உலகை கவனித்தல்
நம்பிக்கையான மனநிலை கொள்வீர்—ஆரோக்கியமாயும் இருப்பீர்!
“நகைச்சுவையினால், மக்கள் அதிகம் பொறுத்துப்போகும் தன்மை உள்ளவர்களாய் ஆகின்றனர். ஏமாற்றங்களை நன்றாய் சமாளிக்கின்றனர். உடல் மற்றும் மன நலத்தைக் காத்துக்கொள்கின்றனர்” என்று சாவோ பாலோ பல்கலைக்கழக பேராசிரியர் சூலி டாமர்ஜ்யான் கூறுகிறார். ஓ எஸ்டாடோ ட சா பௌலூ என்ற பிரேஸிலிய செய்தித்தாளில் காணப்படும் ஓர் அறிக்கையின்படி, எழுதப்படிக்கக் கற்றுக்கொள்வதைப் போன்றே சிறந்த நகைச்சுவையும் கற்றுக்கொள்ளப்படலாம். சீறிவிழும் பண்புடைய ஒருவர், தான் சிந்திக்கும் விதத்தை மாற்றிக்கொள்வதை இது தேவைப்படுத்துவது தெளிவாய் இருக்கிறது. “உலகம் நீதியானதாய் இருக்கும்போதுதான் தன்னால் சிரிக்க முடியும் என்று ஒருவர் நினைத்தால், அவர் எப்பொழுதுபார்த்தாலும் எரிச்சலடைபவராகவே இருப்பார். எங்குப்பார்த்தாலும் அநீதிகள் இருக்கின்றனவே” என்று உளவியல் பேராசிரியர் ராக்கெல் ராட்ரிகஸ் கெர்பௌவ்வி விளக்குகிறார். மிக அதிக வேலையுடையவர்களாய் இருந்தாலும், சிறந்த மனப்பாங்குடையவர்கள் தோழமை நிகழ்ச்சிகளில் தாங்கள் பங்கெடுப்பதை அனுபவிக்கின்றனர், என்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “ஓர் அரட்டை, ஓர் இனிப்பு வகை, அல்லது ஐந்து நிமிட நல்லிசை” ஆகியவை போன்ற மிகச் சிறிய விஷயங்களையும் அவர்கள் மதித்துப் போற்றுகின்றனர். என்றபோதிலும், டாமர்ஜ்யான் எச்சரிக்கிறார்: “சிறந்த நகைச்சுவையை மட்டமான அல்லது கீழ்த்தரமான ஜோக்கடிப்பதுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.”
பறவைப் பிரியராலேயே பறவைகள் ஆபத்தில்?
பறவைகள் தின்பதற்காக உணவை தங்கள் தோட்டங்களில் விட்டுவைப்பதனால், பறவைப் பிரியர்கள் பறவைகளுக்கு நன்மைக்குப் பதிலாக அதிகத் தீமையையே செய்பவர்களாய் இருக்கலாம் என்பதாக லண்டனின் சன்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. சல்மோனல்லா பாக்டீரியா, ஒட்டுண்ணிகள், அடையாளம் காணப்படாத இன்னுமொரு நுண்ணுயிரி போன்றவற்றால் ஏற்படுத்தப்படும் உணவு நச்சு, சமீப காலத்தில் பிரிட்டனின் இனிய தோட்டப்பறவைகளில் பத்தாயிரக்கணக்கானவற்றைக் கொன்றிருக்கின்றன. சில பகுதிகளில் குறிப்பிட்ட பறவை இனங்கள் துடைத்தழிக்கப்பட்டுவிடுமோ என்று லண்டன் மிருகக் காட்சிசாலையின் தலைமை கால்நடை மருத்துவர் ஜேம்ஸ் கர்க்வுட்டுக்குக் கவலை. பறவைக்கு உணவு வைக்கும் தட்டிலோ அல்லது தரையிலோ கிடக்கும் பறவை எச்சங்களை உண்ணுவதன் மூலம், தாக்குப்பிடிக்கும் இயல்புடைய பாக்டீரியாவும் ஒட்டுண்ணிகளும் பல நாட்களுக்கு பிழைக்கின்றன. பூஞ்சணம் பிடித்த கடலைகள் விசேஷமாய் ஆபத்தானவையாய் இருக்கின்றன என்று ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ் பெரன்ஸ் எச்சரிக்கிறார். “தொற்றுக்கு உள்ளான கடலைகளை மனிதருக்கு விற்பதை அரசு தடை விதிக்கிறது. ஆனால் பறவை உணவுடன் கலப்பதை அனுமதிக்கிறது” என்றும், “தொற்றப்பட்ட கடலைகள் ஏராளமான பறவைகளைக் கொன்றுவருகின்றன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உண்ணிகளுக்கு வசதியான வீடு
