அமெரிக்க இந்தியர்களும் பைபிளும்
ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் படையெடுத்தது முதற்கொண்டு, பைபிளைப் பற்றி அமெரிக்க இந்தியர்களுக்கு கற்பிக்க அநேகர் முயற்சித்தனர்.
பதினேழாம் நூற்றாண்டு முதற்கொண்டு ஆறு வட அமெரிக்க இந்திய மொழிகளில் பைபிள் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாஸ்டனுக்கும் மாஸசூஸெட்ஸின் ராக்ஸ்பரிக்கும் அருகிலிருந்த மாஸசூஸெட் இந்தியர்களுக்காக, ஜான் எலியட்டின் பைபிள் பதிப்பு 1663-ல் அச்சடிக்கப்பட்டது. என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் நார்த் அமெரிக்கன் இண்டியன்ஸ் என்ற புத்தகத்தில் ஹார்வே மார்கோவிட்ஸ் இவ்வாறு எழுதினார்: “[“ ‘பழங்கால’ அமெரிக்க இந்தியரின் கலாச்சாரத்தை புதிய உலகின் ‘நவீன’ கலாச்சாரத்திற்கு மாற்றுவது” ] என்ற பெயரில் அநேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதை ஐரோப்பியர்கள் என்ன நோக்கத்துடன் செய்தனர் என்பதை அநேக வரலாற்றாசிரியர்கள் இப்போது சந்தேகிக்கின்றனர் என்பது உண்மைதான். இருப்பினும் மாஸசூஸெட் மொழியை கற்றுக்கொள்வதற்கும் பைபிளை அம்மொழியில் மொழிபெயர்ப்பதற்கு உச்சரிப்புகளை தொகுப்பதற்கும் ஈலைட் பதினைந்து ஆண்டுகள் படாத பாடுபட்டார்; இதிலிருந்து எலியட் எந்தளவு பொறுப்போடு செயல்பட்டார் என்பது புலனாகிறது. இது ‘புனிதமான பரிசுத்த வேலை எனவும் பயத்தோடும் கவனமாகவும் பக்தியோடும் செய்ய வேண்டிய கடினமான பொறுப்பாகவும்’ எலியட் கருதினார்.”
மற்றவர்களால் இதற்குப்பின், பைபிளின் பாகங்கள் அமெரிக்க இந்தியர்கள் பேசும் மற்ற பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பது உண்மைதான். இருப்பினும் முழுமையான பைபிள் அடுத்து வெளியிடப்படுவதற்கு இரண்டு நூற்றாண்டுகள் எடுத்தன; த பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி, மேற்கத்திய க்ரீ மொழியில் 1862-ல் இந்த பதிப்பை வெளியிட்டது. மற்ற மொழிபெயர்ப்புகளும் அதன்பின் வெளிவர ஆரம்பித்தன: கிழக்கத்திய ஆர்க்டிக் இன்யூட் (1871); டக்கோட்டா அல்லது கிழக்கத்திய சியோக்ஸ் (1880); அமெரிக்கர்களுடைய மொழியாகிய ஆர்க்டிக்கின் உபமொழியான க்விட்சென் (1898).
இரண்டு பைபிள் சொஸைட்டிகள் கூட்டாக இணைந்து 41 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலனாய் நவகோ மொழிபெயர்ப்பு 1985-ல் பிறந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட நவகோ மொழியில் வெளியான முழுமையான பைபிள் இதுதான். குறைந்தது 46 அமெரிக்க இந்திய மொழிகளில் எபிரெய, கிரேக்க வேதாகமங்களின் பகுதிகள் இப்பொழுது கிடைக்கின்றன.
முன்னின்று வழிநடத்தினது யார்?
மார்கோவிட்ஸ் பின்வருமாறு சொல்லுகிறார்: “பைபிள் மொழிபெயர்ப்பு வேலையில் புராட்டஸ்டண்டினரின் கடுமையான முயற்சி . . . பெருமளவு இருப்பது குறிப்பிடத்தக்கது.” வத்திகனின் இரண்டாவது கவுன்சிலுக்கு (1962) முன்னதாக “பொது மக்களின் கைகளில் பைபிள் இருப்பதை கத்தோலிக்க சர்ச் விரும்பவில்லை; ஏனென்றால் பைபிள் வாசகங்களை சரியாக புரிந்துகொள்வதற்கு தேவையான . . . பயிற்சியை அவர்கள் பெறவில்லை என்பதாக சர்ச் கருதியது” என இந்த எழுத்தாளர் தொடர்ந்து சொல்கிறார்.
வட அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்க இந்தியர்களின் மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்க பல்வேறு பைபிள் சொஸைட்டிகள் தற்போது களத்தில் இறங்கியிருக்கின்றன. அவற்றில் குறைந்தது 20 திட்டங்கள் அடங்கும். செய்யன், ஹவாசூப்பை, மிக்மாக், சுனி போன்ற மொழிகள் இத்திட்டத்தில் உள்ளடங்கும். நவகோ தேசத்தாருக்காக கிரேக்க வேதாகமத்தின் புதிய பதிப்பு ஒன்று தயாராகி வருகிறது. மத்திய, தென் அமெரிக்க இந்தியர்களுக்கான மொழிபெயர்ப்புகளும் தயாராகி வருகின்றன.
யெகோவாவின் சாட்சிகள் புராட்டஸ்டண்ட் அமைப்புகளோடு சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அமெரிக்க இந்தியர்களின் மத்தியில் அவர்கள் மும்முரமாக பிரசங்கித்து வருகின்றனர். அதன் விளைவாக அநேக அமெரிக்க இந்தியர்கள், ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்ற’ பைபிள் சத்தியங்களை நெஞ்சார நேசித்து ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். (2 பேதுரு 3:13) அமெரிக்க இந்தியர்களுடைய மொழிகளில் தற்போது கிடைக்கும் பைபிள்களை சாட்சிகள் பயன்படுத்துகிறார்கள். ஐமாரா, க்ரீ, டக்கோட்டா, குவாரானி, இனுக்டிடூட், இராக்குவிஸ், நவகோ, குச்சுவா உட்பட இன்னும் ஒன்பது மொழிகளில், உவாட்ச்டவர் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட பைபிள் சார்ந்த புத்தகங்களையும் சாட்சிகள் உபயோகிக்கின்றனர்.—செப்டம்பர் 8, 1996, விழித்தெழு!-வைக் காண்க.
[பக்கம் 25-ன் படம்]
“யெகோவா” என்ற பெயர் நவகோ பைபிள் பதிப்பில் சங்கீதம் 68:4-ல் காணப்படுகிறது