விற்கவும் வேண்டும்? அது அனைவரும் பயன்படுத்திக்கொள்வதற்கே இருந்தது. எனவே, இந்தியர்கள் நிலத்தைச் சுற்றி வேலியமைத்ததாய் அறியப்படவில்லை.
ஆங்கிலேயர், ஸ்பானியர் மற்றும் பிரெஞ்சுக்காரரின் வருகையுடன், “இரு முரண்பட்ட பண்பாடுகளின் கொந்தளிப்பான சந்திப்பு” ஒன்றென விவரிக்கப்பட்டிருப்பது சம்பவித்தது. பழங்குடி மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அந்நிலத்தோடும் இயற்கையோடும் இசைந்து வாழ்ந்துவந்தவர்களும், சுற்றுச்சூழல் தொடர்பான சமநிலையைக் குலைத்துப்போடாமல் பிழைக்கும் முறையை அறிந்தவர்களுமான மக்களாய் இருந்தனர். ஆனாலும், சீக்கிரத்தில் அந்த வெள்ளையன், பூர்வீக குடிமக்களை, பண்படாத, கொடுமையான படைப்புகளாக—அவர்களை அடக்கியாளுவதில் தன் சொந்த காட்டுமிராண்டித்தனத்தையும் வசதியாக மறந்துவிட்டு—எண்ண ஆரம்பித்தார்! 1831-ல், பிரெஞ்சு வரலாற்று வல்லுநர் ஆலெக்ஸி டி டோக்யுவில்லி இந்தியர்களைப் பற்றி வெள்ளையரின் பொதுவான கருத்தை இவ்வாறு தொகுத்துரைத்தார்: “அவர்கள் நாகரிகமடையும்படி கடவுள் அவர்களைப் படைக்கவில்லை; அவர்கள் இறப்பது அத்தியாவசியம்.”
மிகவும் சாவுக்கேதுவான கொலையாளி
வட அமெரிக்காவின் குறுக்கே மேற்குப்பகுதியில் புதிய குடியேற்றக்காரர் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்க, வன்முறைக்கு மேல் வன்முறை பெருகியது. முதலில் தாக்கினது இந்தியர்களாய் இருந்தாலும், ஐரோப்பியர்களாய் இருந்தாலும், இரு தரப்புகளிலும் அட்டூழியங்கள் செய்யப்பட்டன. இந்தியர்கள் குடுமித்தோல்களுக்காக எக்கச்சக்கமான பொருளை அளித்த ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக சிலர் நம்பும் பழக்கமாகிய, குடுமித்தோலைக் கிழித்தெடுப்பதற்குப் பெயர்பெற்றிருந்த இந்தியர்கள் அதற்காக அஞ்சப்பட்டனர். என்றபோதிலும், எண்ணிக்கையிலும் போர்க்கருவிகளிலும் உயர்வானவர்களாயிருந்த ஐரோப்பியர்களுக்கெதிராக, இந்தியர்கள் வெற்றிபெற முடியாத ஒரு போரைத் தொடுப்பவர்களாய் இருந்தனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பழங்குடியினருக்கு, தங்களது மூதாதையரின் நிலங்களை விட்டுச் செல்ல வேண்டியதாய், அல்லது இறக்க வேண்டியதாய் இருந்தது. அடிக்கடி இரண்டுமே நேர்ந்தது—அவர்கள் தங்கள் நிலங்களை விட்டுச் சென்றனர், அதன் பிறகு கொல்லப்பட்டனர், அல்லது நோயாலும் பட்டினியாலும் இறந்தனர்.