கடுங்குளிர்ப் பருவம் என்றாலே உண்ணியினத்தின் அழிவுக்கு அர்த்தம் என்று எண்ணப்பட்டு வந்தது. ஆனால் நிலைமைகள் மாறி வருகின்றன என்பதாக பிரிட்டனின் நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “கடந்த பத்தாண்டுகளில், பூனை உண்ணிகள் அதிகரித்திருக்கின்றன” என்று கேம்பிரிட்ஜ் மெடிக்கல் என்ட்டோமாலஜி சென்ட்டரைச் சேர்ந்த ஜான் மான்டர் கூறுகிறார். நவீன நாளைய வீடுகள் இப்போது இந்த உண்ணிகளுக்கு வசதியான மறைவிடமாய் விளங்குகின்றன. இவை நாய்களிலும் இருக்கின்றன. கடந்த காலத்தில், குளிர்காலம் வந்ததும் ஒப்பு ஈரநிலையில் (relative humidity) வீழ்ச்சி ஏற்பட்டது—அது, உண்ணியின் புழுப்பருவத்தை அழிவுக்கேதுவாக பாதித்தது. “இப்போது, பல வீடுகளில் காற்றுவசதி சரிவர இல்லாதிருப்பதால் ஒப்பு ஈரநிலை அதிகமாகவே இருக்கிறது. மேலும் தொடர்ந்த குளிர்ப்பருவம்கூட உண்ணிகளைக் கொல்லாது” என்று மான்டர் குறிப்பிடுகிறார்.
பள்ளி அடாவடித்தனக்காரரைச் சமாளித்தல்
பள்ளிகளில் அடாவடித்தனம் நடந்துவருவதைப் பற்றி பிரபலமாய் எங்கும் பேசப்பட்டு வருவதன் காரணமாக, ஜப்பானின் கல்வித் துறை, 9,420 சிறார்களிடமும் அவர்களின் பெற்றோர், ஆசிரியர்களிடமும் ஒரு சுற்றாய்வு நடத்தியது. அவ்வாறு நடத்தியபோது கண்டுணர்ந்தவை, அடாவடித்தனத்துக்கு உட்படுத்தப்பட்ட நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் 70 சதவீதத்தினருக்கு பிரச்சினை பற்றியே தெரியாமல் இருந்ததாகவோ அல்லது தங்கள் சிறார்களின் புகார்களைப் பற்றி சட்டைபண்ணாமல் இருந்ததாகவோ காட்டின. பழிக்குப்பழி வாங்கப்பட்டுவிடுவதை எண்ணிப் பயந்து, பலியான மாணவர்கள் பலர் ஆசிரியரிடம் தாங்கள் அடாவடித்தனத்துக்கு ஆளாவதைத் தெரிவிப்பதில்லை. என்றபோதிலும், அப் பிரச்சினைக்கு ஓர் ஆசிரியர் கவனம் செலுத்துகையில், பலியானோரில் 2 சதவீதத்தினர் மட்டுமே பழிவாங்கப்படுவதாகவும், பலியான மாணவர்களில் சுமார் 40 சதவீதத்தினரை அடாவடித்தனத்துக்கு உட்படுத்துவதே நின்றுவிடுவதாகவும் அந்தச் சுற்றாய்வு காட்டியது. ஓஸாகா சிட்டி யுனிவர்சிட்டி பேராசிரியர் யோஜி மோரிட்டா இவ்வாறு கண்டறிந்தார்: “அடாவடித்தனத்துக்கு ஆளாகும் மாணவர்கள் தங்கள் ஆசிரியரிடம் புகார் கொடுத்து, அந்த ஆசிரியர்கள் அதற்கான தக்க நடவடிக்கை எடுத்தால், அடாவடித்தனம் மேற்கொள்ளப்படலாம் என்று நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன்.”
சிறார்களின் விருப்புகளும் வெறுப்புகளும்
எதைக் குறைந்தளவில் செய்வதை சிறார்கள் அனுபவிக்கின்றனர்? 6 முதல் 11 வயது சிறார்களிடம் இத்தாலியின் மிலன் பல்கலைக்கழக பேராசிரியர் கூஸ்ட்டாவோ பியேட்ரோப்பாலி ஷேர்மெட் நடத்திய ஓர் ஆய்வில், பெரும்பாலான சிறார்கள் பின்வருமாறு கூறினர்: “வீட்டில் இருந்து டிவி பார்ப்பது,” அல்லது “வீட்டில் இருந்து அம்மாவுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்வது.” தாங்கள் செய்வதில் கொஞ்சங்கூட விருப்பமில்லாதது, “குறித்த நேரத்துக்கு வெவ்வேறு இடங்களில் ஆஜராயிருத்தல்,” அதாவது, நடனம், ஆங்கிலம், பியானோ, இன்னும் மற்ற வகுப்புகளுக்காக நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு வேகவேகமாய்ச் சென்று வருவது” என்று லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாள் கூறுகிறது. மேலும் பொதுவாக வெறுக்கப்படுவது, “தனிமையாய் இருத்தல்.” மறுபட்சத்தில், பையன்களில் 49 சதவீதத்தினர் விரும்புவது, பெற்றோர் தங்கள் “பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே சென்று விளையாட அனுமதிப்பதை.” அதே சமயத்தில் பெண்பிள்ளைகள் விரும்புவது, பெற்றோர் “தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதில் இன்பம் காண்பதை.” மொத்தத்தில், அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்: ‘அம்மா என்னுடன் சேர்ந்து விளையாடினால், அவங்க நிஜமாகவே விளையாட்டுக்கென்று விளையாட வேண்டும். அவங்க விளையாட்டை அனுபவிக்காவிட்டால், நல்லாத் தெரிந்துவிடுகிறது, அதுக்கப்புறம் நான் விளையாட்டில் இன்பம் காணவும் மாட்டேன்.’
சாட்சிகளின் வேலையை கார்டினல் சிபாரிசு செய்தார்
பெல்ஜியத்தைச் சேர்ந்த கார்டினல் சௌனன்ஸ், கத்தோலிக்க சீரமைப்பு மற்றும் காரிஸ்மாட்டிக் இயக்கங்களின் ஓர் ஆதரவாளர். அவர் சமீபத்தில் தன் 91-ம் வயதில் இறந்தார். சௌனன்ஸ் பல விஷயங்களை நிறைவேற்றின போதிலும், அவருடைய வாழ்வின் இலட்சியத்தை உணரவில்லை என்று பெல்ஜிய செய்தித்தாளான ஹெட் பிலாங் வாங் லிம்பர்க் குறிப்பிட்டது. “கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில் சுறுசுறுப்பானவர்களாய் ஆவதை சௌனன்ஸ் எப்பொழுதும் விரும்பினார். அவர் . . . யெகோவாவின் சாட்சிகள் செய்வதைப் போலவே நாமும் வீட்டுக்கு வீடு போக வேண்டுமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். முடிவில், இது ஒன்றும் தவறான முறையல்ல என்பதைக் கண்டறிந்தார். ‘மற்றொருவரையும் ஒரு கிறிஸ்தவராக்கியிருந்தால்தான் நீ ஒரு மெய்க் கிறிஸ்தவன்’ என்பதே அவரிடமிருந்து பெரும்பாலும் கேட்கப்படும் ஒரு கூற்றாயிருந்தது” என்று அவரையடுத்து வந்தவரான கார்டினல் டாண்ணீல்ஸ் கூறினார்.