ஆனாலும், யுத்தத்தில் இறக்க நேர்ந்தது பழங்குடிகளில் பெரும்பகுதியினர் அழிக்கப்படுவதற்குக் காரணியாய் இருக்கவில்லை. “வட அமெரிக்காவின் முற்றுகையில் பயன்படுத்தப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் துப்பாக்கியாகவோ, குதிரையாகவோ, பைபிளாகவோ, அல்லது ஐரோப்பிய ‘நாகரிகமாகவோ’ இருக்கவில்லை. அது கொள்ளைநோயாக இருந்தது,” என்று ஈயன் கே. ஸ்டீல் எழுதுகிறார். அமெரிக்காக்களின்மீது, கிழக்குக் கோளார்த்த நோய்களின் தாக்கத்தைப் பற்றி, வரலாறு பேராசிரியர் ஒருவரான பட்ரிஷா நெல்சன் லிம்ரிக் எழுதினார்: “புதிய உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, [ஐரோப்பியர்கள் நோய்க்காப்பைக் கண்டுபிடிக்கப் பல நூற்றாண்டுகள் செலவழிக்க வேண்டியதாய் இருந்த] இதே நோய்கள்—சின்னம்மை, தட்டம்மை, விஷஜுரம், மலேரியா, மஞ்சள் காய்ச்சல், ரிக்கட்சியால் காய்ச்சல் (typhus), காச நோய், மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியம்மை—காப்பின்றியிருந்த பலரைத் தாக்கின. கிராமத்துக்குக் கிராமம் இறப்பு வீதங்கள் 80 அல்லது 90 சதவீதமாக அதிகரித்துக்கொண்டே இருந்தது.”
1837-ல் தாக்கிய பெரியம்மை என்ற ஒரு தொற்றுநோயைப் பற்றி ரஸல் ஃபிரீட்மன் விளக்குகிறார். “மந்தன் குடிகள்தான் முதலாவது தாக்கப்பட்டனர், அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து வேகவேகமாய் ஹிடாட்ஸா, அசினிபாய்ன், அரிக்கரா, சியோக்ஸ், பிளாக்ஃபீட் ஆகிய குடியினர் தாக்கப்பட்டனர்.” மந்தன் குடியினர் கிட்டத்தட்ட முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டனர். 1834-ல் சுமார் 1,600 என்ற ஜனத்தொகையாய் இருந்த அவர்கள், 1837-ல் 130 எனக் குறைந்துவிட்டனர்.
உடன்படிக்கைகளுக்கு என்ன நேர்ந்தது?
இந்நாள் வரையில் பழங்குடியைச் சேர்ந்த முதியோர் 19-வது நூற்றாண்டில் தங்கள் முன்னோர்களுடன் ஐ.மா. அரசு ஒப்பமிட்ட உடன்படிக்கைகளின் தேதிகளை ஒப்பிக்க முடியும். ஆனால் அவ்வுடன்படிக்கைகள் உண்மையில் எதை அளித்தன? பொதுவாக நல்ல நிலத்துக்குப் பதிலாக சாதகமற்ற ஒரு பரிமாற்றமாக அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் வெட்டாந்தரை நிலமும் அரசு தரும் படியுமே.
பூர்வீகப் பழங்குடியினர் அலட்சியமாக நடத்தப்பட்டதற்கு ஓர் உதாரணம், 1783-ல் முடிவுக்கு வந்த சுதந்திரப் போரில் அமெரிக்கக் குடியேற்றக்காரர்களால் ஆங்கிலேயர் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு இராக்குவிஸ் ஜாதியினர் என்ற ஆதிக்குடியினரின் (கிழக்கிலிருந்து மேற்காக, மோஹாக், ஓனிடா, ஓனான்டகா, கியூகா, மற்றும் செனிகா) விஷயம். இராக்குவிஸ் குடிகள் ஆங்கிலேயர் தரப்பில் இருந்தனர், அதற்குப் பிரதி உபகாரமாக அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம், இளைய அல்வன் ஜோஸஃபியின் கூற்றுப்படி, கைவிடப்படுதலும் அவமதித்தலுமாகவே இருந்தது. ஆங்கிலேயர், “[இராக்குவிஸ்] குடியினரைப் புறக்கணிப்பவர்களாய், அவர்களுடைய நிலங்களின் மீதான அரசதிகாரத்தை ஐக்கிய மாகாண அரசுக்கு மாற்றியிருந்தனர்.” ஆங்கிலேயருக்கு எதிராக குடியேற்றக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்த இராக்குவிஸ் குடியினரும் “நிலத்தை வாங்கி விற்கும் கொள்ளையடிக்கும் பாங்குடைய, தொழிலதிபர்களின் தொகுதியாலும், ஊக வாணிகம் செய்வோராலும் அமெரிக்க அரசாலும்கூட வற்புறுத்தப்பட்டனர்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
1784-ல் ஓர் உடன்படிக்கைக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது, இந்திய விவகாரங்களின் மீதான அமெரிக்கக் குடியேற்ற நாட்டுப் பிரதிநிதிகளின் பெருங்குழுவின் முன்னாள் பிரதிநிதியான ஜேம்ஸ் டுவேன், “இராக்குவிஸ் குடியினரை வேண்டுமென்றே தரக்குறைவானவர்களாய் நடத்துவதன் மூலமாக அவர்கள் மத்தியில் மீந்திருக்கும் தன்னம்பிக்கையையும் இரகசியமாக பலவீனப்படுத்தும்படி” அரசு பிரதிநிதிகளைத் துரிதப்படுத்தினார்.
அவருடைய கர்வமான ஆலோசனைகள் நிறைவேற்றப்பட்டன. இராக்குவிஸ் குடியினரில் சிலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டு, துப்பாக்கிமுனையில் “பேச்சுவார்த்தைகள்” நடத்தப்பட்டன. இராக்குவிஸ் குடியினர் போரில் தோற்கடிக்கப்படாதவர்களாய்த் தாங்களாகவே எண்ணிக்கொண்டாலும், நியூ யார்க்கிற்கும் பென்ஸில்வேனியாவிற்கும் மேற்கிலுள்ள தங்கள் நிலத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து, அதற்கு ஈடாக குறைந்த பரப்பளவுள்ள ஒதுக்கீட்டு நிலத்தை நியூ யார்க் மாநிலத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
பூர்வீகப் பழங்குடியினரில் பெரும்பாலானோருக்கு எதிராக அதேபோன்ற சூழ்ச்சித்திறங்கள் பயன்படுத்தப்பட்டன. “டெலவேர், வியன்டாட், ஆட்டவா, சிப்பவே [அல்லது ஆஜிப்வா], ஷானி, மற்றும் பிற ஒஹையோ குடியினரிடமிருந்து நிலத்தைத் தட்டிப்பறிக்கும் முயற்சியில், லஞ்சம், அச்சுறுத்தல்கள், ஆல்கஹால், மற்றும் உரிமையற்ற பிரதிநிதிகளின் சூழ்ச்சித்திறங்களை அமெரிக்கப் பிரதிநிதிகள் பயன்படுத்தினர்” என்பதாகவும் ஜோஸஃபி கூறுகிறார். விரைவில் இந்தியர்கள் வெள்ளையனையும் அவனுடைய நிஜமல்லாத வாக்குகளையும் நம்பமுடியாதவர்களாய் ஆனதில் ஆச்சரியமில்லை!
“நீண்ட நடையும்” கண்ணீர்ப்பாதையும்
அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-65) துவங்கியபோது, தென்மேற்கில் நவகோ குடியினரின் தேசத்திலிருந்து படைவீரர்களை இழுத்தது. நியூ மெக்ஸிகோ பகுதியில் ரியோ கிரேண்டி பள்ளத்தாக்கிலிருந்த அமெரிக்க மற்றும் மெக்ஸிகோவின் குடியிருப்புகளைத் தாக்குவதற்கு நவகோ குடியினர் இந்த இடை ஓய்வைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். நவகோ குடியினரை ஒடுக்குவதற்கும் பாஸ்கெ ரெடான்டோ என்றழைக்கப்பட்ட வெட்டாந்தரையான ஒரு துண்டு நில ஒதுக்கீட்டிற்கு அவர்களை மாற்றுவதற்கும் தளகர்த்தர் கிட் கார்ஸனையும் அவரது நியூ மெக்ஸிகோ தன்னார்வ ஊழியர்களையும் அரசு அனுப்பிவைத்தது. அரஸோனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மலைக்கவைக்கும் கேன்யன் ட ஷேவிலிருந்து நவகோ குடியினரைப் பட்டினியால் விரட்டுவதற்கு கார்ஸன் விளைநிலங்களைப் பயன்படாது அழிக்கும் உத்தியைக் கையாண்டார். அவர் 5,000-க்கும் மேலான பீச் மரங்களையும்கூட அழித்தார்.