கடலைச் சுத்தப்படுத்துதல்
ஒரு வறண்ட நாளிலும்கூட, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர தெருக்களிலிருந்து கோடிக்கணக்கான லிட்டர் அளவான தூய்மைக்கேடு அடைந்த நீரும் கழிவுப்பொருட்களும் ஓடி கடல்நீருடன் கலக்கின்றன. மழை பெய்யும் நாளிலோ, அவ்வாறு பாயும் நீர் நூற்றுக்கோடிக்கணக்கான லிட்டர் அளவை எட்டிவிடலாம்! ‘குவித்து வைக்கப்படும், கழுவப்படும், அல்லது தெருக்களுக்குள் அடித்துச்செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் மழைநீருடன் வடிகால் அமைப்பு வழியாக அடித்துச்செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படாமலே நேரடியாக கடலில் கலக்கிறது!’ என்பதை நகரவாசிகளுக்குத் தெரிவிக்கும் ஒரு திட்டத்துக்கு அந்நகரின் அரசு ஆதரவளித்தது. கார்களிலிருந்து எண்ணெய் மற்றும் பிற திரவங்கள், முற்றத்தைச் சுத்தம் செய்யும்போது வெட்டிப்போடப்பட்ட புல்பூண்டுகள், குப்பைகள், செல்லப் பிராணிகளின் எச்சங்கள் ஆகியவை அனைத்தையும் இது உட்படுத்துகிறது. அடுத்துள்ள சான்ட்டா மானிக்கா வளைகுடா பகுதிகளின் சூழலியலைச் சேதப்படுத்துவதைத் தவிர்க்க, அந் நகரவாசிகள் பின்வருமாறு ஊக்கமளிக்கப்பட்டனர்: கழிவுப்பொருட்களைத் தெருவில் ஒருபோதும் குவிக்காதீர்; நடைபாதைக் குப்பையை ஹோஸ் மூலம் கழுவிவிடுவதற்குப் பதிலாக அவற்றைக் கூட்டி அள்ளுவீர்; செல்லப் பிராணிகள் எச்சம் கழித்த பிறகு, அதைச் சுத்தப்படுத்துவீர்; கார் கசிவுகளைப் பழுதுபார்ப்பீர்; மோட்டாரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை மறுபடி பயன்படுத்துவீர். மழைநீர் வடிகால் அமைப்பு வழியாகச் சென்று கடலுடன் கலக்கும் பகுதிக்கு அருகில் நீந்துபவர்களுக்கு, அப்பகுதியிலிருந்து 360 மீட்டர் தூரமாவது தள்ளியிருப்பவர்களைவிட 50 சதவீதம் அதிகமாய் காய்ச்சல்கள், வாந்தி, மூச்சு சம்பந்தமான நோய்கள், அல்லது காதுவலிகள் ஏற்படுவதாய்த் தோன்றுகிறது என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை செய்கிறது.
ரோமம் அடர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள்
நீர்மூழ்கிக் கப்பல்களின் சுழலும் முன்செலுத்திகளால் ஏற்படுத்தப்படும் நீர்க்குமிழிகளின் ஒலியைக் கண்டறிய நீருக்கடியில் ஒலிவாங்கிகளின் நெட்வொர்க் அமைப்பை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கடற்படை விடாமல் நடத்திவருகிறது என்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. ஒலிவாங்கி அமைப்பு மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவது ஆகியவற்றின் அடிப்படையில் “நீருக்கடியில் முரணியல்பான செயல்கள்” பற்றிய 6,000 அறிக்கைகளைப் பரிசீலனை செய்கையில், நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்களுக்கான உறுதியான நிரூபணத்தை ஆறு சந்தர்ப்பங்களில் மட்டுமே ஓர் அரசு குழு கண்டறிந்தது. பிற அறிகுறிகளில் பல, “கோபத்துடன் சிறிய கால்கள் அளைவது” மூலமாக தூண்டப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இவ்வாறு, நீர்மூழ்கிக் கப்பல்களின் முற்செலுத்திகளிலிருந்து வரும் ஒலியைப் போலவே ஒலி எழுப்பும் இயல்புடைய, நீந்தும் மிங்க் மற்றும் ஆட்டர்கள் கடற்படையைச் சேர்ந்த ஆய்வாளர்களைக் குழப்பமடையச் செய்வதாகத் தெரிகிறது.