கார்ஸன் சுமார் 8,000 பேரை கூட்டிச் சேர்த்து, நியூ மெக்ஸிகோ, ஃபோர்ட் ஸம்னரிலுள்ள பாஸ்கெ ரெடான்டோ தடுப்புக்காவல் முகாமிற்கு சுமார் 480 கிலோமீட்டர் தொலைவான “நீண்ட நடை” நடக்க அவர்களை வற்புறுத்தினார். ஓர் அறிக்கை கூறுகிறது: “வானிலை கடும் குளிராய் இருந்தது, மோசமாய் உடை உடுத்தியிருந்தவர்களும், போதியளவு உணவளிக்கப்படாதவர்களுமாய் இருந்த பல சிறைக்கைதிகள் போகும் வழியிலேயே இறந்தனர்.” ஒதுக்கீட்டுப் பகுதியில் நிலைமைகள் மோசமாய் இருந்தன. அடைக்கலம் தேடும் ஒரு முயற்சியில் நவகோ குடியினர் நிலத்தில் துளையிட வேண்டியவர்களாய் இருந்தனர். 1868-ல், அதன் மடத்தனமான பெரும்பிழையை உணர்ந்தபிறகு, நவகோ குடியினருக்கு, அரஸோனாவிலும் நியூ மெக்ஸிகோவிலும் அவர்களுடைய மூதாதையரின் சொந்த நிலத்திலிருந்து 35 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியது. அவர்கள் திரும்பிச் சென்றனர், ஆனால் எப்பேர்ப்பட்ட ஒரு விலையைச் செலுத்தும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டனர்!
1820-க்கும் 1845-க்கும் இடையில், சொக்டாவ், செரொக்கி, சிக்கசாவ், க்ரீக், செமனோல் ஆகிய குடிகளைச் சேர்ந்த பத்தாயிரக்கணக்கானோர், தென்கிழக்கிலிருந்த அவர்களுடைய நிலங்களை விட்டு விரட்டப்பட்டு, மிஸிஸ்ஸிபி ஆற்றுக்கும் அப்பால் மேற்குநோக்கி, இப்போது ஓக்லஹாமா என்றழைக்கப்படும் இடத்திற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு வரையாக நடக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். கடும் குளிரில், பலர் இறந்தனர். மேற்குநோக்கி வற்புறுத்தப்பட்ட நடை, கண்ணீர்ப்பாதை என்று இழிபெயர் பெற்றது.
பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் வடக்கில் சியோக்ஸ் மற்றும் செய்யன் குடியினரை வேட்டையாடியிருந்த அமெரிக்கப் படைத்தலைவர் ஜார்ஜ் குரூக்கின் வார்த்தைகளால் உறுதி செய்யப்படுகிறது. அவர் இவ்வாறு கூறினார்: “இந்தியர்களுடைய வழக்கின் தரப்பு அரிதாகவே எப்போதும் கேட்கப்படுகிறது. . . . பிறகு [இந்தியரின்] புரட்சி வருகையில் பொதுமக்களின் கவனம் இந்தியர்களின் மீது திருப்பப்படுகிறது, அவர்களுடைய குற்றச்செயல்களும் அட்டூழியங்களும் மட்டும் கண்டிக்கப்படுகிறது, அதே சமயத்தில் அவர்களை இந்நிலைமைக்கு அநீதியாய் விரட்டினவர்கள் தண்டனைக்குத் தப்புகின்றனர் . . . இந்தியனைவிட வேறெவரும் இவ்வுண்மையை நன்கு அறிவதில்லை, ஆகவே அவரை மட்டுமே தண்டித்து, அதே சமயத்தில் தன் விருப்பம்போல் அவரைக் கொள்ளையிடும்படி வெள்ளையனை அனுமதிக்கும் ஓர் அரசில் நியாயமற்ற நிலையைக் காண்பதில், அவர் குற்றத்தினின்று விடுவிக்கப்படுகிறார்.”—பெரி மை ஹார்ட் அட் ஊண்டட் நீ.
ஐரோப்பியர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆதிக்கத்திற்குப் பிறகு, பூர்வீக அமெரிக்கர்கள் இன்று எப்படி சமாளிக்கின்றனர்? ஒருநிலைப்படும் இயல்பின் விளைவால் மறையும் அபாயத்தில் இருக்கின்றனரா? எதிர்காலத்தைப் பற்றி என்ன நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது? இவற்றையும் பிற கேள்விகளையும் அடுத்த கட்டுரை ஆழ்ந்து ஆராயும்.
[பக்கம் 9-ன் பெட்டி]
பெண்களுக்கு ஒரு கடினமான வாழ்வு
பெரும்பாலான பழங்குடிகளில் ஆண்கள் வேடர்களாயும் படைவீரர்களாயும் இருந்த அதே சமயத்தில், பிள்ளைகளை வளர்த்தல், தானியத்தை நடுதல் மற்றும் அறுத்தல், அதை மாவாக இடித்தல் உள்ளிட்ட முடிவற்ற வேலைகள் பெண்களுக்கு இருந்தன. காலன் டேய்லர் விளக்குகிறார்: “சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பெரும்பங்கு . . . நிலைநாட்டப்பட்ட குடும்பத்தைக் காத்துக்கொள்ளும், பிள்ளைகளைப் பெறும், மற்றும் உணவு தயாரிக்கும் ஒன்றாய் இருந்தது. தோட்டக்கலை சார்ந்த சமுதாயங்களில் அவர்கள் வயல்களையும் கவனித்துக் கொண்டனர், . . . அதே சமயம், காட்டெருமையை வேட்டையாடும் நாடோடிகளின் விஷயத்தில், அவர்கள் விலங்கைக் கொல்வதில் உதவினர், இறைச்சியைக் கூடாரத்துக்குக் கொண்டுவந்தனர், அதையடுத்து இறைச்சியைத் தயாரித்தனர், மேலும் எதிர்கால உபயோகத்துக்கென்று தோலைப் பதனிட்டனர்.”—தி பிளெய்ன்ஸ் இண்டியன்ஸ்.
அப்பாச்சி மக்களைப் பற்றி மற்றொரு குறிப்பு கூறுகிறது: “பண்ணை வேலை பெண்களின் வேலையாய் இருந்தது, அது ஒன்றும் தாழ்வானதாகவோ, அடிமைப்பாங்கானதாகவோ கருதப்படவில்லை. ஆண்கள் உதவினர், ஆனால் ஆண்களைவிட மிக உள்ளார்ந்த நோக்குநிலையில் விவசாயத்தைப் பெண்கள் கருதினர். . . . வேளாண்மை சம்பந்தமான சடங்குமுறைகளை நிறைவேற்றும் முறையைப் பெண்கள் எப்போதும் அறிந்திருந்தனர். . . . பெண்களில் பெரும்பான்மையோர் நிலத்திற்கு நீர்ப்பாய்ச்சுகையில் பிரார்த்தித்தனர்.”—தி நேட்டிவ் அமெரிக்கன்ஸ்—ஆன் இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்ட்ரி.
பெண்கள், டீபீக்கள் (tepees) என்றழைக்கப்பட்ட தற்காலிகக் கூடாரங்களையும் செய்தனர், அவை பொதுவாக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நிலைத்தன. அவர்கள் அவற்றை நேராய் நிறுத்திவைத்தனர், மேலும் அந்தக் குடியினர் இடம் மாறிச் செல்லவேண்டியிருந்தபோது அப்புறப்படுத்தினர். சந்தேகம் ஏதுமின்றி, பெண்கள் கடினமான வாழ்க்கை நடத்தினர். ஆனால் அக்குடியின் காப்பாளர்களாக அவர்களின் ஆண்மக்களும் கடினமாக உழைத்தனர். பெண்களுக்கு மரியாதை காட்டப்பட்டது, பல உரிமைகளும் இருந்தன. ஓப்பி போன்ற சில குடிகளில், இன்றும்கூட சொத்தில் பெண்களுக்குப் பங்குண்டு.