சிறார்களை துர்ப்பிரயோகிக்கும் சிறார்கள்
தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிற சிறார்களிடம் பாலின துர்ப்பிரயோகத்தால் துன்புறுகின்றனர் என்பதாக ஜோஹன்ஸ்பர்க் செய்தித்தாளான ஸேட்டர்டே ஸ்டார் அறிக்கை செய்கிறது. இவ்வாறு செய்யும் இளைஞர்கள், தாங்கள்தாமே அவ்வாறு மிருகத்தனமாக நடத்தப்பட்டிருப்பதை ஓரளவுக்கு காரணமாயிருப்பதாக மனித அறிவியல் ஆய்வுக்குழுவைச் (Human Sciences Research Council) சேர்ந்த ஏஃபான்ட்டி ஷூரிங்க் கூறுகிறார். “பல . . . வீடுகளில், இச் சிறார்கள் வீட்டுக்குள்ளேயே நடைபெறும் திகிலூட்டும் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆகவே அவர்களுடைய செயலுக்குப் பலியாகுபவர்களும் அவர்களுடைய தூரத்து உறவினரே ஆவர்” என்று கூறுவதன் மூலம், வன்முறை மற்றும் ஒப்புரவாதலின் மனமுறிவு கிளினிக்கின் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை நல ஆலோசகர் மெரலின் டானல்ஸன் ஒத்துக்கொள்கிறார். பெரும்பாலான துர்ப்பிரயோகத்துக்கு சலிப்பையும் பெற்றோரின் புறக்கணிப்பையும் காரணமாகக் கூறுகிறார். “பெற்றோர் வேலைக்குச் செல்லும்போது, இச் சிறார்களுக்கென்று வீட்டில் எவரும் இல்லை, ஆகவே அவர்கள் தங்களைத் துர்ப்பிரயோகிப்பவர்களின் பிடியில் சிக்குகின்றனர்” என்று அவர் குறிப்பிடுகிறார். கூடுதலான ஆபத்தைச் சுட்டிக் காட்டுபவராய், “6 முதல் 10 வயது சிறார்கள், பாலினத்தால் கடத்தப்பட்டிருக்கும் எய்ட்ஸ் நோயுடன் அந்த மையத்திற்கு வருவது” தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று டானல்ஸன் கூறினார்.
கர்ப்பகாலத்தின்போது மது
“தாய் கர்ப்பிணியாய் இருக்கும்போது மதுபானம் பருகுவதற்கும் குழந்தை வெள்ளணுப் புற்றுநோயின் (leukemia) அபாயம் அதிகரிப்பதற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை புதிய ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது” என்பதாக கனடாவின் த மெடிக்கல் போஸ்ட் அறிக்கை செய்கிறது. இந்த ஆய்வு, வெள்ளணுப் புற்றுநோய்க்கு பலியான 302 குழந்தைகளை உள்ளடக்கியது. இந் நோய் இருப்பதைக் கண்டறிந்தபோது இவை, 18 மாதக் குழந்தைகளாகவோ அல்லது அதற்கும் குறைந்த மாதக் குழந்தைகளாகவோ இருந்தன. அதே சமயத்தில் மதுபானம் பருகாமல் இருந்த தாய்மாருக்குப் பிறந்திருந்த 558 குழந்தைகள் அடங்கிய ஒரு தொகுதிக்கும் இந் நோய்க்கான ஆய்வு நடத்தப்பட்டது. தாய் இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதக் கட்ட கர்ப்பகாலத்தில் இருந்தபோது மதுபானம் பருகியிருந்தவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, கடும் வெள்ளணுப் புற்றுநோய் ஏற்படுவதன் அபாயமானது, மதுபானம் பருகாதவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோயின் அபாயத்தைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாய் இருந்தது. மதுபானம் பருகும் கர்ப்பிணிப் பெண்கள் பற்றியும் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு வெள்ளணுப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்தல் பற்றியும் நடத்தப்பட்ட பிற ஆய்வுகளோடு இந்தப் புதிய ஆய்வு ஒத்திருப்பதாகக் கூறப்பட்டது.