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
அவர்கள் உலகை மாற்றிய ஒரு விலங்கு
பல பழங்குடியினரின் வாழ்க்கைப்பாணியை மாற்றிய ஒரு விலங்கை—குதிரையை—ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்தனர். 17-வது நூற்றாண்டில், ஸ்பானியர்கள் முதலாவதாக குதிரைகளைக் கண்டத்திற்குக் கொண்டுவந்தனர். முற்றுகையிடும் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்தபடியே பூர்வீக அமெரிக்கர்கள் சேணமின்றி சவாரி செய்வதில் திறமையுள்ளவர்களாய் விளங்கினர். குதிரைகளோடு, பூர்வீக குடிகளுக்கு காட்டெருமையை மிக எளிதில் வேட்டையாட முடிந்தது. மேலும் நாடோடி பழங்குடியினர் தங்களுக்கு அண்மையிலிருந்த, நிலையான கிராமங்களில் வாழும் பழங்குடியினரை இன்னும் எளிதாக சூறையாட முடிந்தது, அவ்வாறு, கொள்ளையாடி, பெண்களையும், அடிமைகளையும் பறிக்க முடிந்தது.
[பக்கம் 7-ன் வரைப்படம்/படம்]
வட அமெரிக்காவிலுள்ள 17-வது நூற்றாண்டைச் சேர்ந்த பழங்குடியினரில் சிலரது இடங்கள்
கூட்டனே
ஸ்போக்கன்
நெஸ் பர்ஸ்
ஷஷோன்
க்ளமத்
வடக்கு பிய்யூட்
மீவாக்
யோக்கட்ஸ்
சரானோ
மோஹாவி
பாப்பகோ
பிளேக்ஃபுட்
ஃப்ளேட்ஹெட்
க்ரோ
ஷிய்யன்
உட்டி
அரப்பஹோ
ஹீகரெய்யா
ஓப்பி
நவகோ
அப்பாச்சி
மெஸ்காலரோ
கோமன்ச்சி
லீப்பான்
பிளெய்ன்ஸ் க்ரீ
அஸினிபோயின்
ஹிடாட்ஸா
மந்தன்
அரிக்கரா
யாங்டன்னே
டீட்டான்
சியோக்ஸ்
யாங்க்டன்
பாவ்னீ
ஓடோ
கான்ஸா
கியோவா
ஓசெஜ்
க்வாப்பா
கட்டோ
விச்செட்டா
அட்டாகப்பா
டாங்க்கவா
ஸான்ட்டி
ஐயவா
மஸுரா
இல்லினாய்ஸ்
சிக்கஸாவ்
அலபாமா
சோக்டாவ்
கிரீக்
டிமுக்குவா
ஓஜிப்வா
சாக்
ஃபாக்ஸ்
கிக்கப்பூ
மியாமி
ஷாவுனீ
செரோக்கி
கட்டௌபா
பௌவட்டன்
டஸ்கரோரா
டிலவேர்
இயரீ
ஸஸ்க்வஹனா
பாடவாடமி
இராக்குவிஸ்
ஹ்யுரன்
ஓட்டவா
அல்கோன்கியன்
ஸோகோக்கி
மஸசூசட்
வாம்ப்பனோவாக்
நரகன்செட்
மோஹிகன்
மான்டாக்
அப்னாக்கி
மலசிட்
மிக்மாக்
[படத்திற்கான நன்றி]
Indian: Artwork based on photograph by Edward S. Curtis; North America: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.
[பக்கம் 8-ன் படங்கள்]
கலைத்திறன் படைத்த நவகோ நெசவும் அணிகலனும்
[பக்கம் 11-ன் படம்]
“நீண்ட நடை” ஆரம்பித்த இடமான கேன்யன் ட ஷே